Wednesday, March 1, 2017

நெல்லை பாதி, உடுப்பி மீதி – சேர்ந்து செய்த . . . .





கடந்த வியாழனன்று புதுச்சேரியில் எங்கள் சங்கத்தின் ஒரு கருத்தரங்கம் புதுச்சேரியில் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் சிறப்புரையாற்றிய எங்கள் அகில இந்திய இணைச்செயலாளர் ஒரு பிரச்சினைக்கு உதாரணம் சொல்கையில் “தோழர் ராமன் நன்றாக சமைப்பார். இருந்தாலும் அவரே வேறு ஒரு தோழர் வீட்டில் போய் சமைத்தால் சிரமப்படுவார்” என்று சொல்ல அவையில் ஒரே சிரிப்பொலி,

அவர் ஒரு உதாரணத்திற்காக சொன்னாலும் கூட, நீண்ட நாட்களாக என்னுள் உறங்கிக் கொண்டிருந்த சமையல் கலைஞனை எழுப்பி விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதன் விளைவு ஞாயிறு அன்று ஒரு புதிய முயற்சிக்கு வித்தானது.

ஒக்காரை என்ற நெல்லை மாவட்ட இனிப்பு பற்றிய ஒரு சமையல் குறிப்பையும் ஹயக்ரீவா மட்டி என்ற உடுப்பி பகுதி இனிப்பு பற்றியும் சமீபத்தில் படித்தது நினைவுக்கு வந்தது. இரண்டும் அடிப்படையில் கடலைப்பருப்பில் செய்யப்படுகிற இனிப்பு. இந்த இரண்டு குறிப்புகளையும் இணைத்து புதிதான முறையில் முயற்சி செய்தேன்.

அந்த அனுபவம் உங்களுக்காக இங்கே.

தொடங்கும் முன்பாக முந்திரியை நெய் விட்டு வறுத்து தனியாக வைத்துக் கொண்டேன். பிறகு கடலைப் பருப்பை நன்றாக வறுத்து குக்கரில் வேக வைத்து வேக வைத்த பருப்பை மிக்ஸியில் கொஞ்சமே கொஞ்சமாக தண்ணீர் விட்டு அறைத்து வைத்துக் கொண்டேன்.

பின்னர் வாணலியில் சிறிதளவு தண்ணீரில் சர்க்கரையை (வெல்லம் போட்டும் செய்யலாம். என் மகனின் நேயர் விருப்பமாக சர்க்கரை) பாகு வைத்து அது நன்றாக கொதிக்கையில் கடலைப் பருப்பு கலவையை போட்டு கிளறி பிறகு தேங்காய் துறுவலையும் போட்டு கிளறிக் கொண்டேன். எல்லாம் நன்றாக கலந்த பின்பு முந்திரியையும் சேர்த்து இறுதியாக கொஞ்சமாக நெய், ஏலக்காய் பொடி போட்டு இறக்கி வைத்தேன்.



பெயர் எதுவும் வைக்கவில்லை.

பெயரில் என்ன இருக்கிறது. சுவை நன்றாக இருந்தால் போதாதா?

அது?

ஒரே நாளில் தீர்ந்து விட்டது. அதை விட வேறென்ன சான்று வேண்டும்!!!

2 comments:

  1. உங்களுக்கு பிடித்த ஆனால்,, ரொம்பவும் பிடிக்காத ஒரு பேரை கண்டு பிடி ச்சி வச்சா போச்சி.😂

    ReplyDelete