Friday, October 24, 2014

ஊளையிடுகிறது 'மோடி" யின் சிங்கம்

கர்ஜிக்காது....
மேக் இன் இந்தியாசிங்கம்!

க.சுவாமிநாதன்,
பொதுச்செயலாளர்,
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு

  மோடியின் இன்னொரு வாய்ப்பந்தலே கம்... மேக் இன் இண்டியாஅறிவிப்பு. "மேட் இன் இந்தியா" என்பது தேசத்தின் பெருமை என்பதை மாற்றி மேக் இந்தியாஎன்பதே பெருமை என கார்ப்பரேட் ஊடகங்கள் இசைத்த மேளதாளங்கள் பந்தலை நிரப்பியுள்ளன.  மோடி தாம்பூலத்தோடு வாசலில் வரவேற்பது போலவும், முதலீடுகள் விருந்தாளிகளாய் இந்தியாவில் வந்து குவிவது போலவும், கனவுகளும், பிரமைகளும் உருவாக்கப்பட்டன.

  1990
களில் இருந்த  பா.ஜ.க 2014ல்  எப்படிப் பரிணமித்துள்ளது என்பதற்கு இந்த அறிவிப்பு ஒரு உதாரணம். 1990களில் இந்திய சோப் எது, பிளேடு எது, பேஸ்ட் எது என்று சுதேசி பேசியவர்கள் இவர்கள்.  2014லிலோ பன்னாட்டு மூலதனத்திற்கும், இந்தியப் பெரும் தொழிலதிபர்களுக்கும் நெருக்கமாய் மாறிப் போயிருக்கிறார்கள்.  இதன் விளைவே, “மேட் இன் இண்டியாமுழக்கத்தை அழித்து விட்டு மேக் இன் இண்டியாஎன்று எழுதிப் போட்டிருக்கிறார்கள். இந்தியனாக இரு…. இந்தியப் பொருளையே வாங்குஎன்பதற்குப் பதிலாக. இந்தியனாக இருந்து தொலைந்தாலும் அந்நியப் பொருளை வாங்குஎன்பதை நைச்சியமாய்ச் சொல்கிறார்கள்.

ரிப்பீட் ஆகும் கனவுகள்

இப்படி அந்நிய  முதலீடுகள் வந்து குவியும்:  இந்தியா உலகின் உற்பத்தி மையமாய் மாறுமென்ற ஜாலங்கள் காலகாலமாய் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன. 2004ல் கூடதேசிய உற்பத்தி போட்டித்திறன் வளர்ப்பு ஆணையம்உருவாக்கப்பட்டு தொழில் உற்பத்தியை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2010க்குள்ளாக சுமார் 17சதத்திலிருந்து 35சதவீதமாக அதிகரிக்கப் போவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 2013-14ல் தொழில் உற்பத்தி எவ்வளவு தெரியுமா? 14.9 சதவீதம்தான். 

2011ல் மத்திய வணிக அமைச்சகம் ஏற்றுமதியை இரட்டிப்பாக்குவதற்கானகொள்கையை அறிவித்தது. 2012ல் மெக்கின்சி நிறுவனம், 2025ல் தொழில் உற்பத்தியை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30சதத்திற்கு உயர்த்த முடியுமென அறிவித்தது. இந்த மெக்கின்சி நிறுவனத்தின் சேர்மன் அல் ஜெய்னுல்லாபாயை தற்போது  மோடி தேசிய தரக் கழகத்தின் சேர்மனாக நியமித்துள்ளார்.

 2012
ல் மெக்கன்சி அறிவித்த பின்பு 2005- 2010வரை 10சதவீதச் சராசரி வளர்ச்சி இருந்ததுத போய் 4சதவீதமாக தொழில் உற்பத்தி வளர்ச்சி சரிந்திருக்கிறது. புளிப்பு இந்தியாவின் தேசியச் சுவைஎன்று அறிவிக்கப்படலாம் போலிருக்கிறது. எத்தனைத் தடைவ கேட்டுக் கேட்டு புளித்துப் போனாலும் நம்மவர்கள் இருக்கிறார்கள். மோடி இந்த அறிவிப்பை வெளியிட்ட ஆகஸ்ட் மாதத்திலும் தொழில் உற்பத்தி வளர்ச்சி 1.4 சதவீதம் சரிந்திருக்கிறது என்பதே உண்மை. 

மோடி மேக் இன் இண்டியா என்று அழைப்பு விடுக்கும் வேளையில் உலக வங்கியின்தொழில் செய்வதற்கான உகந்த பட்டியலில்” 134வது இடத்திலேயே இந்தியா உள்ளது என்பது புள்ளி விவரம். கர்நாடகாவின் காங்கிரஸ் முதல்வர் இன்னொரு பந்தல்காரர் போலிருக்கிறது. அவர் மேக் இன் கர்நாடகாஎன்று அலங்கார ஆர்ச்போட்டிருக்கிறார்.

உள்நாட்டில் தொழில் உற்பத்திக்கான சந்தை, கட்டுமானம், கடன், நிர்வாகம் ஆகியன வலுப்படுத்தப்படாமல் முதலீட்டை ஈர்ப்பது சூ மந்திரகாளி வேலையல்ல.

பேஸ்மெண்ட் வீக்கு

 
மோடியின் அறிவிப்பு ஆகஸ்ட்டில் வந்தது. செப்டம்பரில் தமிழகத்தின் தொழிலதிபர்ஜெயவிலாஸ்ஜி.வரதராஜன் வெளியிட்டுள்ள அறிவிப்பைப் பாருங்கள். அவருடைய கோவிந்தராஜா டெக்ஸ்டைல்ஸ் மில் அமெரிக்காவின் வட கரோலினா மாநிலத்தில் 270கோடி முதலீட்டோடு தொழில் துவங்கப் போகிறதாம். காரணம் என்ன சொல்கிறார்! அங்கு மின்சாரம் 24*7 எப்போதும் கிடைக்கிறதாம். கோவிந்தராஜா மில்லின் தலைமையகம் உள்ள கோயம்புத்தூர்  2012-13ல் பட்டபாடு என்ன? 10மணி நேரம் 12மணிநேரம் மின்சார வெட்டு. கோயம்புத்தூர் ஆலைகள் இழந்த ஆர்டர்கள்தான் எவ்வளவு? ஆதாரத் தொழில் வளர்ச்சி இல்லாவிட்டால் மூலதனம் எப்படித் தங்கும்! அதுதான் பறக்கிறது!

 
மோடியின்தாத்தா வாஜ்பாய்தான் அமெரிக்க என்ரான் நிறுவனத்தை மின்சார உற்பத்திக்கு வரவழைத்தார்.தனியார் மின்சார உற்பத்தி ஊக்குவிக்கப் பட்டது. அரசின் முதலீடுகள் வெட்டப்பட்டது. இப்போது என்ன நிலைமை? தனியார் மின்சார நிறுவனங்களின் தோல்வியினால் அரசு வங்கிகளின் கடன்கள் கூட வாராக்கடன்களாக மாறியுள்ளன.

 இன்னொரு ஆதாரத் தொழிலான சாலை மேம்பாட்டின்நிலைமை என்ன? பெரும் நெடுஞ்சாலைத் திட்டங்களைப் பாதியிலேயே அம்போவென விட்டுவிட்டு தனியார் நிறுவனங்கள் வெளியேறியுள்ளன. டோல் கேட்டுகளின் கட்டணங்களும், நீண்ட வரிசைகளால் விரயமாகும் எரிபொருளும் தொழிலையே சீரழிப்பதாக சரக்கு வாகன உரிமையாளர்கள் அலறுகிறார்கள். மும்பை ஜவஹர்லால் நேரு துறைமுகத்தில் வந்து இறங்குகிற சரக்குப் பெட்டிகள் அங்கிருந்து டெல்லிக்கு டெலிவரி ஆக 25நாட்கள் ஆகிறதாம். துறைமுக நிர்வாகம், ரயில்வே, கிட்டங்கிகளில் எல்லோருமே கை விரிக்கிறார்கள். இந்தியாவில் போக்குவரத்து நெருக்கடியால் மட்டும் ஏற்படுகிற இழப்பு ரூ 60000கோடி என 2012 ஐ.ஐ.எம்- இந்திய போக்குவரத்து கழகத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. ஆதாரத் தொழில் வளர்ச்சி இல்லாமல் தொழிலுற்பத்தி பெருக முடியாது. பேஸ்மெண்ட் வீக்கா இருந்தால் பில்டிங் எப்படி ஸ்ட்ராங்காக இருக்கும்

ஃபர்ஸ்ட் டெவலப் இண்டியா?

எப்.டி.ஐ என்பதற்கு மோடி தந்திருக்கிற விளக்கமே பர்ஸ்ட் டெவலப் இந்தியா. டெல்லி செங்கோட்டையிலும்,நாக்பூர் குருமகா சன்னிதானத்திலும் உள்ள ரூம்களிலெல்லாம் உட்கார்ந்து யோசித்து யோசித்து இப்படியெல்லாம் பேசுவார்கள் போல

 
ஃபர்ஸ்ட டெவலப் இண்டியா  என்றால் என்ன செய்ய வேண்டும்? ஃபர்ஸ்ட் இந்திய நாட்டின் மொத்த தொழில் உற்பத்தியில் 45சதவீதத்தை வைத்துள்ள சிறு,குறு, நடுத்தர தொழில்களை டெவலப் செய்ய வேண்டுமல்லவா! இத்தொழில்களில் 8கோடி பேர் வேலை பார்க்கிறார்கள். இதற்கு என்ன திட்டம் மோடியிடம் இருக்கிறது. 

திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் அரசாங்கத்தைப் பார்த்து டாலர்-ரூபாய் பரிவர்த்தனை  மதிப்பின் ஏற்ற இறக்கங்களில் சீனாவைப் போல அரசின் தலையீட்டை உறுதி செய்யுங்கள்என்று வேண்டுகோள் விடுக்கிறார்களே! ஐரோப்பிய நாடுகள் பங்களாதேசுக்கு ஜீரோ கஸ்டம்ஸ்சலுகை தந்திருப்பதால் போட்டி போடுவதில் சிரமம் இருக்கிறதுஎன்று முறையிடுக்கிறார்களே!  சிறு, குறு, நடுத்தர தொழில்களுக்கு கடன் அளிப்பில் பெரும் பிரச்னைகள் இருப்பதாகக் கதறுகிறார்களே!  இவற்றுக்கெல்லாம் தீர்வுகள் காணாமல் இந்தியாவை எப்படி வளர்க்க முடியும்! தொழில் உற்பத்தியை எப்படி ஊக்குவிக்க முடியும்!ஃபர்ஸ்ட் டெவலப் திருப்பூர்...கோயம்புத்தூர்..." இப்படி இந்தியத் தொழில் நகரங்களின் வளர்ச்சியை உறுதி செய்யாமல் எப்படி இந்தியாவை வளர்க்க முடியும்!

1997
ல் குர்கானில் இன்டர்நேசனல் மார்ட்உருவாக்கப்பட்டு ரெடிமேட் ஆடைகளின் ஏற்றுமதியை 2010க்கு உள்ளாக 25பில்லியன் டாலர்களாக (1500 கோடி ரூபாய்) உயர்த்துவதென அறிவிக்கப்பட்டது. ஆனால்,  2014ல் கூட ரெடிமேட் ஆடை ஏற்றுமதி 14பில்லியன்களைக் கூடத் (840கோடி ரூபாய்) தொட முடியவில்லை. அப்பேரல் இன்டர்நேசனல் மார்ட்டில் உள்ள 250 ஷோ ரூம்களில் 94காலியாகக் கிடக்கின்றன. 81 வாடகைக்கோ, டெக்ஸ்டைல் கல்விக் கழகங்களுக்கோ  விடப்பட்டுள்ளன. 75ல் மட்டுமே விற்பனைக் கூடங்கள் உள்ளன. அவற்றிலும் பல மூடிக்கிடக்கின்றன. இறக்குமதி அளவுக் கட்டுப்பாடுகளை நரசிம்மராவும், வாஜ்பாயும் மாறி மாறித் தளர்த்தியதால் நசிந்துபோன முக்கியத் தொழில்களில் ஆயத்த ஆடை உற்பத்தியும் ஒன்றாக உள்ளது.

இதனால்தான் மேட் இன் இந்தியாநடந்தேறவில்லை.

மேக் ஃபார் இண்டியா!

 
இந்திய ஆட்சியளார்கள் இப்போதும் தலைகீழாகவே பிரச்னைகளைப் பார்க்கிறார்கள். உள்நாட்டுச் சந்தையை விரிவுபடுத்தாமல் தொழில் உற்பத்தி எப்படிப் பெருகும்? மக்கள் கைகளில் பணம் புழங்காவிட்டால் யார் சந்தைக்குப் போவார்கள்? உற்பத்திக்கான தூண்டுதல் எப்படிப் பிறக்கும்?

மேல்தட்டுச் சந்தையை மட்டுமே ஆட்சியாளர்கள் பாதுகாக்கிறார்கள். அக்டோபர் 6, 2014 அன்று ஃபிலிப் கார்ட் "பில்லியன் டே" ( நூறுகோடி வணிக தினம்) அறிவித்ததை பார்த்தோம். மதியம் 2மணிக்குள்ளாக 3லட்சம் பேர்களின் ஆன்லைன் ஆர்டர்கள் குவிந்து டி.வி, வாட்ச், செல்ஃபோன், மிக்சி எல்லாம் 70சதவீதம் வரையிலான தள்ளுபடியில் விற்றுத் தீர்ந்தன. வணிக  அளிப்புச் சங்கிலியையே அறுத்தெறிகிற மூலதனக் குவியல், வசதி படைத்த குறுகிற சந்தை ஆகியவற்றையே மோடியின் பொருளாதாரப் பாதை வளர்த்து வருகிறது. உயர்தட்டு மக்களின் ஒரு பகுதி வாங்குவதற்கும் அதிலேயே இன்னொரு பகுதி, ஏங்குவதற்குமான சந்தையே அது. வணிகச் சங்கிலிகள் வாயிலாக வருமானம் பகிர்வதை இது பறிப்பதால் இன்னும் சந்தை சுருங்கவே வழி வகுக்கிறது.

மோடி ராஜ்யத்திலும், விலைவாசிக் கொடி உயரே பறக்கிறது. கச்சா, எண்ணெய் விலைகள் பெருமளவிற்குச் சர்வதேசச் சந்தையில் சரிந்தாலும் நுகர்வோர் விலைக் குறியீட்டெண்ணின்  கோடு மேல் நோக்கியே நகர்கிறது. மேக் இன் இண்டியாஎன்பது அரைக் கிணறு தாண்டுகிற முழக்கம்.  “மேக் ஃபார் இண்டியா " என இந்தியச் சந்தை விரிவாவதும், அதிகமான மக்கள் சந்தைக்குள் வருவதுமே உற்பத்திக்கான தூண்டுதலைத் தரும். இதையே இந்து நாளிதழ் கட்டுரையொன்றில் பெங்களுர் தொழிலதிபர்  சௌரவ் சந்திரா சத்தம்தான் அதிகம் இருக்கிறது நம்பகமான திட்டம் ஏதும் இல்லைஎன்று வர்ணித்துள்ளார். 

இந்திய வளர்ச்சி இரண்டாம் தட்டு நகரங்களைக் கூட தொடவில்லை என்பதே உண்மை. மென்பொருள் உள்ளிட்ட சேவைத்துறை வளர்ச்சியே பெருமளவில் உள்ள நிலைமையில் அதன் விரிவாக்கம் கூட தமிழகத்தில் கோயம்புத்தூர், திருச்சி, மதுரையில்  பெரிதாகத் தெரியவில்லை. கர்நாடக மாநிலத்தின் மென்பொருள் ஏற்றுமதி வருமானத்தில் மைசூர், மங்களுர், நரங்களின் பங்கு 4சதவீதமே உள்ளது.
    
மேட் இன் இந்தியாவிற்குவரலாற்று சாட்சியங்களாய் இருந்த பொதுத்துறை நிறுவனங்கள் எல்லாம் குறி வைக்கப்படுகின்றன. சாமானியனின் கடிகாரம்என்று அழைக்கப்பட்ட எச்.எம்.டி  நிறுவனம் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.இச்செய்தி  வெளி வந்தவுடன் பெங்களுரிலுள்ள எச்.எம்.டி விற்பனை மையங்களில் இரட்டிப்பு விற்பனை நடந்தேறியது(ப்ரன்ட் லைன் - அக் 31, 2014).மூன்று தலைமுறைகளுக்கு முதல் வாட்சாக எச்.எம்.டியே இருந்தது என்கிற சென்டிமென்ட் அவ்வளவு உயிர்ப்போடு உள்ளது.

 
எனவே, “மேக் இன் இண்டியா ” முன்னேறுவதற்கான முழக்கம் அல்ல பின்னுக்குப் போனதை மறைக்கிற லாவகமே.

 மோடி ரகசியம் என்ன?

ஒபாமாவைச் சந்தித்த மோடி இரண்டு பிரச்னைகளில் பாச மழையைப் பொழிந்துள்ளார். ஒன்று கேன்சர் மருந்து உற்பத்திக்கான உரிமை. இடதுசாரிகளின் உறுதியான தலையீட்டால் ரூ2,00,000 வரை விற்றுவந்த கேன்சர் மருந்துகள் ரூ 10000க்கு கிடைப்பதற்கான திருத்தம் காப்புரிமைச் சட்டத்தில் செய்யப்பட்டது. இரண்டாவது அணு உலை விபத்திற்கான இழப்பீடுகளை அணு உலைகளை வழங்குகிற நிறுவனங்கள் ஏற்பது.  இவ்விரண்டு பிரச்னைகளிலும் இந்திய மக்களின் நலன்களுக்கு எதிராக மறு பரிசீலனைக் கதவுகளை மோடி திறந்துள்ளார்.  இந்திய உயிர்கள் மீதே இவ்வளவுதான் அக்கறையென்றால் இந்தியத் தொழில்களையா இவர் பாதுகாக்கப் போகிறார்!

அரசின் அரவணைப்பிலான முதலாளித்துவத்தை ஊட்டி வளர்க்கிற குரோனி கேப்பிட்டலிசம்ஊக்குவிக்கப்படுகிற வரை உண்மையான வளர்ச்சியை எப்படி உறுதி செய்ய இயலும்! 108மருந்துகள் மீது உச்சவரம்பு விலைகளைத் தீர்மானித்த அரசு பிறகு ஆணையைத் திரும்பப் பெற்றது அண்மைக்கால உதாரணம். இதய நோயாளிகளின் பாடு இதயமற்ற அரசுக்கு எப்படித் தெரியும்

ஸ்பெக்ட்ரம், நிலக்கரி  ஊழல் முந்தைய ஆட்சியில் என்றால். உங்களின் அண்மைக்கால இன்னல்களை நான் அறிவேன், கவலைப் படாதிர்கள்! தொழில் நடத்துவதற்கான அமைதி யான  சூழலை நான் உருவாக்கித் தருவேன். என புண்பட்ட கார்ப்பரேட் நெஞ்சங்களை மயிலிறகால் வருடித் தருகிறார் மதிப்பிற்குரிய இன்றைய பிரதமர். கறுப்புப் பணப் பட்டியலை வெளியிட இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு உடன்பாடு இடம் தரவில்லையென பழைய காங்கிரஸ் பல்லவியையே உச்ச நீதிமன்றத்தில் புதிய அரசும் பாடுகிறது.  எப்படி ஒழியும் ஊழலும், லஞ்சமும்! தொழில்கள் சந்திக்கிற பெரிய சவால் இது.

 "
மேக் இன் இண்டியா " அழைப்பின் அர்த்தம் என்னவென்றால் இந்தியாவில் மலிவாக உழைப்புக் கிடைக்கும்! வாருங்கள்! தொழிலாளர் சட்டங்களைத் திருத்தித் தருகிறேன்: உங்கள் இஷ்டத்திற்குப் பந்தாடலாம்: வாருங்கள்! என பன்னாட்டு நிறுவனங்களின் லாபக் குவிப்பிற்கு உத்தரவாதம் தருகிற அழைப்புதான். இராஜஸ்தானின் துவங்கி மத்தியிலும் தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்துகிற வேலை ஆரம்பித்துவிட்டது. தொழிலாளி வயிற்றில் அடித்தால் என்ன நடக்கும்? இன்னும் சந்தை சுருங்கும். ஆனால் உற்பத்தி எப்படி வளரும்?

ஊளைக்கு சவுண்ட் எபெக்ட்...

 உள்ளே வரவேண்டிய முதலீடுகளை வருந்தி அழைக்கிற மோடி வெளியேறுகிற முதலீடுகளைத் தக்கவைக்க என்ன செய்கிறார்? என்பதே கேள்வி. 2013ல் அந்நிய நேரடி முதலீடு  15.8 பில்லியன் டாலர்கள் (96000 கோடி ரூபாய்கள்) உள்ளே வந்திருக்கிறது என்றால் அதே ஆண்டில் 13.5பில்லியன் டாலர் முதலீடுகள் (81000 கோடி ரூபாய்கள்) இந்தியாவை விட்டு வெளியேறியுள்ளன. அடிப்படைத் தீர்வுகளை நோக்கி நகராவிட்டால் மேக் இன் இண்டியாசிங்கம் கர்ஜிக்காது. ஊளையிடத் தான் செய்யும். அந்த ஊளையைக் கூட கார்ப்பரேட் ஊடகங்கள் சவுண்ட் எபெக்ட் கொடுத்து  கர்ஜனை
என கைதட்டி வரவேற்குமோ என்னவோ?

1 comment:

  1. Coimbatore ok but tirupur is full of dyeing terrorists who spoiled agriculture and farmers life. utter selfish
    ezhil

    ReplyDelete