Thursday, February 9, 2017

இந்தியாவிலேயே இருந்தா இப்படித்தான்

தமிழகத்தின் பரபரப்பிற்கு இடையில் அதிக கவனம் பெறாத ஒரு விஷயம், நாடாளுமன்றத்தில் மோடி வெளிப்படுத்திய காமெடி மற்றும் தரக்குறைவான பேச்சுக்கள்.

குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி சொல்லும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பிரதமர்தான் பதில் சொல்ல வேண்டும். அதனால் எழவே என்று மக்களவைக்கு முதல் நாள் வந்தார். 

அங்கே இரண்டு தத்துவ முத்துக்களை உதிர்த்தார்.

ஊழல் காரணமாகத்தான் நில நடுக்கம் வருகிறதாம்.  பிள்ளையார் தலைக்கு பிளாஸ்டிக் சர்ஜரியை உதாரணமாக சொன்ன அறிவியல் மேதை அல்லவா? அதுதான் அடுத்த கண்டுபிடிப்பை அவிழ்த்து விட்டுள்ளார். வியாபம் ஊழல், கடலை உருண்டை ஊழல் எல்லாம் இந்த கணக்கில் உண்டா என்றும் சொல்லியிருக்கலாம். அதானி, அம்பானி, மல்லய்யா ஆகியோருக்கு அள்ளிக் கொடுத்தால் என்ன வரும் என்பதை அறிவியலுக்கான நோபல் பரிசை பெற தகுதியுள்ள மோடி சார் சொல்வார் என்று நம்புகிறேன்.இதோடு நிறுத்தினாரா?

சுதந்திரப் போராட்டத்தில் உயிர் துறக்க வாய்ப்பில்லாத காரணத்தால்தான் அவர் தேச சேவை செய்வதாக அடுத்த உடான்ஸையும் எடுத்து விட்டார். செல்லா நோட்டு முடிவின் காரணமாக 132 பேர் உயிர் துறந்தது தேச சேவை என்று சொல்லாதவரை மகிழ்ச்சி. ஆமாம் சுதந்திரப் போராட்டத்திற்கும் காவிக் கூட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? சுதந்திரப் போராட்டத்தை காட்டிக் கொடுத்தவர்கள் அல்லவா இவர்கள்?மறு நாள் மாநிலங்களவையில் பேசியதுதான் அநாகரீகத்தின் உச்சம். 

"ரெயின் கோட் அணிந்து கொண்டு குளியறையில் குளிக்கும் வித்தையில் மன்மோகன்சிங் வல்லவர்"

மன்மோகன்சிங் மீது விமர்சனம் செய்யக் கூடாது என்று நான் சொல்லவில்லை. ஆனால் இப்படி பேசியதன் மூலம் பிரதமர் பகுதிக்கு தான் கொஞ்சம் கூட அருகதை இல்லாதவர் என்பதை மீண்டும் நிரூபித்து உள்ளார்.

இத்தனை உளறலுக்கும் என்ன காரணம்? 

நவம்பர் மாதம் ஜப்பானுக்கு போனதுதான். அதற்குப் பிறகு அவர் வெளிநாட்டுக்கே செல்லவில்லை. இந்தியாவிலேயே இருப்பதால் பாவம் அவர் தடுமாற்றத்தில் உள்ளார் போலும். ஏற்கனவே முரடர், அதோடு முட்டாள்தனமான முடிவால் பெரும் அதிருப்தியை சம்பாதித்து விட்டார். அதோடு வெளிநாடு போக முடியாத மன அழுத்தமும் சேர்ந்து விட்டது. அத்னால் அபத்தமாக பேசுவதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆகவே முதலில் அவரை வெளிநாடு எங்காவது அனுப்புங்கள், குறைந்தபட்சம் பாகிஸ்தானுக்காவது அனுப்புங்கள்.

 
 

2 comments:

  1. //குறைந்தபட்சம் பாகிஸ்தானுக்காவது அனுப்புங்கள்// அவரையே பாகிஸ்தானுக்கா? ஓவர் நக்கல்

    ReplyDelete
  2. ivaru poranthathe sudanthirathuku apromthaan.ennama reel vitraru samii mudiayala

    ReplyDelete