Wednesday, August 27, 2025

மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தில் காதல் திருமணம் புதிதல்ல . . .

 


காதல் திருமணங்களை எங்கள் கட்சி அலுவலகங்களில் நடத்திக் கொள்ளலாம் என்று மாநிலச் செயலாளர் தோழர் பெ.சண்முகம் சொன்னது முதல் பலரும் பதறிக் கொண்டிருக்கிறார்கள். 

திருமண மண்டபம் போல பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சொன்னது போல மார்க்சிஸ்ட் கட்சியின் எதிரிகள் வழக்கம் போல திசை திருப்பி மகிழ்ச்சியடைந்து கொண்டிருக்கிறார்கள். காதல் திருமணம் நடத்த எங்களின் ஆதரவு முழுமையாக இருக்கும் என்பதுதான் தோழர் பெ.சண்முகம் சொன்னதன் அர்த்தம்  என்பது அவர்களுக்கு புரியும் என்பதுதான் அர்த்தம்.

காதல் திருமணங்களை, ஜாதி, மத மறுப்புத் திருமணங்களை மார்க்சிஸ்ட் கட்சித் தலைவர்கள் பலரும்  செய்துள்ளனர், நடத்தியும் வைத்துள்ளனர். கட்சி மாநாடுகளில் திருமணம் நடந்துள்ளது. ஏன் வெண்மணி நினைவு நாளில் வெண்மணி தியாகிகள் அஞ்சலிக் கூட்டத்திலே கூட திருமணம் நடந்துள்ளது.

ஜாதி மறுப்பு திருமணத்திற்கு ஆதரவாக நின்றதால் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு அலுவலகத்தை சில ஜாதிய சகதிகள் அடித்து நொற்க்கினார்கள். 

கிட்டத்தட்ட இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு திருமணம் நினைவுக்கு வந்தது, கசப்பான மனிதர்களையும் சேர்த்து. ஒரு காதல் ஜோடிக்கு அவசர திருமணம் செய்ய சில கோயில்களில் விசாரிக்கிறோம். அவர்கள் சொன்ன விதிகளை பின்பற்றினால் நாங்கள் நினைத்த காலத்திற்குள் திருமணம் செய்ய இயலாது.

கட்சி அலுவலகம் சென்று யோசிப்போம் என்று கட்சி அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தபோது எனக்கு தோன்றிய யோசனைதான் ஏன் இன்றைக்கே கட்சி அலுவலகத்திலேயே திருமணம் செய்யக்கூடாது என்பது. 

அன்று ஞாயிற்றுக் கிழமை. மாவட்ட செயற்குழுக்கூட்டம் நடந்து கொண்டிருந்தது. மதிய உணவுக்காக செயற்குழுத் தோழர்கள் இறங்கி வந்த போது அந்த யோசனையை சொன்ன போது அப்போதைய மாவட்டச் செயலாளர் தோழர் டி.ஆர்.புருஷோத்தமன், நாங்கள் முதலில் சாப்பிட்டு வருகிறோம். பிறகு பேசிக் கொள்வோம் என்றார்.

பிறகு அவர் இருவரிடமும் "நீங்கள் இருவரும் மேஜர்தானே, இங்கே இன்றே திருமணம் செய்து கொள்ள விருப்பம்தானே, உங்களை யாரும் நிர்ப்பந்திக்கவில்லையல்லவா?" என்றெல்லாம் கேட்டு பதில்களில் திருப்தி அடைந்த பிறகு திருமணத்திற்கு ஏற்பாடு செய்யச் சொன்னார். இருவரின் கிளைச் செயலாளர்களுக்கும் தகவல் கூறுமாறு எங்கள் சங்கத்தின் முதல் பொதுச்செயலாளரும் அன்றைய மாவட்ட செயற்குழு உறுப்பினருமான தோழர் ஆர்.ஜெகதீசன் சொன்னார்.

உடனடியாக என்னுடைய டி.வி.எஸ் பிப்டியில் சென்று புத்தாடைகள், மாலைகள், தங்கத்தாலி, இனிப்புக்கள் எல்லாம் வாங்கி வந்தோம். முன்னாள் எம்.எல்.ஏ வும் சுதந்திரப் போராட்ட தியாகியுமான தோழர் கே.ஆர்.சுந்தரம் அவர்களின் தலைமையில் திருமணம் நடந்தது. 

அப்போதே ஒரு நெருடல். இறுதியில் நன்றி சொன்ன மணமகன், அங்கே இருந்தவர்கள், எட்டிப் பார்த்தவர்கள் என அத்தனை பேருக்கும் நன்றி சொன்னாரே தவிர, திருமணம் நடத்த ஆலோசனை சொன்ன, அனைத்து பொருட்களையும் அலைந்து திரிந்து வாங்கி வந்த என் பெயரை மட்டும் ஞாபகமாக தவிர்த்து விட்டார்.

அவர் பின்னாளில் சங்கத்திற்கு ஏராளமான பிரச்சினைகளை கொடுத்து விட்டு சங்கத்திலிருந்தும், கட்சியிலிருந்தும் முதலில் விலகிப் போனார். பின்பு எல்.ஐ.சி யிலிருந்தே ஓடிப் போய் விட்டார்.

துரோகம் அன்று எனக்கு புதிதாக இருந்தது. மார்க்சிஸ்ட் கட்சிக்கு அது அதிர்ச்சியாய் இருந்திருக்காது. எத்தனை துரோகிகளை இந்த நூறாண்டு காலத்தில் பார்த்திருக்கும்!

பிகு: பாஜக அலுவலகங்களுக்கு வாருங்கள் என்று ஆட்டுக்காரனும் அழைத்துள்ளாரே என்று யாராவது நினைக்கலாம். அது தனி பதிவாக எழுத வேண்டிய ஒன்று.

பிகு 2 : மேலே உள்ளது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தின் புகைப்படம். 


No comments:

Post a Comment