Tuesday, May 14, 2024

தசாவதாரச் சண்டை இப்போது கோர்ட்டில்

 


கமலஹாசன் நடித்த தசாவதாரம் படம் நினைவில் உள்ளதா?  துவக்கக் காட்சிகள்?

சிதம்பரம் நடராஜர் கோயிலின் ஒரு பகுதியாக இருக்கிற கோவிந்தராஜர் கோயிலின் மூலவரை சைவர்கள் சோழ மன்னனின் ஆதரவோடு அங்கேயிருந்து அகற்றி கடலில் எறிவார்கள். போனசாக ஓம் நமச்சிவாய என்று சொல்ல மறுக்கும் ரங்கராஜன்நம்பியையும் சேர்த்து எறிவார்கள்.

திரைப்படம் சொன்ன காலத்திலிருந்த  சைவ – வைஷ்ணவர்கள் இன்னும் ஓயவில்லை.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குள்தான் கோவிந்தராஜர்   கோயில் இப்போதும்

உள்ளது.

நடராஜர்  கோயில்    பொது தீட்சதர்கள்        கட்டுப்பாட்டில் உள்ளது. கோவிந்தராஜர் கோயில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இப்போது என்ன பிரச்சினை?

கோவிந்தராஜர் கோயிலில் பிரம்மோத்ஸவம் நடத்த வேண்டும் என்று காலம் காலமாக கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். நடராஜர்தான் இங்கே பெரும் கடவுள், கோவிந்தராஜர் துணைக்கடவுள்தான். துணைக்கடவுளுக்கெல்லாம் பிரம்மோத்ஸவம் நடத்தக் கூடாது என்று தீட்சிதர்கள் மறுக்கிறார்கள்.

பிரச்சினை உயர் நீதிமன்றத்துக்கு போய் விட்டது.  நடராஜர் கோயில் வளாகத்திற்குள் இருப்பதால் கோவிந்தராஜர் ஒன்றும் துணைக்கடவுள் அல்ல, அவரு வேற, இவரு வேற. கோவிந்தராஜருக்க்கே கட்டுப்பட்ட துணைக் கடவுள்கள் உண்டு. அந்த கோயில்கள் எல்லாம் தனியாக வேறு இடங்களில் உள்ளதென்று கோவிந்தராஜருக்கு ஆதரவான வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றம் என்ன தீர்ப்பு சொல்லியுள்ளது?

பொது தீட்சிதர்களோடு பேசி சமாதானத்திற்கு  முயற்சிக்குமாறு இந்து அறநிலையத் துறைக்கு அறிவித்துள்ளது.

அப்படியெல்லாம் சமாதானத்துக்கு வருபவர்களா அவர்கள்! ராஜராஜ சோழனுக்கே தண்ணி காட்டியவர்கள் அல்லவா!

இந்துக்களை ஒற்றுமைப்படுத்துவதற்கென்றே அவதாரமெடுத்துள்ளதாக பீற்றிக் கொள்ளும் பாஜகவினர் யார் பக்கம்? சைவ-வைஷ்ணவ ஒற்றுமை அவர்களால் சாத்தியமாகுமா?

வாயை மூடிக் கொண்டு ஓடி விடுவார்கள் என்பதுதான் யதார்த்தம்.  நடராஜர் கோயில் அதிகாரத்தை தீட்சிதர்களிடமிருந்து பறித்தால் மட்டுமே இப்பிரச்சினைக்கு தீர்வு வரும் என்பது இன்னொரு யதார்த்தம்.

 

No comments:

Post a Comment