Thursday, October 2, 2014

இது மட்டும்தான் காந்தியின் கனவா "விளம்பர மோக" மோடிஜி?






காந்தியின் கனவான “சுத்தமான இந்தியா” வை அடைய காந்தி ஜெயந்தி அன்று Swachchh Bharath  இயக்கத்தை தொடங்கப் போவதாகவும் அதற்காக அனைத்து அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்களும் அன்று அலுவலகம் வந்து Swachhta Shapath
எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிதியமைச்சகம் ரிசர்வ் வங்கி, பொதுத்துறை வங்கிகள், பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அரசு நிறுவனங்களுக்கு கடிதம் எழுதியுள்ளது. அதன் அடிப்படையில் எல்.ஐ.சி போன்ற நிறுவனங்களும் தங்களது ஊழியர்கள், அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளன.

அரசாங்கம் முதலில் ஹிந்தியில்தான் ஷபத் எடுத்துக் கொள்வதற்கான வாசகங்களை அனுப்பியிருந்தது. அந்த ஹிந்தி ஷபத் இதோ கீழே.

 
ஸ்வச்ச்சா பாரத், ஸ்வச்ச்டா ஷபத் என்று கூட சொல்லத் தெரியாத என்னை மாதிரியான ஆட்கள் உள்ளார்கள் என்று பிறகு வந்த ஞானோதயமாக  ஆங்கிலத்திலும் அனுப்பியுள்ளார்கள். ஆங்கிலத்தில் ஷபத்தை Pledge ஆக மாற்றியவர்களுக்கு ஸ்வச்ச்டா என்பதை எப்படி மொழி பெயர்ப்பது என்று தெரியவில்லை போலும்.

 
ஆக ஒரு நாள் கூத்தாகவே முடிய வாய்ப்புள்ள ஒரு சடங்கை வருடத்திற்கு நூறு மணி நேர கூத்தாக நடத்த ஆசைப்படுவது தெரிகிறது. இன்னொன்று குஜராத்தின் பிசினெஸ் மூளை அல்லவா, இதிலும் மல்டி லெவல் மார்க்கெடிங் பிசினஸ் போல ஒருவர் நூறு பேரை அழைத்து வர வேண்டுமாம்.

தூய்மையான இந்தியா என்பதற்கு காந்தியின் எதிர்பார்ப்பு என்ன என்பதை எங்கள் எல்.ஐ.சி யிலிருந்து ஓய்வு பெற்ற மூத்த அதிகாரி திரு எசக்கி ராஜன் அவர்கள் முக நூலில் மிக அழகாக எழுதியிருந்தார்.

“அவர் கூறியதெல்லாம் அகத்தூய்மை. அரசாணையோ புறத்தை தூய்மையாக்க்க முன் முயற்சி எடுப்போம் என்று. அகத்தூய்மை நோக்கி எப்போங்க?”

சரி காந்தியடிகளின் கொள்கைகள் என்றால் முன்னுக்கு வருவது என்ன?

இந்து முஸ்லீம் ஒற்றுமை,
மதச் சார்பின்மை,
தீண்டாமை எதிர்ப்பு,
பெண் உரிமை,
சுதந்திர இந்தியா,
இந்தியப் பொருட்களை பயன்படுத்துதல்.
விவசாயத்தில் தன்னிறைவு,
அண்டை நாடுகளோடு நேச உறவு.

இதில் பாஜகவிற்கு ஏதாவது ஒரு விஷயமாவது உடன்பாடு உண்டா?



முஸ்லீம்களுக்கு எதிராக எப்போதும் விஷம் கக்கிக் கொண்டிருப்பது பாஜக வின் வாடிக்கை. அவர்களுக்கு எதிராக கலவரங்களை தூண்டிக் கொண்டே இருக்கும் பாஜக காந்தியின் கனவான இந்து முஸ்லீம் ஒற்றுமையை பாதுகாக்க ஏதாவது ஷபத் எடுக்குமா?

அனைத்து மதங்களையும் சமமாக மதிப்போம், மாற்று மதத்தவர்கள் மனம் நோக நடந்து கொள்ள மாட்டோம், மதச்சார்பின்மைக் கொள்கையை உயர்த்திப் பிடிப்போம், மத நல்லிணக்கம் பாதுகாப்போம் என்று சபதம், சேச்சே ஷபத் எடுத்துக் கொள்வோம் என்று சொல்லுங்கள் மோடி, நான் உங்களை நிச்சயம் பாராட்டுவேன்.

தீண்டாமை இன்றளவும் நீடிக்கக் காரணமாக இருக்கிற மனு தர்மத்தை எங்கள் உள்ளங்களிலிருந்து அகற்ற ஷபத் எடுப்போம் என்று சொல்ல நீங்களோ இல்லை உங்கள் குரு பீடம் ஆர்.எஸ்.எஸ் அமைப்போ தயாரா மோடிஜி. முதலமைச்சர்களே கோயில்களில் இழிவு படுத்தப் படுகின்றனரே, இதற்கு எதிராக தேசிய அளவில், இல்லையில்லை குறைந்தபட்சம் உங்கள் கட்சியளவிலாவது இயக்கம் காண நீங்கள் என்றாவது அறிவிப்பு கொடுப்பீர்களா?

இன்று உலக அளவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத நாடுகள் பட்டியலில் இந்தியா இடம் பெற்றுள்ளதே. நள்ளிரவில் நகைகளோடு ஒரு இளம் பெண் தனியாக நடமாட முடிந்தால் அப்போதுதான் இந்தியா சுதந்திரமடைந்ததாக காந்திஜி கனவு கண்டாரே நினைவிருக்கிறதா? ஆனால் இன்று என்ன நிலவரம். பட்டப்பகலில் வெறும் கழுத்தோடு மூதாட்டி கூட நடமாட நிலை உள்ளதே. பாலியல் கொடுமைகள் நிகழ்கிற போது உங்கள் குரு மகா சன்னிதானமும் உங்கள் சிஷ்ய கேடிகளும் கொடுக்கிற அறிக்கைகள் எல்லாம் பெண்கள் மீதான உங்கள் பார்வை கடைந்தெடுத்த பிற்போக்குத்தனம் என்பதைத்தானே சொல்லிக் கொண்டிருக்கிறது! பெண்களுக்கு ஆட்சியதிகாரத்தில் உரிய பங்கை அளிக்கும் மகளிர் மசோதாவை நிறைவேற்ற உங்கள் ஆட்சிக் காலத்தில் துரும்பையாவது கிள்ளிப் போடுவீர்களா? முதலில் நீங்கள் பெண்மையை மதிப்பவரா? உங்களை மனைவியின் மனசாட்சியைக் கேட்டு பதில் சொல்லுங்கள்.

காந்தியின் ஆசைகளில் ஒன்றான காங்கிரஸ் கட்சியை கலைக்க வேண்டும் என்பதை மகாத்மா காந்தியின் வாரிசுகளோ என்று அறியாதவர்களை நினைக்க வைத்த ஃபெரோஸ் காந்தியின் வழித்தோன்றல்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை பன்னாட்டுக் கம்பெனிகளிடம் இந்தியாவை கூவிக்கூவி விற்றார்கள் என்றால் நீங்கள் அதை விட இன்னும் மோசம். உங்கள் Make in India விற்கு உண்மையான அர்த்தமே Loot in India தானே! சுதந்திரத்தை விற்பதில் காலாவதியாகிப் போன காங்கிரசோடு போட்டி போடும் உங்களுக்கு காந்தியின் பெயரைச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?

அண்டை நாடுகளோடு நேசமான உறவை உருவாக்க உங்களது “அகண்ட பாரத” கனவை கைவிட தயாரா?

விவசாயத்தில் எதற்கு இவ்வளவு பேர் வேண்டும். அவற்றை பன்னாட்டுப் பண்ணைகளுக்கு கொடுத்து விட வேண்டும் என்பதுதானே உங்களது கொள்கை!

எல்லாவற்றையும் விட காந்திஜியின் மிகப்பெரிய சிறப்பம்சம் அவரது உண்மை. உங்களுக்கும் உண்மைக்கும் ஸ்னானப் பிராப்தியாவது இருக்கிறதா? பொய் முழக்கங்களைச் சொல்லி ஆட்சிக்கு வந்தவர்தானே நீங்கள். ஊழல் பேர்வழிகளான யெடீயூரப்பா, ரெட்டி பிரதர்ஸ், மோசடி அதிகாரியாக இருந்த வி.கே.சிங், சான்றிதழ் மோசடி ஸ்மிர்தி இராணி, முதலாளி நிதின் கட்காரி இவர்களை வைத்துக் கொண்டு உங்களால் நேர்மை என்று ஏதாவது சொல்ல முடியுமா?

உங்களின் எத்தனையோ வெற்று முழக்கங்களில் இதுவும் உண்டு. ஒவ்வொரு வாரமும் இரண்டு மணி நேரம் துடைப்பத்தோடு டெல்லி தெருக்களிலோ இல்லை வாரணாசியிலோ உங்களை பார்க்க முடிகிறதா என்பதையும் பார்த்து விடுவோம்.
 http://ste.india.com/sites/default/files/2014/10/02/279016-modi700123.jpg

உங்கள் முன்னோர்களால் கொல்லப்பட்ட மகாத்மா காந்தியின் வேறு எந்த நல்ல, உங்களுக்கு பிடிக்காத லட்சியமும் மக்கள் மனதில் காந்தி ஜெயந்தி அன்று கூட வரக்கூடாது என்ற திசை திருப்பும் விளம்பர மோகம் தவிர வேறு எதுவும் உங்களது ஸ்வச்ச்சா பாரத், ஸ்வச்ச்டா ஷபத் தில் கிடையாது.

சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால்

காந்தியடிகள் எழுதியது “சத்திய சோதனை”
உங்களால் என்றும் “சத்தியத்திற்கு சோதனை”



3 comments:

  1. Hi Sir,

    I am reading your blog for long time. This is the first time i am commenting. You have raised very good questions. But, no one else will answer for this from other side. Because, they know they will not be able to answer for those.

    Regards,
    A Yusuf

    ReplyDelete
  2. this also ganthi's dream......

    seshan/dubai

    ReplyDelete