Tuesday, July 12, 2011

இவன் அல்லவோ கதாநாயகன்!

சில நாட்களுக்கு முன் தமிழகத்தில் பள்ளி இறுதி வகுப்புத் தேர்வு (SSLC) முடிவுகள் பரபரப்பாக வெளியாகிக்கொண்டிருந்த நேரம். தேர்வு எழுதிய மாணவர்கள் எல்லாம் தங்களது மதிப்பெண்களை அறிந்துகொள்ள இணையத்தைப் பார்த்துக் கொண்டிருந்த போது, தன் தாயார் சண்முகத்துடன் முதல் நாள் மூட்டிவைத்த கரிமூட்டதில் இருந்து கரி அள்ளிக்கொண்டிருந்தான் மாரி. அவனும் இந்த முறை SSLC தேர்வு எழுதியவன்தான். ஆனால் முடிவுகளைத் தெரிந்துகொள்ள அவன் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.
“மாரி… யாரோ உன்னத் தேடி வந்திருக்காங்க…” என்று அவனுடைய மூன்றாவது அக்கா பானுப்ரியா சொல்ல, அள்ளிப்போட்டுக்கொண்டிருந்த கரியை அப்படியே வைத்துவிட்டு வந்தவனை, அவனுடைய பள்ளி நண்பர்கள் வாரி அணைத்துத் தூக்கிக்கொண்டனர். “மாரி! நீ 490 மார்க் எடுத்திருக்கடா! District First டா…” என்று கூறி அவனைத் தூக்கிக் கொண்டாடியபோது, எதுவும் புரியாவிட்டாலும் தன் மகன் ஏதோ சாதித்துவிட்டான் என்று உணர்ந்து கண்கள் கலங்கி நின்றார் மாரியின் தாய் சண்முகம்.
மாரி என்கின்ற மாரிச்செல்வம், இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட மூக்கையூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவன். அந்த மாவட்டத்து மக்கள் பலருமே கூடக் கேள்விப்பட்டிருக்காத ஒரு குக்கிராமத்தில் இருந்து படித்துக்கொண்டே, அந்த மாவட்டத்தின் முதல் மாணவனாக மதிப்பெண் பெற்ற அவனை, அடுத்த நாள் வந்த பத்திரிகைகள் அனைத்தும் மாவட்டச் செய்திகளில் பட்டியல் இட்டன. ஆனால் அவன் பரீட்சை எழுதியபோது அவனது குடும்பச் சூழ்நிலையை அறிந்தவர்கள் கொஞ்சம் வியந்துதான் போனார்கள். சோதனை மேல் சோதனையைத் தாங்கிக்கொண்டு, ஓர் ஏழைச் சிறுவனால் இவ்வளவு மதிப்பெண்கள் வாங்கமுடியுமா என தங்களுக்குள் கேள்வி கேட்டுக்கொண்டவர்கள் பலர்.
PAD நிறுவனத்தில் Christian Children Fund of Canada (CCFC) எனும் கிராமப்புறக் குழந்தைகளுக்கான உதவித்திட்டத்தில் உதவி பெற்றுவந்த மாரி, +1 சேர நிறுவன உதவி கேட்டு வந்தபோதுதான் PAD பணியாளர்களுக்கே, தேர்வெழுதிய சமயத்தில் மாரி சந்தித்த துயரங்கள் தெரியவந்தது.
மூக்கையூர் கிராமம்தான் மாரியின் சொந்த ஊர். எட்டாவது வரை அந்த ஊரில் உள்ள புனித யாக்கோபு நடுநிலைப் பள்ளியில் படிப்பை முடித்த மாரி, மேற்கொண்டு படிக்க அங்கிருந்து வேறு பள்ளிக்குச் செல்லவேண்டியிருந்ததால்,அதிலுள்ள கஷ்டங்களை உணர்ந்தவனாய், “அம்மா, நான் மேல படிக்கல. அப்பா கூடத் துணைக்குக் கடலுக்குப் போறேம்மா” என்று கூறினான். அதற்கு மேல் அவனைப் பேசவிடாமல் தடுத்த மாரியின் அப்பா முனியசாமி, “வேணாம் மாரி, நீ போய்ப் படி. அப்பா எல்லாத்தையும் பார்த்துகிறேன். நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் PAD-ல உனக்கு உதவி வாங்கித் தாராங்க… நல்லாப் படிக்கணும்யா. இப்படியெல்லாம் யோசிக்கக்கூடாது. உங்கக்கா பார்வதி நல்லாப் படிச்சாலும், எட்டாவதுக்கு மேல படிக்க உள்ளூர்ல ஸ்கூல் இல்லாததால படிக்க முடியாமப் போச்சுது. நீயாவது உன்னோட அக்கா வீட்டில போய் இருந்துகொண்டு மேல படிக்கப் பாரு. எப்படியாவது நம்ம வீட்டில நீயாவது படிச்சு நல்லாப் பிழைக்கணும். இதுதான் அப்பாவோட ஆசை” என்றார். அப்பாவின் வார்த்தைக்கு மறுப்பு ஏதும் கூறாமல் அவன் அக்காவின் வீடு இருக்கும் இராமநாதபுரம் மாவட்டம் முத்துப்பேட்டைக்கு அருகில் உள்ள வேலாயுதபுரம் என்னும் கிராமத்துக்குச் சென்று, அங்கிருந்த புனித சூசையப்பர் மேல்நிலைப் பள்ளியில் தனது படிப்பைத் தொடர்ந்தான் மாரி.
மாரியின் அப்பா முனியசாமி ஒரு கடல் கூலித் தொழிலாளி. யாரேனும் கடலுக்குப் போவதற்கு மேலதிகமாக ஆட்கள் தேவைப்பட்டால் முனியசாமியும் போவார். அது இல்லாத நாட்களில் சிறு வலையை எடுத்துக்கொண்டு கரையோர மீன்பிடித் தொழில் செய்வார். அவருக்கு மாரியைப் பற்றிப் பல கனவுகள் இருந்தன. தனது குடும்பத்தில் ஒருவராவது படித்து முன்னேறி வரவேண்டும் என்று அவர் கனவு கண்டார்.
ஐந்து பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைககளைக் கொண்ட பெரிய குடும்பம் அவருடையது. கடின உழைப்பும் ஒழுக்கமான வாழ்க்கையுமே அதீத வறுமை அந்தக் குடும்பத்தை அண்டவிடாமல் காத்தது. நான்கு பெண்களுக்கும், ஒரு மகனுக்கும் திருமணம் முடித்துவிட்டார். எஞ்சியிருப்பது மாரியும், இன்னொரு அக்கா பானுப்ரியாவும்தான். மாரியைப் படிக்க வைக்கவேண்டும், சொந்தமாக ஒரு வள்ளம் வாங்கவேண்டும் என்று தன்னுடைய கனவுகளை அடைய இரவும் பகலுமாயக உழைத்துக்கொண்டிருந்த முனியசாமிக்கு மூளையில் கட்டி வந்து பல வருடங்களாக அவதிப்பட்டு வந்தார்.
இந்த நிலையில் முத்துப்பேட்டையில் அக்கா வீட்டில் படித்துக்கொண்டிருந்த மாரி படிப்பில் கவனம் செலுத்தியதோடு விடுமுறை நாட்களில் அவன் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலைக்கும், மாமாவுடன் (அக்காவின் கணவர்) கடல் தொழிலுக்கும் சென்று குடும்ப பாரத்தையும் விரும்பிச் சுமந்தான். “மாரி, இப்படிப் படிச்சா நல்ல மார்க் எடுக்கமாட்ட! இதெல்லாம் விட்டுட்டு ஒழுங்காப் படிக்க பாரு” என்று அவனுடைய அக்கா முருகேஸ்வரி அவனைக் கட்டுப்படுத்தி வந்தார். முருகேஸ்வரி மாரியின் மூத்த அக்கா. அவருக்கும் மூன்று பெண் குழந்தைகள், ஓர் ஆண் குழந்தை. மாரியையும் தனது மகன் போலவே வளர்த்து வந்தார். வீட்டுக்கு மூத்த பெண் என்பதால் தன் தந்தை வீட்டின் அனைத்து நலன்களிலும் பங்கெடுத்துவந்தார். முருகேஸ்வரியின் கணவர் முனியனும் பரந்த மனம் படைத்தவர். இருவரும் சேர்ந்துதான் முருகேஸ்வரியின் சகோதரிகளின் திருமணங்களை முடித்து வைத்தனர்.
தேர்வுகள் எழுத இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் மாரியின் தந்தை மூளையில் இருந்த கட்டி காரணமாக, சிகிச்சை ஏதும் பலன் அளிக்காமல் இறந்துபோனார். துவண்டுபோன மாரியை மீண்டும் பள்ளிக்குப் படிக்க அனுப்பப் பெரும் பாடு பட்டார் தாய் சண்முகம். அதன்பின் குடும்பச் சுமை முழுதும் தாய் சண்முகம் தலையில் விழ, அவரும் மகள் வீட்டில் இருந்து விறகு வெட்டச் செல்வது, கூலி வேலைக்குச் செல்வது, கரிமூட்டம் எனப் பல வேலைகளைப் பார்க்கத் தொடங்கினார். வறுமையின் மத்தியில் தன் படிப்பைத் தொடர்ந்த மாரி தேர்வு எழுதத் தயாராகிக்கொண்டிருந்தான்.
தேர்வு நாளும் வந்தது. முதல் இரண்டு தேர்வுகளையும் எழுதி முடித்து வந்த மாரியிடம், “பரீட்சை நல்லா எழுதிருக்கியா மாரி?” என அக்கா கேட்டார். “ஆமாக்கா. இன்னிக்கு English II பேப்பர். இனிதான் மேத்ஸ் பேப்பர் வரும். அதை நாளை மறுநாள் எழுதணும்” என்று பதில் சொல்லிக்கொண்டே அக்காவின் முகத்தைப் பார்த்த மாரிக்கு ஏதோ சரியில்லை என்று பட்டது. “என்னக்கா! என்னாச்சு?” என்று அவன் பதற, “ஒண்ணுமில்ல மாரி, நெஞ்சு கரிச்சிக்கிட்டே இருக்கு. அசதியா இருக்கு. சித்த நேரம் தூங்குனா சரியாயிரும்” என்றார். “சரிக்கா, நீ போய் தூங்குக்கா” என்ற மாரி தானே சோறு போட்டுச் சாப்பிட்டுவிட்டு படிக்கச் சென்றுவிட்டான்.
அன்று இரவு அவன் அக்காவுக்குக் கடுமையான நெஞ்சுவலி. ஏற்கெனவே இருதய அறுவை சிகிச்சை செய்திருந்த முருகேஸ்வரி, ஆஸ்பத்திரிக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே இறந்துவிட கதறி அழுத மாரியை, “நாளைக்குப் பரீட்சை எழுதணும்… நீ நல்லாப் படிக்கணுமென்னுதான் உங்கக்கா ஆசைப்பட்டா” என்று அனைவரும் தேற்றினர். “மாரி, நீ போய் பரீட்சை எழுதிட்டு வா. அதுக்குப் பிறகு இறுதிச் சடங்கு வச்சுக்கலாம்” என அவன் மாமா கூறவும், அவர் வார்த்தைக்குக் கட்டுப்பட்டு, தன்னைத் தாயாக இருந்து பார்த்துக்கொண்ட சகோதரியின் பிணத்தருகே அழுதுகொண்டே படித்த மாரியை நினைத்து இப்போதும் கண்ணீர் வடிக்கிறார் அவன் தாய் சண்முகம்.”என்ன சார் மார்க் எடுத்தேன்.அம்மா மாதிரியிருந்த அக்கா சாவுக்கு அழக்கூட முடியாமல் பரீட்சைக்குப் படித்த பாவி சார்” என்று மாரி உடைந்து அழும் போது, நாமும் சேர்ந்து உடைய வேண்டிவருகின்றது.
அடுத்தநாள் அவன் பரீட்சை எழுதி முடித்துவிட்டு வரும்வரை அவனுடைய உறவினர்கள் காத்திருந்தனர். அவன் வந்ததும், அவனைக் கொண்டு அக்காவின் இறுதிச்சடங்குகளை நடத்தி முடித்தனர். சடங்குகள் அனைத்தும் முடிந்து, அடுத்த இரண்டு பரீட்சைகளையும் கனத்த இதயத்துடன் எழுதி முடித்தான் மாரி. பரீட்சைகள் முடிந்ததும் அம்மாவுடன் சேர்ந்து கரிமூட்டம் அள்ளும் வேலையில் இறங்கிவிட்டான்.
இந்த நிலையில்தான் அவனது தேர்வு முடிவுகள் வெளிவந்ததன.
அவனுடைய ஆசிரியர்கள், சக மாணவர்கள், அந்த ஊர் மக்கள் என் அனைவருக்குமே அவன் தேர்வு எழுதும்போது இருந்த நிலை நன்கு தெரியும். அப்படிப்பட்ட நிலையிலும் அவன் எடுத்த மதிப்பெண்கள் என்ன தெரியுமா? தமிழ் 95, ஆங்கிலம் 98, கணிதம் 100, அறிவியல் 99, சமூக அறிவியல் 98. சாதாரண நிலையில் இருக்கும் மாணவர்கள் இந்த மதிப்பெண்களை எடுக்கும்போதே ஆச்சரியப்படும் நமக்கு மாரியின் நிலையில் இருந்து பார்த்தால் பரிட்சையில் தேறுவோமா என்பதே சந்தேகம். அதிலும் அவனுடைய அக்காவின் இறுதிச் சடங்கன்று கணிதப் பரீட்சை எழுதி 100-க்கு 100 மதிப்பெண் பெற்றிருப்பதை என்னவென்று சொல்வது? மாரியுடன் சேர்ந்து பரீட்சை எழுதிய அவனுடைய அக்கா மகள் நிர்மலாவும் 423 மதிப்பெண்கள் எடுத்து நல்ல முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.
இத்தனை இடர்களுக்கும் மத்தியில் தனது 10-வது வகுப்பை முடித்துவிட்டு +1 சேர இருக்கும் மாரிக்கு இன்னும் பிரச்னைகளும் துன்பங்களும் முடிந்தபாடில்லை. கடந்த சில வருடங்களாக மாரிக்கு ஓயாத தலைவலி. வறுமையும் அடுத்தடுத்து வந்த சோகச் சம்பவங்களும் உளவியல்ரீதியாக மாரியை மிகவும் பாதித்துள்ளது. தாங்கமுடியாத தலைவலியால் அவதியுறும் அவனை உள்ளூர் வைத்தியர்களிடம் காட்டியபோது பிரச்னை ஏதும் இல்லை எனச் சொல்லிவிட்டனர் கோயம்புத்தூரில் ஒரு மருத்துவரை அணுகி விசாரித்தபோது மாரியின் இருதயத்தில் பிரச்னை இருப்பதாகவும் அதைச் சரிசெய்ய சிறிது காலம் தேவை எனவும், அறுவை சிகிச்சை மூலம் அதைச் சரி செய்ய 21 வயதுவரை பொருத்திருக்கவேண்டும் என்றும் கூறியுள்ளனர். சிகிச்சைக்கு உதவ PAD தொண்டு நிறுவனம் உறுதி அளித்துள்ளது. அடுத்து Biology, Maths குரூப்பில் சேர்ந்து படிக்க விரும்பும் மாரி, இன்னும் எந்தப் பள்ளியில் சேர்வது, மேற்கொண்டு படிப்புக்கு என்ன செய்வது என்ற குழப்பத்தில் இருக்கிறான். அத்துடன் அவனுடைய தாய் சண்முகத்துக்கும் உடல்நிலை சரியில்லை. குடும்ப பாரம் முழுவதையும் சுமந்துகொண்டிருக்கும் மாமா முனியன் பற்றிய கவலையும் மாரியை அரிக்கிறது.
இப்படிப் பல இடர்களுக்கு மத்தியிலும், தன் மனவலிகளையும் உடல்வலிகளையும் தாங்கிக்கொண்டு தனது அடுத்த சாதனைக்குத் தயாராகி விட்டான் மாரிச்செல்வம்…
O

Monday, July 11, 2011

இப்படித்தான் நடக்கிறதோ ?



இன்று  எனக்கு  வந்த  மின்னஞ்சல்  இது?




மிகவும்  நன்றாக  படிக்கிற  மாணவர்கள்  பொறியியல், மருத்துவம்
என தொழில்நுட்பப் படிப்புக்களை  படித்து  டாக்டர், இன்ஜினியர்கள்
என  உருவாகின்றனர். 



நன்றாக  படிக்கிற  மாணவர்கள், ஐ.ஏ.எஸ் ,எம்.பி.ஏ என  படித்து
டாக்டர்கள், பொறியாளர்களை  நிர்வாகம்  செய்கின்றனர்.



மிக மிக சுமாராக  படிக்கின்றவர்கள் அரசியல்வாதிகளாகி
இவர்கள்  அனைவரையும்  கட்டுப்படுத்துகின்றனர். 



இந்த  செய்தி  இத்தோடு  முடிந்து போகவில்லை. 



தேர்வுகளில்  தோற்றுப் போனவர்கள்  என்ன ஆகின்றார்கள்?






அவர்கள் கடத்தல், மாபியா  என்றெல்லாம்  சக்தியுள்ளவர்களாக
மாறி  இவர்கள் அத்தனை பேரையும் ஆட்டுவிக்கின்றார்கள்.


இக்கருத்தில்  எனக்கு  உடன்பாடில்லை. அரசியல்வாதிகள்
அறிவற்றவர்கள்  என பொதுமைப்படுத்துவதோ, தேர்வுகளில்
தோல்வியடைபவர்களை  இழிவு படுத்துவதோ  சரியல்ல.







நீங்கள்  என்ன  சொல்கின்றீர்கள்?

Sunday, July 10, 2011

ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள் படிக்க வேண்டாம், பரிதாபத்திற்குரிய ஆசிரியரும் படுபாவி மாணவனும்

முதலில்  கீழே  உள்ள விடைத்தாள்களை படிக்கவும்.
உங்களுக்கு ரத்தக் கொதிப்பு பாதிப்பு இருந்தால் படிக்க வேண்டாம்.











விடை தெரியாமல் ஏதோ எழுதியுள்ளான் என எனக்கு
தோன்றவில்லை. திமிரின் உச்சகட்டத்தில் அளித்துள்ள
பதில்கள். மாணவ  சமுதாயத்தின் மீதான நம்பிக்கையை
தகர்க்கும் இந்த பதர்களை என்ன செய்வது? இந்த
விடைத்தாளை  திருத்திய  அந்த ஆசிரியர்
உண்மையிலேயே பரிதாபத்திற்குரியவர்

Saturday, July 9, 2011

அட . . . . பத்மனாபா!




ஐம்பொன் ரத்தினங்கள்
ஐந்து அறையில்  தங்கக் குவியல்கள்
ஆறாவது. . . திறக்கவேயில்லை...
ஆனாலும்  மதிப்பு லட்சம் கோடி

உணவு, உடல் நிலை, கல்வி
எதற்கும் பயன்படாமலே . .
நூற்றைம்பது வருடங்களாய் ...

யார் இதைக் கொண்டு வந்தது?
யாரிடம் இதை கேட்பது?

எதைக் கொண்டு வந்தாய்
நீ  இழப்பதற்கு -
என்று  உபதேசம் செய்தவனிடமா?

அட பத்மனாபா!


கவிதை :  மதுரை பாரதி

Wednesday, July 6, 2011

திருடர்கள் கையிலே அளிக்கப்பட்ட சாவியாய் சமச்சீர் கல்வி

எது  எதிர்பார்க்கப்பட்டதோ , அது நன்றாகவே நடந்துள்ளது. 
எது நடக்கக்கூடாதோ, அதுவும்  நடந்து  விட்டது. 
இதனை இவண் கண் விடல் - வள்ளுவன் மொழி 
அறிந்தவர்கள், கொலைகாரர்கள்  கையிலேயே 
கொடுவாளை அளித்தார்கள். வணிகம் தழைக்க 
சமச்சீர் கல்விக்கு சமாதி கட்ட துணிந்து விட்டார்கள். 
மெட்ரிக் பள்ளி  அதிபர்களை   குழுவில் போட்டது
புத்திசாலித்தனமாக இருக்கலாம். ஆனால் அது
நிச்சயம்  நேர்மை அல்ல.   


Tuesday, July 5, 2011

கோயில்களா அல்லது கொள்ளையடிக்கப்பட்ட பொருட்களின் பெட்டகமா?

திருவனந்தபுரம் பத்மநாபர் ஆலயத்தின்  ரகசிய அறைகளில்  உள்ள 
தங்க, வைர ஆபரணங்களின் மதிப்பு ஒரு லட்சம் கோடி ரூபாயை 
நெருங்கி விட்டது  என்ற செய்தி  உண்மையிலேயே  தலை சுற்ற 
வைக்கிறது. இதெல்லாம்  கோயிலுக்குத்தான்  சொந்தம் என்று 
அவசரம் அவசரமாக  பல தரப்பு குரல்கள்  எழுகின்றது. பத்மனாபருக்கு
சொந்தம்  என்றால் அது என்ன அவர் பாற்கடலில் இருந்து கொண்டு 
வந்ததா என்ன? 


அரசர்கள்  அளித்தவை, ஜமீன்தார்கள் தந்தது, முதலாளிகள்  தந்தது
என்றெல்லாம் விளக்கம் வரலாம். இவர்களுக்கு  எப்படி வந்தது 
சொத்து? மக்களை சுரண்டி, கொள்ளையடித்து சேர்த்ததுதானே!  
ஆலயத்துக்கு  உள்ளே  வைத்து  அழகு பார்க்கவோ, அரசின் 
செலவில்  பாதுகாக்கவோ  அவசியமில்லை. இதனை அரசே 
எடுத்துக் கொள்ளட்டும். மக்களுக்கு செலவழிக்கட்டும். 
ஒரு கோயிலில் மட்டுமே  இவ்வளவு என்றால் மற்ற கடவுள்கள்
மட்டும் பிச்சைக்காரர்களாகவா  இருந்திருக்கப் போகின்றனர். 
அனைத்து ஆலயங்களிலும் இந்தியா முழுதுமே  இப்பணி 
நடக்கட்டும். 


சுவிஸ் வங்கியில் உள்ள கறுப்புப் பணத்தை விட பல மடங்கு
அதிகமாகவே  கோயில் பொக்கிஷங்கள்  இருக்கும் போல 
தோன்றுகின்றது.  இப்பணத்தையும்  கைப்பற்ற  வேண்டும் 
என ஹசாரே, ராம்தேவ்  கூட்டம் குரல் கொடுக்குமா?  

Monday, July 4, 2011

கல்லூரிக்குப் போன முதல் நாள்

இன்று எனது மகன் ரகுநந்தன் முதன் முதலாக கல்லூரி சென்றான். வேலூர் வி.ஐ.டி  பல்கலைக்கழகத்தில்  ஐந்தாண்டு படிப்பான எம்.எஸ் (சாஃப்ட்வேர் இன்ஜினியிரிங்)  படிப்பு. முதல் நாள் அன்று பெற்றோரும் வரவேண்டும் என்று  சொல்லியிருந்ததால்  நாங்களும் போயிருந்தோம். காலை எட்டு மணிக்கு  உள்ளே நுழைந்து  மாலை ஐந்து முப்பதிற்கு  வெளியே  வந்தோம்.  அவ்வளவு நேரம்  என்ன செய்தோம்  என்பதை நாளை சொல்கிறேன். இப்போது நான் எழுதப்போவது  எனது கல்லூரி வாழ்வின் முதல் நாள்  பற்றி . 


மதுரை சௌராஷ்டிரா கல்லூரியில்  1982  முதல் 1985  வரை பி.பி.ஏ 
படித்தேன்.  அப்போது எங்கள் குடும்பம் இருந்தது நெய்வேலியில். 
பி.பி.ஏ படிக்க வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து மதுரை வந்தேன். 
அப்போது மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் மட்டுமே  பி.பி.ஏ
இருந்தது.  




கல்லூரியில்  பணம் கட்டி விட்டு பேருந்து நிறுத்தம் வரும் ஒன்றரை 
கிலோ மீட்டரும் எனது அப்பா " விருத்தாசலம் கொளஞ்சியப்பர் அரசு 
கலைக் கல்லூரியில்  பி.எஸ்.சி கணிதம் படித்திருந்தால்  வருடத்திற்கு 
நூற்று முப்பது ரூபாய் கட்டினால் போதும். இப்போது நானூறு ரூபாய் 
கட்டியாச்சு, ஹாஸ்டலுக்கு வேறு செலவு" என்று  மூச்சு விடாமல் 
திட்டிக் கொண்டே வந்தார். கணக்கில்தானே  சிக்கல் என்பதை அவருக்கு 
புரிய வைக்க முயற்சிக்கவில்லை. 


கல்லூரி என்று திறக்கும் என்பதை கடிதம் மூலம் தெரிவிப்பதாக 
சொன்னார்கள். அந்த அஞ்சலட்டை கல்லூரி திறந்த மறு நாள் 
வந்தது. அதன் பின் மீண்டும் அடித்து பிடித்து மதுரை போய் 
கல்லூரி திறந்த நாள் மூன்றாம் நாள் சென்றேன். முதல் நாள் 
பேருந்தும்  சரியாக கிடைக்காமல் பதினைந்து நிமிடம் கால 
தாமதமாக  சென்றேன். பிசினெஸ் மேதமேடிக்ஸ்  என்று 
அச்சுறுத்தும்  கணிதப் பாடம்தான் நடந்து கொண்டிருந்தது. 


காண்டீன் இருக்கும், மதிய உணவை அங்கே பார்த்துக் கொள்வோம் 
என்று  உணவும் எடுத்து வரவில்லை. முதல் வருடம் ஹாஸ்டல் 
வேண்டாம், அக்காவின் மாமியார் வீட்டில் தங்கிப் படிக்கலாம் 
என்பது ஏற்பாடு. அந்த காண்டீனில் டீயையும் மசால் வடையையும் 
தவிர வேறு எதுவும் இருக்காது என்பது தெரியவில்லை. அது கூட
அப்போது இல்லை. எனவே மதுரை நகருக்குத்தான் வந்து சாப்பிட 
வேண்டும் என்று நினைத்து பஸ்  பிடித்து வந்து விட்டேன். அருகில்தான்
திருப்பரங்குன்றம் என்பது அப்போது தெரியாது. 


மதிய உணவை முடித்து விட்டு மீண்டும் கல்லூரி சென்று பேருந்து 
பிடிக்க நினைத்தால் இரண்டரை மணிக்குதான் வரும் என்று தெரிந்தது. 
நிச்சயம் முதல் வகுப்பு கோவிந்தா, வருகைப் பதிவும் கிடைக்காது 
என்று தெரிந்து வீடு போக முடிவு செய்தால் அருகிலேயே ஒரு 
போஸ்டர் பக்கத்து திரையரங்கில் கமல் நடித்த "குரு" ஓடுவதாக 
சொல்லியது. பள்ளிக் காலத்தில் பார்க்க முடியாத படம். எனவே 
கால்கள் கல்பனா தியேட்டருக்கு சென்றது. 


வீட்டிற்குள் நுழைந்தால் " பேரைச் சொல்லவா " என எஸ்.பி.பி யும் 
ஜானகியும் வானொலியில் பாடிக்கொண்டு இருந்தார்கள். என் அக்கா 
கணவரின் தம்பி வேறு "குரு பாத்துட்டியா ?" என்று கேட்க மனதில் 
கத்தி பாய்ந்தது. ஒரு வேளை  நாம் சினிமாவிற்குப் போனது 
தெரிந்து விட்டதோ என்று பயம் வேறு வந்து விட்டது.   முன்னாடியே 
பாத்தாச்சு என்று மட்டும் பதில் சொன்னேன். 


வா, ஏதாவது படத்துக்கு போகலாம். காலேஜ் முதல் நாளே சினிமா 
பார்த்தா அது ஒரு த்ரில் என்று அழைக்க, அந்த த்ரில் ஏற்கனவே 
கிடைத்து விட்டது என சொல்ல முடியாமல் அருகில் இருந்த சுந்தரம் 
தியேட்டரில் "பாபி" ஹிந்தி படம் பார்க்க போய் விட்டோம். 
அதற்கு பிறகு கல்லூரியை கட்டடித்து விட்டு திரைப்படத்திற்கு 
போகவேயில்லை. பல நாட்கள் மதியம் வகுப்பே இல்லாமல் 
போயிருக்கிறோம். அது வேறு கதை. ஆனால் கட்டடித்தது என்பது 
முதல் நாளோடு முடிந்து விட்டது.


ஆனால் என் மகனுக்கு அந்த வாய்ப்பெல்லாம் கிடைக்காது போல. 
வருகைப்பதிவு  இணைய தளத்தோடு இணைக்கப்பட்டுள்ளதாம். 
பெற்றோர்கள் வீட்டிலிருந்தே கண்காணிக்கலாமாம். 

எனது கல்லூரி வாழ்வின் கடைசி நாள் புகைப்படங்கள் கீழே