Sunday, November 29, 2015

ஊடகங்கள் ஒதுக்கிய அற்புத உரை


அரசியல் சாசன அமைப்பு தினம் என்ற பெயரில் நடைபெற்ற நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் சீதாராம் யெச்சூரி நிகழ்த்திய அற்புதமான உரையை பெரும்பாலான ஊடகங்கள் கண்டுகொள்ளவே இல்லை. 

சோனியா காந்தியும் நரேந்திர மோடியும் நிகழ்த்திய வெற்று லாவணிக்கு கொடுத்த முக்கியத்துவத்தை தோழர் யெச்சூரியின் அர்த்தம் பொதிந்த, ஆழமான உரைக்கு அளிக்க தவறி விட்டன.

டாக்டர் அம்பேத்கருக்கு செலுத்த வேண்டிய உண்மையான அஞ்சலி என்ன என்பதை தோழர் யெச்சூரி சொல்வதையும் சுதந்திர வரலாற்றுக்கு தொடர்பில்லாத பாஜக வரலாற்றை எப்படி திரிக்க முயல்கிறது என்பதையும் அவர் அம்பலப்படுத்தியதையும் முதலாளித்துவ ஊடகங்களால் எப்படி பிரசுரிக்க முடியும்.

தீக்கதிர் நாளிதழில் அவர் ஆற்றிய உரையின் சாராம்சம் இன்று பிரசுரிக்கப்பட்டுள்ளது. அதனை கீழே பகிர்ந்து கொண்டுள்ளேன். அதிலும் கூட சில பகுதிகள் விடுபட்டுள்ளது. 

இந்திய அரசியலின் மிக முக்கியமான ஆளுமையான தோழர் சீதாராம் யெச்சூரி அவர்களின் பன்முக ஆற்றலை நீங்கள் நேரடியாக உணர்ந்து கொள்ள அவரது உரையின் காணொளியை இந்த இணைப்பின் மூலம் காணுங்கள்.  ஐம்பது நிமிடங்களை பயனுள்ளதாக செலவிடுங்கள். சில நிமிடங்களில் ஹிந்தியில் பேசினாலும் பெரும்பாலும் ஆங்கிலத்தில் அமைந்துள்ளது. 

இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் மிக முக்கியமான உரைகளில் ஒன்று என ஃப்ரண்ட் லைன் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் தன் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளது மிகையல்ல என்பதை நீங்களும் உணர்வீர்கள். 


இனி தீக்கதிர் வெளியிட்டதை படியுங்கள்

-------------------------------------------------------------------------------------------------------------------------------
அடிமைகளும் புரட்சியாளர்களும்

 சீத்தாராம் யெச்சூரி

பாஜக அரசாங்கம், “அரசமைப்புச் சட்டத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக’’ நாடாளுமன்றத்தில் கூறியிருக்கிறது. “மீண்டும் உறுதிப்படுத்திக் கொள்ளுதல்’’ என்கிற கேள்வி ஏன் எழுந்தது? அரசமைப்புச் சட்டத்தின் கீழ் உறுதிமொழி எடுத்துக்கொண்டுதான் நாம் அனைவருமே இங்கே அமர்ந்திருக்கிறோம். பின் “மீண்டும் உறுதிப்படுத்திக்கொள்ளுதல்’’ என்கிற நாடகம் ஏன்? அரசமைப்புச் சட்டம் இல்லையேல், நீங்கள் இங்கே இருக்கவே முடியாது. இதனை அரசாங்கம் தெரிந்துகொள்ள வேண்டும்.
நவம்பர் 26ஐ ஏன் அரசமைப்பு தினமாகக் கொண்டாடுகிறீர்கள்?வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம். நவம்பர் 26 அன்றுதான் இந்திய அரசமைப்புச் சட்டம், அரசியல் நிர்ணய சபையின் தலைவரால் கையெழுத்திடப்பட்டது. அதன்மீது வாக்கெடுப்பு நடந்து அது நிறைவேற்றப்பட்டது. 

அதில் மிகவும் தெளிவாக, “1950 ஜனவரி 26 முதல் இந்தியா குடியரசாக இருந்திடும்’’ என்று கூறப்பட்டிருக்கிறது. அப்படியானால் நவம்பர் 26க்கு எப்படி முக்கியத்துவம் தருகிறீர்கள்? அன்றைய தினம் தான் அரசியல் நிர்ணயசபை இந்த அரசமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது என்பது உண்மைதான்; ஆயினும் அன்றைய தினமே அது அரசமைப்புச் சட்டம் ஆகிவிடவில்லை. அது இந்நாட்டின் அரசியல் சாசனமாக 1950 ஜனவரி 26 அன்றுதான் மாறியது. 
அரசியல் நிர்ணயசபை மீண்டும் 1950ஜனவரி 24 மற்றும் 25இல் கூடி, “ஜன கன மன’’ பாடலை தேசிய கீதமாக நிறைவேற்றியது, நவம்பர் 26 அன்று அரசமைப்புச் சட்டத்தில் உள்ள 395 பிரிவுகளில் 15 மட்டும்தான் அமலுக்கு வந்தன. 1950 ஜனவரி 26 அன்றுதான் அனைத்துப் பிரிவுகளும் அமலுக்கு வந்தன. ஆளும் கட்சியைச் சேர்ந்த ஒருமூத்த தலைவர் பிரதமரை மிகச்சிறந்த `நிகழ்வு மேலாளர்’ (Event Manager)  என்று வர்ணித்துள்ளார். லண்டன், பின்னர் மலேசியா, பின்னர் ஆசியா, பின்னர் அரசமைப்புச்சட்ட தினம். நாளையிலிருந்து அவரது பயணம் பாரீசாக இருக்கலாம். இவ்வாறு பிரதமரின் நிகழ்ச்சி நிரலை ஆய்வு செய்யும்போது, நாடாளுமன்றத்தின் நிகழ்வு வலுவற்றதாக மலினமானதாக மாற்றப்பட்டிருப்பது தெரிகிறது.

ஜவஹர்லால் நேருவின் பங்களிப்பு

ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த “குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள்” குறித்த தீர்மானத்தின் (டீதெநஉவiஎநள சுநளடிடரவiடிn’) அடிப்படையில்தான் அரசியல் நிர்ணயசபை தொடங்கியது என்பது இந்த அரசுக்குத் தெரியுமா? அரசியல் நிர்ணயசபையின் மொத்த 11 அமர்வுகளில் 6 அமர்வுகள் இந்த “குறிக்கோள்கள் அல்லது நோக்கங்கள்” பற்றிய தீர்மானத்தின் மீதுதான் நடைபெற்றன என்பது இந்த அரசுக்குத் தெரியுமா?அரசியல் நிர்ணயசபையில் நடைபெற்ற விவாதங்களில் பெரும்பகுதி ஜவஹர்லால் நேரு கொண்டுவந்த தீர்மானத்தின் அடிப்படையில்தான் நடைபெற்றன. இதுதான் வரலாறு. நம்மில் பலர் சுதந்திரத்திற்குப்பிறகுதான் பிறந்துள்ளோம். நீங்கள் வரலாற்றை மாற்றி அமைத்துவிட முடியாது. புதிதாக ஒரு வரலாற்றை எங்களுக்குக் கூற முடியாது. 

அரசமைப்புச்சட்ட தினத்தை இப்போது திடீரென ஏன் அனுசரிக்கிறீர்கள்? 

தேசிய இயக்கத்தில் எந்தக்காலத்திலுமே எந்தப் பங்களிப்பினையும் செய்யாத நபர்கள், தேசிய இயக்கத்தைத் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப மாற்றுவதற்கான முயற்சி இது என்ற முடிவுக்கே நான் வர முடியும். ஓர் அரசிதழ் அறிவிக்கையில், “ஒவ்வோராண்டும் நவம்பர் 26 அரசமைப்புச்சட்ட தினமாகக் கொண்டாடத் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது’’ என்று திடீரென அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனை மத்திய அரசின் சமூக நீதி மற்றும் மேம்பாட்டு அமைச்சம் வெளியிட்டிருக்கிறது. இவ்வாறு ஒவ்வோராண்டும் தேசிய தினம் அனுசரிக்க இந்த அமைச்சகம் தீர்மானிக்க முடியுமா? மேற்படி அரசிதழ் அறிவிக்கை நவம்பர் 19 அன்று வெளியிடப்படுகிறது; ஆனால் அதற்கு முன்பே, நவம்பர் 10 அன்றே மேற்படி மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் “நவம்பர் 26ம்தேதி அரசமைப்புச்சட்ட தினம் அனுசரிக்க வேண்டும்’’ என்று சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. இது எப்படி? இங்கே என்ன நடக்கிறது? 

சங் பரிவாரம் குறித்துபிரிட்டிஷ் அரசாங்கத்தின் கணிப்பு

சங் பரிவாரங்கள் குறித்து அன்றைக்கு பிரிட்டிஷ் அரசாங்கம் எத்தகைய கணிப்பிற்கு வந்திருந்தது? 1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் நடைபெற்ற சமயத்தில் பிரிட்டிஷ் பம்பாய் உள்துறை கீழ்க்கண்டவாறு குறிப்பிட்டிருந்தது: “சங் பரிவாரம், சட்டத்திற்கு உட்பட்டு குற்றமற்றமுறையில் நடந்து கொள்கிறது, குறிப்பாக 1942 ஆகஸ்டில் நடைபெற்ற கலவரங்களில் பங்கேற்காமல் தவிர்த்துள்ளது.’’இது பிரிட்டிஷ் அரசாங்கம் செய்துள்ள பதிவு. 

இப்போது பாஜக உறுப்பினர் தருண் விஜய், கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக ஒரு குற்றச்சாட்டைக் கூறியுள்ளார். கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் பதிவு என்ன? அதையும் கூறுகிறேன். குறிப்பாக கான்பூர், ஜாம்ஷெட்பூர், அகமதாபாத் ஆகிய நகரங்களில் மிகப்பெரிய அளவில் நடைபெற்ற வேலைநிறுத்தங்களுக்குப்பின்னர், 1942 செப்டம்பர் 5 அன்று தில்லியிலிருந்து லண்டனுக்கு அனுப்பப்பட்ட ஒரு கடிதத்தில் கம்யூனிஸ்ட்டுகள் குறித்து பிரிட்டிஷ் அரசாங்கத்தினர் “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களில் பெரும்பான்மை யானவர்களின் அணுகுமுறை, அவர்கள் எப்போதுமே பிரிட்டிஷ் எதிர்ப்பு புரட்சியாளர்கள் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன,’’ என்று கூறியிருக்கிறார்கள். இதனை இந்திய நாடாளுமன்றத்தின் மத்தியக் கூடத்தில் குடியரசுத் தலைவரே குறிப்பிட்டிருக்கிறார்.

வழிகாட்டும் நெறிமுறைகள்

அரசமைப்புச் சட்டத்தின் வழிகாட்டும் நெறிமுறைகள் என்ன கூறுகின்றன?“நலிந்த பிரிவினரின் கல்வி மற்றும் பொருளாதார நலன்களுக்காக அரசு சிறப்புக் கவனம் செலுத்த வேண்டும்’’ என்கிறது. அம்பேத்கர் கூறியது என்ன? அதையேதான் அவரும் கூறினார்.அரசமைப்புச் சட்டம் 46 ஆவது பிரிவில் அது இருக்கிறது. அடுத்த பிரிவான 47 என்ன கூறுகிறது? மக்களின் வாழ்க்கைத் தரத்தையும், போஷாக்கையும் மேம்படுத்திட அரசு கவனம் செலுத்த வேண்டும். ஆனால், உலகில் ஊட்டச்சத்துக் குறைவால் வாடும் குழந்தைகள் அதிகமாக இருப்பது, இந்தியா இல்லையா? இது வெட்ககரமானதில்லையா? இதனை மாற்ற இந்த அரசு என்ன நடவடிக்கை மேற்கொண்டிருக்கிறது? உங்களுக்கு என்ன தேவை என்று நீங்கள் கருதுகிறீர்களோ அதைத்தான் நீங்கள் செய்துகொண்டிருக்கிறீர்கள். எனவேதான் உங்கள் உண்மையான நோக்கம் குறித்து சந்தேகம் எழுகிறது. 

அடிப்படை உரிமைகள் பகுதியில் 51-ஏ(எப்) பிரிவில் என்ன கூறப்பட்டிருக்கிறது? “நம் நாட்டின் மிகவும் வளமான பாரம்பரியப் பன்முகக் கலாச்சாரத்தை பேணிப் பாதுகாத்து மதித்து நடந்திட வேண்டும்’’ என்று அது கூறுகிறது. அத்தகையப் பன்முகக் கலாச்சாரத்தை நாம் பேணிப் பாதுகாக்கிறோமா? 51-ஏ(எச்) என்ன சொல்கிறது? “மக்களின் அறிவியல் உணர்வை, மனிதாபிமானத்தை மற்றும் எதையும் கேள்வி கேட்கும் உணர்வை வளர்த்திட’’ வேண்டும் என்கிறது. பிள்ளையார், பிளாஸ்டிக் சர்ஜரியால் உருவானார் என்றும், மகாபாரத காலத்தில் டெஸ்ட் ட்யூப் பேபி உருவானது என்றும் கூறுவதை நாம் சரி என்று சொல்லிவிட்டால் அது அறிவியல் உணர்வை வளர்ப்பதாகக் கூற முடியுமா?ஆனால் நமது பிரதமரே இப்படிப் பேசுகிறாரே?என்ன நடந்து கொண்டிருக்கிறது? நீங்கள் எதனை அமல்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் அமல்படுத்த விரும்புவதுதான் என்ன? தீவிரமான இந்துத்துவா நிகழ்ச்சிநிரலை (hயசனஉடிசந ழiனேரவஎய யபநனேய) புதுப்பித்துக் கொண்டிருக்கிறீர்கள். பசுப் பாதுகாப்பைப் புதுப்பிக்க விரும்புகிறீர்கள். 

அரசமைப்புச் சட்டம் 15 இவ்வாறு கூறுகிறது: “எந்தவொரு பிரஜையையும் மதம், இனம், சாதி, பாலினம், பிறப்பிடம் அல்லது இவற்றில் எதை ஒன்றையும் வைத்துப் பாகுபாடு காட்டக்கூடாது,’’ என்று கூறியிருக்கிறது. நம் உள்துறை அமைச்சர் `மதச்சார்பின்மை’ என்கிற வார்த்தை நம் அரசமைப்புச் சட்டத்தில் புகுத்தப்பட்டிருக்கிறது என்றும், அதுதான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் காரணம் என்றும் கூறியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. அதேபோல் நடிகர் அமீர்கான் மீது அவதூறு அள்ளிவீசப்படுகிறது. “அம்பேத்கர் இந்த நாட்டைவிட்டு வெளியேறவில்லை. ஆனால் அவர் இங்கேயே இருந்துதான் போராடினார்’’ என்று அமீர்கான் கூறியிருக்கிறார். அப்படிக் கூறியதற்காக நான் மகிழ்ச்சிகொள்கிறேன். 

இடதுசாரிகள்தான் இவ்வாறெல்லாம் பிரச்சனைகளை உருவாக்குகிறார்கள் என்று நீங்கள் கூறலாம். எங்கள் தரப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. அம்பேத்கர் இந்த நாட்டைவிட்டு வெளியேறவில்லை. அவர் ஒரு தேசாபிமானி. ஆயினும் அவர் இந்து மதத்தைத் துறந்து, புத்த மதத்தைத் தழுவினார். நீங்கள்இதனை நினைவில் கொள்ள வேண்டும். ஏன் அவர் அப்படிச் செய்தார்? சகிப்பின்மை பிரச்சனை இங்கேதான் வருகிறது. இவையெல்லாம் வரலாறு. இவற்றை நீங்கள் அழித்திட முடியாது. அதேபோன்று சகிப்பின்மை குறித்து டாக்டர் அம்பேத்கர் அன்று கூறியதையும் நீங்கள் கேட்க வேண்டும். அவர் என்ன சொல்கிறார்.“வரலாறு திரும்புமா? அதாவது, நாம் மீண்டும் நம் சுதந்திரத்தை இழப்போமா?’’“இந்தியர்கள் தங்கள் இனத்திற்கும் மேலாக நாட்டைக் கருதுவார்களா? அல்லது நாட்டிற்கும் மேலாக இனத்தைக் கருதுவார்களா? எனக்குத் தெரியவில்லை.’’ அம்பேத்கர் இன்றிருந்தால் என்ன கூறியிருப்பார்? “இந்தியர்கள் நாட்டைவிட மேம்பட்டதாகத் தங்கள் இனத்தைக் கருத வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்,’’ என்றே கூறுவார். 

இத்தகைய சகிப்பின்மைதான் இன்றைய தினம் நாட்டில் நடந்துகொண்டிருக்கிறது. அரசியல்கட்சிகள் நாட்டைவிட தங்கள் இனத்தை மேம்பட்டதாகக் கருதினால், நம் சுதந்திரம் இரண்டாவது தடவையாக ஆபத்திற்குள்ளாக்கப்படும்.இவ்வாறான நிலை நாட்டில் உருவாவதை நாம் அனைவரும் இணைந்துநின்று தடுத்தாக வேண்டும். இன்றைய தினம், டாக்டர் அம்பேத்கர் நாம் என்ன செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டாரோ அதைத்தான் மிகச்சரியாக நான் செய்து கொண்டிருக்கிறேன். அம்பேத்கர் தனது உரையில் கூறியிருப்பதைப்போலவே,“இத்தகைய சகிப்பின்மைக்கு எதிராக நாம் அனைவரும் எழுவோம்.’’

(நவ.27 அன்று மாநிலங்களவையில், டாக்டர் அம்பேத்கரின் 125ம் ஆண்டு கொண்டாட்டத்தையொட்டி அரசமைப்புச் சட்ட தின சிறப்பு அமர்வில் ஆற்றிய உரையிலிருந்து...)

தமிழில் : ச.வீரமணி

 

4 comments:

 1. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
  Replies
  1. உனக்கு வெட்கம், மானம், ரோஷம் எதுவுமே கிடையாதா? தம்பி என்று நீ அழைத்தால் அதை நான் டெலிட் செய்வேன் என்று தெரிந்தும் எழுதுகிற வக்கிர புத்திக்காரன நீ

   Delete
 2. This comment has been removed by a blog administrator.

  ReplyDelete
 3. அனைவருக்கும் சென்றடையும் வகையில் பகிர்ந்தமைக்கு நன்றி.

  ReplyDelete