Thursday, May 9, 2019

இது நிஜமான சோதனைக் காலம்


இந்திய ஜனநாயகத்திற்கு சோதனைக் காலம்புதிய அரசை உருவாக்க வாக்களிக்கும் பணியில் இந்தியா ஈடுபட்டுள்ளது. ஏழு கட்ட தேர்தலாக  11 ஏப்ரல் 2019 அன்று துவங்கிய வாக்குப்பதிவு 19, மே,2019 அன்று நிறைவடைய உள்ளது. உலக முதலாளித்துவ நெருக்கடி முற்றியுள்ள, இந்தியப் பொருளாதார வளர்ச்சி மந்த கதியில் உள்ள பின்னணியில் நடைபெறும் தேர்தல் இது.  வேலையின்மை, விவசாய நெருக்கடி, பண வீக்கம் போன்ற அடிப்படைப் பிரச்சினைகளை தீர்ப்பது குறித்து அரசியல் கட்சிகளின் பார்வை என்ன என்பதை அறிந்து கொண்டு அதற்கேற்ப தங்களின் முடிவை எடுக்கலாம் என்று மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பிரதமரின் தலைமையில் ஆளும் கட்சி, மக்களின் அன்றாட வாழ்வை பாதிக்கும்  இப்பிரச்சினைகள் குறித்து பேசாமல் தவிர்க்க அனைத்து முயற்சிகளையும் எடுத்தது ஏமாற்றமளித்தது. கடந்த தேர்தலின் போது அளித்த வாக்குறுதிகள் குறித்து பதிலளிக்கும் பொறுப்பு தனக்கில்லை என்று பிரதமர் கருதுகிறார். எனவே ஒட்டு மொத்த பிரச்சாரமும் மத ரீதியிலான அணி சேர்க்கையாகவும் போலி தேசியவாதத்தை உசுப்பேற்றி விடுவதுமாகவே இருந்தது. இத்தேர்தலில் கண்ட அளவிற்கு முன்பு எக்காலத்திலும் பிரச்சாரம் தரம் தாழ்ந்ததாக இருந்திடவில்லை.

அரசியல் என்பது இப்போது மக்களுக்கான சேவையாகவோ அல்லது தொலை நோக்குப் பார்வையுடன் சமூகத்தை கட்டமைப்பதாகவோ இல்லை. அரசியல் இப்போது அதீத லாபம் கொழிக்கும் துறையாக மாறி விட்டது. தேசத்தின் ஒற்றுமையே பாதிக்கப்பட்டாலும் கூட கவலையில்லை, எப்படியாவது தேர்தலில் வென்றால் போதும் என்று நிலைமை மாறி விட்டது. இத்தேர்தலின் போது நாம் பார்த்த சில போக்குகள் கவலையளிக்கின்றன. அவை காலப்போக்கில் ஜனநாயகத்திற்கு மிகப் பெரிய அபாயமாக உருவெடுக்கும். அரசு இயந்திரத்தை அப்பட்டமாக துஷ்பிரயோகம் செய்து  தன் அரசியல் போட்டியாளர்களை மிரட்டுவது என்பது அப்படிப்பட்ட நிகழ்ச்சிப் போக்குகளில் ஒன்று. ஆளும் கட்சிகள் அரசு இயந்திரங்களை எப்போதுமே தவறாகத்தான் பயன்படுத்தி வந்துள்ளது என்பது உண்மைதான். ஆனால் இப்போதைய அளவோ முன்னெப்போதையும் விட பல மடங்கு அதிகமானது, முன்னெப்போதும் காணாதது. எதிர்க்கட்சித் தலைவர்கள் மீதான வருமான வரி சோதனைகள், அமலாக்கப்பிரிவு நடவடிக்கைகள் ஆகியவை எல்லாம் நிச்சயமாக மிரட்டல் நடவடிக்கைகள்தான். வலிமையில்லாமல் கிடக்கிற தேர்தல் ஆணையமே இந்த அமைப்புக்களை பாரபட்சமின்றி செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்துகிற அளவிற்கு சென்று விட்டது.

எதிர்க்கட்சிகள் மட்டுமல்ல, வாக்காளர்களும் கூட மிரட்டப்படுகின்றனர். வாக்குச்சாவடிகளில் மோடி காமெராக்களை நிறுவியுள்ளார், பாஜகவிற்கு யாரெல்லாம் வாக்களிக்கவில்லை என்று நாங்கள் கண்டுபிடித்து விடுவோம் என குஜராத்தில் ஒரு சட்டப்பேரவை உறுப்பினர் மிரட்டுகிறார். தனக்கு வாக்களிக்காவிட்டால் அவர்களின் கோரிக்கைகளை பொருட்படுத்த மாட்டேன் என்று மேனகா காந்தி சிறுபான்மையினரை எச்சரிக்கிறார். யாருக்காக ஒரு அரசு செயல்பட வேண்டும் என்ற அடிப்படையான கேள்வியை இது எழுப்புகிறது.  ஒரு அரசு அனைத்து குடிமக்களுக்காக பணியாற்ற வேண்டுமா? அல்லது வெற்றி பெற்ற கட்சியின் ஆதரவாளர்களுக்காக மட்டுமா? எங்களுக்கு வாக்களித்தவர்களுக்காக மட்டுமே நாங்கள் பணியாற்றுவோம் என்று சட்டமியற்றுபவர்கள் கூறினால் அதுவே ஜனநாயகத்தை கொன்று விடும்.

இது வரை காணாத வெறுப்புப் பிரச்சாரம், இத்தேர்தலில் நாம் கண்ட இரண்டாவது போக்கு. பொருளாதார, சமூக, அரசியல் வளர்ச்சிக்கான திசை வழியை முடிவு செய்வதுதான் தேர்தலின் நோக்கம். ஆனால் இத்தேர்தல் அலி க்கும் அனுமானுக்குமான மோதலாக மாறும் என்று கற்பனை கூட செய்ய முடியவில்லை. இன்று அலி, அனுமான் இருவருமே வேலையின்மை, விலையேற்றம், கிராமப்புற நெருக்கடி ஆகிய பிரச்சினைகளில் சிக்கி தவிக்கிறார்கள். அனைத்து சமுதாயத்தினருடைய அன்றாட வாழ்வை பாதிக்கிற உண்மையான பிரச்சினைகளிலிருந்து கவனத்தை திசை திருப்பவே மத வெறி அரசியல் பயன்படுகிறது. மத அடிப்படையில் வாக்கு சேகரிக்கும் எதிர்க்கட்சிகளின் செயல்களையும் நம்மால் மன்னிக்க முடியாது என்பதிலும் நாம் தெளிவாக இருப்போம். பெண்களை இழிவுபடுத்துகிற பல பாலியல் ரீதியிலான சொற்களையும் அணுகுமுறையையும் பல தலைவர்களும் வேட்பாளர்களும் கையாண்டதையும் பிரச்சாரத்தில் பார்க்க முடிந்தது.

“அனைவரோடு அரசு, அனைவருக்குமான வளர்ச்சி” என்ற தன் முழக்கத்தை பிரதமர் மோடி மறந்து விட்டார் போல.  தான் இந்தியாவுக்கான பிரதமர் என்பதை அவர் மறந்து விட்டார். தன் கட்சிக்கும் ஆதரவாளர்களுக்கும் மட்டுமான பிரதமராக இருந்தாலே போதும் என்று நிறைவடைந்து விட்டார் என்பது போல அவரது நடவடிக்கைகள் உள்ளது. அவர் தன் தேர்தல் உரைகளில் வெளிப்படையாகவே மத ரீதியிலான கருத்துக்களை உதிர்க்கிறார். இதர மதத்தைச் சேர்ந்தவர்கள் மீது வெறுப்பையும் வெளிப் படுத்துகிறார். இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள தொகுதிகளில் போட்டியிட அச்சப்பட்டே ராகுல் காந்தி சிறுபான்மையினர் அதிகமாக இருக்கும் வயநாடு தொகுதியை தேர்ந்தெடுத்துள்ளார் என்று அவர் கூறியது ரசனைக்குறைவானது மட்டுமல்ல, சிறுபான்மையினரும் இந்த நாட்டின் குடிமக்கள் என்பதை அவர் புரிந்து கொண்டுள்ளாரா என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அவரது கட்சித்தலைவர் அமித் ஷாவோ, “வயநாடு என்ன பாகிஸ்தானில் உள்ளதா?” என்று வியந்துள்ளார். இது அராஜகம் மட்டுமல்ல மன்னிக்க முடியாத கூற்று. அமித் ஷா, குடிமக்களுக்கான தேசிய பட்டியல் (National  Register for Citizens) பற்றி பேசுகையில் எந்த குழப்பமும் இல்லாமல் மதத்தின் அடிப்படையில்தான் குடிமகன் அந்தஸ்து முடிவு செய்யப்படும் என்று ஆணித்தரமாக கூறுகிறார்.  பிரதமரைப் பற்றி பேசுகையில் ராகுல் காந்தியும் கண்ணியத்தை கடைபிடிக்க வேண்ட அவசியம் உள்ளது.

மூன்றாவதாக இத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் பார்த்த அபாயகரமான போக்கு, நம் பாதுகாப்பு படைகளுக்கு அரசியல் வண்ணம் பூசியது. அரசியல் ஆதாயங்களுக்காக பாதுகாப்புப் படைகள் பற்றி பேசுவதை தவிர்க்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் கண்டிப்போடு வழிகாட்டினாலும் அதனை மீண்டும் மீண்டும் பிரதமரே மீறிக் கொண்டிருக்கிறார். புலாவாமாவில் உயிர்த்தியாகம் செய்த மத்தியப் பாதுகாப்புப்படை வீரர்களின் பெயரில் வாக்குகளை கேட்கிற பிரதமர், அவர்களின் துரதிர்ஷ்டவசமான மரணத்துக்குக் காரணமான பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு பொறுப்பேற்க மட்டும் மறுக்கிறார். பிரதமருடைய அணுகுமுறையால் ஊக்கமடைந்த உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத்தோ நம் நாட்டின் பாதுகாப்புப் படைகளை “மோடியின் சேனை” என்றழைக்கிறார்.  இவ்வளவு அப்பட்டமாக தேர்தல் நடத்தை விதிகள் மீறப் பட்டாலும் சக்தி மிக்கவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க அஞ்சுகிற அமைப்பாகவே தேர்தல் ஆணையம் உள்ளது.

பாதுகாப்புப் படையினரை அரசியலாக்கும் போக்கு முன்னாள் வீரர்களின் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. முப்படைகளின் தளபதிகளாக இருந்தவர்கள் உள்ளிட்ட நூற்றி ஐம்பதுக்கும் மேற்பட்ட ஓய்வு பெற்ற உயரதிகாரிகள் அரசியல் ஆதாயத்திற்காக பாதுகாப்புப் படைகளை பயன்படுத்தும் போக்கினை தடுத்து நிறுத்த உடனடியாக தலையிட வேண்டும் என்று குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளனர். இப்புகார் மீது ஜனாதிபதி என்ன நடவடிக்கை எடுப்பார் என்று தெரியவில்லை. அரசியல் சாசனப் பதவியில் இருந்தாலும் வெளிப்படையாகவே பாஜகவிற்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த ஒரு ஆளுனர் மீது நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையம் அளித்த முன்மொழிவின் மீது எந்த அசைவையும் செய்யாமல் ஜனாதிபதி மௌனம் காத்து வருகிறார்.

இது நாள் வரை காணாத அளவற்ற பண பலத்தின் பயன்பாட்டை இத்தேர்தலில் காண முடிந்துள்ளது.  தேர்தல் பத்திரங்கள் மூலமாக பாஜக அரசு வெளிப்படைத்தன்மை இல்லாமல் இருப்பதை சட்டபூர்வமாக்கி விட்டது. அரசியல் கட்சிகளுக்கு யார், எவ்வளவு நிதியை எப்படி அளிக்கிறார்கள் என்பதை வாக்காளர்கள் அறிந்து கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என்று தலைமை வழக்கறிஞர் வாதாடியது அராஜகத்தின் உச்சகட்டம்.  தேர்தல் பத்திரங்களின் மூலமாக கிடைக்கப்பெற்ற நன்கொடைகளில் 95 % பாஜகவிற்குத்தான் சென்றுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் நிதியளிப்பது பிரதிபலனை எதிர்பார்த்துத்தான் என்பது அனைவரும் அறிந்தது. இது சாமானிய மக்களின் நலனை பாதிக்கும். தற்போதைய நாடாளுமன்றம் அதிகபட்ச கோடீஸ்வரர்களைக் கொண்டதாக உள்ளது. தற்போதைய மக்களவைத் தேர்தலிலும் கூட போட்டியிடுகிற வேட்பாளர்களில்  பெரும்பான்மையானவர்கள் கோடீஸ்வரர்களே. இந்திய நாடாளுமன்றமும் அரசும் செல்வந்தர்களிடம் சிறைப்பட்டு விட்டது.  எனவே ஜனநாயகத்தைப் பாதுகாக்க, விகிதாச்சார பிரதிநிதித்துவம், அரசு செலவு செய்தல் உள்ளிட்ட தேர்தல் சீர்திருத்தங்கள் உடனடித் தேவையாகும்.

கடந்த ஐந்தாண்டு காலமாக, அரசின் பொருளாதாரக் கொள்கைகளினால் கடுமையான தாக்குதல்களை சந்தித்தவர்கள் உழைக்கும் வர்க்கம்தான். ஆனால் அத்தாக்குதல்களுக்கு எதிர்வினைகள் இல்லாமல் இல்லை. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், வாலிபர்கள், பெண்கள் ஆகியோர் நிகழ்த்திய பெரும் திரள் வேலை நிறுத்தங்கள் உள்ளிட்ட பல எதிர்ப்பியக்கங்களை தேசம் கண்டது. இந்திய மக்கட்தொகையின் முக்கியமான அங்கமாகிய இவர்கள் தங்கள் பிரச்சினைகள் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம் பெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

இப்போராட்டங்களை தலைமையேற்று வழி நடத்திய இடதுசாரிகள் வலிமைப்படுத்தப்பட வேண்டும்.  இடதுசாரிகள்தான் ஏதுமற்ற ஏழை மக்களின்  குரலாக திகழ்கின்றனர். அக்குரல் நாடாளுமன்றத்தில்  வலிமையாக ஒலிக்க வேண்டும். மத வெறியர்களிடமிருந்தும் நவீன தாராளமயமாக்கல் கொள்கைகளை பின்பற்றும் ஆட்சியாளர்களிடமிருந்தும் நாம் நாட்டை பாதுகாக்க வேண்டும். தேசத்தின் பன்முகத்தன்மையையும் பொருளாதார, சமூக, பாலியல் சமுத்துவ நீதிக்காக உழைக்கும் சக்திகளை ஆதரிக்க வேண்டும்.

“அரசியலில் 
பக்தி மனப்பான்மையும், 
நாயக வழிபாட்டு துதிபாடலும் உருவானால் 
அது நிச்சயமாக ஜனநாயகத்தைச் சிதைத்து 
இறுதியில் 
சர்வாதிகாரத்திற்கே இட்டுச் செல்லும்” 

என்று நீண்ட காலத்திற்கு முன்பே டாக்டர் அம்பேத்கர் எச்சரித்தார். டாக்டர் அம்பேத்கரின் எச்சரிக்கை முன்னைக் காட்டிலும் இன்றைய இந்தியாவிற்கு மிகவும் பொருத்தமாகவே உள்ளது. இந்திய ஜனநாயகத்திற்கு நிஜமாகவே இது சோதனைக் காலம். இந்திய ஜனநாயகம் நோய்வாய்ப்படாமல் பாதுகாக்கும் பொறுப்பு இந்திய உழைக்கும் வர்க்கத்திற்குத்தான் உள்ளது.

(இன்சூரன்ஸ் வொர்க்கர் மே 2019 இதழ் தலையங்கத்தின் தமிழாக்கம்)

1 comment: