Saturday, February 20, 2021

மோடிஜிக்கு தங்க மனசுஜி





இந்த நல்லவர் யாரென்று தெரியவில்லை. ஆனால் என் அறிவுக் கண்ணை திறந்தவர் இவர்தான்.

 ஆட்டுக் கறியோ, மாட்டுக் கறியோ, கோழிக்கறியோ வேக கூடுதல் நேரம் ஆகும் என்பதால் உங்கள் சமையல் எரி வாயு சிலிண்டர் சீக்கிரமாக தீர்ந்து விடும். காய்கறியை வேக வைத்தால் சிலிண்டர் நீண்ட நாள் வரும். ஆகவே  காய்கறி மட்டுமே பயன்படுத்துவீர் என்று சொன்னால் கேட்பீர்கள். என் உணவு, என் உரிமை என்று கோஷம் போடுவீர்கள். அதனால்தான் சமையல் எரிவாயு விலையை உயர்த்தி உங்கள் உடல் நலன் மேல் உள்ள அக்கறையை வெளிப்படுத்தியுள்ளார் மோடிஜி. கறி வாங்குவதை மிட காய்கறி வாங்குவதும் உங்கள் பணத்தை சேமிக்கும். காய்கறி கூட பச்சையாக சாப்பிட்டால் இன்னும் நல்லது என்பதால் அடுத்த முறை நூறு ரூபாய் உயர்த்தவுள்ளார். அதற்காக அவரை மனமாற பாராட்டுவதே நம் கடமை. 

 தொலைக்காட்சிகளில் வில்லேஜ் சமையல் நிகழ்ச்சியை ரசித்து பார்ப்பவர்களுக்கு விறகடுப்பு சமையலின் ருசி தெரியும். ஆகவே உங்கள் நாவின் ருசியை கூட்டும் நோக்கமும் மோடிஜிக்கு உண்டு என்பதை மறவாதீர்கள்!

 விறகுக்கு எங்கே போவது என்று கேட்காதீர்கள். சாமியார்கள் தொடங்கி கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அனைவருக்கும் மோடிஜி ஏன் காட்டு நிலங்களை அளிக்கிறார். அவர்கள் ஆசிரமம் அமைக்கவும் தொழிற்சாலை கட்டவும் காட்டை அழிக்கும் போது கிடைக்கும் மரங்கள் உங்கள் விறகுத் தேவைக்கு உதவும் என்பதால்தானே அவர்களுக்கு காட்டு நிலத்தை அளிக்கிறார் மோடிஜி.

 காடுகளை அழித்தால் மழை என்ன ஆகும் என்று கேட்காதீர்கள். மழை அதிகமாக பெய்து வெள்ளம் வந்தால் உங்களுக்குத்தானே சிரமம்!

 உடல் பெருத்து விட்டது, சர்க்கரை நோய் வந்து விட்டது. இன்னும் பல பிரச்சினைகள். நடைப் பயிற்சி செல்லுங்கள் என்று சொன்னால் கேட்பதே இல்லை.  அதனால்தான் மோடிஜி பெட்ரோல் விலையை உயர்த்தி விட்டார். இனி நடந்துதானே ஆக வேண்டும்! உங்களின் ஒவ்வொரு பாதச்சுவடும் மோடிஜிக்கு நன்றி, நன்றி என்றே பதிவாகும்.

 மோடியோட நல்ல மனசை இத்தனை நாள் புரிஞ்சுக்காம இருந்துட்டேன் என்று மிகவும் வெட்கமாக இருக்கு.

 எனவே மோடிஜி என்ன செய்தாலும் அதில் மக்களுக்கான நல்ல சிந்தனை இருக்கும் என்பதை இனியாவது புரிந்து கொள்ளுங்கள்..

 பிகு 1 : எனக்கு இப்போது ஒரே ஒரு கவலை  என்றால் இதை நிஜமான சீரியஸ் பதிவு என்று நினைத்து சங்கிகள் மோடிக்கு ஆதரவான பதிவு என்று பகிர்ந்து கொள்வார்களே என்பதுதான். 

பிகு 2 : போன வாரம் இரு சக்கர வாகனத்துக்கு பெட்ரோல் போட்ட போது 91.47 என்று இருந்த ஒரு லிட்டர் விலை நேற்று 93.39 பைசா.

பிகு 2 : சதமடிக்கும் போது மோடிக்கு ஏதாவது ஒரு கோயிலுக்கு சென்று சிறப்பு அபிஷேகம் செய்யலாமா இல்லை கேக் வெட்டி கொண்டாடலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். சதமடிக்கும் முதல் பிரதமர் என்றால் சும்மாவா?

1 comment:

  1. It is really disheartening to note that an Engineer of Repute like E.Sreedharan joins BJP and justifies Modi..Young people who try to follow footsteps of Elderly genuine people will be really confused..Looks like we are doomed..

    ReplyDelete