Sunday, February 21, 2021

மருத்துவரய்யா (மட்டும்) உஷாரய்யா

 


இன்சூரன்ஸ் துறை தொடர்பாக நிதியமைச்சர் அறிவித்த மோசமான பட்ஜெட் முன்மொழிவுகளுக்கு எதிராக அரசியல் பிரபலங்களையும் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்திக்கும் பணி நடந்து கொண்டிருக்கிறது.

 நேற்று முன் தினம் எங்கள் புதுவை 1 கிளைத் தோழர்கள் புதுவை முன்னாள் முதல்வர் திரு என்.ரங்கசாமி அவர்களை சந்தித்தார்கள்.



 நாங்கள் நேற்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் திரு துரைமுருகன் அவர்களை சந்தித்தோம்.

 


நாளைக்கும் சில திட்டமிடல் உள்ளது.

 பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவரய்யாவையும் சந்திக்கலாம் என்று திட்டமிட்டு திண்டிவனம் கிளைச்சங்கத் தோழர்களுக்கு அந்த பொறுப்பு அளிக்கப்பட்டது.

 மருத்துவரய்யாவுடனான ஒரு சந்திப்பு குறித்து வலைப்பக்கத்தில் எழுதத் தொடங்கிய நாட்களில் எழுதிய பதிவு நினைவுக்கு வந்தது.

 இதோ அந்த பதிவு.

 மருத்துவர் ஐயா அப்போது திண்டிவனத்தில்தான் இருந்தார். அவரை 

சந்திக்க எங்கள் திண்டிவனம் கிளைச்செயலாளர் மறைந்த தோழர் 
டி.ஜி.சந்திரபாபு  பலமுறை முயற்சித்தும்  முடியவில்லை. எப்போ போனாலும்  பாத்ரூமில்  இருப்பதாகவே சொல்றாங்க தோழர் என்று 
அவர் கோபத்தோடு  ஒரு செயற்குழுவில் அவர் பகிர்ந்து கொண்டார். 

ஐயா வந்தவாசியில்  ஒரு பொறியியல் கல்லூரியை  துவக்க வருவதாக
தெரிந்து    ஒரு எல்.ஐ.சி முகவர் மூலமாக நேரம் வாங்கி சென்றோம். ஆரணியில்   பஸ்  கிடைக்காமல் அங்கிருந்து கார் வேறு   வைத்துக்கொண்டு  சென்றோம்.  நாங்கள் அளித்த மனுவை முழுமையாகப் படித்தார்.  கண்டிப்பாக என்னுடைய ஆதரவு  உண்டு. 
ஸ்டியரிங் கமிட்டி கூட்டத்திலேயே  இதை முடித்து விடுவேன். மசோதா
லோக்சபாவிற்கெல்லாம்  வரவே வராது என்று உறுதி கொடுத்தார். நான் 
வேறு எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளருக்கு வந்தவாசியில் 
இருந்தே எஸ்.டி.டி போட்டு தகவல் சொன்னேன்.  ஆனால் மசோதா 
வரும் போது  பாமக ஆதரவாகத்தான் வாக்களித்தது. 

பழைய அனுபவம் எப்படியும் இருக்கட்டும், பரவாயில்லை, இப்போது மீண்டும் பார்ப்போம் என்று அவரை சந்திக்கச் சொன்னோம்.

 திண்டிவனம் கிளைச்செயலாளர் தோழர் பி.சீனிவாசன் தொலைபேசியில் சொன்ன தகவல் சுவாரஸ்யமானது.

 “தைலாபுரம் தோட்டத்தில் இருக்கும் ஐயா, பத்து மாத காலமாக பார்வையாளர்கள் யாரையும் சந்திப்பதில்லை. அப்படி யாராவது சந்திக்க வேண்டுமென்றால் அப்பாயிண்மெண்ட் வாங்கி விட்டு சந்திக்க வேண்டிய நாளுக்கு முதல் நாள் கொரோனா டெஸ்ட் எடுத்து விட்டு நெகடிவ் என்று ரிசல்ட் வந்தால் அந்த ரிசல்டோடுதான் வர வேண்டும். இல்லையென்றால் அனுமதி தைலாபுர தோட்டக் கதவுகள்  திறக்காது”

 இந்த நிபந்தனையை நான் கண்டிப்பாக விமர்சிக்கவில்லை. குறை கூறவில்லை. ஒரு வயதான மனிதர் இன்றைய கொரோனா சூழலில் எச்சரிக்கையாக இருப்பது நியாயமும் கூட. பேரம் பேசுவதற்காக அதிமுக அமைச்சர்கள் தைலாபுரம் தோட்டத்திற்கு போனார்களே, அவர்கள் முந்தைய நாள் கொரோனா சோதனை செய்து கொண்டு ரிசல்டோடுதான் போனார்களா என்றும் கேட்க விரும்பவில்லை.

 என் கேள்வி வேறு.

 இருபது சதவிகித உள் ஒதுக்கீடு கோரிக்கைக்காக ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் உங்கள் ஆட்கள் சென்னையில் கலாட்டா செய்தார்களே, அந்த தொண்டர்களிடம் கொரோனா பிரச்சினை குறித்து விளக்கினீர்களா? எச்சரிக்கையாக இருக்கச் சொன்னீர்களா? முகக்கவசம், தனி மனித இடைவெளி போன்றவையெல்லாம் சென்னையிலும் கடைபிடிக்கப் படவில்லை. நான் வேலூரில் பார்த்த உங்கள் கட்சி ஆர்ப்பாட்டத்திலும் கூட கடைபிடிக்கவில்லை.




 நீங்களும் உங்கள் மகன் சின்ன மருத்துவரும் மட்டும் எச்சரிக்கையாக இருந்தால் போதுமா?

 மருத்துவப் படிப்பு படித்த மருத்துவத் தொழில் பார்த்த நீங்கள் இருவரும் ஏன் தொண்டர்களை ஏன் பாதுகாப்பை கடைபிடிக்கச் சொல்லவில்லை?

 பதில் மிகவும் சுலபம்.

 அதையெல்லாம் பின்பற்றினால் அடிதடி கலாட்டாவெல்லாம் செய்ய முடியாது. உங்கள் பேரத்தின் எடை குறைந்து போய் விடும்.

No comments:

Post a Comment