Saturday, March 20, 2021

மீண்டும் கொரோனா துயரம்

 இறுதியாய் முகம் பார்க்க மறுக்கும் கொரோனா துயரம்

 


சென்னை கோட்டச் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.பூபதி காலமானார் என்பது நேற்று கிடைத்த அதிர்ச்சி செய்தி.

 மீண்டும் பரவத் தொடங்கியுள்ள கொரோனா பாதிப்பினால் அவர் காலமானதால் அவருக்கு இறுதி மரியாதை செலுத்தும் வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது.

 நான் எல்.ஐ.சி யில் 1986 ல் பணியில் சேர்ந்த போது வேலூர் கோட்டம் கிடையாது. சென்னை கோட்டம்தான். அப்போது தோழர் பூபதிதான் சென்னை கோட்டத்தின் பொதுச்செயலாளர்.  எஸ்பிளனேட்டில் உள்ள யுனைட்டெட் இந்தியா கட்டிடத்தில் 15 நாட்கள் பயிற்சி வகுப்புக்கள் நடந்த போது அவ்வப்போது மாலை வேளையில் வந்து எங்களை சந்திப்பார். பயிற்சி முடியும் நாளில் எங்கே பணியமர்த்துவார்களோ என்ற பதட்டத்தை நீக்கி நெய்வேலியில்தான் உங்களுக்கு போஸ்டிங் என்று மகிழ்ச்சியான செய்தியை முதலில் சொன்னவர் அவர்தான்.

 1987 ல் கிளைச்சங்க பொறுப்பாளரான பின்பு சென்னைக்கு அலுவலக வேலையாக செல்கிற போதெல்லாம் அவரையும் தோழர் கே.நடராஜன், தோழர் வி.டி.சோமசுந்தரம் ஆகிய தோழர்களையெல்லாம் பார்க்காமல் திரும்புவதில்லை.

 அழகான தமிழில் அவர் பேசுவதை கேட்டுக் கொண்டே இருக்கலாம். அப்படி ஒரு முறை சென்னை சென்ற போது சென்னை பல்கலைக் கழகத்தின் தமிழ்த்துறை தலைவராக இருந்த திரு ந.சஞ்சீவி தோழர் பூபதியைப் பார்க்க வந்திருந்தார். இருவரும் கவிஞர் தமிழ் ஒளி படைப்புக்கள் குறித்து பேசிக் கொண்டிருந்ததை கேட்டுக் கொண்டிருந்தது நல்ல அனுபவம்.



 1988 ல் வேலூர் கோட்டம் உதயமான போது “உங்களது தமிழை அடிக்கடி கேட்க முடியாது என்பதுதான் என் ஒரே வருத்தம்” என்று சொன்னேன். ஆம். அதன் பின்பு அவரது தமிழைக் கேட்டது 2000 ம் ஆண்டில் எங்கள் வேலூர் கோட்டத்தின் முதல் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜகதீசன் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவின் போதுதான்.

 அவரது பணி நிறைவு பாராட்டு விழாவின் போது எதிர்பாராமல் ஒரு பெரிய பிரச்சினை வந்ததால் ட்ரெயினில் முன் பதிவு செய்திருந்தும் பயணத்தை ரத்து செய்யும் நிலை வந்து விட்டது.

 அவருக்கு விளையாட்டுகளின் மீதும் அளவு கடந்த ஆர்வம் உண்டு என்பது யதேச்சையாக தெரிய வந்தது. தஞ்சை கோட்டத்தின் பொதுச்செயலாளராக இருந்தவரும் என் மாமனாரின் தம்பியுமான எஸ்.ஆர்.கே வின் மகன் திருமணம் சென்னையில் நடந்தது. இரவு வரவேற்பின் போது அவசரம் அவசரமாக சாப்பிட்டு விட்டு புறப்பட்டார். ஏன் தோழர் இவ்வளவு அவசரம் என்று கேட்ட போது “விம்பிள்டனில் வீன்ஸ் வில்லியம்ஸ் செரீனா வில்லியம்ஸ் இறுதிப் போட்டி உள்ளது. அதை பார்க்க வேண்டும்” என்று பதில் சொன்னார்.

 அவருடனான மறக்க முடியாத அனுபவம் என்பது 1995 இறுதியில் தென் மண்டல செயற்குழு கூட்டம் மதுரையில் நடந்த போதுதான்.

 1996 ம் வருடம் நடக்க வேண்டிய தென் மண்டல மாநாட்டை வேலூரில் நடத்துகிறோம் என்று நாங்கள் கேட்டிருந்தோம். சென்னையில் நடத்துகிறோம் என்று தோழர் பூபதி கேட்டார். அந்த வருடம் அகில இந்திய மாநாட்டை நடத்தும் முறை தென் மண்டலத்துடையது. சென்னை, மதுரை, கோவை, திருவனந்தபுரம் கோட்டங்கள் போட்டியிட்டன.

 எங்கள் பொதுச்செயலாளர் தோழர் ஆர்.ஜெகதீசன் அவர்களிடம் அனுமதி பெற்று தேநீர் இடைவேளையின் போது தோழர் பூபதியிடம் சென்றேன்.

 சென்னையில் நீங்கள் எத்தனையோ மாநாடுகள் நடத்தியிருப்பீர்கள். முதன் முதலில் நடத்தும் வாய்ப்பை எங்களுக்கு கொடுங்கள். புதிய கோட்டமான எங்களுக்கு கேடர்களை கண்டுபிடிக்கவும் பயிற்சி கொடுக்கவும் உதவிகரமாக இருக்கும்.

 அடுத்த மாநாடு கேரளாவிற்கு சென்று விடும். அதன் பின்பு 2000 வருடம் வருகிற போது எங்கள் மூத்த தலைவர்கள் ஆர்.ஜெகதீசன், என்.ஏகாம்பரம் ஆகியோர் ஓய்வு பெற்றிருப்பார்கள். அவர்கள் பணியில் இருக்கும் போதே நாங்கள் மாநாடு நடத்த நீங்கள் விட்டுக் கொடுங்கள்.  எப்படியும் அகில இந்திய மாநாட்டை நீங்கள்தானே நடத்தப் போகிறீர்கள்

 என்று கேட்க

 அவரும் ஒப்புக் கொண்டார். எங்கள் கோட்டத்தின் வரலாற்று நிகழ்வாக தென் மண்டல மாநாடு அமைந்தது.

 மாநாடு முடிந்து புறப்படும் போது “எப்படி நடத்துவீர்களோ என்று ஒரு அச்சம் இருந்தது. சிறப்பாகவே நடத்தினீர்கள்” என்று கை கொடுத்து விட்டு போனார். (அகில இந்திய மாநாட்டை நடத்தும் பொறுப்பு மதுரை கோட்டத்திற்கு சென்றது என்பது வேறு விஷயம்)

 அடுத்த வருடம் 2022 ல் தென் மண்டல மாநாட்டை நடத்தும் முறை எங்கள் வேலூர் கோட்டத்துடையது. நாங்கள் இம்முறை எப்படி நடத்துகிறோம் என்று பார்க்கத்தான் தோழர் பூபதி இல்லை.

 செவ்வணக்கம் தோழர் பூபதி.

2 comments:

  1. In Postal also, we lost one All India Leader Com. M Krishnan due to Corona.The vaccum could not be filled. We should follow the path of such a great comrades like Com.Boopathy

    ReplyDelete