மன்னிக்கவும். இந்த பதிவும் சொந்த அனுபவம், வசந்த அனுபவம் மற்றும் நொந்த அனுபவம்.
16.04.1986 அன்று பயிற்சி உதவியாளராக எல்.ஐ.சி யில் இணைந்தேன். 15 நாள் பயிற்சி வகுப்பு சென்னையில் நடந்து 30.04.1986 அன்று நெய்வேலி கிளையில் போய் வேலை பார் என்று சொல்லி அனுப்பி விட்டார்கள்.
02.05.1986 அன்று பதற்றத்தோடு நெய்வேலி கிளை அலுவலகத்திற்குள் காலடி எடுத்து வைத்தேன்.
அன்று நாங்கள் ஒன்பது பேர் நெய்வேலியில் பணியில் இணைந்தோம். ஆனந்தன், பாஸ்கரன், ஜவஹர்,நரசிம்மன், ராமன், செல்வராஜ் என்று ஆறு ஆண் ஊழியர்களும் சித்ரா, நீலாயதாட்சி,உஷாராணி என்று மூன்று பெண் ஊழியர்களும் சேர்ந்தோம்.
ஒன்பது பேர் என்பதால் எங்களை நவ ரத்தினங்கள் என்று சொன்னவர்களும் உண்டு. நவக் கிரகங்கள் என்று கலாய்த்தோரும் உண்டு.
அனைத்து ஊழியர்களோடும் அறிமுகம், கிளை பற்றிய விபரங்கள் பகிர்தல், தற்காலிகமாக என்ன பணி செய்வது என்று காலைப் பொழுது முடிந்தது. மதியத்திலிருந்தே வேலை தொடங்கி விட்டது. லெட்ஜர் போஸ்டிங் என்ற வேலைதான் முதலில் கொடுக்கப்பட்டது. பாலிசிதாரர் பிரிமியம் செலுத்திய ரசீதை அவருடைய லெட்ஜர் ஷீட்டில் குறிப்பது. கொஞ்சம் அலுப்பூட்டும் வேலைதான். பெரிய பெரிய லெட்ஜர்களை எடுப்பதில் கொஞ்சம் கை வலி கூட வரும். பிறகு நிரந்தரமாக அக்கவுண்ட்ஸ் பிரிவு தரப்பட்டது. ஐந்தாண்டுகள் அங்கேயேதான் இருந்தேன்.
மதிய வேளையில் புதிதாக சேர்ந்த ஆண் தோழர்களை அன்றைய முன்னணி சங்கப் பொறுப்பாளரும் பின்னாளில் எங்கள் கோட்டத்தின் முதுநிலை கோட்ட மேலாளருமான தோழர் சுப்பராயன் அருகில் உள்ள டீக்கடைக்கு அழைத்துச் சென்று டீ வாங்கிக் கொடுத்து அனைவரையும் இயல்பாக பழக வைத்தார்.
02.05.1986 அன்று நெய்வேலி அலுவலகத்திற்கு சென்ற போது விரைவில் சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றி பெற்றோ அல்லது எல்.ஐ.சி முதல் நிலை அதிகாரிக்கான நேரடித் தேர்வில் வெற்றி பெற்றோ இந்த அலுவலகத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று நினைத்துக் கொண்டுதான் உள்ளே நுழைந்தேன்.
சங்கம் எனக்கு மாற்றுப் பாதையை காண்பித்தது. மனதிற்கு மிகவும் பிடித்த பாதையாகவும் அமைந்திருந்தது. நெய்வேலி கிளையில் கிடைத்த அனுபவங்கள் பின்னாளில் கோட்டச்சங்கப் பணிகளை செய்வதற்கான அடித்தளமாக அமைந்திருந்தது. வாழ்வின் வசந்த காலத்திற்கான துவக்கப் பள்ளி 02.05.1986.
ஆனால்
02.05.2025????
முதல் நாள் மே தினம். அன்றைக்கு மே தினப் பொதுக்கூட்டத்தில் குறைவான எண்ணிக்கையில்தான் தோழர்கள் பேசினார்கள். நானும் அவர்களில் ஒருவன். எனக்கே என் உரை நிறைவாக இருந்தது. பல தோழர்கள் பாராட்டினார்கள். இரு சக்கர வாகனத்தை கிளப்பும் போது ஒரு போலீஸ்காரர் "நல்லா பேசினீங்க சார்" என்று கை கொடுத்தார். மறுநாள் காத்திருக்கும் அபாயம் தெரியாமல் வீடு வந்து சேர்ந்தேன்.
மறு நாள் அலுவலகம் செல்லும் வழியில் எப்போதும் போல நிதானமாக சாலையின் ஓரத்தில்தான் இரு சக்கரஃ வாகனத்தில் சென்று கொண்டிருந்தேன். அலுவலகத்திற்கு ஒரு கிலோ மீட்டர் முன்பாக பின்னே வந்து கொண்டிருந்த ஒரு வேன் மோதியது. சற்று சுதாரிப்பதற்கு முன்பாக இரண்டாவது முறையாகவும் மோத ஸ்கூட்டர் ஒரு புறம் கீழே விழ, நான் உருண்டு கொண்டும், சருக்கிக் கொண்டும் செல்கிறேன். நம் கதை இத்தோடு முடிந்தது என்று அந்த நொடியில் நினைத்தேன்.
இடது பக்கத்தில் உருண்டதற்கு பதிலாக வலது பக்கம் உருண்டிருந்தால் நிஜமாகவே கதை முடிந்திருக்கும். வாழ்க்கைக்கும் சரி, சாலைக்கும் சரி இடதே பாதுகாப்பு.
என் பின்னாடியே வந்து கொண்டிருந்த கோட்ட அலுவலகக் கிளைச்சங்கத் தலைவர் தோழர் ஜெயகாந்தம் மற்ற தோழர்களுக்கு தகவல் சொல்ல அப்படியே ஒரு காரில் தூக்கி வைத்து நறுவி மருத்துவமனையில் சேர்த்தார்கள். பேண்டும் சட்டையும் கிழிந்து போயிருந்தது. முழங்காலில் ரத்தம் கொட்டிக் கொண்டிருந்தது. இடுப்பிலும் தோளிலும் தாங்க முடியாத வலி.
மருத்துவமனையில் ஸ்ட்ரெச்சரில் மாற்றியது, பின்பு ஸ்கேன் செய்ய, எக்ஸ்ரே எடுக்க என ஸ்ட்ரெச்சரிலிருந்து மேஜைக்கு மாற்றி பின்பு ஸ்டெரெச்சருக்கு மாற்றியது எல்லாம் மரண அவஸ்தையாக இருந்தது. இடுப்பு எலும்பு முறிவு, காலர் எலும்பு நொறுங்கி விட்டது என்பது சோதனைகளின் முடிவு. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் முடிவு செய்தார்கள். அறுவை சிகிச்சை காரணமாக கதீட்டர் வைத்து சிறுநீர் பை வைக்க முடிவு செய்தார்கள். கதீட்டர் நுழைப்பதில் பிரச்சினை இருந்ததால் ஒரு மைனர் அறுவை சிகிச்சையும் நடந்தது.
ஒரு வழியாக மறுநாள் 03.05.2025 அன்று அறுவை சிகிச்சை நடந்தது. காலர் எலும்பிற்கு பதிலாக ப்ளேட் வைக்கப்பட்டது. இடுப்பு எலும்புகளில் மூன்று ஸ்க்ரூ போட்டு முடக்கப்பட்டது. ஆறு நாட்களிலேயே டிஸ்சார்ஜ் செய்து விட்டார்கள். இந்த காலகட்டத்தில் மருத்துவமனைக்கு வந்து பார்த்த ஏராளமான தோழர்கள் நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று நம்பிக்கை அளித்தார்கள்.
டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்கு வருவதற்கு முன்பே மருத்துவமனைக்கான அமைப்பை என் மனைவி வீட்டிலேயே செய்து வைத்திருந்தார். ஒரு செவிலியரையும் ஏற்பாடு செய்திருந்தார். என் மனைவியும் மகனும் அளித்த பராமரிப்பின் காரணமாகவே நாற்பத்தைந்து நாட்களில் வாக்கர் துணையுடன் அலுவலகம் செல்ல முடிந்தது. பணி ஓய்வு நாளன்று ஸ்ட்ரெச்சரிலோ அல்லது வீல் சேரிலோ அலுவலகம் செல்ல வேண்டியிருக்குமோ என்று அச்சப்பட்டதற்கு மாறாக வாக்கர் துணையுடன் நடந்து செல்ல முடிந்தது.
ஆனால் பாதிப்புக்கள் இன்னும் தொடர்கிறது. காலர் போன் வைத்ததால் தசை இறுகிப் போய் அவ்வப்போது வலி எட்டிப்பார்க்கிறது. அதன் காரணமாக இரு சக்கர வாகனம் ஓட்டக்கூடாது என்றும் இடுப்பில் ஸ்க்ரூக்கள் இருப்பதால் பின்னேயும் உட்காரக்கூடாது என்றி மருத்துவர் சொல்லி விட்டார். அதனால் 02.05.2025 க்குப் பிறகு வேன் ஓட்டுனர் முனீஷ்காந்த் புண்ணியத்தில் இரு சக்கர வாகனத்தைப் பற்றி நினைக்கவே முடியவில்லை.
ஆனாலும் அவசியமான பணிகளுக்கு ஆட்டோவில் செல்கிறேன். நேற்று கூட மே தினக் கொடியேற்று விழாவிற்கும் எங்கள் அலுவலகத்திலிருந்து பொதுக்கூட்டத்திற்கும் ஆட்டோவில்தான் சென்றேன். கூட்டத்தில் பேசி முடித்து விட்டு பின் அமர்ந்திருந்த போது வந்த நினைவலைகள் இங்கே பதிவாக.
விபத்து இரு சக்கர வாகனம் ஓட்டுவதை மட்டும்தான் முடக்கியது. மற்ற பணிகளையோ சிந்தனைகளோ அல்ல. எப்போதும் போல் இயங்குவேன் என்ற நம்பிக்கையோடு பயணிக்கிறேன்.
பிகு 1 : மேலே உள்ள படம் 01.11.2025 அன்று நெய்வேலியில் நடைபெற்ற மகளிர் மாநாட்டில் கலந்து கொள்ள சென்ற போது நெய்வேலி அலுவலக வாயிலில் வரையப்பட்டிருந்த கோலம்.
பிகு 2 : நேற்று இரவு தட்டச்சு செய்யப்பட்ட பதிவு. எங்கள் கோட்ட மகளிர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளராக இருக்கிற கோட்டச்சங்க இணைச்செயலாளராக, துணைத்தலைவராக செயல்பட்ட தோழர் எஸ்.ஜெயஸ்ரீ அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்க கடலூர் செல்லும் வழியில் பயணத்தின் நடுவே பகிர்ந்து கொள்கிறேன்.
பயணம் தொடரும்.


No comments:
Post a Comment