Wednesday, October 8, 2014

காளையார் கோயில் கோபுரத் தீயும் கண்ணீர்த் துளியும்
அதிமுககாரர்களின் அவசரக் கொண்டாட்டத்தில் சிவகங்கை மாவட்டம் காளையார் கோயிலில் உள்ள காளீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷகப் பணிகளுக்காக கட்டப்பட்ட சாரங்கள் தீ பிடித்து எரிந்த செய்தியைப் படித்ததும் எனது நினவுகள் கொஞ்சம் பின்னோக்கிப் போய் விட்டது.

நான் ஐந்தாவதோ அல்லது ஆறாவதோ படித்துக் கொண்டிருந்தேன் என்றுதான் நினைவு. என்னுடைய அப்பா காளையார் கோயில் ஒன்றிய கமிஷனராக (பி.டி.ஓ) பணிபுரிந்தார். எனது பாட்டியின் தலைமையில் குடும்பம் காரைக்குடியில் இருக்கும். என் அப்பாவும் அம்மாவும் அப்பா வேலை பார்க்கிற ஊரில் இருப்பார்கள்.

காளையார் கோயிலுக்கு காலாண்டு, அரையாண்டு, பள்ளி இறுதி என மூன்று முறை சென்றுள்ளேன். மிகப் பெரிய கோயில் அது. கோயில் அளவிற்குத்தான் ஊரின் மற்ற பகுதிகளும் இருக்கும் என்று நினைவு. சோமேஸ்வரர், சுந்தரேஸ்வரர், காளீஸ்வரர் என்று மூன்று சிவன் சன்னதிகளும் அதற்கேற்றார்போல மூன்று அம்மன் சன்னதிகளும் இருக்கும்.

ஒரு முறை தேர்திருவிழாவின் போது அங்கே இருந்திருக்கிறேன். மூன்று கடவுள்களுக்கும் மூன்று தேர் உண்டு. திருவாரூர், ஸ்ரீவில்லிபுத்தூர், மதுரை அளவிற்கு பிரம்மாண்டமான தேர்களாகவே இருந்த்து என்று நினைவு. தேர்களை விட நான்கு புறமும் கட்டப்பட்ட தொம்பை எனப்படும் துணிதான் அதிகமாக அந்த வயதில் கவர்ந்த்து. தேரில் உள்ள சிற்பங்களைப் பற்றியெல்லாம் அப்போது எதுவும் தெரியாது.

அதே போல ஒரு விடுமுறையின் போது கோயிலில் திருட்டு போய் பரபரப்பாக இருந்த்து. வெள்ளி ரிஷப வாகனத்தில் இருந்த சலங்கைகளை மட்டும் அறுத்து எடுத்துக் கொண்டு போயிருந்தான் அந்த திருடன். அவனால் முடிந்த்து அவ்வளவுதானா அல்லது அவனது தேவைகள் அவ்வளவுதானோ.

காளையார்கோயிலில் ஒரு டூரிங் டாக்கீஸ் உண்டு. அனேகமாக இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு ஒரு படம் மாறும். பெரும்பாலும் அத்தனை படங்களும் பார்த்திருப்பேன். அன்னை வேளாங்கன்னி, ராமன் எத்தனை ராமனடி, அரச கட்டளை, வந்தாளே மகராசி ஆகியவை நினைவிற்கு வரும் படங்கள். ஹோட்டல் என்ற பெயரில் அந்த ஊரில் ஒரு சின்ன மெஸ் அளவிற்கு ஒன்று உண்டு. அதில் ஸ்வீட் நன்றாக இருக்கும் என்பதும் ஞாபகம் வருகிறது.   

ஆனால் காளையார் கோயில் என்றால் அப்போதும் சரி, இப்போதும் சரி எனக்கு நினைவுக்கு வருவது கோயிலுக்கு முன்பு அமைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்களின் சமாதி. அவர்களின் கம்பீரமான சிலைகளும் அவர்கள் பயன்படுத்திய வாளும்தான்.

காலைப் பொழுது முழுதும் அனேகமாக அக்கம்பக்கத்து பையன்களோடு கோயிலில்தான் கழியும். அரையாண்டு விடுமுறையின் போது கிடைத்த ஒரு நண்பன் முழுப்பரிட்சை லீவின்போது இல்லை. ஒரு சாலை விபத்தில் இறந்திருந்தான். ஆட்டோகிராப் ப்ட்த்தின் ஒரு பாட்டில் “முதன் முதல் பார்த்த சினேகிதன் மரணம் என்ற வரிகளைக் கேட்ட போது பாஸ்கர் என்ற அந்த பையன் தான் நினைவுக்கு வந்தான்.

இதோ இப்போதும் அவன் நினைவுக்கு வந்து கண்ணில் நீரை துளிர்க்க வைத்து விட்டான்.

1 comment:

  1. காளையார் கோயில் வரலாற்று சிறப்பு மிகுந்த இடம் ஐயா
    இந்தக் கோயிலின் முன்தான், சிவகங்கைச் சீமையின் அரசர் முத்துவடுகரும், அவரது இளைய மனைவி கவுரி நாச்சியாரும், வெள்ளையர்களால் சுட்டுக் கொள்ளப் பட்டனர், வெள்ளையன் ஒருவன் மரத்தின் பின் ஒளிந்திருந்து இருவரையும் சுட்டுக் கொன்றான். ஆங்கிலேயர்களை எதிர்த்துப் போராடி, வீர மரணத்தைத் தழுவிய முதன் மன்னர் முத்துவடுகர்

    ReplyDelete