Friday, March 17, 2017

வெறியில் அலையுது திராட்சை கிட்டா உபி நரிக்கூட்டம்

இணையத்தில் உள்ள சில திமுகவினர் கீழ்ப்பாக்கத்தில் சேர்க்க வேண்டிய அளவிற்கான மன நிலையில் உள்ளார்களோ என்று சந்தேகப்படக் கூடிய அளவில் எழுதி வருகிறார்கள்.

சட்டசபைத்தேர்தலின் போது கட்டவிழ்த்து விட்ட பொய்ப்பிரச்சாரம் வெற்றி பெற்றதன் விளைவோ என்னவோ, தாங்கள் தெரிந்தே சொன்ன பொய்யை உண்மை என்று அவர்களே நம்பத்தொடங்கி விட்டார்கள். அவதூறு எனும் சேற்றை வீசிக்கொண்டே இருந்தார்கள். தேர்தல் முடிந்தும் அந்த சேற்றுக் கையை கழுவாததால் அவர்களிடமிருந்து வெளி வருகிற நாற்றம் தாங்க முடியவில்லை.

இரண்டு மாநிலங்களில் ஆட்சியில் இருந்தாலும் அவர்களைப் பொறுத்தவரை மார்க்சிஸ்ட் கட்சி காணாமல் போய் விட்ட கட்சி, டெபாசிட் வாங்க வக்கில்லாத கட்சி. அது ஆதரிப்பதால் யாருக்கும் பிரயோசனம் இல்லை. மக்கள் மார்க்சிஸ்ட் கட்சியை சீண்டுவதே கிடையாது.. இதெல்லாம் திமுக இணைய உடன் பிறப்புக்களின் அரிய கண்டுபிடிப்புக்கள்.

அப்படி எதற்குமே வக்கில்லாத கட்சி என்றான பின்பு இருபத்தி நான்கு மணி நேரமும் எதற்கு, மார்க்சிஸ்ட் கட்சியை திட்டியே எழுதிக் கொண்டிருக்கிறார்கள்? ஆர்.கே.நகர் தொகுதியில் ஆதரவு கொடுத்தால் வரவேற்போம் என்று செயல் தலைவர் அறிக்கை விடுகிறார்?

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போல இவர்களை ஆதரித்தால் ஒரு வாய். ஆதரிக்கவில்லை என்றால் வேறு வாய். சட்டசபைத் தேர்தலின்போது பால் கிண்ணத்தில் பழம் விழும் என்று எதிர்பார்த்தபோது கேப்டனாக போற்றப்பட்டவரை, மாற்று அணியில் இணைந்த பின்னர் குடிகாரன், காமெடியன் என்று தூற்றியதை மறந்து விட முடியுமா என்ன?

இருக்கிற ஏராளமான பிரச்சினைகளை விட்டுவிட்டு மார்க்சிஸ்ட் கட்சிக்குள்ளாக ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் தலைமைக்குழுவில் தலித் யாருமில்லை என்ற சுய விமர்சனத்தை கட்சி ஏற்கனவே செய்து கொண்டிருக்கிறது என்பதை செவி மடுக்க அவர்கள் தயாராக இல்லை. ஜாதியத்திற்கு எதிராக செயல்படுகிற, ஜாதிவெறிக்கு எதிராக களத்தில் நிற்கிற கட்சிக்கு எதிராக, தீண்டாமைக்கு எதிராக தொடர்ந்து உறுதியோடு போராடி வருகிற கட்சியை அவதூறு செய்தால் அவர்களின் பிழைப்பு நடக்கும் என்பது புரிகிறது. பிழைப்பிற்காக எந்த அளவும் கீழிறங்கிச் செல்பவர்களுக்கு நியாயம், நேர்மை என்பதெல்லாம் ஒரு பொருட்டே கிடையாது. ( இதிலே ஒரு கிளைக்கதையாக மார்க்சிஸ்டுகள் மீது வசைபாடுபவர்களுக்கு வக்காலத்து வாங்க வந்த இன்னொருவர் (அவர் திமுககாரர் கிடையாது என்று சில உ.பிக்களே கைவிரித்து விட்டார்கள்) தோழர் நல்லக்கண்ணு எந்த கட்சி என்று கூட தெரியவில்லை. அவரைப் பற்றி கேவலமாக வைத்த குற்றச்சாட்டு அபாண்டமானது என்று பலர் சுட்டிக்காட்டிய பின்பும் அதற்கு எதிர்வினையாற்றும் துணிவு கூட அவருக்கு இல்லை. )

அரசியல் தலைமைக்குழுவில் தலித் யாரும் இல்லை என்றும் அவர்கள் தலைமைப்பொறுப்பிற்கு வருமளவு பயிற்சியளிக்க வேண்டும் என்று கட்சி முனைப்போடு இருக்கிறது என்பது ஒரு புறம் இருக்கட்டும். தலித் யாருமில்லை என்பதால் அக்கட்சி தலித் மக்களின் பிரச்சினைகளில் எப்படிப்பட்ட அணுகுமுறையை கையாளுகிறது என்பது இன்னும் முக்கியம் அல்லவா?

அன்றைக்கு கீழத்தஞ்சையில் “அடித்தால் திருப்பி அடி” என்று நம்பிக்கை ஊட்டிய காலம் தொடங்கி இன்று அரியலூர் நந்தினி வரை உறுதியோடு களத்தில் நிற்கும் எத்தனையோ உதாரணங்களை சொல்ல முடியும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் க,கனகராஜ் அவர்களின் பதிவிலிருந்து கொஞ்சம் கடன் வாங்கிக் கொள்கிறேன்.ம்ம்ம்...வாரித்தூற்றுங்கள்..!

மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுவில் தலித்துகள் இல்லை என்பது ஒரு உண்மையே. கட்சியின் எந்தப் பொறுப்புகளிலும் சாதிய அடிப்படையிலான முன்மொழிவுகளும் தேர்ந்தெடுப்புகளும் இல்லை என்பதும் ஒரு உண்மைதான். இதையும் தாண்டி கட்சியினுடைய பொறுப்புகளில் இளைஞர்கள், பெண்கள், சிறுபான்மையினர் ஆகியோரும் போதுமான எண்ணிக்கையில் இல்லை. இவற்றையெல்லாம் சரிசெய்ய வேண்டும் என்று எம் கட்சி ஒரு தொடர்ச்சியான போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால், கட்சி உறுப்பினர்களில் 70 சதவிகிதத்திற்கும் அதிகமானவர்கள் அடிப்படை வர்க்கத்திலிருந்து வந்தவர்கள் என்றபோதிலும் 75 சதவிகிதத்திற்கும் அதிகமான கட்சி தலைமைப் பொறுப்பிலுள்ளவர்கள் மத்தியதர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் என்பதும் உண்மை. இதை கட்சியின் அகில இந்திய தலைமை சுயவிமர்சனம் செய்துள்ளது. அதன் பொருள் இத்தனை சதவிகிதம் உழைக்கும் வர்க்கத்துக்கு என்று கோட்டா வைத்து நிரப்ப வேண்டும் என்பதல்ல. மாறாக, இளைஞர்கள், பெண்கள், தலித்துகள், ஆதிவாசிகள், மதச் சிறுபான்மையினர் மற்றும் அடிப்படை வர்க்கத்தைச் சார்ந்தவர்களை பயிற்சியளித்து பொறுப்புகளுக்கு உயர்த்த வேண்டும் என்பதுதான்.

கட்சியின் பல மட்டங்களிலும் இதற்கான முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. முதலில் இதை மனதில் கொள்ள வேண்டும்.

ஒங்க பொலிட்பீரோவுலன்னு ஆரம்பிச்சி தலித்துகளுக்காக கண்ணீர் வடிக்கும் முகநூல் உடன்பிறப்பு களுக்கு சில நினைவூட்டல் கள். 

1. ஆம். எங்கள் கட்சியில் உள்ளவர்கள் யாரோடும் சாதிகள் ஒட்டிக் கொண்டிருப்பதில்லை. ஆனால், தோழர் பிரகாஷ் காரத்துக்கு எந்த சாதிப் பெயரையும் வைத்துக் கொள்ளுங்கள். ஆனால், உத்தப்புரம் தீண்டாமைச் சுவரை இடிக்க வேண்டுமென்று டெல்லியிருந்து உத்தப்புரத்துக்கு வந்தவர் தோழர் பிரகாஷ் காரத். உங்கள் கட்சியின் எந்தத் தலைவர் உத்தப்புரத்துக்கு போனார். எந்தத் தீண்டாமைப் பிரச்சனையில் கையிலெடுத்து திமுக போராடியிருக்கிறது.

2. சேச சமுத்திரம் பிரச்சனையில் தலித்துகளின் வீடுகளும் அவர்களின் தேர்களும் எரிக்கப்பட்டபோது உங்களது தர்க்கப்படி பிராமணர்கள் தலைமையில் நிறைந்திருக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி களத்திற்கு போனது. போராடியது. மிக மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த கலைஞர் அந்த மக்களுக்கு ஆறுதல் கூறினாரா? கண்டித்தாரா? அவரது இதயம் கனிந்ததா? கண்கள் பனித்ததா?

3. 1992ம் ஆண்டு கட்சியின் அரசியல் தலைமைக்குழுவிலும் மாநிலக்குழுவிலும் ஒருவர் கூட ஆதிவாசி இனத்தைச் சார்ந்தவர் இல்லை. உங்கள் கருத்துப்படி பிராமணர்கள் இருந்தார்கள் என்றே வைத்துக் கொள்வோம். வாச்சாத்தியில் வெறும் 500 பேர் ஆதிவாசி மக்கள் இருக்கும் பகுதியில் தமிழக காவல்துறை வருவாய்த்துறை கோரநர்த்தணம் ஆடியது. வயதுக்கு வராத பெண், குழந்தை பெற்று 1 மாதமான தாய் உள்ளிட்டு 13 பேர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டார்கள். அவர்களின் குடிநீர் கிணறுகளில் மண்ணெண்ணெய் கலக்கப்பட்டது. அவர்களின் அரிசியில் கண்ணாடித் துண்டுகள் கலக்கப்பட்டன. மிக மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட இனத்திலிருந்து தலைவராக வந்த டாக்டர். கலைஞர் இந்தப் பிரச்சனையில் என்ன செய்தார்? 

பிராமணர்கள் தலைமை என்று அவரால் விமர்சிக்கப்படக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்த ஏ.நல்லசிவன் மனம் பதைத்து, உடல் பதர அந்தக் கிராமத்திற்கு போனார். அதிகாரிகள் அமைச்சர்கள் நீதிமன்றங்கள் என்று ஒவ்வொரு படியாக ஏறினார். அப்போது திமுக ஆட்சியில் இல்லைதான். அதன் பிறகு திமுக ஆட்சிக்கு வந்தது. நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னும் அவர்களுக்கான நிவாரணத்தைக் கூட வழங்க முன்வரவில்லை. ஆனால் உங்கள் கருத்துப்படி பிராமணர்கள் தலைமையில் இருக்கக் கூடிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்த வழக்கை பல்வேறு நீதிமன்றங்களில் 19 ஆண்டுகள் நடத்தியது. இறந்துபோன 30 பேர் உள்பட 255 பேரும் வனத்துறை காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகள் அனைவரும் குற்றவாளிகள் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 13 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதை நீதிமன்றம் கண்டித்தது. அப்போதெல்லாம் உங்களது மிக மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட தலைமை எந்த உலகத்திலிருந்தது? என்ன செய்து கொண்டிருந்தது? என்பதை உடன்பிறப்புகள் சொல்லட்டும். ஆனால், மேல்சாதி கீழ்சாதி இடைச்சாதி இன்னும் என்னவென்ன வகை இருக்கிறது, அத்தனை வகை சாதிகளையும் சார்ந்த போக்குவரத்து தொழிலாளர்கள் சிஐடியு உறுப்பினர்கள் தமிழகம் முழுவதும் 350க்கும் மேற்பட்ட பணிமனைகளில் பயணிகளிடமும் போவோர் வருவோரிடமும் சக தொழிலாளிகளிடமும் உண்டியல் அடித்து ஆமாம் தகர உண்டியல்தான். அதுவொரு ஆயுதம்தான் எங்களுக்கு. அந்த உண்டியல் அடித்து தான் அடித்து விரட்டப்பட்ட குரல் மறுக்கப்பட்ட அவர்களுடைய உணர்வுகளை புரிந்து கொள்ள மறுக்கும் முகம் திருப்பிக் கொள்ளும் அத்தனை அரசியல் அதிகாரங்கள் அதிகாரிகள் சமூகம் இவற்றையெல்லாம் தாண்டி அந்தப் பணத்தில்தான் ஆதிவாசி மக்களை குடியமர்த்தினார்கள். இதிலெல்லாம் எந்த திமுக தலைவரும் ஈடுபட்டாரா என்று சொல்லுங்கள்.

4. சின்னாம்பதி என்றொரு கிராமம். தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட வனத்துறையினரின் அட்டூழியம், அதை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய போராட்டம் தெரியுமா. சற்றே படித்து பாரும் பிள்ளாய் .

5. நெடுநால்முளைகிணறு, தூத்துக்குடி மாவட்டம். காவல்துறையின் அட்டூழியம் கர்ப்பிணி பெண் வயிற்றில் குண்டுகள் உரசிச் சென்ற கொடூரம். மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம் நடத்தியது. உமாநாத்தும் பாப்பா உமாநாத்தும் அப்போது தூத்துக்குடி மாவட்டச் செயலாளராக இருந்த சம்பத்தும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மல்லிகாவும் பிற்படுத்தப்பட்டவர்களும் அல்ல. தாழ்த்தப்பட்டவர்களும் அல்ல. உச்சநீதிமன்றம் வரை சென்று போராட்டத்தை நடத்தினோம். தமிழக அரசு 2 விசாரணைக் கமிஷன்களை அமைத்தது. விசாரணைக் கமிஷன் அதிகாரிகள் இருவரும் தலித் பகுதியைச் சார்ந்தவர்கள். ஒருவர் பெயர் முனிராம், இன்னொருவர் பெயர் பாஸ்கரதாஸ். 

இருவரும் தாக்குதலே நடத்தவில்லை என்று அறிக்கை கொடுத்தார்கள். உச்சநீதிமன்றம் சென்றோம். அந்த வழக்கில் வாதாடியவர் ஸ்ரீரங்கத்து ஐய்யங்கார். வழக்கு முடிந்த பிறகு அந்த ஊர் மக்கள் தங்களுக்கு வந்த நிவாரணத் தொகையின் ஒரு பகுதியை அவருக்கு அளிக்க முன்வந்தார்கள். 2 லட்சத்து 30 ஆயிரம் என்று நினைவு. அதை ஏற்க மறுத்து திருப்பி அனுப்பிவிட்டார். இந்த வழக்கில் தன்னை வாதாட சொன்னமைக்காக அவர் மார்க்சிஸ்ட் கட்சிக்கு நன்றி கூறினார். அந்த வழக்கில் 83 காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. எஸ்பியும் அடக்கம். பாஸ்கரதாசும், முனிராமும் அரசு நிர்வாகத்தின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந்தவர்கள். ஆனால், இந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் வாதாடியவர் தலித்துமல்ல. டாக்டர் கலைஞரை போன்று மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவரும் அல்ல.

6. அவ்வளவு ஏன் .... தஞ்சை மாவட்டம் வடகாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்களை கொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்பட்டது. அரசு அதிகார அமைப்பின் இறுகிப்போன கட்டமைப்பில் இருந்து கூட அதை சிலர் தடுத்து பலரைக் கைது செய்தார்கள். திருமாவளவன் பார்ப்பனரா? அவர் மீது கொலைத்தாக்குதல் நடக்கவிருந்ததை மிக மிக மிக பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த மரியாதைக்குரிய கலைஞர் கண்டித்தாரா? ஆறுதல் சொன்னாரா? 

7. இப்படி பத்மினி வழக்கு,பஞ்சமி நிலம்,தீண்டாமைக் கொடுமைகள்,ஆணவக் கொலைகள்,கோயில் நுழைய மறுப்பு,
இவற்றிலெல்லாம் தமிழர்களின் தலைவர்கள், உலகத் தமிழர்களின் தலைவர் என்ன சொன்னார்?

8. ஆணவக் கொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் வேண்டுமென்று மார்க்சிஸ்ட் கட்சி தனிநபர் மசோதாவைத் தாக்கல் செய்தபோது . அதிமுக அரசு ஏற்க மறுத்தது. சட்டமன்றத்தில் திமுகவின் கூட்டணிக் கட்சியாக இருந்த புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி கேள்வி எழுப்பினார். ஆணவக் கொலையா அப்படி எதுவும் தமிழகத்தில் எதுவுமில்லை என ஓபிஎஸ் அடித்து பேசினார். திமுக செயல் தலைவர் திரு முக.ஸ்டாலின் அப்போது சட்டமன்றத்திற்குள்தான் இருந்தார். அவர் செயல்பட்டாரா? வாய் திறந்தாரா? பிரச்சனையை எழுப்பியவ்ர் கூட்டணிக் கட்சித் தலைவர். உங்கள் பரம வைரியான அதிமுகவின் ஓபிஎஸ் ஏற்க மறுக்கிறார். எல்லா நேரங்களிலும் அதிமுகவிற்கு எதிராய் நிற்பதாய் காட்டிக் கொள்ளும் திமுக, இந்தப் பிரச்சனையில் மௌனம் காத்ததேன்.

இப்படி அடுக்கிகொண்டே போகலாம். ஆனால் இதற்கெல்லாம் நேர்மையாக பதில் தர உங்கள் மனம் ஒப்பாதே....ம்ம்ம்... வாரித்தூற்றுங்கள்.

           
தீண்டாமையை கடைபிடிக்கிறது என்று அபத்தமாக குற்றம் சுமத்தப்படுகிற மார்க்சிஸ்ட் கட்சியிடம் உள்ள இந்த உறுதி திமுகவிற்கு இருந்ததுண்டா? ஆதிக்க சக்திகளின் வாக்குகள் பறி போகக்கூடாது என்று எத்தனை சமரசங்கள் செய்துள்ளது?

மாவட்டம் முதல் மாநிலம் வரை கட்சிப்பதவிகளில் இட ஒதுக்கீடு செய்துள்ளோம் என்று சொல்லியுள்ளார்கள். மார்க்சிஸ்ட் கட்சியைப் பொறுத்தவரை முடிவெடுக்கும் அதிகாரம் உள்ள உயர் அமைப்பு என்பது அகில இந்திய அளவில் மத்தியக்குழு. மாநில அளவில் மாநிலக்குழு, மாவட்ட அளவில் மாவட்டக்குழு. அரசியல் தலைமைக்குழு, மாநில, மாவட்ட செயற்குழு ஆகியவற்றின் பணி என்பது மத்திய, மாநில, மாவட்டக் குழுக்கள் எடுத்த முடிவுகளை அமலாக்குவது என்பதுதான்.

இந்த உயர் அதிகாரம் உள்ள குழுக்களில் தலித், பெண்கள், பழங்குடி சிறுபான்மை இனத்தவர்கள் என சமூகத்தால் ஒடுக்கப்பட்டவர்கள் கணிசமாகவே உள்ளனர். அப்படி உள்ள யாவருமே தங்களின் உழைப்பினால், அனுபவத்தால், திறமையால் வந்தவர்களே தவிர, திமுக சொல்வது போல இட ஒதுக்கீட்டினால் வந்தவர்கள் அல்ல. திமுகவில் இட ஒதுக்கீடு இல்லையென்றால் அப்பொறுப்புக்களுக்கு தலித்கள் இயல்பாக வர முடியாது என்ற அர்த்தமும் வருகிறதல்லவா?

இப்போது எழுகிற மிகப் பெரிய சந்தேகம் என்னவென்றால்

திமுகவிற்கு யார் எதிரி?

அதிமுகவா?

இல்லை

பாஜகவா?

இல்லை

கம்யூனிஸ்டுகளா?

கம்யூனிஸ்டுகள் மீது பாயும் இணைய உடன்பிறப்புக்கள் பாஜக மீதும் அதன் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் மீதும் எந்த விமர்சனத்தையும் எந்த காலத்திலும் வைப்பதில்லையே, அது ஏன்?

தந்தை பெரியாரை இழிவாகப் பேசுபவர்கள் மீது பாய்வதில் ஏன் தயக்கம்?

அக்யூஸ்ட் 1, அக்ஸ்யூட் 2, இடைக்கால எடப்பாடி, தினகரன், ஓ.பி.எஸ், தீபா ஆகியோர் பற்றியெல்லாம் வாய் திறக்க என்ன பயம்?

இந்த அநாகரீக பிரச்சாரத்துக்கு என்ன உள்நோக்கம்?

பதிவுக்கு இருநூறு ரூபாய் தரப்படுகிறது. வருடத்திற்கு ஒரு புத்தக வெளியீடு, பத்திரிக்கையில் பதவி உயர்வு என்று அவர்கள் பாணியில் ஆயிரம் காரணங்களை நம்மாலும் கண்டுபிடிக்க முடியும். அவர்களுக்குள் ஒளிந்திருக்கும் காவி உணர்வுதான் என்றும் சொல்ல முடியும். கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக எழுதினால் வழக்குகளிலிருந்து வெளி வர மத்தியரசின் கடைக்கண் பார்வை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்போ என்றும் எழுதலாம்.
                                       
ஆனால் அப்படியெல்லாம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. சீ, சீ இந்த பழம் புளிக்கும் என்று ஏமாற்றத்தில் புலம்பிய நரிகளாக மட்டுமே எனக்கு அவர்கள் காட்சியளிக்கிறார்கள்.

புலம்பி புலம்பி பைத்தியம் முற்றிப் போய் விடப் போகிறது. அயோக்கியர்களின் கடைசி புகலிடம் ஜாதி அரசியல் என்று சொல்வார்கள். இணைய திமுகவினருக்கான புகலிடமும் அதுதான் போல.

இணைய திமுக என்று மட்டும் சொல்ல முடியாது. வேறு எந்த விமர்சனமும் வைக்க முடியாமல் கடைசியாக ஜாதியை மட்டுமே (தான் சொல்வது முழுவதுமே பொய் என்று தெரிந்தும்) இழுத்து வன்மத்தோடு தாக்கும் உத்தமர்கள் சமூகத்தில் நிறையவே இருக்கிறார்கள், முகமுடிகள் அணிந்து கொள்வதால் சிலரின் உண்மை முகம் பலருக்கு தெரிவதும் இல்லை.

பின் குறிப்பு : அபத்தமான ஒரு பதிவிற்கு தோழர் க.கனகராஜ் அற்புதமான ஒரு விளக்கமளித்தார் அந்த பதிவு நாளை. அதற்கு பதில் அளிக்க முடியாத அந்த உடன் பிறப்பு வழக்கம் போல திரைப்பட விமர்சனங்களுக்குள் ஒளிந்து கொண்டு விட்டார். அடுத்து கவர்ச்சிப்படங்களின் அணிவகுப்பு மூலம் மொத்தமாக திசை திருப்பி விட்டு விடுவார்.  


1 comment:

  1. இதற்க்கெல்லாம்.... இத்தனை பெரிய விள(ம்பர)க்கம் தர நேரத்துக்கு.. வேற எதாவது., சமூக பணி! செய்யலாம். தோழர்.

    ReplyDelete