Sunday, October 26, 2014

படங்களோடு ஒரு கதைதீக்கதிர் ஞாயிறி இணைப்பிதழான வண்ணக்கதிரில் இன்று பிரசுரமான எனது சிறுகதை. இக்கதைக்கான ஓவியங்களை தீட்டியது தோழர் ஸ்ரீரசா
“பிறந்த நாள், இன்று பிறந்த நாள்
வேலூர் சுரா

அதிகாலை ஐந்து மணிக்கு அலைபேசி “புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே என்று அழைக்கும் போதே எனக்கு தெரிந்து போனது அது அமெரிக்காவில் இருக்கும் மகள் சௌந்தர்யாவின் அழைப்புதான் என்று. குழந்தையாக இருக்கும் காலத்திலிருந்தே முதலில் எனக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்பவள் அவள்தான். திருமணமாகி அமெரிக்கா சென்ற பின்பும் கூட  காலை நான் எழுந்து கொள்ளும் ஐந்து மணிக்கு சரியாக தொலைபேசியில் கூப்பிடுவாள்.

ஆம், சௌந்தர்யாதான். “ஹேப்பி பர்த்டே டாடி என்றுதான் ஆரம்பித்தாள். அம்மாவின் உடல் நலன் குறித்த விசாரித்தல், அமெரிக்க குளிர் என்றெல்லாம் பேசி விட்டு மாப்பிள்ளையின் வாழ்த்தைப் பெற்று குட்டிப் பேரனின் மழலை மொழி வாழ்த்தை மனம் குளிர கேட்டு மனைவியிடம் போனை கொடுத்து விட்டு பல் துலக்கச் சென்றேன். திரும்பி வந்த போது பார்த்தால் அம்மாவும் பெண்ணும் இன்னும் பேசிக் கொண்டிருந்தார்கள்.

“இதோ ஐந்தே நிமிடம், காபி ரெடி பண்றேன், அத குடிச்சுட்டு வாக்கிங் போங்க” என்ற குரல் மனைவியிடமிருந்து வர

“நான்தான் இன்னிக்கு வாக்கிங் போகப் போறதில்லையே, நீ நிதானமா வா என்று சொல்லி பேப்பர் வந்து விட்டதா என்று பார்க்க வீட்டுக்கு வெளியே வந்தேன். மார்கழி மாதக் குளிர் காற்று சில்லென்று மேலே பட்டு புத்துணர்ச்சி தந்தது. பேப்பர் இன்னும் வந்திருக்கவில்லை. அலைபேசி வாயிலாக முகநூல் சென்றால் இரண்டு நண்பர்கள் பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருந்தார்கள்.

முன்பு சிலோன் ரேடியோவில் ஒலிபரப்பாகும் “பிறந்த நாள், இன்று பிறந்த நாள், நாம் பிள்ளைகள் போலே தொல்லைகள் நீங்கி மலர்ந்த நாள் என்ற பாடல் மனதிற்குள் ஒரு முறை ஓலித்து ஓய்ந்தது. போன வருட பிறந்த நாள் நினைவுக்கு வந்தது. மறக்க முடியுமா அந்த நாளை?

பொதுத்துறை வங்கியில் கிளார்க்காக பணியில் சேர்ந்த நான் படிப்படியாக பதவி உயர்வு பெற்று பணியிலிருந்து ஓய்வு பெறும் நேரத்தில் சொந்த ஊரான திருச்சி மண்டலத்திற்கே பொது மேலாளராக வந்து சேர்ந்தேன். பள்ளியில் சேர்க்கும்போது கொடுத்த பிறந்த நாள் ஒன்று. நான் நிஜமாகவே பிறந்த நாள் ஒன்று. என்னுடைய ஒரிஜினல் பிறந்த நாள் என் குடும்பத்தவரைத் தவிர அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது. முக நூலில் இணைந்த போது என்னுடைய நிஜமான பிறந்த நாளான டிசம்பர் இருபத்தி ஐந்து என்பதை பதிவு செய்திருந்தேன்.

அதுதான் கடந்த ஆண்டு பிறந்த நாளை மறக்க முடியாத நாளாக மாற்றி விட்டது. 

வழக்கம் போல காலையில் மகளோடு பேசி விட்டு வாக்கிங் புறப்பட தயாராகிக் கொண்டிருந்த போதுதான் எனது பி.ஏவும் இன்னும் இரண்டு ஊழியர்களும் உள்ளே வந்தனர்.

“ஹேப்பி பர்த் டே சார்” என்று சிரித்தபடியே உள்ளே வந்தார்கள். பிஏ சத்யன் கையில் வைத்திருந்த ரோஜாப்பூ மாலையை கழுத்தில் போட இன்னொருவர் சால்வை அணிவிக்க மற்றொரு ஊழியர் பளபளக்கும் காகிதத்தில் பேக் செய்யப்பட்ட ஒரு பரிசை கொடுத்தார். அது ஒரு புத்தகம் என்பதை பேக்கிங்கைப் பார்த்தே  தெரிந்து கொள்ள முடிந்தது.

“இன்னிக்கு என் பிறந்தநாள்னு உங்களுக்கெல்லாம் எப்படிப்பா தெரியும் என்று ஆச்சர்யத்தோடு நான் கேட்க, அதான் பேஸ்புக்கில பார்த்தோமே என்று சத்யன் பதிலளித்தான். அவன் கையில் வைத்திருந்த  அலைபேசியில் என்னுடன் போட்டோ எடுத்துக் கொண்டு அப்போதே முகநூலில் அதை பதிவும் செய்தான்.

பிறகு கொஞ்சம் தயக்கத்தோடு

“சார், இன்னிக்கு உங்க பிறந்த நாள்னு எல்லா ஆபிசருங்களுக்கும் தெரியும், ஒவ்வொத்தரா வருவாங்க, நீங்க கொஞ்சம் குளிச்சிட்டு ஃபிரஷ்ஷா ரெடியாயிடுங்களேன்

“எதுக்குப்பா இதெல்லாம் என்று வாய் கேட்டாலும் மனசு என்னமோ சந்தோஷமாகத்தான் இருந்தது. என்னுடைய அந்தஸ்தைப் பார்த்தாயா என்று கண்களாலேயே மனைவியிடம் கேட்டேன். அவளும் புன்முறுவலோடு அதை அங்கீகரித்தாள். கொஞ்சம் உள்ளே வரச் சொன்னாள்.

“என்னங்க, உங்களைப் பார்க்க எல்லோரும் வந்தால் அவர்களுக்கு கொடுக்க டிபன் ஏதாவது ரெடி பண்ணட்டுமா? என்று அவள் கேட்க நான் சத்யனை அழைத்தேன்.

சத்யன் புத்திசாலி. “மேடம், நீங்க எதுவும் சிரமப்பட வேண்டாம். நான் ஏற்பாடு செஞ்சுடறேன். சார் நீங்க முதல்ல ரெடியாகுங்க என்றான்.

நான் குளித்து விட்டு புதிதாக வாங்கிய சந்தனக் கலர் சபாரியை அணிந்து கொண்டு ஹாலுக்கு வந்தால் ஹால் முழுதும் நிரம்பி இருந்தது. என்னுடைய துணைப் பொது மேலாளர் ஒரு பிரம்மாண்டமான மலர்க் கொத்து ஒன்றை கையில் கொடுத்து ‘ஹேப்பி ரிடர்ன்ஸ் ஆப் தி டே என்று வாழ்த்தினார். வராக்கடன்களை  வசூலிப்பதில் அக்கறை செலுத்தவில்லை என்று நேற்று  அவரை வறுத்தியெடுத்திருந்தேன். அந்த சாயலே அவரது முகத்தில் தெரியவில்லை.

வழக்கமாக அலுவலக நிகழ்வுகளுக்கு உணவு சப்ளை செய்யும் ஹோட்டலில் இருந்து கேசரி, பூரி, பொங்கல், காபி என்று வந்து இறங்கியிருந்தது. ஹோட்டல் ஆட்களும் இரண்டு கடைநிலை ஊழியர்களும் எல்லோருக்கும் உணவு பறிமாறினர். ஒரு ஒன்பது மணிக்குள் ஒரு எழுபத்தி ஐந்து பேர் வந்திருப்பார்கள்.

ஒரு அரை மணி நேரத்துல வந்திடறேன் என்று சொன்ன சத்யன் திரும்பி வரும் போது கையில்  ஒரு பெரிய அட்டை டப்பா இருந்தது. ஹாலின் நடுவில் ஒரு டேபிளைப் போட்டு அந்த பெட்டியை பிரித்தான். அலங்காரங்களோடு ஒரு பெரிய கேக். நடுவில் “ஹேப்பி பர்த்டே சுந்தர வரதன் சார்” என்று எழுதியிருந்தது. என் மக்ளுக்கும் பேரனுக்கும் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியிருக்கிறேனே தவிர நான் முதன்முதலாக அன்றுதான் கேக் வெட்டினேன்.

தஞ்சை, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை என்று என் மண்டலத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்தெல்லாம் ஆட்கள் வந்து கொண்டே இருந்தார்கள். ஒரே ஒரு யூனியன் ஆட்கள் மட்டும் வரவில்லை. அவங்களுக்கு விஷயம் தெரியாதா என்று  வாய் விட்டே கேட்டு விட்டேன்.

“சார் இன்னிக்கு வெண்மணி தினமில்லையா, அதனால் காலையிலேயே கிளம்பி திருவாரூர் போயிட்டாங்க” என்று சத்யன் பதில் சொல்ல, “ஊர்ல இருந்தா மட்டும் வந்திருக்கவா போறாங்க என டிஜிஎம் பதில் சொன்னது சரியாக இருக்கும் என்று தோன்றியது.

எல்லாம் ஓய்ந்து வீட்டை சுத்தம் செய்யும் போது என் மனைவி சொன்னாள், “நீங்க ஒரு சால்வைக் கடையே வைக்கலாம். அத்தனை சால்வை

மூன்று மாதத்தில் நான் பணி ஓய்வு பெறும் போது சத்யன் சொன்னான்

“ஏசு நாதர் அவதரித்த நாளில் நம்ம சாரும் பிறந்தார். அதனாலதான் அவர் மிகவும் கனிவாக இருக்கார். கிறிஸ்துமஸ் அன்று மத்தவங்க சர்ச்சுக்கு போறாங்களோ இல்லையோ சாரோட ஆசிர்வாதம் வாங்க நான் அவர் வீட்டுக்கு கண்டிப்பாக போவேன்”  மற்றவர்களும்  அதை வழி மொழிந்தார்கள்.

தொலைபேசியில் குறுஞ்செய்தி வந்த ஒலி என்னை நிகழ்காலத்திற்கு கொண்டு வந்தது. என்னிடம் டிஜிஎம்மாக இருந்து இப்போது என்னுடைய இடத்திலிருப்பவர்தான் குறுஞ்செய்தியில் வாழ்த்து அனுப்பியிருந்தார். “நேரில் வர முடியலனாக்கூட ஒரு போன் செஞ்சு பேச முடியாதா? அவனுக்கு தெரிஞ்ச மரியாதை இவ்வளவுதான்” என்று மனதிற்குள் பொருமிக் கொண்டே குளிக்கச் சென்றேன்.

மனைவி வாங்கிக் கொடுத்த பட்டு வேட்டி, வெள்ளை சட்டை அணிந்து நண்பர்களுக்காக காத்திருக்கத் தொடங்கினேன். கடந்தாண்டு போல ஹோட்டலிலிருந்து வரவழைக்காமல் நேற்றே கடைக்குச் சென்று ஸ்வீட், மிக்ஸர், குளிர்பானம் எல்லாம் வாங்கி வைத்திருந்தேன். சொத்து, சொந்த வீடு, கார், வைப்புத்தொகை, ஷேர் என்று என்ன இருந்தாலும் பென்ஷன் வாங்குபவன்தானே.

ஒரு ஒன்பது மணி இருக்கும். சத்யனிடமிருந்து தொலைபேசி வந்தது. குழந்தைகளின் தொல்லை தாங்காமல் சுற்றுலா சென்றுள்ளதாகவும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்று பணிவோடு சொல்லி வாழ்த்துக்களைச் சொன்னான். அதனாலென்ன, பரவாயில்லை என்று நானும் பெருந்தன்மையாக சொன்னாலும் “அடப்பாவி என்னவெல்லாம் அளந்து விட்டான் என்று கோபம் கோபமாக வந்த்து.

நேரம் ஓடிக்கொண்டே இருந்த்து. அவ்வப்போது சில குறுஞ்செய்திகள் மட்டும் வந்து கொண்டிருந்த்தே தவிர யாரும் வீட்டிற்கு வரவில்லை. முக நூல் நண்பர்களின் வாழ்த்துச் செய்திகள் மட்டுமே ஏதோ கொஞ்சம் ஆறுதல் அளித்த்து. பிறந்த நாள் ஸ்பெஷலாக மனைவி செய்திருந்த பால் பாயசம் நன்றாக இருந்தாலும் ஏனோ ருசிக்கவில்லை. நான் அப்படியொன்றும் மோசமான அதிகாரியாக இல்லையே, என்னால் முடிந்தவரை நல்லதுதானே செய்தேன். ஆனாலும் இப்படி ஒதுக்கி வைத்து விட்டார்களே என்று வருத்தமாக இருந்த்து.

வாங்கி வைத்த ஸ்வீட்டுக்களும் மிக்ஸரும் என்னை பார்த்து ஏளனம் செய்த்து போலவே தோன்றியது. தூக்கி குப்பைத் தொட்டியில் எரியலமா என்று நினைத்து கடைசி நிமிட்த்தில் மனம் மாறி காரில் அந்த பார்சலை வைத்தேன். மனைவியை அழைத்துக் கொண்டு பக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் விடுதிக் குழந்தைகளுக்கு வினியோகம் செய்தோம். அந்த குழந்தைகள் எல்லாம் ஒன்று சேர “ ஹேப்பி பர்த் டே தாத்தா “ என்று சொன்னதில் மனது கொஞ்சம் லேசானது. மலைக்கோட்டைக்குப் போய் அங்கிருந்து மின் விளக்குகளால் மின்னுகிற திருச்சி நகரின் அழகைப் பார்த்துக் கொண்டிருந்த்தில் ஏமாற்றம் சுத்தமாக விலகி பழைய உற்சாகத்துடன் வீடு திரும்பினோம்.

மறு நாள் காலை பார்க்குக்கு வாக்கிங் செல்கையில் எனக்கு முன்பே அங்கு வந்திருந்த எனது கல்லூரி சீனியரும் பெல்லில் வேலை பார்த்து ஓய்வு பெற்ற விக்டர் “என்னப்பா சுந்தர வரதன், பிறந்த நாளெல்லாம் நல்லா போச்சா “ என்று கேட்ட்தும் அவரிடம் பொறிந்து தள்ளி விட்டேன்.

“பிறந்த நாள் கொண்டாடுங்கனு இவங்களையெல்லாம் போன வருஷம் நானா கேட்டேன். இந்த வருஷம் இப்படி அநியாயமா ஒதுக்கிட்டாங்களே!

அவர் மிகுந்த நிதானத்துடன் சொன்னார்.

“அவங்க போன வருஷம் உன்னோட பிறந்த நாளை கொண்டாடல, அவ்ங்களோட ஜெனரல் மேனேஜரோட பிறந்த நாளை


3 comments:

  1. i like it. it remembering the story of Dasildhar' dog story. while dasildhar's dog died , almost entire office gathered, but during the death of dasildhar, none of them turned up. that is the world....

    ReplyDelete
  2. நிஜ முகங்களின் தரிசனம்...!

    ReplyDelete
  3. தோழர் 80 சதவிகிதம் உண்மை. ஒரு ஆலிவூட் இயக்குனர் , அடுத்தவர் கனவுகளையும் திருடலாம் என்ற கருவை வைத்து ஒரு திரைப்படம் தயாரித்தார் . அது சாத்தியமா இல்லையா என்று தெரியாது. ஆனால் உங்களுக்கு அந்த ரசவதாம் நன்றாகவே வந்திருக்கிறது. பதவிக்கு மரியாதை. தங்களின் கதை படிக்கும்போதே காட்சியாக விரிகிறது. இயல்பான நடை.நன்று .

    ReplyDelete