Sunday, April 16, 2017

முப்பத்தி ஓரு வருடங்களுக்கு முன்னால்




முப்பத்தி ஓரு வருடங்களுக்கு முன்னால் இதே நாளில்தான் 16.04.1986 அன்று எல்.ஐ.சி யில் பணியில் இணைந்தேன். மூன்று மாத பயிற்சிக்காலத்தின் முதல் பகுதியாக பயிற்சி வகுப்பு  சென்னை யுனைட்டெட் இந்தியா கட்டிடத்தில் தொடங்கியது. பதினான்கு  மாடி எல்.ஐ.சி கட்டிடத்தில் நடக்கவில்லை என்பது ஒரு ஏமாற்றமாகத்தான் அன்று இருந்தது. அப்போது வேலூர் கோட்டம் பிரிக்கப்படவில்லை. சென்னை கோட்டமாகத்தான் இருந்தது.

மொத்தம்  125 பேர் அன்று பணியில் சேர்ந்தோம். காலை வகுப்பு என்பது அறிமுகமும் அன்றைய முது நிலை கோட்ட மேலாளர் மற்றும் சில உயரதிகாரிகளின்  வாழ்த்துரையோடு முடிந்து போனது. சுய அறிமுகம் செய்து கொள்வதற்குள் வியர்த்து விறுவிறுத்துப் போனதையெல்லாம் முன்பே எழுதியிருக்கிறேன்.

முதல் நாள் பயிற்சியின் போது வயதானவர்கள் சிலரும் எங்களோடு உட்கார்ந்து இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியும் ஆச்சர்யமாகவும் இருந்தது. முன்னாள் ராணுவ வீரர்களுக்கு மீண்டும் பணி செய்ய வாய்ப்பு கிடைக்கும் என்பது அந்நாள் வரை சத்தியமாக தெரியாது.  கொஞ்சம் கூட இடைவெளியே இல்லாமல் அன்றைய மாலை வகுப்பு போன போது அவர்கள்தான் உடனடியாக இப்படி எல்லாம் உட்கார்ந்து கொண்டு இருப்பது சிரமம் என்று சொல்லி ஒரு ப்ரேக் வாங்கித் தந்தார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரிக் காலங்களில் சென்னை மீதிருந்த பிரமிப்பு பதினைந்து நாள் பயிற்சிக்காலத்தில் முற்றிலுமாக வடிந்து போனது. ஆனால் அப்போது உருவான வேறொரு பிரமிப்போ நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அன்று மாலை புதிய தோழர்களோடு ஒரு சங்கக் கூட்டம் ஏற்பாடு செய்திருந்தார்கள். சங்க நிர்வாகிகள் வந்ததும் ஒரு அதிகாரி வேறு ஒருவரிடம் ஏதோ ஜாடை காட்ட, அவசரம் அவசரமாக, மைக்கை அங்கே இருந்து அப்புறப்படுத்தினார்கள். இது என்ன அல்பத்தனமாக இருக்கிறதே என்று நினைத்துக் கொண்டிருந்த போது கூட்டம் தொடங்கியது.

"இந்த மைக்கை இங்கேயே வைத்து விட்டுப் போக எங்களால் சொல்லி இருக்க முடியும். ஆனால் மைக் இல்லாமலேயே உங்கள் அனைவரது செவிகளையும் எட்ட எங்கள் குரலால் முடியும். செவிகளைத் தாண்டியும் உள்ளம் வரைக்கும் செல்லும் நம்பிக்கையோடு இருக்கிறோம்"

 என்னை அறியாமல் கை தட்டினேன். நான் மட்டுமல்ல, வேறு பலரும் கூட.



அன்றைய தென் மண்டல இணைச்செயலாளரும், இன்று எண்பதாண்டுகளைக் கடந்த பின்பும் தனியார் மருத்துவமனை ஊழியர்களை ஒருங்கிணைக்கிற பணியில் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டிருக்கிற தோழர் எஸ்.ராஜப்பா அவர்களின் கம்பீர உரை, நான் இயக்கத்தில் செயல்படுவதற்கான விதை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். 


அன்றைக்கு எங்களை ஈர்த்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இன்றும் பிரமிப்பூட்டவைக்கிற ஒரு பல்கலைக்கழகம்.


முப்பத்தி இரண்டாவது ஆண்டு இன்று தொடங்கினாலும் அது அலுவலகப் பதிவேட்டின் படி இன்று மூன்று மாதங்கள் பின்புதான் தொடங்கும். ஏனென்றால் மூன்று மாத பயிற்சிக்காலம் பணிக் காலமாக கணக்கெடுக்கப்படுவதில்லை. (இப்போது இந்த நிலை மாறி விட்டது) 

4 comments:

  1. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. தம்பி, மொகபா, நான் என்றுமே உண்மையை மட்டுமே பேசுபவன். உன்னிடம்தான் அது என்றுமே கிடையாது. அதனால்தான் நீ அனாமதேயமாய் இருக்கிறாய்

      Delete
  2. முப்பத்தி ஓரு வருடங்கள் ஒரு நிறுவனத்தில். வாழ்துக்கள்.

    ReplyDelete