Wednesday, March 3, 2021

அடுத்தவர் குழந்தையெனில் கொல்வீரோ மோடி?

பொதுத் துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு 

துவக்கப்பட்டவை;   

யாரோ ஒருவரின் செல்லத் திட்டம் 

(Pet Project) என்பதற்காக இப்போது தொடர்ந்து   அரசு நடத்த வேண்டியதில்லை என்று பிரதமர் சொலகிறார். அடுத்தவர் பெற்றெடுத்த குழந்தை என்றால் கொன்று விடுவாரோ மோடி?




 

*நாளொரு கேள்வி: 02.03.2021*

 

இன்று நம்மோடு தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர் *. சுவாமிநாதன்*

#####################

இது யாருடைய செல்லம் பிரதமரே!*

 

கேள்வி: பொதுத் துறை நிறுவனங்கள் பல ஆண்டுகளுக்கு முன்பு துவக்கப்பட்டவை; யாரோ ஒருவரின் செல்லத் திட்டம் (Pet Project) என்பதற்காக இப்போது தொடர்ந்து அரசு நடத்த வேண்டியதில்லை என்று பிரதமர் கூறியிருக்கிறாரே!

 

*.சுவாமிநாதன்*

 

இது செல்லத் திட்டம்தான் பிரதமர் அவர்களே. ஆனால் *யாரோ ஒருவரின் செல்லம்* (Somebody's pet project) என்கிறீர்களே. அந்த யாரோ ஒருவர் என்று நீங்கள் யாரை நினைக்கிறீர்கள் என்பதையும் சேர்த்து சொல்லியிருக்கலாமே

 

உண்மையில் பொதுத் துறை நிறுவனங்கள் யாருடைய செல்லங்கள்? இந்திய நாட்டின் கேந்திரத் தொழில்களில் அரசு மேலோங்கிய பங்கை வகிக்க வேண்டும் என்று பேசிய *கராச்சி காங்கிரசின் 1931 தீர்மானம்* "யாரோ ஒருவரின் அல்லது யாரோ சிலரின்" செல்லத் தீர்மானம் அல்ல பிரதமர் அவர்களே. *அது விடுதலை இயக்கம் கண்ட கனவு. சுதந்திர இந்தியா பற்றி கோடானு கோடி மக்கள் கொண்டிருந்த ஏக்கம்.* அந்த கராச்சி காங்கிரஸ் தீர்மானம் வெறும் மையினால் எழுதப்படவில்லை.

 

அதே ஆண்டு, அதே மார்ச் மாதம், அந்த மாநாடு துவங்குவதற்கு 4 நாட்களுக்கு முன்பு தூக்குக் கயிறின் இறுக்கத்தில் உயிரை விட்ட *பகத் சிங்கின் ரத்தத்தால் எழுதப்பட்டது ஆகும்.* அந்த மாவீரன் மரணம் நாடு முழுவதும் ஏற்படுத்திய எழுச்சியே கராச்சி காங்கிரசின் தீர்மானம் உயிரோட்டத்தோடு அமைவதை உறுதி செய்தது. விடுதலைக்கு சற்றும் சம்பந்தமில்லாத இயக்கங்களின் ஆவணங்களில் இதுவெல்லாம் இருக்காது எங்கள் பிரதமரே. ஆகவே பொதுத் துறை செல்லம்தான். அது பகத் சிங்கின் செல்லம். 1920- 30 காலகட்டத்தில் பெசாவர், மீரட், கான்பூர் சதி வழக்குகளில் சிறைக் கொட்டடியில் எண்ணற்ற இன்னல்களை எதிர் கொண்ட பொதுவுடமை இயக்க சிந்தனையாளர்களின் செல்லம். தேசிய இயக்கத்தின் செல்லம்.  *"என் சவப்பெட்டியில் கடைசி ஆணியை அறைந்து மூடுவதற்கு முன் ஒரு பிடி இந்த தேசத்தின் புழுதியை உள்ளே போட்டு மூடுங்கள்"* என்று பிரிட்டிசாரின் பலி பீடத்தில் இருந்து முழங்கிய தியாகி அசபுல்லாகானின் செல்லம்.

 

விடுதலைக்குப் பின்னருங் கூட இக் கனவு எளிதாக ஈடேறவில்லை. மக்கள் ஏக்கம், கருத்து, கோபம்தான் ஆயுள் இன்சூரன்ஸ் தேசிய மயம், ரிசர்வ் வங்கி உருவாக்கம் போன்ற முடிவுகளுக்கு வழி வகுத்தது

 

1951 ல் வெறும் 5 நிறுவனங்களாக மட்டுமே இருந்த அரசுத் துறை நிறுவனங்கள் இன்று 340 நிறுவனங்களாக - இன்னும் மாநில அரசு நிறுவனங்களை சேர்த்தால் பல நூறு- வளர்ந்துள்ளது. ஆகவே  *யாரோ ஒருவரின் செல்லம் அல்ல பிரதமர் அவர்களே! பொதுத் துறை தேசத்தின் செல்லம். தேசத்தின் செல்வம்.*

 

எதற்காக மக்கள் ஏங்கினார்கள்? எதற்காக கனவு கண்டார்கள்? கல்வி, சுகாதாரம், போக்குவரத்து, வங்கி சேவை, காப்பீடு... போன்ற சேவைகள் எல்லாம் மினுக்கிக் கொண்டு வசதி படைத்தவர்களின் "செல்லங்களாக" இருந்த நிலை மாற வேண்டும்; சாமானிய, நடுத்தர மக்களின் வாசல்களில் வரையப்பட்ட கோலங்களையும் ரசிக்க வேண்டுமென்பதற்கே. அதற்காகவே *"பொருளாதாரத்தில் அரசின் தலையீடு"* (State intervention) என்ற கருத்தாக்கம் வலியுறுத்தப்பட்டது. அரசு கல்விக் கூடங்களைத் திறந்திருக்காவிட்டால் *கலைமகளின் வீணை இசை* சாமானிய மக்களின் குடிசைகளுக்குள் கேட்டிருக்காது.

 

அரசு மருத்துவ மனைகள் திறக்கப்பட்டிருக்காவிடில் *சாமானியர் இல்லங்களில் அழு குரல்* குறைந்திருக்காது. அரசுப் பேரூந்துகள் இயக்கப்பட்டிருக்காவிடிம் *கிராமங்களின் ஊடே ஒலிப்பான் ஓசை* கேட்டிருக்காது. அரசு வங்கிகள் நிறுவப்பட்டிருக்காவிட்டால் எங்கள் சாமானிய மக்கள் கடனுக்காக *கந்து வட்டிக் காரர்கள் வீட்டுத் திண்ணையில் கூனிக் குறுகி நின்ற நிலை* மாறி இருக்காது. எல்..சி உருவாகியிருக்காவிட்டால் காப்பீட்டு தீபம் கடைக் கோடி மனிதரின் இல்லங்களில் ஒளி வீசியிருக்காது. இதுவெல்லாம் மாறியதால்தான் இன்றைக்கும் அந்த அரசு நிறுவனங்கள் மக்களின் செல்லங்களாக உள்ளன பிரதமர் அவர்களே!

 

*"தொழில் நடத்துவதல்ல அரசின் தொழில்"*  என்ற உங்கள் டயலாக் ரொம்பப் பழையது பிரதமர் அவர்களே. 1970 களில் பிரிட்டன் பிரதமர் தாட்சர் பேசியது. ஆனால் தாட்சர் எந்த அளவிற்கு மக்களின் வெறுப்பிற்கு ஆளானார் என்பது உலகறிந்த கதை. அரசு தொழில் நடத்தாவிட்டால் இன்று பெரும் தொழிலதிபர்களுக்கு கொண்டாட்டம்தான். ஆனால் இதே பெரும் தொழிலதிபர்களுக்கு 1950 களில் பொதுத் துறை வேண்டா வெறுப்பாக *முதலாளித்துவ சமூகத்தின் நிர்மாணத்திற்கே* தேவைப்பட்ட ஒன்று. நீங்கள் *"செல்வத்தை உருவாக்குபவர்கள்"* என்று செல்லமாக அழைக்கிறீர்களே. அந்த பெரும் தொழிலதிபர்கள் கைகளில் ஆதாரத் தொழில் வளர்ச்சியை உருவாக்குகிற அளவிற்கு நிதியாதாரங்கள் இல்லை. கொஞ்சம் வைத்திருந்தவர்களும் அதை உடனடியாக பொருளாதாரத்தில் முடக்க விரும்பவில்லை

 

இரண்டு காரணங்கள். ஒன்று, விடுதலை இந்தியாவின் எதிர்காலம் குறித்த அச்சம். இந்திய உருவாக்கம் வெற்றிகரமாக அமையுமா என்ற சந்தேகம். அவர்கள் தேசத்தையே சந்தேகித்தார்கள். ஆனால் இன்று உங்கள் நிதியமைச்சர் தொழிலதிபர்களை தேசம் சந்தேகிக்க கூடாது என்கிறார். பிரதமரே! *வரலாறு வாய் வலிக்க சிரிப்பது உங்கள் காதுகளில் விழவில்லையா!*

 

இரண்டு காரணங்கள். ஒன்று, விடுதலை இந்தியாவின் எதிர்காலம் குறித்த அச்சம். இந்திய உருவாக்கம் வெற்றிகரமாக அமையுமா என்ற சந்தேகம். அவர்கள் தேசத்தையே சந்தேகித்தார்கள். ஆனால் இன்று உங்கள் நிதியமைச்சர் தொழிலதிபர்களை தேசம் சந்தேகிக்க கூடாது என்கிறார். பிரதமரே! *வரலாறு வாய் வலிக்க சிரிப்பது உங்கள் காதுகளில் விழவில்லையா!*

 

இரண்டாவது காரணம், நீண்ட கால முதலீடுகள் எனில் லாபத்திற்கான *"அறுவடை இடைவெளி"* (Gestation period) அதிகம். அதுவரை இந்தியப் பெரும் தொழிலதிபர்கள் காத்திருக்கத் தயாராக இல்லை. தேசமா லாபமா என்றால் அவர்களுக்கு லாபம்தான். லாபத்திற்கான சந்தைதான் தேசம். பிரதமர் அவர்களே,  

 

அவர்கள் செல்வத்தை உருவாக்கியவர்கள் அல்ல. உழைப்பால் உருவான செல்வத்தை அவர்கள் கவர்ந்த கதை இது. உங்கள் சொல்லாடலை மாற்றுங்கள்... *"செல்வம் அபகரித்தவர்கள்"* என்று

 

இன்று  அரசு  நிறுவனங்களுக்கான தேவை போய் விட்டதா பிரதமர் அவர்களே... 

 

* இன்றும் உலகின் சவலைக் குழந்தைகளில் மூன்றில் ஒன்று இந்தியாவில் தவழ்கிற நமது செல்லங்கள்தானே

 

* நீங்கள் கொண்டு வந்த ஜன் தன் கணக்குகளை எத்தனை சதவீதம் தனியார் வங்கிகளால் திறக்கப்பட்டன? எத்தனை அரசு வங்கிகளால் திறக்கப்பட்டன?

 

* நீங்கள் அனுமதித்த, வளர்த்த தனியார் பொது இன்சூரன்ஸ் நிறுவனங்கள் ஐந்தாம் தட்டு, நான்காம் தட்டு நகரங்களில் அலுவலகங்களை திறந்திருக்கின்றன? அரசு பொதுக் காப்பீட்டு நிறுவனங்கள் இல்லாவிட்டால் இந்த ஊர்களுக்கெல்லாம் பொதுக் காப்பீடு எப்படி போய்ச் சேரும்?

 

* ஆயுள் இன்சூரன்ஸ் பரவலாக்கலில் 70 சதவீதம் பிரிமியத்தையும், 75 சதவீதம் புதிய பாலிசிகளையும் சந்தைப் பங்கை எல்..சி வைத்துள்ளது என்பதன் பொருள் என்ன? இப்போதும் சாதாரண மக்களை நீங்கள் அனுமதித்த தனியார் ஆயுள் இன்சூரன்ஸ் நிறுவனங்களைக் காட்டிலும் அக்கறையோடு எல்..சி தான் கவனித்துக் கொள்கிறது என்பதுதானே உண்மை.

 

சாமானியர் எனும் போது அதில் மத்திய தர மக்களும் அடக்கம். அவர்கள் *நேற்றைய சாமானியர்கள்.* அவர்களின் வளர்ச்சியில் "அரசின் தலையீடு" இருந்துள்ளது. இன்றும் *கல்வி வணிகமயம்* இவர்களை பதம் பார்க்கிறது. ஒரு லட்சம் மாத சம்பளம் வாங்குபவர்கள் கூட எல்.கே.ஜி க்கு 75000, ஒரு லட்சம் கட்டணம் என்றால் அதிர்ந்து போகிறார்கள். தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணங்களைப் பார்த்து அரண்டு போகிறார்கள். கொடும் நோய் வந்தால் மெடிக் கிளைம் இருந்தாலும் *வாழ்நாள் சேமிப்புகளை இழந்து விடுகிறார்கள்.*

 

பிரதமர் அவர்களே!

 

பொதுத் துறை நிறுவனங்கள் என்றால் ஓரளவாவது சமச் சீரான வளர்ச்சியை உறுதி செய்கிற பொருளாதார ஏற்பாடு என்று அர்த்தம். நவீன தாராளமயத்தின் *கடும் பனியால் நடு நடுங்கும் மக்களுக்கு* இதம் தரும் கனத்த ஆடை அது.  *கொடும் வெயிலில் இளைப்பாற* கிடைக்கும் அடர்ந்த நிழல். *அந்த கதகதப்பை, நிழலை இந்த தேசம் இழந்து விடக் கூடாது.*

 

ஆகவேதான் பொதுத் துறை நிறுவனங்கள் *தேசத்தை நேசிப்போரின் செல்லங்களாக அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன.* கார்ப்பரேட்டுகளின் செல்லமாக இருக்கிற அரசுக்கு அல்லது  கார்ப்பரேட்டுகளை செல்லங்களாக கொண்டுள்ள அரசுக்கு பொதுத் துறை நிறுவனங்கள் செல்லங்களாக இருக்க முடியாது என்ற கசப்பான உண்மையின் வெளிப்பாடே பிரதமரின் கருத்து

 

*****************

*செவ்வானம்*


No comments:

Post a Comment