Wednesday, February 22, 2023

மேனகாவின் கொலைகார நாய்கள்

 


 

பிரதீப் என்ற நான்கு வயது சிறுவன் ஒருவனை நான்கு தெரு நாய்கள் துரத்தி முகத்திலும் நெஞ்சிலும் மற்ற பகுதிகளிலும் கடித்து குதறியதில் அவன் இறந்து போயுள்ளான்.

 

இது நடந்தது ஞாயிற்றுக்கிழமையன்று,  ஹைதராபாத் நகரில்.

 

ஒவ்வொரு நாய்க்கடி மரணத்துக்கும் பொறுப்பு மேனகா அம்மையார் மட்டுமே!

 

தெரு நாய்களை கொல்லக்கூடாது. அவற்றுக்கு கருத்தடை ஊசி போட்டு விட வேண்டும் என்று விலங்குகளின் மீது மட்டும் கருணையை பொழியும் மேனகா அம்மையார் போட்ட உத்தரவு.

 

இதைத் தொடர்ந்து நாய்க்கடி மருந்துகள் தயாரிக்கும் பொறுப்பை பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து பறித்து தனியார் கம்பெனிகளுக்கு ஒப்படைத்தார் சின்ன டாக்டரய்யா என்பது வேறு கதை . . .

 

தெரு நாய்களின் தொல்லை என்பது இன்று இந்திய அளவிலான பிரச்சினை. எங்கள் சத்துவாச்சாரி பகுதியில் ஒரு மாதத்திற்கு மார்க்கெட் பகுதியில் ஒரு வெறி நாய் நாற்பது பேரை கடித்ததாக செய்தி வந்தது.

 

இங்கே ஹைதராபாத்தில் அச்சிறுவனை கடித்த நாய்கள் அனைத்தும் கருத்தடை செய்யப்பட்டவை. இந்த கருத்தடை ஊசியால் நாய்களின் இனப் பெருக்கம் குறையலாமே தவிர, அவற்றின் குணாம்சம் மாறாது. எத்தனையோ மனிதர்களின் வாலையே நிமிர்த்த முடியாத போது நாய்களை என்ன செய்ய முடியும்! மேலும் அப்படியெல்லாம் தெரு நாய்களின் எண்ணிக்கை குறைந்தது போலவெல்லாம் தெரியவில்லை. எங்கள் பகுதியில் அரை கிலோ மீட்டருக்கும் குறைவான தூரத்தில் உள்ள ஒரு உறவினர் வீட்டிற்கு போய் விட்டு எங்கள் வீட்டிற்கு திரும்ப வருகையில் வழியில்  உலாவும் தெரு நாய்களின் எண்ணிக்கையை எண்ணுவது என் வழக்கம். போன மாதம் 28 என்றிருந்தது போன வாரம் 36 ஆக உயர்ந்திருந்தது.

 

இப்பிரச்சினைக்கு  இரண்டு தீர்வுகள் உண்டு.

 

முந்தைய பாணியில் தெரு நாய்களைக் கொல்வது.

 

அது ஈவிரக்கமற்ற செயலென்றால்

 

பசுவிற்கு கோசாலைகள் வைத்து பராமரிப்பது போல, தெரு நாய்களுக்கும் அரசே பராமரிப்பு மையங்களை உருவாக்கி அங்கே அடைப்பது.

 

நாய்களின் உயிர்களும் முக்கியம்தான். தாங்கள் செய்வது என்னவென்று அறியாத நாய்களிடமிருந்து மனிதர்களை அதை விடவும் முக்கியமல்லவா!

 

பிகு: மேனகா அம்மையாரை மேனகா காந்தி என்பதா அல்லது அவர் பாஜககாரர் என்பதால் மோடி சொன்னபடி மேனகா நேரு என்று பெயரை மாற்றிக் கொண்டு விட்டாரா என்பது தெரியாத காரணத்தால் பொதுவாக மேனகா அம்மையார் என்று எழுதி விட்டேன்.

 

 

1 comment:

  1. Dogs can be used as a natural fertilizer for lemon, orange and Narthangai trees.

    ReplyDelete