Thursday, March 9, 2017

ஞாபகம் வருதா? மறந்தே போச்சா?



மகளிர் மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டு ஏழு வருடங்கள் கடந்து விட்டது. 2010 ம் வருடம் இதே நாள்தான் ஏராளமான தடைகளை தாண்டி மாநிலங்களவையில் நிறைவேறியது.

மகளிர் மசோதாவின் வரலாற்றைச் சற்றே திரும்பிப்பார்த்தால் அதன் வயது இன்று இருப்பத்தி ஒன்று வருடங்களாகிறது.

நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றங்களிலும் மகளிருக்கு 33 % இட ஒதுக்கீட்டை உறுதி செய்கிற இம்மசோதாவை முதன் முதலில் கொண்டு வந்தது தேவே கௌடா அரசுதான். அவரால் அதனை நிறைவேற்ற முடியவில்லை.. பின்னர் வாஜ்பாயின் ஆட்சிக்காலத்தில் அறிமுகம் செய்யப்பட்டு செய்யப்பட்டு காலாவாதியாகிக் கொண்டே இருந்தது.

நாடாளுமன்றத்திலும் சட்ட மன்றத்திலும் மகளிருக்கான   இட ஒதுக்கீட்டு மசோதா வருவதற்கு முன்பே உள்ளாட்சி அமைப்புக்களில் மகளிருக்கான 33 % இட ஒதுக்கீடு அறிமுகமாகி அமலாகிக் கொண்டிருக்கிறது. கணவனோ, தந்தையோ கட்டுப்படுத்தும் நிலை என்பது துவக்கத்தில் இருந்தாலும் இப்போது நிலைமை வெகுவாக முன்னேறியுள்ளது என்பதுதான் யதார்த்தம்.

இப்போது பல மாநிலங்களில் உள்ளாட்சிகளில் மகளிருக்கான இட ஒதுக்கீடு ஐம்பது சதவிகிதம் வந்து விட்டது. பாஜக ஆளும் மாநிலங்களில்தான் பல பிற்போக்குத் தடைகளை உருவாக்கி மேல் தட்டு பெண்கள் மட்டுமே களத்திற்கு வருமாறு செய்துள்ளனர் என்பது இன்னொரு விஷயம்.

கிராமப்பஞ்சாயத்து கவுன்சிலர்களாக, நகராட்சித் தலைவர்களாக, மாநகராட்சி மேயர்களாக பெண்கள் வர இட ஒதுக்கீடு உள்ளது. அப்படி இருக்கையில் சட்டப்[பேரவைக்கும் நாடாளுமன்றத்திற்கும் இட ஒதுக்கீட்டை கொண்டு வருவதில் மட்டும் என்ன தடை?

காங்கிரஸ் கட்சியால் மாநிலங்களவையில் மகளிர் மசோதாவை நிறைவேற்ற முடிந்தது. ஆனால் மறு நாளே மக்களவையில் பம்மி பதுங்கி விட்டது. காங்கிரஸ் கட்சியின் லட்சணமே இப்படி என்றால் பாஜக வைப்பற்றி சொல்லவே வேண்டாம். பெண்களுக்கு எதிரான பிற்போக்கு கட்சியல்லவா அது?

பெண்களுக்கு என்று தொகுதிகள் வந்து விட்டால் நம்முடைய தொகுதி பறி போய் விடுமோ என்ற ஆண் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கெல்லாம் உள்ள அச்சத்தின் வெளிப்பாடே மகளிர் மசோதாவின் மீதான எதிர்ப்பாக வெளிப்படுகிறது என்று வேலூர் எம்.பி யாக  இருந்த பேராசிரியர் காதர் மொய்தீன் ஒரு முறை சொன்னது நினைவுக்கு வருகிறது.

இடதுசாரிக் கட்சிகளையும் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் போன்ற மகளிர் அமைப்புக்கள், முற்போக்கு தொழிற்சங்கங்கள் தவிர வேறு யாருக்காவது மகளிர் மசோதா பற்றி இப்போது நினைவில் இருக்குமா என்பதே சந்தேகம்.

பெண்களுடைய பிரச்சினைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு வருகிறது. உலகமயத்தின் விளைவாக பணிப்பாதுகாப்பு என்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. பணிகள் வெட்டப்படும்போது முதலில் பாதிக்கப்படுவது பெண் தொழிலாளர்களாகவே இருக்கிறது. சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையே பெண் தொழிலாளர்களுக்கு இழைக்கப்படும் அநீதியின் வெளிப்பாடுதான்.

பணிப்பாதுகாப்பு என்ற நிலையை விட வாழ்க்கைக்கான பாதுகாப்பே இன்று கேள்விக்குறியாக மாறியுள்ளது. அரியலூர் நந்தினி, மாங்காடு ஹாசினி, சென்னை ரித்திகா என்பது சமீபத்திய பட்டியல். பட்டியல் முடிவதில்லை என்பது சோகமான யதார்த்தம். நிர்பயா பிரச்சினையின் போது  பாலியல் கொடுமைகளை கட்டுப்படுத்த நீதியரசர் வர்மா குழு பல்வேறு முக்கியமான பரிந்துரைகளை அளித்தது. அவற்றை எல்லாம் அமலாக்குவது குறித்து மத்திய, மாநில ஆட்சியாளர்கள் கவலைப்படவே இல்லை என்பது மிகப் பெரிய துயரம்.

பாலியல் வன் கொடுமைகள் நிகழும்போது குற்றமிழைத்தவன் மீது நடவடிக்கை எடுப்பதற்குப் பதிலாக பாதிக்கப்பட்ட பெண்களையே குற்றத்திற்குக் காரணமாக சித்தரிக்கும் வக்கிர சிந்தனையோடு பலர் அலைகிறார்கள். இதனை சமூக வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் குற்ற ஆவண ஆணையம் ஒவ்வொரு வருடமும் வெளியிடும் புள்ளி விபரங்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆண்டுக்காண்டு அதிகரிப்பதையே காண்பிக்கிறது. பெண்களின் எண்ணிக்கை நாடாளுமன்றத்திலும் சட்டப்பேரவைகளிலும் அதிகரித்தால்  இது குறித்து ஆக்கபூர்வமான விவாதம் நடக்க வாய்ப்பு இருக்கிறது.

சட்டமன்றங்களிலும் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் அதிகரிப்பது பெண்களின் நம்பிக்கை அளவையும் அதிகரிக்கும். உற்சாகம் தரும்.

பிரதான அரசியல் கட்சிகளுக்கு அரசியல் உறுதி இருந்தால் மட்டுமே மகளிர் மசோதா நிறைவேறும். தொடர்ச்சியான போராட்டங்கள் மட்டுமே அதற்கு அழுத்தம் தரும். அந்த அழுத்தம் தரும் பணியில் எங்களின் மிகச் சிறிய பங்களிப்பாக, பெருங்கடலின் சிறு துளியாக,  எங்கள் மகளிர் துணைக்குழுவின் சார்பில் இன்று மாலை வேலூர் மாவட்ட ஆட்சியரகம் முன்பாக ஒரு தர்ணா போராட்டத்தை நடத்துகிறோம்.

எங்களோடு கை கோர்க்க, குரலெழுப்ப, நீங்களும் வாருங்களேன், போராட்டத்தில் இணையுங்களேன்,
  
பின் குறிப்பு : மகளிர் தினத்தன்று நடத்தாமல் ஏன் மறுநாள் நடத்துகிறீர்கள் என்று உங்களுக்கு ஒரு கேள்வி எழலாம். காவல்துறை அனுமதி நேற்று கிடைக்கவில்லை. அதனால் இன்று.


2 comments: