Wednesday, November 4, 2015

ஒவ்வொரு பக்கமும் அதிர வைக்கும்


செப்டம்பர் மாதம் சேலம் கோட்டச் சங்கத்தின் மாநாட்டிற்குச் சென்ற போது அங்கே அமைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகம். நானூறுக்கும் அதிகமான பக்கங்கள் என்பதால் படிக்கத் தொடங்குவதில் கொஞ்சம் தயக்கமும் கூட இருந்தது.

கடந்த மாதத்தில் ஒரு நாள் சென்னைக்கு சென்ற போதுதான் படிக்கத் தொடங்கினேன். ஏழே முக்கால் ரயிலை பிடிக்க வேண்டும் என்பதற்காக காலையில் சீக்கிரமே கண் விழித்ததால் ரயிலில் கொஞ்ச நேரம் உறங்க வேண்டும் என்றுதான் நினைத்திருந்தேன். ரயிலுக்காக காத்திருந்த போது படிக்கத் தொடங்கினேன். அதற்குப் பிறகு தூக்கமாவது ஒன்றாவது? மறு நாள் நள்ளிரவில் அதை முடிக்கும் வரை வேறு எதைப் பற்றியும் சிந்திக்கவும் முடியவில்லை. அதன் பின்பும் கூட. சமீப காலத்தில் நான் படித்த மிகச் சிறந்த நூல் என்று இதைத்தான் சொல்வேன்

நூல் அறிமுகம்

நூல்                               : மௌனத்தின் சாட்சியங்கள்.
ஆசிரியர்                          : சம்சுதீன் ஹீரா
வெளியீடு                         : பொன்னுலகம் பதிப்பகம்
                                      திருப்பூர்
விலை                              ரூபாய் 350.00

நீதி. . . !
தாமதிக்கப்பட்ட நீதி
மறுக்கப்பட்ட நீதிக்குச் சமமாம்
நியாயவான்கள் சொல்கிறார்கள்

என்று தொடங்கும் நெடுங்கவிதையோடு தொடங்குகிறது இந்த நூல்.

என் ஆயுளின் கால்பாகத்தை களவாடி விட்டு
கருணையோடு விடுதலை செய்திருக்கிறது நீதி
என்னை “குற்றமற்றவன்” என்று

என் வாலிபத்தில் வேர்களில் விஷம் எறிந்துவிட்டு
வெட்கமின்றிச் சொல்கிறது நீதி
என்னை “நிரபராதி” என்று

இந்த இரண்டு வரிகளே இந்த நாவலின் கதையை முழுமையாகச் சொல்லி விடுகிறது. 

கோவை வெடிகுண்டு சம்பவம் தொடர்பாக காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைவாசமும் சித்திரவதையும் அனுபவித்து வாழ்க்கையைத் தொலைத்த ஒரு அப்பாவி இளைஞனின் வலியை பகிர்ந்து கொள்கிறது இக்கதை.

யாசர் என்ற இளைஞன் ஒரு ரயில் பயணத்தின் போது தன் சோகக் கதையை சக பயணியிடம் விவரிப்பதாய் சொல்கிறது நூல். அமைதியான கோவை நகரத்தை மத வெறியர்கள் எவ்வாறு பதட்டமும் நம்பிக்கையின்மையும் கொண்ட நகரமாக மாற்றினார்கள் என்பது மிகவும் துல்லியமாகவும் நுட்பமாகவும் விவரிக்கிறது.

இ.இ.ச, அல்ஜிகாதி என்ற இரு அமைப்புக்கள் எப்படி திட்டமிட்டு பகைமைத் தீயை பரவ விட்டார்கள், அதன் பின்னணியில் இருந்த முதலாளிகளின் வணிகப் போட்டி, ஒடுக்கப்பட்ட மக்களை எப்படி சிறுபான்மை மக்களுக்கு எதிராக கொம்பு சீவி விட்டார்கள், தீவிரவாதம் எப்படி வேரூன்றியது, பாபர் மசூதி இடிப்புக்கு முன்பும் பின்பும் மாறிய நிலைமைகள் ஆகியவற்றை படிக்கும் போது உங்களால் இதனை நாவலாக கருத முடியாது. ஆவணம் என்றுதான் உணர முடியும்.

சராசரி உழைப்பாளி இளைஞனான யாசர், இந்த மாயச்சூழலில் எப்படி சிக்கித் தவிக்கிறான் என்பதை நிகழ்ந்த பல சம்பவங்களின் வாயிலாக விவரிக்கிறார். கோவைக் கலவரங்களுக்கு வித்திட்ட போக்குவரத்துக் காவலர் கொலையில் தொடங்கி வெடி குண்டு வெடிப்பு வரை நடந்த சம்பவங்களை பக்கத்தில் நின்று நாம் பார்ப்பது போல நம் இதயத்துடிப்பை அதிகரிக்கும் வேலையை செய்துள்ளார் 

மூளைச்சலவைக்கு உள்ளாகி கலவரத்தில் ஈடுப்பட்ட அடித்தட்டு மக்கள், சிறையில் இருந்த போது கண்டு கொள்ளப்படாமல் போவதால் உண்மைகளை உணர்ந்து மீண்டும் ஒரு கலவரம் வெடிக்கும் போது சிறுபான்மை மக்களுக்கு ஆதரவாக நிற்பது இக்கதையின் முக்கியமானதொரு சம்பவம். அப்படிப்பட்ட மக்கள்தான் இன்னும் பெரும்பான்மையாக இருக்கிறார்கள் என்பது ஆறுதல் அளிக்கிறது.

வன்முறைச் சம்பவங்களை படிக்கிற போது நம் மீதே ரத்தம் பீய்ச்சியடிக்கப்படுவது போன்றதொரு உணர்வு தோன்றினாலும் அதுதான் உண்மை என்பதை உணருகையில் வலிதான் ஏற்படுகிறது. காவல்துறைக்குள் காவியாடுகள் ஊடுறுவியுள்ளது என்பதையும் பல சம்பவங்களின் போது அவர்கள் மௌன சாட்சியாக வேடிக்கை பார்த்தது மட்டுமல்ல, சிறுபான்மை மக்களுக்கு எதிராக நின்றார்கள் என்ற கசப்பையும் நம்மால் மறக்க முடியவில்லை. அப்பாவிகள் எத்தனையோ பேர் மீது பொய் வழக்கு போடப்பட்டு அவர்கள் சிறையில் சந்திக்கும் சித்திரவதைகளை படிக்கையில் ஈர நெஞ்சம் கொண்டவர்கள் கண்ணில் நீர் ததும்பும்.

மத வெறி அமைப்புக்களின் தீமையை புரிந்து கொண்டவர்களாக இடதுசாரிகள் மட்டுமே உள்ளனர் என்பதும் இக்கதையில் மிகச் சரியாக பதிவு செய்யப்பட்டுள்ளது.

உண்மைகளை உள்ளது உள்ளபடி துல்லியமான நேர்மையுடன் பதிவு செய்துள்ள நூலாசிரியரின் முதல் நாவல் இதுதான் என்பதை நம்ப முடியாத அளவிற்கு அவர் எழுத்து நம்மை கட்டிப் போடுகிறது. தோழர் ஸ்ரீரசா அவர்களின் முகப்போவியம் நூலுக்கு மெருகூட்டுகிறது.

நீதிக்கான எங்கள் பயணம் - இன்னும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது . .
நீதிக்கான எங்கள் குரல் - இன்னும்
ஒலித்துக் கொண்டே இருக்கிறது 

என்றுதான் தொடத்தில் வரும் கவிதை நிறைவடையும். அப்படி நீதிக்கான பயணத்தை தொடர வேண்டிய அரசியல் நிலைமை இன்றும் உள்ளது என்பதும் நீதிக்கான குரலை இன்னும் அழுத்தமாக, ஆவேசமாக ஒலிக்க வேண்டிய அவசியத்தை இன்றைய ஆட்சியாளர்கள் உருவாக்கியுள்ளார்கள் என்பதுதான் சோகமான யதார்த்தம்.

கோவைக் கலவரங்கள் பற்றி முழுமையாக உணர்ந்து கொள்ள உதவுகிற அற்புதமான ஒரு நாவலை அளித்த தோழர் சம்சுதீன் ஹீரா அவர்களுக்கு அன்பும் வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்




4 comments:

  1. நன்றி தோழர் மிக்க மகிழ்ச்சி..

    ReplyDelete
  2. எனதுவாழ்த்துக்களையும் இணைத்துக் கொள்ளுங்கள் நண்பரே
    அவசியம் வாங்கிப் படிக்கின்றேன்
    நன்றி

    ReplyDelete
  3. நல்லதொரு நூல் அறிமுகம்! நன்றி!

    ReplyDelete
  4. நல்லதொரு அறிமுகம்...பாராட்டுக்கள் தோழர்

    ReplyDelete