Tuesday, February 28, 2017

சங்கிகளே, எது ஆபாசம், எது அராஜகம்?





மேலே படத்தில் உள்ள பெண் குர்மெஹர் கவுர். இந்த பெண்ணை பாலியல் வன் கொடுமை செய்வேன் என்று ஒரு மாணவன் மிரட்டுகிறான். இன்னொருவனோ அந்த பாலியல் கொடுமையை எப்படி செய்வேன் என்று விவரிக்கிறான். அவர்கள் நிஜமாகவே மாணவர்களா என்று தெரியாது. ஆனால் சங் பரிவாரத்தின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி  அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதால் மாணவர்கள் என்று குறிப்பிட்டுள்ளேன்.

இந்தப் பெண் செய்த தவறு என்ன?

இந்த புகைப்படத்தில் கையில் வைத்துள்ள அட்டை.

ரௌடித்தனம் செய்யும் ஏ.பி.வி.பி அமைப்பைக் கண்டு நான் அஞ்ச மாட்டேன் என்று உறுதியாகச் சொன்னதால் இந்த மிரட்டல். காவிகளின் இந்த கீழ்த்தரமான செயலை எழுதினால் சில சங்கிகளுக்கு கோபம் வேறு வந்து விடுகிறது. ஆபாசம், அராஜகம் என்று வேறு அதற்கு அர்த்தம் சொல்கிறார்கள்.

ஒரு பெண்ணை பாலியல் கொடுமை செய்வேன் என்று சொல்வது ஆபாசமா?

இல்லை அப்படி பேசுகிற, அது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை அம்பலப்படுத்துவது ஆபாசமா?

ஒரு கல்லூரியில் நுழைந்து மாணவர்களை குண்டாந்தடியில் அடித்து தாக்குவது அராஜகமா?

இல்லை அந்த அராஜகத்தை நிகழ்த்துவர்கள் மத்திய ஆளும் கட்சியின் அடியாட்கள் என்று எழுதுவது அராஜகமா?

அசிங்கமான வார்த்தைகளை அனாமதேயமாக ஒளிந்து கொண்டு எழுதுவது ஆபாசமா?

இல்லை அந்த ஆபாசத்திற்கு கடுமையான எதிர்வினை புரிவது ஆபாசமா?

உள்நாட்டு, பன்னாட்டு முதலாளிகளின் லாப வெறிக்காக இந்தியாவின் செல்வாதாரங்களை அடமானம் வைப்பதை தரகர் வேலை என்று சொல்லி விமர்சிக்காமல் தேச பக்தர் என்று போற்றி விருது அளிக்க வேண்டும் என்று சங்கிகள் விரும்புகிறார்கள் போலும்.

பொய்களை மட்டுமே மூலதனமாகக் கொண்டு பிழைப்பு நடத்துகிற அரசு இந்த அரசு. அதனை அம்பலப்படுத்துபவர்களை மிரட்ட சில அடியாட்களை ஏவி விடும். அவர்கள் அனாமதேயங்களாக ஆபாச வார்த்தைகளில் அர்ச்சிப்பார்கள். விமர்சிப்பவர்கள் பெண்களாக இருந்து விட்டால் நிலைமை இன்னும் மோசமாகி விடும். காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணிக்கு நிகழ்ந்ததை மறந்திருக்க முடியாது.

இதிலே கருத்துச் சுதந்திரம் இருப்பதால்தான் உங்களால் மோடியையே எதிர்த்து எழுத முடிகிறது என்று வேறு. எனது கருத்துரிமை மோடியால் கிடைத்தது அல்ல. அரசியல் சாசனம் தந்த உரிமை. சுதந்திரப் போராட்டம் கொடுத்த உரிமை. சுதந்திரப் போராட்டத்தின் தியாக வேள்வியில் எங்கள் முன்னோர்களின் உதிரமும் கலந்திருக்கிறது. சங்கிகளுக்கோ காட்டிக் கொடுத்த கேவலமான பாரம்பரியம் மட்டுமே உள்ளது.

கருத்துரிமையை முடக்க சட்டத்தால் முயற்சிப்பார்கள். அதற்கு வாய்ப்பு இல்லாத போது எந்த அளவிற்கும் தரம் தாழ்ந்து போவார்கள்.

உங்கள் பேச்சில். சிந்தனையில், எழுத்தில் ஆபாசம் இருக்கிறது. நடவடிக்கைகளில் அராஜகம் இருக்கிறது. அதை நியாயப்படுத்தும்போது நீங்கள் வெட்கம் கெட்டவர்கள் என்பதும் தெரிகிறது. ஆகவே உங்களைப் போலவே அடுத்தவரை நினைக்கும் எண்ணம் எல்லாம் வேண்டாம்.

இந்த தேசத்தின் பெரும் துயரம் மோடி ஆட்சிக்கு வந்தது. அதற்குக் காரணம் அவர் சொன்ன பொய்களை நம்பி வாக்களித்த அப்பாவி மக்கள். மோடியால் வஞ்சிக்கப்பட்டோம் என்பதை இரண்டரை ஆண்டுகளில் பலரும் உணர்ந்து வருந்துகிறார்கள்.

இரண்டரை வருட மோசமான ஆட்சிக்குப் பின்னும் மோடியை ஆதரிப்பவர்களை “முட்டாள் அல்லது அயோக்கியர்” என்று இல்லாமல் வேறெப்படி அழைப்பது? இந்த உண்மையை சங்கிகளால் ஏற்றுக் கொள்ள முடியாது. கோபம்தான் வரும். ஆபாசமாக பேசுவதைத் தவிர வேறென்ன அவர்களால் என்ன முடியும்?

பின் குறிப்பு : இந்த குர்மெஹர் கவுர் தொடர்பாக இன்னும்  எழுத வேண்டியுள்ளது. முடிந்தால் இன்று இல்லையேல் நாளை

No comments:

Post a Comment