Wednesday, March 23, 2016

பாபர் மசூதியில் வரையப்பட்ட ஓவியம்




எழுத்தாளரும் வங்கி ஊழியர் இயக்கத் தலைவருமான தோழர் ஜா.மாதவராஜ் எழுதிய அற்புதமான பதிவை பகிர்ந்து கொள்வதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன். பாபர் மசூதியில் பகத்சிங்கின் ஓவியம் வரையப் பட்ட செய்தி நான் இன்று அறிந்து கொண்ட புதிய தகவல்.


தேசத்தின் விடுதலைக்காக தங்கள் இன்னுயிரை நீத்த உண்மையான புரட்சியாளர்களுக்கு, பிரிட்டிஷ் அரசின் தேசத் துரோகிகளுக்கு 
வீர வணக்கம்


நன்றி  தோழர் மாதவராஜ்.





சட்லெஜ் நதியின் கரையோர ஊரான பெரோஸ்பூரில் சிறுவர்கள் ஆச்சரியமாக அந்த ஹெலிகாப்டரை பார்க்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் மார்ச் 23ம் தேதி, இந்த உற்சாகத்தை அவர்களுக்கு தந்து செல்கிறது. பஞ்சாப் மாநில முதல்வர் விண்ணிலிருந்து தரையிறங்கி அந்த மூன்று பேருக்கும் வணக்கம் செலுத்தி பறக்கிறார். சிறுவர்கள் மீண்டும் விண்ணைப் பார்த்து சத்தம் எழுப்புகிறார்கள். ஓடுகிறார்கள். பகத்சிங் அங்குதான் ராஜகுருவோடும், சுகதேவோடும் அந்த மண்ணில்தான் கலந்து, அடுத்த தலைமுறையின் காலடி ஓசைகளை கேட்டபடி இருக்கிறார்.

அங்கு மட்டும் அவர்கள் இல்லை. டான் நிறுவனம் நடத்தும் பத்திரிக்கையொன்றில் ஜாவேத் நக்வி எழுதிய கட்டுரை மிக முக்கியமான ஒரு தகவலை சொல்கிறது. இடிக்கப்பட்ட பாபர் மசூதியின் தெற்குச்சுவரின் உட்புறத்தில் கரியால் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோரின் படங்கள் வரையப்பட்டிருந்திருக்கின்றன. 1991ம் வருடம் அங்கு சென்றிருந்தபோது நக்வி அதை பார்த்திருக்கிறார். ஆளுயரத்திற்கு மிக நேர்த்தியாக இருந்திருக்கின்றன. யார் வரைந்தார்கள், எப்போது வரைந்தார்கள் என்பதெல்லாம் தெரியவில்லை. எதோ போகிற போக்கில் பகத்சிங் வரையப்பட்டிருக்க முடியாது என்பது மட்டும் தெளிவாகிறது. "நான் ஒரு மனிதன். மனித சமூகத்தை பாதிக்கும் அனைத்தும் என்னோடு சம்பந்தப்பட்டவையே" என்று சிறைக்குள் தன்னை பிரகடனப்படுத்திக் கொண்ட நோக்கத்தோடுதான் அங்கு காட்சியளித்திருக்க வேண்டும்.
தனது இருபத்தொன்றாம் வயதில் 'மதமும் விடுதலைப் போராட்டமும்' என்று வகுப்புவாதத்தின் அபாயங்களைச் சுட்டிக் காட்டிய சிந்தனையாளர் அவர். 

லாகூர் கலவரங்களுக்குப் பிறகு அந்தக் கட்டுரையை எழுதியிருந்தார். "முழு சுதந்திரத்தின் அர்த்தம் என்பது பிரிட்டிஷாரின் பிடியிலிருந்து விடுபடுவது மட்டுமல்ல...அனைத்து சமூகத்தைச் சார்ந்தவர்களும் சகோதரர்களாக வாழும் இணக்கமான ஒரு சூழலை ஏற்படுத்துவது என்பதும் ஆகும்." என்ற வாக்கியம் அவரது பார்வையின் வீரியத்தையும், தெளிவையும் நமக்கு உணர்த்துகிறது.

இளமையின் துணிவும், தேசப்பற்றும், அளப்பரிய தியாகமும் கொண்ட உருவமாகவே பொதுவாக பகத்சிங் முன்வைக்கப்பட்டிருக்கிறார். அதையும் தாண்டி ஆழமான புரிதல் கொண்டவராய், பிரச்சினைகளுக்கு தீர்க்கமான முடிவுகளை யோசிக்கிறவராய் இருந்திருக்கிறார். இருபத்து மூன்று வயதில் இந்த மக்களைப் பற்றி, விடுதலையைப் பற்றி, அனைவருக்குமான தேசம் பற்றி தனது இலட்சியங்களை அறிவுபூர்வமாக முன் வைத்திருக்கிறார். அதுதான் பாபர் மசூதியின் சுவரில் அவரது உருவம் வெளிப்பட காரணமாயிருந்திருக்க வேண்டும்.
பாராளுமன்றத்தில் குண்டுகள் வீசியதற்காகவும், சாண்டிரஸை கொலை செய்ததற்காகவும் நடந்த வழக்கு முடிந்திருக்கிறது. தீர்ப்பு எந்த நாளிலும் வரலாம். சுகதேவ் தனக்கு இருபது வருடம் ஆயுள் தண்டனை கிடைக்கும் என எதிர்பார்க்கிறார். பகத்சிங்கிற்கு ஒரு கடிதம் எழுதுகிறார். அப்படி ஆயுள் தண்டனை கிடைத்தால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகவும், வாழ்வு அல்லது மரணம் என்றும் குறிப்பிடுகிறார். பகத்சிங் அவருக்கு எழுதுகிற பதில் அந்த இளைஞனின் தோளில் உட்கார்ந்து நம்மை உலகத்தை பார்க்கச் சொல்கிறது. "எனக்கு மரண தண்டனை. உங்களை நாடு கடத்தப் போகிறார்கள். நீங்கள் வாழ வேண்டும். புரட்சியாளர்கள் மரணத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு சூழலையும் எதிர்நோக்குவார்கள் என்பதை உலகுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் வாழ வேண்டும். உலகத்தின் துயரங்களிலிருந்து விடுபட மரணம் ஒரு வழியாய் இருந்திட முடியாது." என்னும் அவரது வார்த்தைகளை செவிடர்களுக்கும் கேட்கும்படியாய் உரக்க வாசிக்க வேண்டும்.

1931, மார்ச் 23ம் தேதி அந்த திங்கள் கிழமை இரவு 7.33 மணிக்கு நடந்தது. "இன்குலாப் ஜிந்தாபாத்' வீர முழுக்கமிட்ட பகத்சிங்கின் குரல்வளையை இறுக்கிய தூக்குக்கயிறு அவரது கடைசி நேரத் துடிப்புகளோடு அதிர்ந்து மெல்ல அசையாமல் போனது. தேசம் தனது வீரப்புதல்வர்களை பறி கொடுத்து நின்றது. தன்னெழுச்சியாய் கடைகள் அடைக்கபட்டன. ஊர்வலங்களும், பிரார்த்தனைகளும் நடைபெற்றன. நாற்பதாயிரத்துக்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் லாகூர் மிண்டோ பூங்காவில் கூடி நின்று பிரார்த்தனை செய்தார்கள். சுபாஷ் சந்திர போஸ் தலைமையில் வங்காளத்தில் மிகப்பெரிய ஊர்வலம் நடைபெற்றது. பகத்சிங் என்னும் பேரே ஒரு சக்தி பிறக்கும் மந்திரச் சொல்லாகிப் போனது. பஞ்சாபில் பெரும்பகுதி மக்கள் தங்கள் வீடுகளில் அன்று அடுப்பு பற்ற வைக்கவில்லை.

“பகைவர்களே இல்லை என்கிறாயா?
அந்தோ என் நண்பனே!
இப்பெருமிதம் மிகவும் அற்பமானது
உனக்கு எதிரிகள் இல்லாது போனால்
நீ செய்திருப்பது அற்ப சொற்பமானதே
துரோகி யாரையும் வீழ்த்தியிருக்க மாட்டாய்
தவறினை ஒருபோதும் சரி செய்திருக்க மாட்டாய்
போராட்டத்தில் கோழையாய் இருந்திருப்பாய்”

சார்லஸ் மகாய் எழுதிய இந்தக் கவிதையை சிறைக்குறிப்பேட்டில் எழுதி வைத்திருந்தார் பகத்சிங். ஆத்திரமும், வேகமும் கொண்ட அவரின் பரிணாமம் மிக நிதானமானதாய் இருக்கிறது. அதே நேரத்தில் மிக உறுதியானதாய் இருந்திருக்கிறது. இந்திய சுதந்திரப் போராட்டத்தில் தீவீரமாக ஈடுபட்ட பலர் பின்னாளில் ஆன்மீக வாழ்விற்குள் தங்களை புதைத்துக் கொண்டு ஒதுங்கிப் போயிருக்கிறார்கள். பகத்சிங்கின் குரல் இந்த இடத்தில் தனித்து ஒலிக்கிறது. "நான் ஏன் நாத்திகனாய் இருக்கிறேன்' என்னும் கட்டுரையில் அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியும் பின் தொடர வைக்கின்றன. எழுப்பும் கேள்விகள் ஏற்கனவே இங்கு தயாராய் இருக்கும் பதில்களை வீழ்த்துகின்றன. "கடவுளை நம்பும் ஒரு இந்து தனது மறுபிறப்பில் ராஜாவாக வேண்டும் என்று எதிர்பார்க்கிறான். ஒரு முகம்மதியனோ, கிறிஸ்துவோ துயரங்களிலிருந்து விடுபட்டு மோட்சத்தின் செல்வங்களை அனுபவிக்கலாம் என கனவு காண்கிறான். எனக்கு, என் காலுக்கடியில் இருக்கும் இந்த கணமே இறுதியானதாய் தெரிகிறது" என்று சென்றுகொண்டே இருக்கிறார்.

கனவுகளை, இலட்சியங்களை இந்த மண்ணில் விதைத்துவிட்டுப் போயிருக்கிறார் பகத்சிங். அவைகளை இன்னும் இந்த மண் அடைகாத்துக் கொண்டு இருக்கிறது. பாபர் மசூதியில் வரையப்பட்டிருந்த பகத்சிங்கின் சித்திரம் உயிர்பெற்று, விதைகளையும் மண்ணையும் கீறிக்கொண்டு ஆயிரம் ஆயிரமாய் வெளிவரட்டும். நம் அறிவும் கண்களும் ஏங்குகிற காட்சியாக அது இருக்கட்டும்.

Tuesday, March 22, 2016

இதுவும் விஜய் டி.வி யின் மேட்ச் பிக்ஸிங்தானோ?




திருவிளையாடல் தருமி "சர்ச்சைக்கு" என்று கேள்வி கேட்டால் விஜய் டிவி சூப்பர் சிங்கர் என்றுதான் உடனே பதில் வந்திருக்கும்.

ஏற்கனவே திரைப்படங்களில் பாடிய ஒருவரைத்தான் புதியவர் போல பாட வைத்து முதல் பரிசும் கொடுத்து ஏமாற்றி விட்டார்கள் என்பதுதான் சமூக வலைத்தளங்களில் இன்று சுழன்றடிக்கிற சர்ச்சை.

விஜய் டிவி அது போல செய்திருந்தால் அது கண்டிப்பாக மோசடி வேலைதான். கண்டிக்க வேண்டிய ஒன்றுதான்.  ஆனால் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பல மேட்ச் பிக்ஸிங் இருக்கத்தான் செய்கிறது என்பதை நிகழ்ச்சியை அவ்வப்போது மட்டுமே பார்க்கிற என்னாலேயே உணர முடியும் போது  இப்போது சர்ச்சையை கிளப்புகிறவர்கள் இத்தனை நாள் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்ற கேள்வி எனக்கு இயல்பாக எழுகிறது.

அதுவும் விஜய் டிவி மீண்டும் மீண்டும்  மீண்டும் பல முறை ஒளிபரப்பு செய்கிற நிகழ்ச்சி அது. இறுதிச்சுற்று முடியும் வரை இவ்வளவு நாள் அவர்கள் எங்கே போனார்கள்? 

இப்போது பிரச்சினையை கிளப்புவதில் உள்நோக்கம் என்ன?

இல்லை, இந்த சர்ச்சையும் விஜய் டி.வி யின் மேட்ச் பிக்ஸிங்தானோ? 

Monday, March 21, 2016

சந்திரஹாசம் – இன்னொரு பாகுபலி







தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் சு.வெங்கடேசன் அவர்களின் எழுத்திலும் ஓவியர் பால சண்முகத்தின் ஓவியங்களோடும் விகடன் பிரசுரமாக வெளி வந்துள்ள கிராபிக்ஸ் நாவல் சந்திரஹாசம் சில தினங்கள் முன்புதான் வாங்கினேன்.

பாகுபலி திரைப்படம் போல பிரம்மாண்டமாக வெளி வந்துள்ள புத்தகம் என்று சொல்வது சரியாக இருக்கும். வேறு பல காரணங்களுக்காகவும் இந்த நூலை பாகுபலியோடு ஒப்பிடுவது பொருத்தமாக உள்ளது.

மாறவர்ம பாண்டியனின் இரண்டு மகன்களான வீர பாண்டியனுக்கும் சுந்தர பாண்டியனுக்கும் இடையிலான அரியணைக்கான மோதலே சந்திரஹாசம் கதை. இலங்கை ,மீதான பாண்டியர் படையெடுப்போடு தொடங்குகிற நாவல் மதுரையை கைப்பற்ற மாலிக்காபூர் படையெடுத்து வருவதோடு முடிகிறது. அரியணை பாகுபலிக்கா இல்லை பல்வாள் தேவனுக்கா என்ற மோதல் நினைவுக்கு வருவது தவிர்க்க முடியவில்லை. எப்போதுமே கதாநாயகர்கள் நல்லவர்களாகவும் வில்லன் மோசமான குணம் படைத்தவனாக இருக்கிற பார்முலா சந்திரஹாசத்திலும் உள்ளது.

ஒவ்வொரு பக்கத்திலும் ஓவியங்களின் பிரம்மாண்டமும் அழகும் வண்ணங்களின் கலவையால் நம்மைக் கவருகிறது. சின்னச் சின்ன விஷயங்கள் கூட நுணுக்கமாக வரையப்பட்டுள்ளது ஓவியரின் திறமைக்குச் சான்று. ஓவியங்கள் ஆக்கிரமிப்பு மேலோங்கியபோதும் கிடைக்கிற வாய்ப்புக்களில் தோழர் சு.வெங்கடேசனின் மொழியாற்றல் ஒளிர்கிறது.  

இந்த நூலை அலைபேசி வாயிலாக தரவிறக்கம் செய்து பார்க்கலாம் என்று சொல்லி அதற்கென்று ஏதோ எண்ணெல்லாம் கொடுத்துள்ளனர். அதை இன்னும் முயற்சிக்கவில்லை. புத்தகத்திற்குள் ஒரு சினிமா என்ற விளம்பரம் சொல்கிறது. ஏதாவது பின்னணி இசையெல்லாம் இருக்குமா என்று தெரியவில்லை.

நூல் மிகவும் உயர்தரமாக தயாரிக்கப்பட்டுள்ளது. காகிதங்களின் வழவழப்பு, அட்டை, புக் மார்க் செய்ய கொடுக்கப்பட்டுள்ள சந்திரஹாசம் வாளின் மாதிரி என எல்லாமே அருமை. ஆனால் ஆயிரம் ரூபாய் என்பது பெரும்பாலான வாசகர்களுக்கு கட்டுப்படியாகாத விலை. கணக்கு பார்க்காமல் புத்தகங்களுக்காக செலவழிக்கிற நான் கூட கொஞ்சம் யோசித்து, வேறு ஒரு செலவில் மிச்சமான தொகை கொண்டே வாங்கினேன். இது குறித்து விகடன் நிறுவனம் கொஞ்சம் யோசிக்க வேண்டும்.

வாங்கியாச்சு, படிச்சாச்சு, அப்புறம் எதற்கு விலை பற்றி விகடன் யோசிக்க வேண்டும் என நீங்கள் கேட்பது புரிகிறது.

இந்த நூலை பாகுபலி உடன் பல காரணங்கள் இருக்கிறது என்றும் சிலதை முன்னரே சொல்லியுள்ளேன்.

பாகுபலி படம் பார்க்கும் போது தோன்றும் பிரமிப்பு அரங்கை விட்டு வெளியே வந்து யோசித்தால் எதுவும் மனதில் நிற்கவில்லை. அழுத்தமான கதை இல்லாததால் அப்படி.  இந்த நூலும் அப்படித்தான். படிக்கும் போது ஏற்படும் பிரமிப்பு முடித்ததும் மறைந்து போகிறது, அதே காரணத்தாலேயே.

பாகுபலி போலவே சந்திரஹாசத்திலும் கதை இன்னும் முடியவில்லை. இரண்டாவது பாகம் தயாராகிக் கொண்டிருக்கிறது.

பாகுபலி முதல் பாகம் பார்த்தவர்களால் எப்படி இரண்டாவது பாகத்தை பார்க்காமல் இருக்க முடியாதோ, அது போலவே சந்திரஹாசம் இரண்டாவது பாகத்தையும் படிக்காமல் இருக்க முடியாது.

எனவே விகடன் நிறுவனத்தாரே, விலையைக் கொஞ்சம் குறையுங்கள்.

Sunday, March 20, 2016

சசிகலா முதல் கௌசல்யா வரை


ஜாதி ஆணவக் கொலைக்கு கணவனை பறி கொடுத்த உடுமலைப்பேட்டை கௌசல்யா, தன்னுடைய உயர் கல்வியை தொடர விரும்புவதாகக் கூறியதை நாளிதழில் படித்திருப்பீர்கள்.

கௌசல்யாவின் மேற்படிப்பிற்காகக் கூடிய செலவினத்தை முழுமையாக ஏற்பது என  எங்கள் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் கோயம்பத்தூர் கோட்டச் சங்கம் முடிவு செய்துள்ளது. கோவைக் கோட்டச்சங்கத்தின் பொறுப்பாளர்களுக்கும் அனைத்து தோழர்களுக்கும் என்னுடைய, எங்கள் வேலூர் கோட்டத்தினுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் உரித்தாக்குகிறோம்.

இந்த செய்தி அறிந்த போது மனம் இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்றது. 1994 ம் வருடம் தஞ்சையில் எங்களது தென் மண்டல மாநாடு நடந்து கொண்டிருந்தது. அம்மாநாட்டில் இந்திய மாணவர் சங்கத்தின் அப்போதைய மாநிலச் செயலாளர் தோழர் ராமகிருஷ்ணன் வாழ்த்துரை வழங்கினார். சசிகலா என்ற  ஏழை தலித் மாணவிக்கு சென்னை ராமச்சந்திரா கல்லூரியில் எம்.பி.பி.எஸ் இடம் கிடைத்தும் பத்தாயிரம் ரூபாய் இல்லாததால் அவரால் கல்லூரியில் சேர முடியாமல் சிரமப்படுகிறார் என்ற தகவலை பகிர்ந்து கொண்டார்.

அந்த பெண்ணின் கல்விக்கு உதவ உங்களால் முடிந்த நிதியைத் தாரீர் என்று அப்போதைய தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் எஸ்.ராஜப்பா மாநாட்டில் அறைகூவல் விடுக்க, மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளும் பார்வையாளர்களும் உவப்போடு நிதியளிக்க அந்த பெண்ணிற்கு தேவைப்படும் நிதி கிடைத்தது.

அன்றிலிருந்து அப்பணி தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. எங்களது கோட்டத்தில் கூட சுனாமியில் தந்தையை இழந்த பாக்கியலட்சுமி என்ற மாணவியின் கல்லூரிச் செலவினங்களை பொறுப்பேற்றுக் கொண்டோம். 

கடந்தாண்டு பிரஷாந்த் என்ற மருத்துவக் கல்லூரி மாணவனுக்காக தஞ்சைக் கோட்டம் செய்த பணி குறித்த பதிவு இது

அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் நாடு முழுதும் ஆதரவு தேவைப்படுபவர்களுக்கு உதவுவதை தனது கடமைகளில் ஒன்றாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

ஆம், இவை ஒன்றும் இரக்கத்திலானது அல்ல. ஒரு தொழிற்சங்க இயக்கத்தின் தொழிலாளர் வர்க்கக் கடமை என்ற அடிப்படையில், புரிதலில்.  

Saturday, March 19, 2016

பாரத மாதாவில் யாரெல்லாம் உண்டு?



ஜெய் ஹிந்த் என்று சொல்வதிலோ ஜெய் ஹிந்துஸ்தான் என்று சொல்வதிலோ எனக்கு தயக்கமில்லை. பாரத் மாதா கீ ஜெய் என்றுதான் சொல்ல மாட்டேன் என்பதால் ஒரு சட்டமன்ற உறுப்பினர் இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அவரது நாக்கை அறுப்பவர்களுக்கு ஒரு கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

பாரத மாதா என்ற வடிவத்திற்குள் யாரெல்லாம் வருவார்கள் என்பதை மோடியோ இல்லை மோகன் பகவத்தோ விளக்கம் சொன்னால் நாமும் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்வதா, வேண்டாமா என்று முடிவு செய்து விடலாம்.

மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றினால் அவர்களுக்கு மோட்சம் உண்டு, சொர்க்கத்திற்குப் போகலாம் என்று மோடி சொன்னாரா, அந்த மக்களும் சேர்ந்ததுதான் பாரத மாதாவா?

பழைய சோறோ இல்லை பால் பாயசமோ, மாட்டுக் கறியோ இல்லை பன்றியின் மாமிசமோ, எனக்கான உணவை முடிவு செய்ய வேண்டிய உரிமை என்னுடையது, கடவுளுக்கோ இல்லை கடவுளின் பெயரால் அற்ப அரசியல் நடத்துபவர்களோ, எனது உணவு உரிமையில் தலையிட முடியாது என்பவர்களுக்கு பாரத மாதாவின் இதயத்தில் இடம் உண்டா?

விமானத்தில் பறந்து போன மல்லய்யாக்கள் மட்டும் புத்திரர்களா இல்லை தூக்குக் கயிற்றை நாடிய அழகர் போன்ற விவசாயிகளும் பாரத மாதாவின் புத்திரர்கள்தானா?

பாலியல் வன் கொடுமைக்கு நீதான் காரணமே தவிர வக்கிர புத்தி கொண்ட ஆண்கள் அல்ல என்று மூன்று வயதுக் குழந்தை தொடங்கி மூதாட்டிகள் வரைக்கும் உபதேசம் செய்கிற தாயா இந்த பாரத மாதா?

துர்க்கையின் வடிவத்தை பாரத மாதாவிற்கு அளித்துள்ளீர்கள். மேரி மாதாவையோ அல்லது வடிவமற்ற ஆண்டவனையோ வழிபடுகிற, ஆண்டவனே இல்லை என்று அறிவியலாய் சொல்கிறவர்களுக்கும் பாரத மாதா எனும் சிந்தனையில் இடமுண்டா?

துர்க்கையின் வாகனமான சிங்கம்தான் உங்களின் பம்மாத்து மோசடித் திட்டமான மேக் இன் இந்தியாவிற்கு சின்னம். இந்தியாவை விற்கிற தேச விரோதி நீங்கள் என்று சொல்பவர்களை பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லி விட்டால் தேச பக்தர் என ஒப்புக் கொள்வீர்கள் அல்லவா?

தேசத்தின் எல்லைகளை பாதுகாக்கிற ராணுவ வீரர்களுக்கு வாங்கிய சவப்பெட்டிகளில் காசு பார்த்த பரம்பரையில் வந்த நீங்களோ அவர்களை வெறும் கூலிப் பட்டாளமாக மாற்றி சாமியார் பஜனைக்கு பாலம் கட்ட அனுப்பி விட்டீர்கள்.  ஆனாலும் பாரத் மாதா கீ ஜெய் என்று சொல்லி விட்டால் உங்களின் கறைகள் நீங்கி களங்கம் அகன்று நீங்கள் எல்லாம் உத்தமர்களாக உங்களை நீங்களே சொல்லிக் கொள்வீர்கள். 

இந்தியாவின் தேச விரோத சக்திகளே, வெற்று முழக்கத்தில் இல்லை தேச பக்தி என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் உங்களிடம் இருப்பது அது மட்டும்தானே.

 

வீடியோ காமெடிதான். ஆனா



வாட்சப்பில்  வந்த வீடியோவை இணைத்துள்ளேன். பொருத்தமாகத்தான் உள்ளது. காமெடியாகவும் உள்ளது. ஆனால் பணம் போனது வங்கிகளுக்கு மட்டுமல்ல. அது நம்முடைய பணமும்தான். நமது வரிப் பணம்தான். நாம் முதலீடு செய்துள்ள சேமிப்பும்தான். அதுதான் கொடுமையான உண்மை.

பாருங்கள் அந்த வீடியோவை

 

Friday, March 18, 2016

தேர்தல் - சாதாரண அவஸ்தையா அது?

 

 

மைக்ரோ அப்சர்வர்கள் பட்ட அவஸ்தைகள்

நேற்றைய பதிவின் தொடர்ச்சி 

மாலை நான்கு மணிக்கு  புதிய ஆணைகள்  தருகிறோம், நிறுவனத்திற்கு ஒருவர் வந்து வாங்கிக் கொள்ளுங்கள்  என்று  சொன்னார்கள். எங்கள் 
அலுவலகத்தில்  ஒருவரை நேர்ந்து விட்டோம். தான் ஒரு பலியாடு 
என்று புரியாமல் அவரும் அப்பாவியாய் ஒப்புக்கொண்டார். நான்கு மணிக்கு சென்ற அவரை எட்டு மணி வரை காத்திருக்க வைத்து பிறகு 
அனைவருக்குமான ஆணைகளை கொடுத்தார்களாம். காலை நடந்த 
கூட்டத்தில்  டீ அல்ல தண்ணீர் கூட கொடுக்காமல்  அனுப்பி வைத்தார்கள்.  எட்டு மணி வரை காத்திருந்தவர்களுக்கும் அதே கதிதான். எங்களை கண்காணிக்கவா வரப்போகின்றீர்கள், சோறு, தண்ணீர் இல்லாமல்   உங்களுக்கெல்லாம்  இருக்குடா பிரச்சினை என்று சொல்லாமல்  சொல்லியுள்ளார்கள்.  அது எங்களுக்குத்தான் புரியவில்லை.  

ஆணைகளைப் பார்த்தால் அத்தனையும் மாறிப்போயிருந்தது.  யாருக்கும்  வேலூர் தொகுதி கிடையாது. பலருக்கு குடியாத்தம், அணைக்கட்டு, சிலருக்கு மட்டும்  காட்பாடி தொகுதி. நீ வாயை வைத்துக் கொண்டு சும்மா இருந்திருக்கலாம் என்பது போல பார்த்தார்கள். கோட்டப் பொதுச்செயலாளரை  எப்படி திட்டுவது என்ற மரியாதையில் மௌனமாக இருந்து விட்டார்கள். 

அந்த வார ஞாயிறு அன்றே தொகுதி வாரியாக வகுப்பு. மாவட்ட ஆட்சியர் சொன்னதின் மறு ஒலிபரப்பு மட்டுமே. அடையாள அட்டை அளித்ததற்கு மேல் எதுவும் இல்லை. எங்களுக்காவது பரவாயில்லை. வேலூரில்தான் வகுப்பு, மற்றவர்கள் வெளியூருக்கு போக வேண்டியிருந்தது. மொத்தத்தில்  ஒரு ஞாயிற்றுக்கிழமை வீணானது. 

அடுத்த ஞாயிற்றுக்கிழமை அடுத்த வகுப்பு. பதினோரு மணிக்கு வரச்சொன்னார்கள்.  பனிரெண்டு மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டு விட்டது. அப்போது வாருங்கள். அப்போது போனால்  கே.வி.குப்பம் வகுப்பே முடியவில்லை.  ஒரு வழியாக ஒரு மணிக்கு துவக்கினார்கள். அந்த வகுப்பும்  மறு ஒலிபரப்புதான். பட்டினியாய் இருப்பது எப்படி என்பதற்கான  வகுப்பு என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். காட்பாடி தொகுதியில் எந்த வாக்குச்சாவடி என்பதற்கான ஆணை கொடுத்து விட்டார்கள். ஆனால் இவர்களோ அப்படி கொடுக்கவேயில்லை என்று சாதித்துக் கொண்டிருந்தார்கள். 

பனிரெண்டாம் தேதி ஒரு வழியாக வாக்குச்சாவடி எது என்பதற்கான ஆணையை கொடுத்து விட்டார்கள். பெட்டியை எடுத்துச்சென்ற பிறகு 
வாக்குப் பெட்டிகள் வைக்கும் மையத்திற்கே  வந்து அறிக்கையை அளித்து விட்டு போக வேண்டும் என்று சொன்னார்கள். உணவுக்கான 
ஏற்பாடு என்ன என்று சிலர்   கேட்ட போது கிராம நிர்வாக அதிகாரி 
பார்த்துக் கொள்வார் என்றார்கள். 

மூன்று வகுப்புக்கள் கொடுத்த நம்பிக்கையில் காலை உணவிற்கு பிரெட் டோஸ்டுகள், மதிய உணவிற்கு சப்பாத்தி, தக்காளி ஊறுகாய், இரண்டு 
தண்ணீர் பாட்டில்கள் என்ற தயாரிப்போடு போனதால் நான் தப்பித்தேன். ரொம்ப நல்லவர்களாக போனவர்கள்தான் மாட்டிக்கொண்டார்கள். கிராம நிர்வாக அதிகாரி கண்டு கொள்ளாமல் போன இடங்களில் கட்சிகளின் ஏஜெண்டுகளை மட்டுமே நம்பி இருக்க வேண்டியிருக்கிறது. உப்பிட்டவரை  உள்ளவரை நினை என்ற தமிழ்ப்பழமொழிக்கு ஏற்ப ஏஜெண்டுகளின்  தெனாவேட்டுக்கு  பதில் பேச முடியாமல் அமைதியாக 
இருக்க வேண்டிய நிலை, மைக்ரோ அப்சர்வர்களுக்கு மட்டுமல்ல 
தேர்தல் அலுவலர்களுக்கும் ஏற்பட்டுள்ளது. 

மற்ற விஷயங்களில் கறாராக இருந்த தேர்தல் ஆணையம் இந்த விஷயத்தில் மட்டும் கோட்டை விட்டு விட்டது. நானிருந்த வாக்குச்சாவடியிலும் அனைவருக்குமான உணவை கட்சிக்காரர்கள்தான் கொண்டு வந்து கொடுத்தார்கள். அதனுடைய விளைவு என்னவென்றால் மாலை நான்கு மணிக்கு மெதுவாக, ஆளுக்கு பத்து வோட்டுக்கள் போடலாமே என்று ஆரம்பித்தார்.  தேர்தல் அலுவலர்கள் அப்படியே நெளிந்தார்கள். ஒருவர் மட்டும் அப்சர்வர் சார் இருக்கார், சென்ட்ரல் கவர்ன்மென்ட் என்றார். வேண்டுமானால் போட்டுக்கொள்ளுங்கள், நான் என் அறிக்கையில் எழுதி விடுவேன், என்ன இந்த சாவடியில் மட்டும் மறுவாக்குப்பதிவு நடக்கும் என்று சிரித்துக் கொண்டே சொன்னதிற்குப் பிறகு அப்படியே அடங்கிப் போய்விட்டது. 

ஆறே கால் மணிக்கெல்லாம் பெட்டியை எடுக்க வந்து விட்டார்கள். ஏழு மணிக்கெல்லாம் சடங்குகள் முடிந்து பெட்டிகள் லாரிக்கு போய்விட்டது. தேர்தல் அலுவலர்களுக்கேல்லாம் சுடசுட அங்கேயே பணம் கொடுத்து விட்டு பை பை என்று சொல்லி அனுப்பி விட்டார்கள். உங்களுக்கெல்லாம்  கொடுக்கச்சொல்லி எங்களுக்கு உத்தரவு இல்லை 
என்று சொல்லி லாரியை கிளப்பிக் கொண்டு பெட்டியோடு போயி விட்டார்கள். 

வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு நான் வரும்போது  ஏழரை மணி. மைக்ரோ அப்சர்வர் அறிக்கையை வாங்க யாரும் தயாராக இல்லை. தொகுதி தேர்தல் அதிகாரிக்கு தொலைபேசி செய்ய அவருக்கு கீழே பணியாற்றும் யாருக்கும் தைரியமில்லை. நான் தொலைபேசி செய்த போது பதினைந்து நிமிடங்களில் வந்து விடுவேன். காத்திருங்கள் என்றார். சரியாக எட்டரை மணிக்கு வந்து சேர்ந்தார். Indian Punctuality.
இதற்குள்ளாக பல மைக்ரோ அப்சர்வர்களும் அங்கே வந்து சேர்ந்திருந்தார்கள். 

தேர்தலுக்கு முன்பாக இவர்கள் அறிக்கைக்கான படிவம் எதுவும் அளிக்கவில்லை. கொடுத்த ஒரு புத்தகத்தில் மாதிரி படிவம் ஒன்று 
இருந்தது. அதை நாங்கள் தட்டச்சு செய்து படிவம் தயார் செய்து அதிலே 
அறிக்கை தயார் செய்திருந்தோம். தேர்தல் அதிகாரி அந்த சமயத்தில் ஒரு படிவம் தயார் செய்து அதை நிரப்புங்கள் என்று சொன்னார். வாங்கிப் பார்த்தால் அதே கேள்விகள்தான். படிவத்தின் வடிவம் மட்டும்தான் வேறு. இதிலே எழுதிக் கொடுங்கள் என்ற போது   எங்களுக்கு வேறு பிழைப்பில்லையா என்று   நாம் கோபமாக மறுத்து விட்டேன்.

எங்களுக்கு எப்போது பணம் தருவீர்கள்  என்று எல்லோரும் கேட்டார்கள். எனக்கு எதுவும் தெரியாது என்று கைவிரித்ததும்  பலரும் பொங்கி எழுந்து விட்டார்கள். ஏப்ரல் முதல் தேதி முதல் பட்ட அவஸ்தை அப்படியே வெடித்தது. தினசரி லட்சக்கணக்கான ரூபாயோடு புழ்ல்கிற வங்கி ஊழியர்களை என்ன பிச்சைக்காரர் என்று நினைக்கிறாயா என ஒருவர் கேட்க,  நீங்க வங்கி ஊழியருனா ரொம்ப ஒசத்தியா என்று மாநில அரசு ஊழியர் சண்டைக்கு வர இதற்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை என்பது போல தொகுதி தேர்தல் அதிகாரி ஏதேதோ தாள்களில் முகத்தை புதைத்துக் கொண்டிருந்தார்.  

மைக்ரோ அப்சர்வர் போட வேண்டும் என்று மத்திய தேர்தல் ஆணையம்தானே சொன்னது, அவர்களே பணம் தருவார்கள் என்று ஒருவர் நக்கல் செய்ய, நிலைமை மேலும் சூடானது. அதன் பின்பு எங்கெங்கோ  தேர்தல் அதிகாரி யார் யாருக்கோ போன் செய்தார். அது என்னவோ தெரியல, யாருமே போன எடுக்கல. பணம் குடுக்க எங்களுக்கு  அதிகாரம் இல்லை, தாலுகா அலுவலகத்திற்குத்தான் உண்டு என்று சொல்லி சமாதானம் செய்யப்பார்த்தார். தாசில்தாரே அங்கே வர அவர் யாருக்கோ போன் போட்டு உடனே பணத்தோடு வா என்று உத்தரவிட்டார். இன்னும் ஐந்து நிமிடங்கள் காத்திருங்கள் என்றார். தேர்தல் அலுவலர்களுக்கு மட்டும் வாக்குச்சாவடியிலேயே பணம் தர முடிந்த நீங்கள் மைக்ரோ அப்சர்வர்களை மட்டும் ஏன் அலைக்கழிக்கின்றீர்கள் என்ற கேள்விக்கு மட்டும் பதில் கிடைக்கவே இல்லை.

அரை மணி நேரம் ஆனா போதும் யாரும் வரவில்லை. இதற்கு மேலும் காத்திருப்பது வீண் என்று கருதி, ஒன்பதரை மணிக்கு புறப்பட்டேன். இரண்டு நாட்கள் கழித்து தாலுகா அலுவலகத்திற்குப் போய் பணம் வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள். போனவுடன் கொடுத்து விட்டார்கள். 

வாக்கு எண்ணிக்கை மையத்திலிருந்து புறப்படும் முன்பாக தேர்தல் 
அதிகாரியிடம் கீழ் வருமாறு கூறினேன். 

" வாக்குப்பதிவிற்கும்  எங்களைக் கூப்பிடுவீங்க இல்ல, கலெக்டர் கூட்டம் நடத்துவார் இல்ல, அன்னிக்கு வச்சுக்கிறோம் எங்க கச்சேரிய" 

ஆம் கச்சேரி காத்திருக்கின்றது. 
 
பின் குறிப்பு : வாக்கு எண்ணிக்கைக்கு எல்.ஐ.சி  ஊழியர்கள் யாரையும் அழைக்கவில்லை. ஆகவே கச்சேரி நிகழ்த்தும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.