Tuesday, February 14, 2017

ஜெ - இறந்ததால் பிழைத்தவர்




நீண்ட காலமாக காத்திருந்த தீர்ப்பு ஒரு வழியாக வெளியே வந்து சசிகலாவின் முதல்வர் கனவில் கல்லைத் தூக்கிப் போட்டு விட்டது

குமாரசாமி கணக்கு தப்புக்கணக்கு என்பது நிரூபணமானதில் மகிழ்ச்சி. மைக்கேல் குன்ஹா  அளித்த தீர்ப்பு நிலை நாட்டப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை சசிகலாவுக்கு எதிரான மக்கள் வரவேற்கின்றனர். அது இயல்பானது. ஜெ வின் மரணத்தின் மர்மத்துக்கு அவர்தான் காரணம் என்ற கருத்து மக்கள் மனதில் மேலோங்கி விட்டதுதான் அவர் மீதான வெறுப்பிற்கும் அவர் முதலமைச்சராகக்கூடாது என்ற கருத்து பரவியதற்கும் முக்கியமான காரணம். 

சசிகலா எதிர்ப்பாளராக உள்ள ஜெயலலிதா ஆதரவாளர்கள் பலரும் இந்த தீர்ப்பை வரவேற்றுள்ளதுதான் வியப்பாக இருக்கிறது. சசிகலா சிறைக்குப் போவதற்கு ஓ.பி.எஸ் உள்ளிட்டவர்கள் இனிப்பு கொடுத்தெல்லாம் கொண்டாடியுள்ளார்கள். 

அவர்கள் தெரிந்து செய்தார்களா இல்லை அவர்களின் புரிதல் அவ்வளவுதானா என்று தெரியவில்லை.

சொத்து குவிப்பு வழக்கின் முதல் குற்றவாளியே ஜெயலலிதாதான். உச்சநீதி மன்ற தீர்ப்பு ஜெயலலிதாவை நிரபராதி என்றெல்லாம் சொல்லவில்லை. மைக்கேல் குன்ஹாவின்  தீர்ப்பு  சரி என்று சொன்னால் என்ன அர்த்தம்?

ஜெயலலிதா குற்றவாளி. அவருக்கு விதிக்கப்பட்ட நான்கு ஆண்டு சிறைத் தண்டனையும் நூறு கோடி ரூபாய் அபராதமும் சரி என்பதுதான் அர்த்தம்.

ஜெயலலிதா இறந்து போன ஒரே காரணத்தால் மட்டுமே அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஒரு வேளை அவர் உயிரோடு இருந்திருந்தால் அவருக்கும் சிறை தண்டனையும் அபராதமும் கிடைத்திருக்கும். 

ஜெயலலிதா இறந்து போனதால் தண்டனையிலிருந்து தப்பித்தார். உயிரோடு இருக்கிற காரணத்தால் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் சிறைக்கு போகிறார்கள்.

இறந்து போனதால் ஜெயலலிதாவிற்கு புனிதர் பட்டம் அவசியமே இல்லை. ஜெயலலிதா பற்றி எதுவும் பேசாமல் சசிகலாவிற்கு கிடைத்த தண்டனை பற்றி மட்டுமே பேசுவது அப்பட்டமான சந்தர்ப்பவாதம் என்பதைத் தவிர வேறு எதுவுமில்லை.

 

1 comment:

  1. கவர்னர் ஏழரைக்கு அப்பொய்ன்ட்மென்ட் குடுத்த போதே
    தெரிந்து விட்டது. இது அவ்வளவுதான் என்று . இறுமாப்பு வென்றதாக சரித்திரம் இல்லை.
    ஒரு "சிங்கம்" முயலாகிறது.][

    ReplyDelete