Monday, February 20, 2017

சட்டை கிழியவில்லை என சந்தோஷப்படு




முன் குறிப்பு : சனிக்கிழமை அன்றே எழுதத் தொடங்கியது. எங்களின் மகத்தான தலைவர் தோழர் ஆர்.ஜி அவர்களின் மறைவால் பாதியிலேயே நின்று விட்டது.  அவரது இறுதி நிகழ்ச்சிக்காக நேற்று சென்னை சென்று விட்டதால் இப்போதுதான் முடிக்கிறேன்.

தமிழக சட்டப்பேரவை பலப்பரிட்சை களேபரங்களுடன் சட்டை கிழிப்புக்கள், உண்ணாவிரதம், கைதுகளோடு நடந்து முடிந்து எடப்பாடி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடந்த எதுவுமே சரியில்லை. அதிமுகவின் இரண்டு அணிகள், சபாநாயகர்,  திமுக  என யாருமே ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் யதார்த்தம்.

சட்டப்பேரவையில்தான் பெரும்பான்மை தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் உடனடியாக அவை கூட்டப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திக் கொண்டிருந்த திமுக நம்பிக்கை வாக்கெடுப்பான நாள் அறிவிக்கப்பட்டதும் வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையையும் ரகசிய வாக்கெடுப்பு என்ற கோரிக்கையையும் முன்வைத்தது. இதிலே ரகசிய வாக்கெடுப்பு என்ற கோரிக்கையை மட்டும் அவர்கள் வலியுறுத்தி இருக்கலாம். இன்னொரு நாள் என்று சொல்லும் போதே அவர்களால் கூவாத்தூரில் அடைபட்டுக் கிடந்த ஆட்டு மந்தையிலிருந்து யாரையும் இழுக்க முடியவில்லை என்பதையே காண்பித்தது.

கூவாத்தூரில் சகல சுகபோகங்களையும் அனுபவித்துக் கொண்டிருந்த ஆட்டு மந்தைக் கூட்டத்தை அப்படியே போதையில் அழைத்து வந்து சாவி கொடுத்த பொம்மைகளாக மாற்றி எழுந்து நிற்க வைத்து வெற்றி பெற்றதில் எடப்பாடிக்கு எந்த பெருமையோ, வெற்றியோ, ஓங்கி அடிச்ச ஒன்றரை டன் சத்தியத்தை நிறைவேற்றிய திருப்தியோ கிடையாது. ரகசிய வாக்கெடுப்பு கூடாது என்று சபாநாயகரை முடிவெடுக்க வைத்ததே தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள எம்.எல்.ஏ க்கள் மீதான நம்பிக்கை குறித்த அச்சம்தானே! ரகசிய வாக்கெடுப்பு நடந்திருந்தால் ஒரு வேளை மனசாட்சி என்ற ஒன்று அந்த மந்தை ஆடுகளுக்கு இருந்திருந்தால் இன்றைக்கு ஐந்து கோப்புகளில் கையெழுத்து போடும் வாய்ப்பு கிடைக்காமல் கூட போயிருக்கலாம்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது முதல் சில நாட்கள் எதுவும் செய்யாமல் இருந்த போது "மிக்ஸர் பன்னீர்" என்று ஒரு பட்டம் கொடுத்தார்கள். அந்த பட்டத்திற்கு தான் தகுதியானவர் என்பதை சனிக்கிழமை மீண்டும் நிரூபித்தார் அவர். பாவம் அவருக்கு ஆலோசனை சொன்னவர்கள்  அந்தர்தியானத்துக்கு சென்று விட்டார்களோ?

திமுக நல்ல வாய்ப்பை கோட்டை விட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் செயல் திட்டத்தில் ஏதோ கோளாறு. க்ளைமேக்ஸ் சீனில் வ்ர வேண்டிய சண்டைக் காட்சியை ஓபனிங் சீனிலே நடத்தி விட்டதால் க்ளைமேக்ஸ் காட்சியில் அவர்களுக்கு வேலையே இல்லாமல் போய் விட்டது. 

வாக்கெடுப்பு வரை அவர்கள் பொறுமை காத்திருந்தால் நிலைமைகள் ஒரு வேளை மாறி இருக்கலாம். தேவே கௌடா நம்பிக்கை வாக்கெடுப்பு சமயம் பேசுகிற போது சீத்தாராம் கேசரியைக் காண்பித்து "The Old Man is in a hurry" என்று சொன்னதுதான் நினைவுக்கு வந்தது. அது போல Stalin was in a hurry. பாவம் அவரும் என்ன செய்வார்? இலவு காத்த கிளி கதை அல்லவா அவருடையது. 

கடைசி காட்சி வரை திமுக பொறுமை காத்திருக்கலாம்.
இப்போ சட்டை கிழிந்ததுதான் மிச்சம்.

சபாநாயகரைப் பற்றி என்ன சொல்ல? கூவாத்தூரில் அடைபடாமலே கூவாத்தூர்  மனோபாவத்துடன்தான்  இருந்தார். நடந்த களேபரங்கள் ஏற்புடையது அல்ல. ஆனால் அதற்கு அவர் ஜாதிய முலாம் பூசியது மோசமானது. தமிழகத்தில் தீண்டாமைக் கொடுமையோ அல்லது ஆணவக் கொலைகளோ கிடையாது என்று முந்தைய ஜெயலலிதா ஆட்சியில் சட்டமன்றத்தில் ஓ.பி.எஸ் சொன்ன போது அதை மறுத்திருந்தால் அவர் நியாயவான். அவருடைய மாவட்டத்தில்தான் கோகுல்ராஜ் கொலை நடந்தது. டி.எஸ்.பி  விஷ்ணுபிரியா தற்கொலை செய்து கொண்டார். ஆனால் அப்போதெல்லாம் அவர் வாய் திறக்கவே இல்லை.

இப்படி எதுவுமே சரியில்லாத போது எதை எழுதுவது என்று எரிச்சல்தான் வருகிறது. அதுவும் இத்தனை கூத்துக்களுக்கு மத்தியில் எடப்பாடி தக்கவைத்துக் கொண்ட பதவி தினகரனுக்கு முதல்வராகும் ஆசை வரும் வரையில்தான் (எடப்பாடியைப் பார்த்து ஸ்டாலின் சிரித்தால் அந்த ஆசை வந்து விடும்) என்று நினைக்கும்போது இன்னும் எரிச்சல் அதிகமாகிறது.

இந்த கூத்துக்களில் ஒரே ஒரு சந்தோஷம்.

தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்த நம் சட்டை கிழியவில்லை. 

5 comments:

  1. ஆம், திமுக வின் செயல்திறன் குறைபாடே அதிமுக வை வாழவைத்துக் கொண்டிருக்கிறது என்பது தெளிவு. பாவம் ஸ்டாலின்.

    ReplyDelete
  2. //"நடந்த எதுவுமே சரியில்லை. அதிமுகவின் இரண்டு அணிகள், சபாநாயகர், திமுக என யாருமே ஒழுங்காக நடந்து கொள்ளவில்லை என்பதுதான் யதார்த்தம்"//

    //”கடைசி காட்சி வரை திமுக பொறுமை காத்திருக்கலாம்.
    இப்போ சட்டை கிழிந்ததுதான் மிச்சம்”//

    ஒழுங்காக நடந்து கொள்வது என்றால் எப்படி என்பதையும் விளக்கியிருந்தால் நன்றாக இருக்கும்.ஸ்டாலின் சட்டை கிழிபடாமல் அமைதியாக இருந்திருந்தால் மக்கள் அவரை இன்னுமொரு மிக்சர் தின்னியாக பார்த்து கேலியாக ஒதுக்கியிருப்பார்கள்.அவர் அங்கு அமைதியை குலைத்தது சரிதான்.அமளியில் ஈடுபடாமல் தொடர்ந்து முழக்கம் மட்டுமே எழுப்பியிருந்தாலும் அவரை குண்டுகட்டாக தூக்கி வெளியே போட்டு விட்டு இதே போல வாக்கெடுப்பை நடத்தி முடித்திருப்பார்கள்.எதிர்த்து ஓட்டு போட்டு ‘ஜனநாயக கடைமை’ ஆற்றியிருந்தால் என்ன முடிவாகியிருக்கும் என்பதையும் பார்க்க வேண்டும்.122/109 என்று பழனிசாமி அரசு வென்றது நியாயப்படுத்தப்பட்டிருக்கும்.

    பாராளுமன்றத்தில் சரிபாதியளவுக்கு உறுப்பினர்கள் ஒரு விஷயத்திற்காக அமளியில் ஈடுபடுவார்கள் எனில் அங்கே சபை ஒத்தி வைக்கப்படுகிறது.திரும்ப திரும்ப நாள் கணக்கில் அது தான் நடக்கும்.ஏதாவது ஒரு சமரசத்தை ஆளும் தரப்பு ஏற்க வில்லையெனில் எந்த தீர்மானமும் நிறைவேற்றப்படாமல் நாட்கள் கழியுமே தவிர உறுப்பினர்களை தூக்கி வெளியே போடுவதில்லையே? அதுவும் சபைக்காவலர்கள் சீருடையில் உயர் காவல் அதிகாரிகள் களமிறங்கினார்களே?
    //”திமுக நல்ல வாய்ப்பை கோட்டை விட்டு விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்”//

    ஆம்.உண்மைதான்.ஆனால் அது சட்டமன்றத்தில் அல்ல.அவர்கள் கோட்டைவிட்டது மெரினாவில் தான்.
    ”அவர்கள் நாடாளுமன்றத்துக்கு போன போது வீதியில் போராடுவது போல பேசினார்கள்;மறுபுறம் வீதிக்கு விரட்டப்பட்ட போதோ நாடாளுமன்ற கண்ணியத்துடன் நடந்து கொண்டார்கள்”// மார்க்சின் வார்த்தைகள் இவை.இது ஸ்டாலினுக்கு எப்படி அருமையாக பொருந்தி வருகிறது பாருங்களேன்.

    சட்டமன்றத்தில் சட்டை கிழிபடுமளவிற்கு போராடிய அதே ஸ்டாலின் தமிழகம் முழுவதும் ஒரு உணர்வெழுச்சி பரவ காரணமாக இருந்த அதே மெரினாவில் போய் உட்கார்ந்தார்.சில நிமிடங்களிலேயே மக்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றதை தொலைக்காட்சிகள் நேரடியாக காட்டின. திமுக கட்சிகாரர்களைத்தவிர பொதுமக்கள் அணிதிரண்டதையும் அவை அறிவிக்க தயங்கவில்லை.காவல்துறை கையை பிசைந்து ஸ்டாலினை கைதாகும் படி கிட்டத்தட்ட கெஞ்ச ஆரம்பித்தனர். இப்போது ஸ்டாலின் மக்களுடன் சங்கமித்து அவர்களுடன் போராடும் அருமையான ஒரு வாய்ப்பு தன் கண்முன்னே தெரிந்த நிலையில் மார்க்சு சொன்ன பாரளுமன்ற கண்ணியத்துடன் ஒரு கனவானாக காவல்துறைக்கு ஒத்துழைப்பு தந்து வேனில் போய் உட்கார்ந்து கொண்டார்.அவர் வேனை முற்றுகையிட்டு கட்சியினர் மறியல் செய்யத்துவங்கினாலும் அவர் ‘அரெஸ்ட்’ என்கிற வார்த்தையே போதுமானது என்று மக்களுக்கு எதிர் திசையில் பயணிக்க முனைந்தார்.இப்படியாக மக்களுடனும் இளைய தலைமுறையோடும் கூடி கலக்கின்ற தன் மடி மீது விழுந்த அருமையான வாய்ப்பை கடற்கரை மணலை தட்டுவது போல தட்டி விட்டு போய் விட்டார்.இன்றைக்கு மாணவர்கள் தம்முடன் இந்த அரசை தூக்கியெறிய இணைய வேண்டும் என கோரிக்கை வைக்கிறார்.தும்பை விட்டு வாலை பிடித்த கதை தான்.

    எனது பதில் ஒரு பதிவளவிற்கு நீண்டுவிட்டது.என் மனதில் ஊள்ளதையெல்லாம் எழுத வேண்டும் எனில் சொந்தமாக பதிவெழுதுவதே சரியென நினைக்கிறேன்.

    ReplyDelete
  3. Being a communist activist, who is your first enemy, BJP or ADMK. Since the past five months ADMK is tortured like anything by the BJP's central government for their favour in neet, gst, udai and food security bill. The bloody pandi who is then school education minister, about to sign all. You might be knowing panny selvem and naatram visva are hold by the BJP through various raids and they are acting as a slaves of BJP. In this situation it is the duty of DMK to join hands with ADMK to oppose BJP agenda over tamilnadu. Unfortunately DMK has no common-sense (it is better to offer a cup of urine from lalu and nitish to our politicians) to toggle this. In the videos it is clear that there is no harm to Stalin and his shirt but he himself torn off and shown to the media. In fact if his shirt is torn off inside the assembly, he has to arrange new shirt (ask his MLAs to remove their own shirt for him) and come out of the assembly like a LION. It is shame to say that he was treated as a comedian in north indian media on that day. In case, if ADMK is wiped out today, then DMK will be no more tomorrow. That is why veeramani and Pazha. nadumaran crying like anything, but stalin could not understand. In my point of view, ADMK requires the presence of DMK in tamilnadu politics, but DMK could not even think.

    ReplyDelete
  4. Still people talks about the number game. ADMK is having 134 MLAs and even the speaker announced 11 as opposed. Jaya is not there; speaker has not voted; one MLA from Coimbatore boycotted the assembly and one MLA (Arumugam) was in the hospital. That means the GOVT got only 119 votes (134-11-4) and how the Speaker announced as 122. Can this mismatch be a valid point in the court to give verdict against the Govt.

    ReplyDelete
  5. கூவத்தூரில் கும்பலாக இருந்துகொண்டு மது. மாது மற்ற சலுகைகள்
    (பணம் , தங்கம் கார் ) அனுபவித்துவிட்டு ஜனநாயக படுகொலை
    செய்த சட்டமன்ற உறுப்பினர்கள் எவனுக்கும் ஒரு ஒட்டு கூட இனிமேல்
    தமிழ்நாட்டில் அளிக்கக்கூடாது என்பதை நாம் உறுதி செய்வோம் .

    ReplyDelete