Saturday, March 18, 2017

சிவப்பா இருக்கறவன் எல்லாம் ??????????
வெறியில் அலையுது திராட்சை கிட்டா  உ.பி நரிக்கூட்டம் என்ற நேற்றைய பதிவின் தொடர்ச்சி இது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க.கனகராஜ், ஒரு உடன் பிறப்பின் அபத்தமான குற்றச்சாட்டை தோலுரித்து தொங்கப் போட்ட பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்."ஆனாலும் உங்களை நேசிக்கிறேன் யுவகிருஷ்ணா..."

"ஏகே கோபாலனின் மருமகன்தான் சிபிஎம் பாராளுமன்றக் குழுத்தலைவர். இது குடும்ப அரசியல் இல்லையா என்று கேட்டால், குடும்பமே தோழர்கள்தான்னு சப்பைக்கட்டு கட்டுவாங்க பாருங்களேன். தோழரா இருந்தாலும் பூணூல் இல்லைன்னா பா.கம்யூவில் பதவி லேது". 

யுவகிருஷ்ணா வணக்கம்,

உங்களின் இந்தப் பதிவு, எனக்கு ஆச்சர்யம் அளித்தது. உங்களின் பல பதிவுகளைப் போலவே இதுவும் உங்களது கற்பனையை உண்மை போல சித்தரித்திருப்பதுதான் காரணம்.

முதலாவதாக, கருணாகரன் பூணூல் போட்டவரல்ல. இன்றைக்கு நிலைமைகள் மாறியிருந்தாலும், சில பத்தாண்டுகளுக்கு முன்பு அவர் சார்ந்துள்ள சமூகத்தில் உயர் சாதிக்காரர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் தண்ணீர் கூட அருந்தியதில்லை. ஏ.கே.கோபாலன் என்கிற பெயரைப் பார்த்ததும் ஒருவேலை பூணூல் போட்டவர் என்று தோன்றியிருக்கலாம். ஒரு பத்திரிகையாளர் என்கிற முறையில் அவர் பூணூல் அணியும் வழக்கமுள்ள சாதியில் பிறந்தவர் இல்லை என்பதை நீங்கள் அறிந்து கொள்ள முடியும். ஏ.கே.கோபாலனின் மனைவி சுசீலாவும் நீங்கள் சொல்லுகிற வறையறைக்குள் வரமாட்டார். அரசின் வகைப்பாட்டின்படி அவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர். இல்லாத பூணூலை இவர்கள் மூன்று பேருக்கும் மாட்டிவிடும் உங்கள் விருப்பத்தை ரசிக்கிறேன். அதேசமயம் அது உண்மையல்ல என்பதையும் மிகத் தாழ்மையோடு தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன். 

அடுத்ததாக, ஏ.கே.கோபாலனின் மருமகன் அதனால்தான் இவருக்கு பதவி கிடைத்தது என்று பேசியிருக்கிறீர்கள். அவர் மருமகன் என்பதும் உண்மை. அதைவிட அவரது தோழன் என்பது கூடுதலான உண்மை. பொதுவாக இதுபோன்ற பதிவுகளை நான் எந்தக் காரணத்திற்காகவும் பொதுவெளிகளில் சொல்வது கிடையாது. ஆனாலும், உங்களுடைய வேகமும் ஆக்ரோசமும் எல்லாவற்றையும் தன்னிலையிலிருந்தே பார்க்கிற நிலையைத் தோற்றுவித்திருக்கிறதோ என்று அஞ்சுகிறேன். 

தோழர் ஏ.கே.கோபாலன் சுசீலா இவர்களது மகள் லைலா. தன் வாழ்நாள் முழுவதையும் மனிதகுல விடுதலைக்காக அர்ப்பணித்துக் கொண்ட தோழன் ஏ.கே.ஜி எதற்காகவும் கவலைப்பட்டது கிடையாது. ஆனால், அவருக்கு ஒரு கவலை இருந்தது. அவரின் மகளைப் பற்றி. எதையும் சேர்த்து வைக்காத தன் குடும்பம் மனநிலை குன்றிய இந்த மகளை பார்த்துக் கொள் என்று யாரிடமும் ஒப்படைக்க முடியாதே என்ற கவலை. தன் தலைவனின் தியாகத்தையும் கவலையையும் எண்ணி வருத்தப்பட்ட, அதை தன் கவலையாக பாவித்துக் கொண்ட இளம் கம்யூனிஸ்ட்டான தோழர் கருணாகரன் அவரை திருமணம் செய்து கொள்ள முன்வந்தார். இதுவும் கூட எங்கள் தோழமைக் குடும்பங்களின் இயல்புதான் என்பதை தமிழக உதாரணங்களோடு என்னால் சொல்ல முடியும். அதைக் கேளிப் பொருளாக்க பலபேர் முனைவார்கள் என்கிற காரணத்தால் தமிழகம் சார்ந்த இத்தகைய நிகழ்வுகளை நான் இங்கே பதிவிடவில்லை. இது குடும்ப அரசியல் என்று தாங்கள் கருதினால் ஆமாம், இது கம்யூனிஸ்டுகளின் குடும்ப அரசியல். அதில் எங்களுக்கு பெருமைப்பட ஆயிரம் இருக்கிறதே தவிர. கவலைப்படவும் அவமானப்படவும் எதுவுமில்லை என்பதை மகிழ்ச்சியோடும் பெருமிதத்தோடும் இன்னும் சொல்லப்போனால் தார்மீகத் திமிரோடு நான் சொல்ல விரும்புகிறேன்.

ஏ.கே.ஜியின் மருமகன் என்பதால் மட்டும் அவர் கட்சியின் மக்களவைத் தலைவராக ஆக்கப்பட்டார் என்கிற தொணியும் உங்கள் பதிவில் இருக்கிறது. உங்களுக்கு தெரிந்திருக்கும், இருப்பினும் நினைவூட்டலுக்காக இதை சொல்லித்தான் ஆக வேண்டும். கேரள மாணவர் இயக்கம், கேரள தொழிற்சங்க இயக்கம் ஆகியவற்றிலெல்லாம் ஊழியராக, தலைவராக இருந்தவர். 1964ல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராகி கிளைச் செயலாளர், பகுதிக்குழு உறுப்பினர், இடைக்குழு உறுப்பினர், மாவட்டக்குழு உறுப்பினர் என கண்ணூர் மாவட்டத்தில் தனது அரசியல் பணியை கொஞ்சம் கொஞ்சமாக அதிகப்படுத்தி மக்கள் பணியாற்றியவர். அவசர நிலைக் காலத்தில் அன்றைய காங்கிரஸ் அரசாங்கத்தால் வேட்டையாடப்பட்ட போது 17 மாதங்கள் தலைமறைவாக இருந்து கட்சிப் பணியாற்றியவர். இப்போது கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர், மாநில செயற்குழு உறுப்பினர், மத்தியக்குழு உறுப்பினர். 1991லிருந்து ஏறத்தாழ 10 ஆண்டுகள் தேசாபிமாணியின் பொது மேலாளர். 1977ம் ஆண்டும் 80ம் ஆண்டும் திரிகார்பூர் தொகுதியிலிருந்து இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். 2004, 2009, 2014 என மூன்று முறை காசர்கோடு தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர். இதையெல்லாம் மீறி இல்லை இல்லை அவருக்கு பூணூல் இருக்கிறது, அவர் ஏ.கே.ஜி மருமகன் என்பதால்தான் இந்த பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது என்று நீங்கள் கருதினால், அப்போதும் எனக்கு வருத்தமில்லை. உண்மை வேண்டுமானால் வருத்தப்பட்டுக் கொள்ளட்டும்.

உங்களது தகவலுக்காக, கேரளாவில் இதுவரையிலும் நான்கு முதலமைச்சர்கள் எங்கள் கட்சியிலிருந்து பொறுப்பேற்று இருந்திருக்கிறார்கள். இஎம்எஸ்.நம்பூதிரிபாட் என்கிற அந்த பிராமணர் தான் அணிந்த பூணூலை மட்டுமல்ல, தன்னுடைய பிறப்பால் தன்னோடு ஒட்டிக் கொண்டிருந்த நிலப்பிரபுத்துவத்தினுடைய அனைத்து மிச்ச சொச்சங்களையும் அறுத்து எறிந்துவிட்டு வந்தவர். உங்களது தகவலுக்காக, அவரது குடும்பத்திலிருந்து வந்த சொத்துக்கள் அனைத்தையும் நிலமற்ற விவசாயத் தொழிலாளிகளுக்கு கொடுத்துவிட்டு, கட்சி கொடுக்கிற அலவென்சில் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தவர். 

அவருடைய வாழ்நாளின் கடைசிக் கட்டத்தில் நிரூபர் ஒருவர், உங்கள் வாழ்க்கையில் எதைச் சாதனையாக சொல்வீர்கள் என்று கேள்வி கேட்டார். இரண்டு முறை முதலமைச்சராக இருந்ததையையோ, 10 ஆண்டுகள் கட்சியின் பொதுச் செயலாளராக இருந்ததையோ அவர் சொல்லவில்லை. மாறாக, பிறப்பால் நான் சனாதன குடும்பத்தைச் சார்ந்தவன் என்றாலும் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக என்னைச் சேர்த்துக் கொண்டதே அதைத்தான் என் வாழ்நாளின் சாதனையாகக் கருதுகிறேன் என்றார்.
அவரைத் தவிர இ.கே.நாயனார், வி.எஸ்.அச்சுதானந்தன், பினராயி விஜயன் இவர்கள் யாரும் பூணூல் போட்டுக் கொண்டு அதன் காரணமாக முதலமைச்சர் ஆனவர்கள் இல்லை என்பதை மெத்தப்பணிவோடு சமர்ப்பிக்க விரும்புகிறேன். 

இதோ, எங்கள் கட்சியின் கேரள மாநிலத் தலைவர்களின் பட்டியல். (உங்கள் பதிவு கருணாகரன், ஏ.கே.ஜி பற்றியதாக இருப்பதால் கேரளாவோடு நிறுத்திக் கொள்கிறேன்.) தங்களால் முடிந்தால் கீழ்க்கண்ட இப்போதைய அந்த மாநிலத் தலைவர்களான இவர்களில் யார் பூணூல்காரர், யார் யாருக்கு உறவினர் என்பதை கண்டுபிடித்துச் சொல்லுங்கள். நாங்களும் புரிந்து கொள்கிறோம். 

1.கொடியேறி பாலகிருஷ்ணன்
2.எம்.ஏ.பேபி
3.பி.கே.குருதாசன்
4.கருணாகரன்
5.எலமலம் கரீம்
6.தாமஸ் ஐசக்
7.ஜோசபின்
8.விஜயராகவன்
9.இ.பி.ஜெயராஜன்
10.ஏ.கே.பாலன்
11.ஷைலஜா
12.ஸ்ரீமதி


இவர்கள்தான் அந்த மாநிலத்திலிருந்து எங்கள் கட்சியின் மத்தியக்குழுவில் உள்ள "பா.கம்யூவில்" தலைவர்கள்.

தங்களது பதிவு பொய்யாய் இருக்கிறதே என வருத்தமிருந்தது. ஆனாலும், எங்களை திரும்பிப் பார்த்து, நான் எத்தனை பாரம்பரியமுள்ள இயக்கத்தின் ஒரு சிறு அணுவாக இருக்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்ள வைத்திருக்கிறீர்கள். அதற்காக நான் உங்களை நேசிக்கிறேன் யுவா...

தொடர்ந்து வக்கிரமாக எழுதிக் கொண்டே இருக்கிற அந்த உடன்பிறப்பு, இதற்கு ஏனோ இன்னும் பதிலளிகவில்லை. மொஹஞ்சதாரோ இல்லை ஹரப்பாவில் ஏதாவது அகழ்வாராய்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறாரா என்று தெரியவில்லை.

"சிவப்பா இருக்கிறவன் பொய் சொல்ல மாட்டான்" என்ற வடிவேலு வசனம் போல சிவப்பா இருக்கிறவங்க எல்லாம் பார்ப்பனர்கள் என்று முடிவு செய்து உடான்ஸ் விட்டார்.  தவறான செய்தி வெளியிட்டால் பிழை திருத்தம் வெளியிடும் பத்திரிக்கை தர்மம் எல்லாம் இவருக்குக் கிடையாது போல. 

பிழைப்புக்காக எதையும் எழுதுவார்கள் போல......

 

1 comment:

  1. ...எதையும் அவசரப்பட்டே எழுதுபவர் யுவகிருஷ்ணா.அவர் இருக்கும் இடம் அப்படி. சில நேரங்களில் அவர் எழுத்தில் உண்மையும் இடம் பெறுவதுண்டு. - இராய செல்லப்பா நியூஜெர்சி

    ReplyDelete