Monday, February 8, 2021

A 2 வுக்கே இப்படியென்றால் A 1 ????

 


அலுவலகத்திலிருந்து வீடு திரும்புவது இன்று அவ்வளவு சுலபமாக இல்லை. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை தாண்டவே பல நிமிடங்கள் ஆனது. ஒரு பக்கம் மேடை போட்டு இசைக்கச்சேரி. நாங்கள் கடந்த போது "அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்" பாடலை பாடிக்கொண்டிருந்தார். "நான் ஒரு கை பார்க்கிறேன்" என்ற வரியையே கீறல் விழுந்த ரெக்கார்ட் போல மீண்டும் மீண்டும் பாடிக் கொண்டிருந்தார். 

தப்பாட்டம், நாதஸ்வரம், செண்டை மேளம் என்று அங்கங்கே அவர்களால் முடிந்த அளவுக்கு அந்த பகுதியில் அதிக பட்ச சப்தத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.

அகில உலக ஆளுமையே

தமிழகத்தின் எதிர்காலமே

தமிழகத்தின் தியாகத் தலைவியே

தமிழகத்தின் தியாக தீபமே

சின்னம்மா

கழகத்தை காப்பவரே

கழகத்தின் காவல் தெய்வமே

வாழும் வேலு நாச்சியாரே

ராஜ மாதாவே 

அந்த பகுதியில் பிரம்மாண்டமான மதில் சுவர்கள் போல அமைந்திருந்த ப்ளெக்ஸ் பேனர்களில் இருந்த வாசகங்களில் கண்ணில் பட்டவற்றை மேலே சொல்லியுள்ளேன்.

இந்த கூட்டம் காலை அலுவலகம் போன போதே இருந்தது. நேற்று இரவு 10.30 மணிக்கே ஆட்கள் குழும ஆரம்பித்து விட்டார்கள் என்று எங்கள் பொதுச்செயலாளர் தோழர் குணாளன் சொன்னார்.

"கலெக்டர் ஆபிஸ் கிட்ட எல்லாம் ஒன்னுமில்லை. பூட்டுத்தாக்கு கிட்ட நாலு கிலோ மீட்டர் தூரத்துக்கு கார் நிக்குது" என்று மதிய ஷிப்டிற்கு வந்த வாட்ச்மேன் சொன்னார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் அகமதியா, ஸ்டார், அக்கா

வேலூரில் அம்மா

ராணிப்பேட்டையில் ஸ்டார்

இந்த பிரபலமான கடைகளில் மொத்தமாக பிரியாணி வாங்கியதால் (பாஜக போல அண்டா பிரியாணி களவாடவில்லை) பொது மக்கள் பிரியாணி கிடைக்காமல் ஏமாந்தார்கள் என்பது தெரிந்த ஒரு பத்திரிக்கையாளர் அனுப்பிய செய்தி.

ஜெயிலில் இருந்து வருவதற்கே இவ்வளவு ஆரவாரமும் ஆர்ப்பாட்டமுமா என்ற கேள்விதான் எல்லோர் மனதிலும் எழுந்திருந்தது. இந்த ஆரவாரமும் ஆடம்பரமும் எரிச்சலூட்டியது. தேவர் மகன் படத்தில் காக்கா ராதாகிருஷ்ணன் கேட்பார் "சீமைக்குப் போயிட்டுத்தானே வரான். செத்துப் போயிட்டா வரான்?" 

எனக்கு இன்னொரு கேள்வியும் எழுந்தது.

A 2 வருவதற்கே இவ்வளவு கூத்து என்றால் A 1 உயிரோடு இருந்திருந்தால் அவரும்தானே ஜெயிலுக்குப் போய் விடுதலையாகி இருப்பார். அவரும் சேர்ந்து வந்திருந்தால் எப்படி இருந்திருக்கும்! எடப்பாடி கோஷ்டி வேறு வரவேற்பில் இணைந்திருப்பார்கள். நாங்கள் எல்லாம் ரோட்டிலேயே எத்தனை நேரம் இருந்திருக்க வேண்டியிருக்குமோ?

சசிகலாவை திட்டுகிற பலர் A 1 ஆன ஜெ வை ஆஹோ, ஓஹோ, ஆளுமை என்றெல்லாம் புகழ்வது ஒரு மிகப் பெரிய போலித்தனம்!

சசிகலா அதிகார துஷ்பிரயோகம் செய்ய அனுமதித்தது அவர்தான் என்பதை மட்டும் சௌகர்யமாக மறந்து விடுவார்கள்.


2 comments:

  1. மதி இழந்தோம்..

    ReplyDelete
  2. இறுதி வரிகள் செருப்படி வாசகங்கள்.

    ReplyDelete