Friday, March 3, 2017

போர் வேண்டாமென்றால் ஏனப்பா பொங்குகிறீர்????

குர்மெஹர் கவுர் – சங்கிகளின் மாணவர் அமைப்பால் மிரட்டப் பெண். அந்தப் பெண் பற்றி கடந்த அக்டோபர் மாதத்திலேயே எழுதிய பதிவின் இணைப்பை இங்கே அளித்துள்ளேன்.பதிவு இது. 

அந்த பதிவில் இணைக்கப்பட்டுள்ள காணொளியின் இணைப்பை இங்கே மீண்டும் தந்துள்ளேன்.

அந்த காணொளிக்கு ஒரு பாகிஸ்தானியர் அளித்த பதில் காணொளியும்  இங்கே இருக்கிறது.

நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவன். உங்கள் அளவிற்கு நானும் இந்தியாவை நேசிக்கிறேன் என்று ஒரு அட்டையில் எழுதி இங்கே ஒருவர் சொல்கிறார். அவருக்கு கிடைக்கும் எதிர்வினையை இந்த இணைப்பின் மூலம் சென்று   காணொளியில் பாருங்கள்.

பொறுப்பான இந்தியர்கள் பாகிஸ்தானியர்களை வெறுப்பதில்லை. அதே போல் பொறுப்பான பாகிஸ்தானியர்கள் இந்தியர்களை வெறுப்பதில்லை. சிக்கலே வெறியூட்டப்பட்டவர்களால்தான் வருகிறது. அதுதான் குர்மெஹர் கவுரை பாலியல் வன் கொடுமை செய்வோம் என்று மிரட்ட வைக்கிறது. 

இப்போது சங்கிகளுக்கு பிரச்சினையாக இருப்பது இந்தப் பெண் ஏ.பி.வி.பி யை எதிர்ப்பது மட்டுமல்ல. போர் வேண்டாம் என்று முன்பு சொன்னதுதான். அப்போது அமைதியாக இருந்த பலரும் கூட இப்போது உபதேசம் செய்கிறார்கள். வழக்கம் போல போலி தேச பக்த முழக்கம் உச்சத்தில் கேட்கிறது.

அந்த பெண் சொன்ன ஏராளமான செய்திகளில் ஒன்றை மட்டும் பிடித்துக் கொண்டு அடிக்கிறார்கள்.

“என் அப்பாவைக் கொன்றது பாகிஸ்தானல்ல. போர்தான்  கொன்றது” என்ற அந்த ஒற்றை வாசகத்தோடு அவர் நிற்கவில்லை. இரு நாட்டு மக்களும் அடிப்படையில் போரை விரும்பவில்லை. மக்கள் அமைதியைத்தான் விரும்புகிறார்கள். ஆட்சியாளர்கள்தான் தங்களின் சுயநலத்திற்காக போரை தூண்டுகிறார்கள். ராணூவத்திற்காக செலவழிக்கிற தொகையை வளர்ச்சிப் பணிகளுக்காக செலவழிக்கலாமே. ஜெர்மனியும் பிரான்சும் பழைய பகைமையை மறந்து போய் விட்டார்கள். அது போலவே அமெரிக்காவும் ஜப்பானும். அப்படி இருக்கையில் இந்தியாவும் பாகிஸ்தானும் ஏன் அமைதியாக இருக்க முடியாது?

இரண்டு நாட்டு ஆட்சியாளர்களையும்தான் அந்தப் பெண் விமர்சித்துள்ளார். இரண்டு நாடுகளுமே அமைதிக்கான முயற்சியை எடுக்க வேண்டும் என்று சொல்கிறார்.

இதிலே என்ன தவறு இருக்கிறது?

அந்த பெண்ணின் மனதிலே இவ்வளவு நச்சை யார் விதைத்தது என்று தெரியவில்லை என “அருணாச்சல பிரதேச முன்னாள் முதல்வர் தற்கொலைக்கு தூண்டிய வழக்கு புகழ்” மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ராஜூ கேட்கிறார். அமைதியாக இருக்க வேண்டும் என்று சொல்வதே விஷம் என்றால் அந்த மனிதரின் மனதில் எவ்வளவு நச்சு குடிகொண்டுள்ளது? வீரேந்திர சேவாக் வேறு ஜோக்கடித்து வெறுப்பேற்றுகிறார்.

பாகிஸ்தான் ஆட்சியாளர்களும் ராணுவமும் இந்தியாவிற்கு எதிரான உணர்வுகளை தூண்டுகிறது என்பதில் மாற்றுக் கருத்து கிடையாது. அது போல பாகிஸ்தானுக்கு எதிரான உணர்வுகளை இந்தியாவில் யாரும் தூண்டுவதே கிடையாதா? சங் பரிவாரத்தின் சிவ சேனாவின் முக்கிய பணியே அதுதானே! அது இந்தியாவின் மீதான தேச பக்தியா இல்லை மத வெறியின் வெளிப்பாடா?

கிரிக்கெட் என்பது ஒரு சாதாரண விளையாட்டு. இந்தியாவும் பாகிஸ்தானும் விளையாடினால் அதனை ஒரு யுத்தம் அளவிற்கு சித்தரித்து வெறி ஏற்றுவது யார்? இதுவே இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஹாக்கி பந்தயம் என்றால் அதனை யாரும் சீண்டுவது கூட இல்லை. அப்போது தேசபக்தி எங்கே அமுங்கிப் போகிறது என்றுதான் தெரியவில்லை.

போர் வேண்டாம். அமைதி வேண்டும் என்று சொல்வதை விமர்சிப்பவர்கள், தேச பக்தர்கள் அல்ல. போர் வெறியர்கள். ஆயுத வியாபாரிகளின் வணிகம் பாதிக்கப்படக் கூடாது என்று நினைப்பவர்கள்.

அவர்களால் ஆபாசக்கூச்சல் மட்டும்தான் எழுப்ப முடியும்.

ஆம். அமைதி நிலவினால் அவர்களின் தொழில்தானே கெட்டுப்போகும்!

அதன் உள்ளர்த்தம் புரியாத அப்பாவி மக்களை நினைத்தால்தான் கவலையாக இருக்கிறது.

No comments:

Post a Comment