புத்தக விழாவிற்கு செல்லாமலேயே நல்ல வேட்டை
சென்னை புத்தக விழா தொடங்க இன்னும் ஐந்து மாதங்கள் உள்ளன. ஆனால் அதற்கு முன்பே வழக்கமாக சென்னை புத்தக விழாவில் வாங்கும் அளவிற்கு புத்தகங்கள் வந்து குவிந்துள்ளன.
எல்லாம் பணி ஓய்வை முன்னிட்டு தோழர்கள் அளித்த அன்புப் பரிசுகள்.
பணி ஓய்வு நாளுக்கு சில நாட்கள் முன்பாகவே ஒரு அலுவலக வேலையாக வேலூர் வந்திருந்த ஒரு தோழர் அளித்த கடுகு எழுதிய "கமலாவும் நானும்" நூல்தான் முதல் வரவு. முதல் போணி மிகவும் ராசியாக அமைந்து விட்டது.
எங்கள் கோட்டத் தோழர்கள், பிற கோட்டத் தோழர்கள், ஓய்வூதியர்கள், பிற சங்கத் தோழர்கள் என ஏராளமான நூல்கள் வந்து குவிந்தன.
அதனை பட்டியலிட்டு அதற்கான இடத்தை கண்டுபிடித்து அடுக்கி வைக்கும் வேலை இன்றுதான் முடிந்தது.
சேலத்தில் நடந்த தென் மண்டல மாநாட்டில் இரண்டு நூல்கள் வாங்கினேன். எங்கள் கோட்ட மாநாட்டிலும் ஒன்று வாங்கினேன். முன்னாள் எல்.டி.டி.இ போராளி சாத்திரி எழுதிய ஆயுத எழுத்து 2 ம் பாகத்தை வரவழைக்க பாரதி புத்தகாலயம் தோழர் சிராஜுதீன் அவர்களிடம் பேசிய போது முன்பதிவு செய்திருந்த "சே குவாரா" நூல்கள் வரவில்லை என்பதை குறிப்பிட அவர் அதையும் அனுப்பி வைத்தார்.
பட்டியல் இங்கே . . .
விபத்து நடந்து வீட்டில் சிகிச்சையில் இருந்த போது பார்க்க வந்த தென் மண்டலக் கூட்டமைப்பின் முன்னாள் பொதுச்செயலாளர்கள் தோழர் கே.சுவாமிநாதன் அளித்த நூல், தோழர் டி.செந்தில்குமார் அளித்த இரு நூல்கள், எங்கள் கோட்டப் பொறுப்பாளர்கள் தோழர்கள் கே.வேலாயுதம், தோழர் ப.முத்துக்குமரன் அளித்த நூல்கள் தனி. அவற்றை படித்து முடித்த காரணத்தால் பட்டியலில் இல்லை.
புகைப்படத்தை பார்த்தால் ஒன்று தெரியும். ஒரே நூலை மூவர் அளித்துள்ளனர். நல்ல வேளையாக மூன்று நூல்கள் மட்டும்தான் ஏற்கனவே படித்தவை. மற்றவை எல்லாம் இது வரை படிக்காத நூல்கள்தான். அனைத்து விதமான நூல்களும் வந்துள்ளன.
இத்தனை அன்பிற்கும் எப்படி நன்றி சொல்ல!
அனைத்தையும் படித்து முடிப்பதன் மூலம்தான் . . .
பிகு: பட்டியலில் இல்லாத "சந்திரஹாசம்" நூலின் படம் ஏன் இங்கே என்ற கேள்வி எழலாம். பணி ஓய்வுக்குப் பிறகு சேலத்தில் நடைபெற்ற தென் மண்டல மாநாட்டிற்குச் சென்ற போது முதல் நூலை படித்து முடித்து விட்டேன். அதற்குப் பிறகு ஒரு பெரிய தொய்வு, சோர்வு, சுணக்கம் எல்லாம். அதனால் வேகமான ஒரு நூலை படிப்போம் என்று அதனை எடுத்து ஒரே நாளில் படித்து முடித்தேன். அதன் பிறகு மீண்டும் பழைய வாசிப்பு வேகம் வர மூன்று நாட்களில் இரண்டு நூல்களை முடித்து விட்டேன்.
ஆமாம் தோழர் சு.வெ, சந்திரஹாசம் இரண்டாம் பாகம் என்ன ஆனது?
No comments:
Post a Comment