2009 மக்களவைத் தேர்தலின் போது வாக்கு எண்ணிக்கையில் மைக்ரோ அப்சர்வராக பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அந்த அனுபவத்தைப் பற்றி, வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்ய வாய்ப்பு இருப்பது பற்றி மார்ச் 2011 ல் பதிவு எழுதினேன். கூடுதல் விபரங்களோடு அந்த பதிவை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.
வாக்கு எண்ணிக்கைக்கு மைக்ரோ அப்சர்வர்களாக எல்.ஐ.சி ஊழியர்கள் வர வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரகம் கேட்டுக் கொண்ட அடிப்படையில் நிர்வாகம் சங்கத்தோடு பேசியது. விருப்பமுள்ளவர்கள் செல்லட்டும். மற்றவர்களை நிர்ப்பந்திக்கக் கூடாது என்று நாங்கள் சொன்னதை நிர்வாகமும் ஒப்புக் கொண்டது. கணிசமான ஊழியர்கள் மைக்ரோ அப்சர்வர் பணியாற்ற ஒப்புக் கொண்டனர். ஒரு ஐ.டி கார்ட் கொடுத்தார்கள். அதில் போட்டோ இருந்ததா என்று நினைவில்லை. வேலூர் தந்தை பெரியார் பாலிடெக்னிக் கல்லூரிதான் வாக்கு எண்ணும் மையம்.
காலை ஆறு முப்பதிற்கெல்லாம் அங்கே சென்றாகி விட்டது. அலைபேசிக்கு அனுமதி கிடையாது என்பதால் வாகனத்தின் பெட்டியில் வைத்து விட்டு வந்தோம். நல்ல வேளை தொலைந்து போகவில்லை. சுமாரான பொங்கலும் அதை விட சுமாரான சட்னியும் கொடுத்தார்கள். இரும்புக் கோட்டைக்குள்ளே நுழைந்தோம்.
இனி பழைய பதிவு.
வாக்கு எண்ணிக்கையில் மோசடி சாத்தியமே
மின் அணு இயந்திரத்தில் வாக்கு பதிவு கூடாது என்ற பல்லவியை தமிழக அரசியல் கட்சிகள் இன்னும் பாடத்தொடங்கவில்லை. வாக்குப்பதிவில் மோசடி செய்வது சாத்தியமா என்று தெரியாது. ஆனால் வாக்கு எண்ணிக்கையில் மோசடி செய்வது என்பதற்கான சாத்தியங்கள் நிச்சயமாகவே உள்ளது. எப்படி என்று பார்ப்போம்.
கடந்த நாடாளுமன்றத்தேர்தலில் நுண் பார்வையாளராக (Micro Observer) பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மட்டும்அனுமதிக்கப்பட்ட இரும்புக்கோட்டையின் கதவுகள் திறக்கப்பட்ட சந்தர்ப்பத்தை ஒரு அனுபவத்திற்காக பயன்படுத்திக்கொண்டேன். அந்த அனுபவத்தின் அடிப்படையில் எழுதுகின்ற பதிவு இது.
வாக்கு எண்ணும் இடத்தில் பதினைந்து மேஜைகள், ஒவ்வொரு மேஜையிலும் மூன்று இருக்கைகள். வாக்கு எண்ணும் அலுவலர், ஒரு உதவியாளர், ஒரு நுண் பார்வையாளர் என மூவர். அந்த மேஜைகள் ஒரு ப வரிசையில் அமைக்கப்பட்டிருக்கும். மேஜைகளுக்கு வெளியே சவுக்குக் கம்புகள், கம்பிகளால் ஆனா தடுப்புக்கள். தடுப்புக்களுக்கு வெளியே வேட்பாளர்களின் முகவர்கள் நின்று கொண்டிருப்பார்கள்.
ஒவ்வொரு வாக்கு எண்ணும் இயந்திரமாக ஒவ்வொரு மேசைக்கும் கொண்டு வரப்படும். கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வாக்குப் பதிவு மட்டுமே இயந்திரமயமாக்கபபட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அல்ல. ஒவ்வொரு மேசைக்கும் வேட்பாளர்கள் பெயர் அடங்கிய பட்டியல் தரப்பட்டிருக்கும். வாக்குப்பதிவு இயந்திரத்தில் என்ன வரிசையில் பெயர்கள் இருந்தனவோ, அதே வரிசையில்தான் பட்டியலும் அமைந்திருக்கும்.
வாக்குப்பதிவு இயந்திரம் மேஜைக்கு வந்ததும், சீல் நீக்கி, ஒவ்வொரு வேட்பாளருக்கும் எவ்வளவு வாக்கு பதிவானது என்பதை அதற்குரிய பட்டனை அழுத்தி தெரிந்து கொள்ள வேண்டும். அதனை கொடுக்கப்பட்ட பட்டியலில் குறித்துக் கொள்ள வேண்டும். வாக்கு எவ்வளவு என்ற தகவலை இயந்திரத்தை பார்ப்பதன் மூலம் முகவர்களும் அறிந்து கொள்ள முடியும். ஆனால் அதற்கான அவகாசம் என்பது மிக மிக குறைவு. திருப்பதி ஜருகண்டி போல, மேஜிக் நிபுணர் சாகசம் போல வேகம் வேகமாகத்தான் காரியங்கள் நடக்கும். நுண் பார்வையாளரும்
தனியாக ஒரு பட்டியலில் வாக்கு
எண்ணிக்கை பற்றி தனியாக பதிவு
செய்து பார்வையாளரிடம் அளிக்க வேண்டும். ஜருகண்டி வேகத்தில் சில
சமயங்களில் இது சாத்தியமில்லாமல்
போய் தேர்தல் அலுவலரின்
விபரத்தை அப்படியே நகலெடுத்து அளிப்பது என்பதும் நடந்தது.
பட்டியலில் குறித்துக்கொள்வது என்பதில்தான் மோசடிக்கான சாத்தியம் அடங்கியுள்ளது. கட்சிகளின் முகவர்களோ அல்லது நுண் பார்வையாளர்களோ விழிப்பாக இல்லையென்றால் ஒரு வேட்பாளர் வாங்கிய வாக்குகளை வேறு வேட்பாளரின் பெயரில் எழுதி விடுவது மிகவும் சுலபம். மின்னல் வேகத்தில் நடைபெறும் விஷயம் இது. முகவரோ அல்லது நுண் பார்வையாளரோ விழிப்பாக இருந்தால் இதை தவிர்க்க முடியும். மேற்பார்வையிடும் அதிகாரிகளுக்கு இது பற்றி தெரிய வராது. அவர்களைப் பொறுத்தவரை அந்த இயந்திரத்தில் பதிவான வாக்குகளும் அனைத்து வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின் கூட்டுத்தொகையும் ஒன்றாக இருக்க வேண்டும். அவ்வளவுதான்.
வாக்கு எண்ணிக்கைக்கு இடையிடையே வேட்பாளர்களும் வருவார்கள். அவர்களைப் பார்த்ததும் அந்தந்த கட்சி முகவர்கள் விழிப்போடு இருப்பது போல நடிப்பார்கள். ஒரு வேட்பாளர், கூட்டணிக்கட்சித் தலைவரோடு கைகளை பிணைத்துக் கொண்டு வந்த போது பக்கத்து மேஜை அலுவலர்கள் என்ன இவனுங்க லவ்வர்ஸ் மாதிரி வராங்க என்று கமெண்ட் அடித்த அசிங்கமும் நடந்தது. ஆனால் பாவம் அவர் தோற்று விட்டார். எத்தனை பணத்தை இழந்தாரோ?
ஒருவர் பெறும் வாக்கை மாற்றி எழுதுவது என்பது நான் அமர்ந்திருந்த மேஜையிலேயே நடந்தது. முதல் சுற்று எல்லாம் சரியாகவே நடந்தது. அடுத்த சுற்றில் பதிவான வாக்குகள் எவ்வளவு என்ற எண்ணிக்கையை அதற்குரிய இடத்தில் எழுதாமல் அதற்கடுத்த இடத்தில் இருந்த A கட்சி வேட்பாளர் இடத்தில் எழுதினர். நான் சுட்டிக்காட்டியதும், சாரி என்று சொல்லி திருத்திக்கொண்டார். நான்காவது சுற்றில் B கட்சி வேட்பாளர் பெற்ற வாக்குகளை அவரிடத்தில் எழுதாமல் வேறு வேட்பாளரிடம் எழுதினர். இம்முறை சற்று கடுமையாகவே சொன்னதும் திருத்திக்கொண்டார். இதில் என்ன கொடுமை என்றால் அந்த சுற்றில் A கட்சி 300 வாக்கு, B 700 வாக்கு வேறு கட்சி 100 வாக்கு பெற்றிருந்தார்கள் என்று வைத்துக்கொள்வோம். 400 வாக்குகள் அந்தப் பெட்டி மூலமாக பெற்றிருக்க வேண்டியவருக்கு 100 வாக்கு மட்டுமே கிடைக்கும். தன் முயற்சியில் சற்றும் தளராத விக்கிரமாதித்தன் ஏழாவது சுற்றில் மீண்டும் தன் வேலையைக் காண்பிக்க வேதாளம் கடுமையாகவே மிரட்ட வேண்டியிருந்தது. அப்சர்வரிடம் சொல்வேன் என்றதுதான் அந்த மிரட்டல். அதன் பின்பு சுமுகமாகவே நடந்து முடிந்தது. இந்த வேலைகளையெல்லாம் எந்த கட்சியின் முகவரும் உன்னிப்பாக கவனிக்கவேயில்லை. எங்கள் மேஜைக்கு வாய்ந்த அடிமைகள் அப்படி!
இப்படி எல்லா மேசைகளிலும் செய்வதற்கான வாய்ப்பு உண்டா என்றால் நிச்சயம் கிடையாது. ஆனால் மொத்தமுள்ள 15 மேசைகளில் ஏதேனும் மூன்று மேசைகளில் மட்டும் செய்கின்றார்கள் என்று வைத்துக்கொள்வோம். மொத்தமுள்ள 15 சுற்றுக்களில் மூன்றே மூன்று சுற்றுக்களில் செய்கின்றனர் என்று கூட வைத்துக்கொள்ளலாம். மோசடியே கிடைக்கிற வாக்குகள் வெறும் இருநூறு என்று மட்டுமே வைத்துக்கொண்டால் என்ன ஆகும் என்று பார்ப்போம்.
3 *3 *200 = 1800 .
வாக்கு எண்ணிக்கை முடிந்த கையோடு ஐநூறு ரூபாய் பணமும் கொடுத்தார்கள். முடிவை அறிவித்ததும் வீட்டிற்கு போகச் சொல்லி விட்டார்கள். ஆறு முப்பதிற்கு உள்ளே நுழைந்தவர்கள் 12.30 க்கு வெளியே வந்து விட்டோம். வெற்றி பெற்ற கட்சியினர் வெடித்த பட்டாசுகள் மத்தியில் சாலையில் செல்வதுதான் சிரமமாக இருந்தது.

No comments:
Post a Comment