Sunday, February 28, 2021

மோடி அரசு – பயம், பயமின்றி வேறில்லை.

  



மோடியைப் போல வீராதி வீரர், சூராதி சூரர் கிடையாது என்று நாமே ஏமாந்து போகும் அளவிற்கு “மத்யமர்” குழுவில் அவரது அபிமானிகளின் பதிவுகள் இருக்கிறது.  மோடி நல்லவரா கெட்டவரா என்று சென்ற ஞாயிற்றுக்கிழமை கேள்விக்கு வந்த பதிவுகள் அப்படி. (மனம் விட்டு சிரிக்க வைத்தவை அவை என்பதையும் சொல்வதுதான் நியாயம்)

 வாய், வாய், வாயைத் தவிர வேறு எதுவும் இந்த ஆட்சிக்குக்  கிடையாது. அவரது அதி தீவிர அபிமானிகளுக்கு வேண்டுமானால் அந்த வாய் போதுமானதாக இருக்கலாம். ஆனால் அதிலே எல்லோரும் ஏமாந்து விட மாட்டார்கள். உண்மையில் மிகவும் அச்சப்படுகிற அரசு இந்த அரசு.

 ஒரு சின்ன தொழிற்சங்கத்தின் கோட்ட (வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கடலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுவை பிரதேசம்) அளவில் இருக்கிற நாங்கள் கூட “எங்கள் நிறுவனத்தை பாதிக்கிற அரசியல் முடிவுகள் வரும் போது ஊடகவியலாளர் சந்திப்பு நடத்தி  அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிப்போம்”

 ஆனால் எல்லா மொழிகளிலும் மோடி அஞ்சுகிற ஒரே வார்த்தை “பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு” அநேகமாக கரண் தாப்பர் சந்திப்பு அவர் மனதில் இன்னும் மாறாத காயமாக அச்சுறுத்திக் கொண்டிருக்கும் போல.

 அவர்கள் அச்சப்பட்டு நடுங்குகிற இன்னொரு விஷயத்தைப் பற்றிதான் இந்த பதிவு.

 எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்கு விற்பனை குறித்து பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்கள். எல்.ஐ.சி நிறுவனம் நாடாளுமன்ற சட்டத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனம். எங்கள் நிறுவனம் எல்.ஐ.சி சட்டம் 1956 ந் படி உருவாக்கப்பட்டது. ஐந்து கோடியாக இருந்த எல்.ஐ.சி யின் மூலதனத்தை ஐ.ஆர்.டி.ஏ சட்டத்தின் படி 2011 ல்  நூறு கோடி ரூபாயாக உயர்த்திய போது “எல்.ஐ.சி சட்டம் 1956” ல் திருத்தம் கொண்டு வரப்பட்டது. நிதியமைச்சகத்தின் நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அத்திருத்தம் உட்படுத்தப்பட்டது.

 நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் விவாதம் நடந்த பின்பு “எல்.ஐ.சி நிறுவனம் என்றென்றும் பொதுத்துறை நிறுவனமாக நீடிக்க வேண்டும். அதன் பொதுத்துறைத் தன்மை எந்த விதத்திலும் நீர்த்துப் போக அனுமதிக்கப்படக் கூடாது. ஒருவேளை நாளை எல்.ஐ.சி நிறுவனத்திற்கு கூடுதல் மூலதனம் தேவைப்பட்டால் அது அரசு கஜானாவிலிருந்து நாடாளுமன்ற அனுமதியோடுதான் வழங்கப்பட வேண்டும்” என்று கட்சி பேதமில்லாமல் ஒருமனதாக எடுக்கப்பட்ட முடிவு.

 இந்திய அரசியல் அதிசயமான இந்த முடிவைத்தான் மாற்றுகிறது மத்தியரசு. எல்.ஐ.சி பங்கு விற்பனை அவசியமற்றது என்பதை விளக்கி பல பதிவுகள் எழுதியுள்ளதால் மீண்டும் அதைப் பற்றி இங்கே விவரிக்கப் போவதில்லை. பார்க்காத மத்யமர்கள் www.ramaniecuvellore.blogspot.com என்ற என்ற முகவரியில் “ஒரு ஊழியனின் குரல்” என்ற என் வலைப்பக்கத்திற்கு  வரவும்.

 அரசு தன் முடிவை அமலாக்குவதில் கூட நேர்மையை கடைபிடிக்க தயாராக இல்லை. எல்.ஐ.சி நிறுவனத்தின் பங்குகளை விற்க வேண்டுமெனில் அது எல்.ஐ.சி சட்டம் 1956 ல் திருத்தம் கொண்டு வர வேண்டும். அதற்கான மசோதாவை மக்களவையிலும் மாநிலங்களவையிலும் முன் வைக்க வேண்டும். ஒரு வேளை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்பும் சூழலும் கூட வரலாம்.

 இங்கேதான் அரசின் அச்சம் வெளிப்படுகிறது.

 தனியாக ஒரு திருத்த மசோதாவை கொண்டு வருவதற்குப் பதிலாக பட்ஜெட் முன்மொழிவுகளுக்கு ஒப்புதல் கேட்கும் நிதி மசோதாவில் (Money Bill) ல் இதற்கான ஷரத்துகளை இணைத்துள்ளது. நிதி மசோதாவை மக்களவை ஏற்றுக் கொண்டு விட்டால் மாநிலங்களவை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் கூட அது நிறைவேறும். இது விதி.

 எனவே தனியாக ஒரு மசோதா கொண்டு வந்து அது மாநிலங்களவையில் விவாதத்திற்கோ ஓட்டெடுப்பிற்கோ வருவதை தவிர்க்க இப்படி ஒரு குறுக்கு வழியை பயன்படுத்த வேண்டிய அளவிற்கு அரசுக்கு பயம் இருக்கிறது.

 தனி மசோதா என்றால் வரும் விவாதம், நிதி மசோதா என்றால் வரப் போவதும் கிடையாது. ஏனென்றால் கடந்த வருடம் மக்களவை பட்ஜெட்டை நிறைவேற்ற அரசு எடுத்துக் கொண்ட நேரம் எவ்வளவு தெரியுமா?

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

வெறும் பத்து நிமிடங்கள்.

 இதுதான் இந்த அரசின் உண்மையான குணம். பயம், பயமின்றி வேறில்லை. ஆனால் வீரர்களாக காண்பித்துக் கொள்வார்கள், தமிழ்ப்படம் திரைப்படத்தில் “பயமே என்னைப் பார்த்து பயப்படும் என்று சொல்லும் சிவா, குட்டி நாய் குறைப்பதற்கே பயப்படுவது போல.

 பிகு :  மேலே உள்ள படம் சில நாட்களுக்கு முன்பாக நாங்கள் நடத்திய ஊடக சந்திப்பின் போது எடுக்கப்பட்டது.

No comments:

Post a Comment