Thursday, March 16, 2017

கோம்ரேட் ரொமன் - அழைத்தது யாரோ?





மேலே உள்ள படத்தை எங்கள் தோழர் ஒருவர் முகநூலில் பகிர்ந்திருந்தார். அதை பார்த்தவுடன் எனக்கு ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது.

அது லேண்ட்லைன் காலம்.

அன்றொரு நாள் இரவு நான் வீட்டிற்குப் போனதும் உங்களுக்கு தோழர் ரவீந்திரநாதனிடமிருந்து தொலைபேசி வந்தது என்று சொன்னார்கள். தோழர் ரவீந்திரநாதன் அப்போது எங்கள் தென் மண்டலத் தலைவர். எர்ணாகுளத்தில் இருந்தார். என்ன சொன்னார் என்று கேட்டதற்கு பிறகு அழைப்பதாக சொல்லி விட்டார் என்றார்கள்.

தென் மண்டலத்தலைவர் அழைத்துள்ளதால் முக்கியமான விஷயமாக இருக்கும். அவர் மீண்டும் கூப்பிடும்வரை நாம் காத்திருக்க வேண்டாம், நாமே அழைப்போம் என்று பார்த்தால் ஒரு சிக்கல்.

டிஜிட்டல் டைரி நினைவில் உள்ளதா? தொலைபேசி எண்களை அதில்தான் சேமித்து வைத்திருந்தேன். பேட்டரி மாற்ற வேண்டிய நிலையில் அது உயிரை விட்டிருந்தது. முன்னொரு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட எண்கள் நினைவிலேயே இருக்கும். அந்த நினைவுத் திறனின் அழிவு டிஜிட்டல் டைரியிலிருந்துதான் தொடங்கியது. மொபைல் காலத்தில் சுத்தமாக அழிந்து விட்டது.

அப்போதைய தென் மண்டல இணைச்செயலாளர் தோழர் தரணிபதி அவர்களின் எண் நினைவில் இருந்தது. அவரிடமிருந்து தோழர் ரவீந்திரநாதன் அவர்களின் எண்ணை வாங்கி தொலைபேசி செய்தால் நான் அழைக்கவில்லையே என்று சொல்லி விட்டு பொதுவாக இயக்கங்கள் பற்றி விசாரித்து விட்டு போனை வைத்து விட்டார்.

என் மனைவியிடம் கேட்டேன்.

கோம்ரேட் ரொமன் இருக்கிறாரா என்று கேட்டார். கொஞ்ச நாள் முன்பு திருப்பத்தூரில் நடந்த மாநாட்டில் தோழர் ரவீந்திரநாதன் பேசுகிற போது அவர்தான் மூன்று நான்கு முறை கோம்ரேட் ரொமன் என்று குறிப்பிட்டார். அதனால் அவராகத்தான் இருக்கும் என்று நினைத்தேன் என அவர் சொல்லிவிட்டார்.  

அப்படியென்றால் அழைத்தது யார்?

அடுத்த அரை மணி நேரத்தில் விடை கிடைத்தது.

அப்போதும் என் மனைவிதான் தொலைபேசியை எடுத்தார்கள்.

மீண்டும் கோம்ரேட்  ரொமன் என்று அழைத்த குரல்

அப்போதைய கோட்டயம் கோட்டப் பொதுச்செயலாளரும் தற்போதைய தலைவருமான தோழர் பேபி ஜோசப்.

ஒருத்தர் பெயரை தப்பா உச்சரிச்சா பரவாயில்லை. ஒரு மாநிலத்தைச் சேர்ந்த எல்லாரும் அப்படியே உச்சரிச்சா, குழப்பம் வரத்தானே செய்யும். 


மேலே உள்ள படத்தில் தோழர் ரவீந்திரநாதனும் தோழர் பேபி ஜோசப்பும் உள்ளார்கள். 

இப்போதெல்லாம் கேரளத்தோழர்கள் ராமன் என்றுதான் அழைக்கிறார்கள். ஆனால் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு அப்போதும் இப்போதும் எப்போதும் “ரமான்”தான். .

2 comments:

  1. சுவாரஸ்யம். பெயர் குழப்பம் வரத்தான் செய்யும்.

    ReplyDelete