Monday, March 27, 2017

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் ஜெயமோகா?
தவறான ஒரு செய்தியை சொல்லி விட்டீர்கள். வாய் தவறி தெரியாமல் சொல்லி இருப்பீர்கள்  என்று நம்ப யாருமே  தயாராக  இல்லை. ஏனென்றால் அவ்வளவு பெத்த பேரு உங்களுக்கு.

முக நூலில் பார்த்த சில விஷயங்களை (உங்கள் தொண்டர்கள் வாயிலாக உங்களுக்கு தெரிந்திருக்கும் என்றாலும் கூட) உங்களின் கவனத்திற்கு கொண்டு வரலாம் என்று ஆசைப்படுகிறேன்.

அசோகமித்திரன் எனும் எழுத்தாளரை ஒரு காரோட்டியாக பயன்படுத்தினார் என்று குற்றம் சுமத்தப்பட்ட திருமதி இந்துமதி அவர்களின் குமுறலைக் கேளுங்கள்.

 அசோகமித்திரனைப் பற்றி ஜெயமோகன் கூறியதைப் பார்த்து ரத்தம் கொதிக்கிறது.ஏதேதோ சொல்லி திட்டத் தோன்றுகிறது. அந்தப் பூ போன்ற மனிதர் மீது யார் வன்மம் கொண்டாலும் கோபப்பட்டாலும் கோபப்பட்டவர் மீதுதான் தவறு இருக்க வேண்டுமே தவிர சத்தியமாக அசோகமித்திரன் மீது கடுகளவு தவறு கூட இருக்கமுடியாது. எழுத்தையும் சேர்த்தே அவ்வளவு அப்பழுக்கற்றவர். சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள். வாழ்விலே ஒரு முறையிலிருந்து அத்தனையும் படித்தவள். ஜானகிராமனும், அசோகமித்திரனும் எங்கள் ஆசான்கள். எங்கள் போற்றுதலுக்கும் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரியவர்கள். அதிலும் அசோகமித்திரன் மிகவும் மென்மையானவர். சற்று அழுத்திக்கூடப் பேசாதவர். அவர் மீது ஒருவர் இப்படி வன்மம் கொள்ள முடியுமென்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆக்ரோஷமாகக் கோபம் வருகிறது.

ஜெயமோகன். நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் நிறைய இருக்கிறது. முதலில் அசோகமித்திரனுக்கு டிரைவிங் தெரியாது என்பதை அவர் மகனே சொல்லி விட்டார். இரண்டாவது அசோகமித்திரனை காரோட்டியாக வைத்துக் கொள்ள நான் ஒன்றும் அர்ஜூனன் அல்ல. இதை எழுதுவதற்கே என் மனமும் கைகளும் கூசுகின்றன. என் வீட்டில் அசோகமித்திரன் சாயலில் கூட டிரைவர் கிடையாது. எனக்கு மகள் இல்லை. மகன் இது நாள்வரை அமெரிக்காவில் இருந்தவன். இவை எல்லாவற்றிற்கும் மேலாக அசோகமித்திரனுக்கு வேலை செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. ஜெமினியில் வேலை செய்ததற்குப் பின்னர் அவர் வேறு எங்கும் வேலை செய்யவுமில்லை.அப்படிப் பட்டவரை வேலைக்கு வைத்துக் கொள்ளும் தகுதி எங்கள் யாருக்கும் இல்லை. சாவி உட்பட. சாவியும் அவரும் ஒன்றாக ஜெமினி யில் வேலை பார்த்தவர்களே தவிர சாவி பத்திரிகையில் நீங்கள் சொன்ன மாதிரி அவர் டீ கொண்டுத்தரவுமில்லை. அவர் சாவி ஆபீஸூக்கு வந்திருந்தால் சாவி அவரை ஓடிப்போய் வரவேற்றிருப்பார்.தன் நாற்காலியில் அமரச்செய்திருப்பார்.சாவிக்கு எழுத்தையும் எழுத்தாளர்களையும் மதிக்கத் தெரியும். இரண்டுமே தெரியாத நீங்கள் எவ்வாறெல்லாம் கூறுவது எங்களுக்கு வேதனை மட்டுமல்ல. வெறுப்பையும் ஏற்படுத்துகிறது.

அசோகமித்திரன் சில இலக்கியப் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்தாரே தவிர நீங்கள் காழ்ப்புணர்ச்சியோடு குறிப்பிட்ட எந்த வேலையிலும் இல்லை. இது போன்ற அவதூறுகள் எழுதுவதை நீங்கள் நிறுத்திக் கொள்ளுங்கள்.அதுதான் உங்களுக்கு நல்லது.


அடுத்ததாக தோழர் இரா.எட்வின் கொஞ்சம் நாகரீகமாக சொல்லியது கீழே.

 தன் மரணத்திற்குப் பிறகு ஜெயமோகன் நம்மைப் பற்றி என்ன எழுதித் தொலைப்பாரோ என்ற பயத்தினால் இவர் எழுதுவதை நிறுத்தும்வரை தமக்கு சாவு வரக்கூடாதென்று பலர் வேண்டிக் கொண்டு இருக்கிறார்கள்

உங்களின் இரங்கற்பா கண்டு எழுத்தாளர்கள் அஞ்சுவது பற்றி தோழர் ஸ்ரீரசா, கொஞ்சம் காட்டமாகவே எழுதியதை அவசியம் படியுங்கள்.சுயமோகனின் மரணத்துக்குப் பிறகே தமக்குச் சாவு வரவேண்டுமென்று பல தமிழ் எழுத்துப் பேனாக்களும், தட்டச்சுச் செய்யும் விரல்களும் நடுநடுங்கிக் கொண்டிருக்கின்றனவாம்...

பலர் தாம் எழுதிக் கொண்டிருக்கும் சிறுகதை, நாவல் போன்ற புனைவுகளை நிறுத்தி வைத்துவிட்டு முதல் வேலையாக முன்னரேயே தமது சுய சரிதையை அல்லது உயிலை எழுதி இரகசியப் பெட்டகத்தில் பதிந்து விட முடிவு செய்து விட்டார்களாம்...

ஆகையால் தமிழ் கூறும் பதிப்புலகில் இனிப் பலப்பல காலத்திற்கு, குறைந்த பட்சம் சுயமோகனின் மரணம் வரையிலுமாவது சுயசரிதைப் பிரதிகள்தான் கிடைக்கப் போகிறதாம்...

சுயசரிதைகளையும் புனைவுகளால் நிரப்பிக் கொள்வதா அல்லது புனைவுகளையே சுயசரிதைகளால் நிரப்புவதா என்று தமிழ் எழுத்தின் மூளைகளுக்குள் மிகப்பெரிய படைப்பு யுத்தமே நடந்து கொண்டிருக்கிறதாம்...


அசோகமித்திரனுக்கு அங்கீகாரம் கொடுக்கவில்லை என்று நீலிக்கண்ணீர் வடிக்கும் நீங்கள் என்ன செய்தீர்கள் என்று தோழர் யமுனா ராஜேந்திரன் கேட்கும் கேள்வி நியாயமாகத்தானே இருக்கிறது. 

 ஒரு உத்தம புத்திரன் எழுதுகிறார். இரண்டு பேருக்குத்தான் உண்மை தெரியுமாம். உண்மையைக் கண்டுபிடிக்கவே முடியாதாம். ஓருத்தர் இறந்துவிட்டார். இன்னொருவர் கடந்த காலத்தில் நிறையச் சரடு விட்டவர். இரண்டு பேருக்கும் தெரிந்த உண்மையை இறந்துபோனவர் வந்து சொல்லாமாட்டார் என்பதை இப்போது பிரச்சினையை அவிழ்த்து விடுகிற இருக்கிறவர் அறிவார்தானே? இருக்கிறவர் பொய்யே பேசாத உத்தமரா? அவர் என்ன அரிச்சந்திரன் வம்சமா? ஏன் அந்த பாசிபிலிடியை இந்த உத்தமபுத்திரன் யோசிக்க மாட்டானென்கிறார்? உண்மையைத் தெரிந்து கொள்ளவே முடியாது எனில், எதற்காக அந்தப் பிரச்சினையை முன் வைத்துப்பேசுகிறீர்கள்? நீங்கள் பேசுகிற ஓரு விஷயத்தையாவது குறிப்பாகப் பேசுகிறீர்களா?? நடிகையின் தொப்புள் படத்தை நாலு துண்டாக வெட்டிப் பிரசுரித்துவிட்டு கிசு கிசு எழுதுகிறவனுக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்? உறுதிப்படுத்த முடியாத ஒரு விஷயத்தை வைத்து மற்ற மனிதரை கேவலமாகப் பேசாமல் இருக்கப் பழகாத நீங்களெல்லாம் எழுதி என்ன பயன்?அசோகமித்திரன் அங்கீகாரம் குறித்து பேசுகிற அநேகம் தமிழ் சுத்த இலக்கிய வெண்ணெய்கள் எல்லாம் இந்த மூன்று இலக்கிய விருதுகளைச் சுற்றித்தான் இருக்கிறார்கள். விஷ்ணுபுரம் விருது, விளக்கு விருது மற்றும் இயல் விருது. ஜெமோ தன்ர வீட்ல தல்ஸ்த்தோய் படத்துக்கு அப்புறம் அமி படந்தான் மாட்டிருக்காறாம். பெறவு என்லே அமிக்கு இதுவரை விஷ்ணுபுரம் விருது தரல? இந்துமதிக்கு அவரு கரோட்டினதா புளுகு விடுற பேமானியே இதுக்கு முதல்ல பதிலச் சொல்லு.. 

தமிழ் இலக்கியத்துக்கு வெளக்குப் புடிக்கிற விளக்கு இதுவரை ஏன் அமிக்கு விருது தரவில்லை? இன்று அமி நாள் என்று புளகத்துடன் அமி பற்றி எழுதுகிற இயல்விருது அமு ஏன் இதுவரை அமிக்கு விருது தரவில்லை எனச் சொல்வாரா?


இன்னும் நிறைய பதிவுகள் உள்ளது. என்னுடைய நேரத்தின் அருமை கருதி இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன்.

இவ்வளவு கடுமையான எதிர்வினைகள் வந்த பின்னும் நீங்கள் கொஞ்சமாவது வருந்தியுள்ளீர்களா என்று பார்த்தால் வழக்கம் போல “நான் பிடித்த முயலுக்கு காலே கிடையாது. இறக்கை மட்டுமே” என சாதித்துக் கொண்டு இருக்கிறீர்கள்.

அதோடு நின்றிருந்தாலாவது பரவாயில்லை.

அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ஜாதி என்பதை நிரூபிக்கிற வகையில் ஜாதிக்குட்டைக்குள் புகுந்து இன்னும் அதிகமாக நாற்றமடிக்க ஆரம்பித்து விட்டீர்கள்.

ஒரு சர்ச்சையை எப்படியெல்லாம் திசை திருப்ப முடியும் என்பதற்கு உங்களது குறிப்பு ஒரு முன்னுதாரணம். காவிக்கூட்டத்தின் அறிவுஜீவி அல்லவா? திசை திருப்ப உங்களுக்கெல்லாம் சொல்லிக் கொடுக்கவா வேண்டும்.

வழக்கமாக உங்களை வசை பாடுபவர்களை இஸ்லாமியர்கள் என்று முத்திரை குத்தி புறம் தள்ளுவீர்கள். இப்போது இப்பிரச்சினையில் உங்களை கண்டிப்பவர்களை எல்லாம் ஜஸ்ட் லைக் தட் பார்ப்பனர்களாக  ஜாதி மாற்றம் செய்து விட்டீர்கள். நல்ல வேளை, பாஜக பாணியில் தேச விரோதி என்று சொல்லவில்லை. அதுவரையில் மகிழ்ச்சிதான்.

உங்களைக் கண்டிப்பவர்கள் அனைவரும் நீங்கள் சொன்ன மூன்று பொய்களுக்காகத்தான் கண்டிக்கிறார்கள்.

காரோட்டுவதோ,
டீ வாங்கித் தருவதோ,
அப்பளம் விற்பதோ

கண்டிப்பாக மோசமான வேலைகள் அல்ல.

வறுமையில் வாடுவது என்பதும் இழிவானது அல்ல.

ஆனால் நீங்கள் சொன்ன அந்த மூன்றுமே அப்பட்டமான பொய்கள் என்பதுதான், அது மட்டும்தான் சர்ச்சைக்கான வித்து.

இறந்து போனவர்களைப் பற்றி இப்படி ஏதாவது கதை விடுவது என்பது உங்களது வாடிக்கை என்பதால்தான் இந்த முறை இவ்வளவு கோபம் வெளிப்பட்டுள்ளது.

இதை நீங்கள் உணர்ந்து கொண்டதால்தான் உங்களுக்கே உரிய வக்கிர குணாம்சத்தோடு  ஜாதிய முலாம் அளித்து திசை திருப்புகிறீர்கள்.

நீங்கள் அசோகமித்திரனுக்கு இழைத்த அநீதியை விட இப்போது கொடுக்கிற ஜாதிய நிறம் இன்னும் அசிங்கமாக உள்ளது.

ஆனால் ஒன்று உங்களை திட்டிய பதிவுகளாலோ அல்லது உங்களுக்கு ஆதரவாக உங்களின் தொண்டர்களின் பதிவுகளாலோ இணைய வெளி நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது.

“திருமண வீடானால் நானே மணமகன், எழவு வீடானால் நானே பிணம்” என்று இதற்குத்தானே நீங்கள் ஆசைப்பட்டீர்கள் !!!!!!


5 comments:

 1. ஜெயமோகன் இந்த அளவுக்கு பொய்களை கூசாமல் சொல்வது அவரது இயல்பை காட்டுகிறது. இவரது கட்டுரைகளில் தனது தரப்பை வலியுறுத்த பல பொய்களை எழுதுவார். அவற்றைப் பற்றி கேள்வி கேட்டால் நினைவில் இருந்து எழுதியாக மழுப்புவார். சரியான ஏமாற்று பேர்வழி.

  ReplyDelete
 2. ஜெயமோகன் எப்போதும் நம் வீட்டில் நாம் பேசுவது போல பொதுவெளியில் பேசிவிடுகிறார். MGR ,சிவாஜி குறித்த ஆனந்த விகடன் கட்டுரை, இன்றைக்கு நினைத்தாலும் அவ்வளவு நகைசுவை. உடனே யாராவது புண்பட்டு விடுவார்கள்!! போர்க்கொடி தூக்கி எதிர்ப்பு தெரிவிப்பார்கள். வங்கி பெண் வேலை செய்வதை, நாமும் இப்படி தான் சொல்லுவோம். ஆனால் ,பொதுவெளியில் இல்லை.
  இப்போது அவர் அசோகமித்திரனை பற்றி எதுவும் தவறுதலாகவோ, அவரை இழிபடுத்தவோ சொல்லவில்லை.

  ஆனால், ஜெமோ என்ற தனி நபரின் மீது எப்போது சாணி எறியலாம் என்று ஒரு கூட்டம் காத்து கொண்டு இருக்கிறது. அவர் எதை சொன்னாலும், அதை திரித்து ,அவமானப்படுத்துவதில் ஒரு அற்ப சந்தோசம்.நான் ஜெமோ ஆதரவாளர் இல்லை. உண்மையை பேசுபவரை உலகம் ஏற்று கொள்வதில்லை.

  சரி, அப்படியே டீ வாங்கி கொடுத்திருந்தாலும் , அதில் என்ன தவறு ??

  ReplyDelete
  Replies
  1. நீங்க ஜெமோ ஆதரவாளர் இல்லை. அப்புறம் ஏன் சார் அவருக்கு வக்காலத்து வாங்குகிறீர்கள்?

   டீ வாங்கிக் கொடுப்பது இழிவு என்று யாருமே சொல்லவில்லையே. அப்படி செய்யாத போது இவர் கற்பனையாக கதை விட்டது இழிவு படுத்தியது அல்லாமல் வேறு என்ன?

   இவர் தன் உள்மனது வக்கிரங்களை வெளிப்படுத்துவார். அதை கண்டித்தால் அதற்கு பெயர் சாணி அடிப்பதா? அவர் வெளியிட்டது சாணி என்று சொல்கிறோம். நாற்றமடித்தால் அதற்கு அவர்தான் பொறுப்பு.

   ஜெமோவிடமும் நேர்மை கிடையாது. அவரை ஆதரிப்பவர்களுக்கும் கூட

   Delete
 3. எழுத்தில் வெல்ல முடியவில்லை. உழைப்பில் அசகாய சூரன். திட்டியாவது காழ்ப்புணர்ச்சியை காண்பிப்போம் என்று ஒரு கூட்டம் இயங்குகிறது. யதார்த்தவாதி வெகுஜன விரோதி.

  ReplyDelete
  Replies
  1. காழ்ப்புணர்வோடு எழுதிக் கொண்டிருக்கும் கற்பனாவாதி. தன்னை திட்டிக் கொண்டாவது எல்லோரும் நினைக்க வேண்டும் என்ற நினைக்கிற சந்தர்ப்பவாதி. அவரை பொறுப்பா எழுதச் சொல்லுங்க சார். இப்படியே எழுதிக்கிட்டு இருந்தா விரைவில் எங்காவது கல்லடி வாங்கப் போகிறார். நீங்களோ இல்லை உங்களைப் போல முந்தைய பின்னூட்டத்தில் எழுதியபடி நிஜமாகவே சாணியால அடிச்சிடப் போறாங்க

   Delete