Monday, November 9, 2015

பெண்களைப் போற்றும் “ருத்ரமாதேவி”

சென்ற வியாழன் அன்று பார்த்த படம் இது. எங்கள் பகுதியில் உள்ள தியேட்டருக்கு விரைவாக வந்து விட்டால் அது பெரும்பாலும் ஓடாத படமாகத்தான் இருக்கும். இருப்பினும் இளையராஜாவின் பின்னணி இசை நன்றாக உள்ளதாக பதிவர்கள் சிலர் எழுதியதால் அதை தியேட்டரில் கேட்பதுதான் சரியாக இருக்கும் என்பதால் அலுவலகத்திலிருந்து வந்து அவசரமாக புறப்பட்டேன். இவ்வளவு அவசரமாக போவதற்கு சனி அல்லது ஞாயிறு போகலாமே என்று என் மகன் கூட சொன்னான். நாளை வெள்ளிக்கிழமை வேறு படம் மாற்றி விடுவார்கள் என்று சொல்லி கிளம்பினேன்.

தமிழிலும் எடுக்கப்பட்ட படம் என்று சொல்லப்பட்டாலும் கூட டப்பிங் செய்யப்பட்ட படமாகவே எனக்கு தோன்றியது. பெயர்களிலும் வசனங்களிலும் அவ்வளவு தெலுங்கு வாடை.

பாகுபலி வெளிவந்து சில வாரங்களே ஆனதாலும் அதில் நடித்துள்ள பலர் இதிலும் நடித்ததாலும் இரண்டுமே ராஜாராணி கதை என்பதால் ஒப்பீடு என்பது தவிர்க்க முடியாதது.

திரையாக்கம் என்பதில் பாகுபலி உச்சத்தில் இருந்தாலும் அதில் அவ்வளவாக இல்லாத கதையம்சம் இதில் இருக்கிறது. வாரிசுப் பிரச்சினையால் மகளை மகனாகவே அறிவித்து மகனாகவே வளர்க்கிறார்கள். தான் ஒரு பெண் என்று அறிந்து கொண்டாலும் நாட்டின் நலன் கருதி ஆணாகவே தொடர்கிற இளவரசியின் கதைதான் ருத்ரமாதேவி.

சில கதாபாத்திரங்களை இன்னும் கொஞ்சம் தெளிவாக சித்தரித்திருக்கலாம், குறிப்பாக கொள்ளையனாக வரும் அல்லு அர்ஜூன். ருத்ரமாதேவியை காதலிக்கும் ராணாவும் எதிரி நாட்டு மன்னனும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கிறார்கள். 

பாகுபலி படத்தில் வரும் அரண்மனை போலவே இங்கேயும் ஒரு அரண்மனை மலை மீது அமைக்கப்பட்டுள்ளது. போரில் கற்களை பயன்படுத்துவது, நெருப்பை பயன்படுத்துவது, கேடயங்கள், அம்புகள் சீறிப் பாய்ந்து வீரர்கள் மடிவது போன்ற காட்சிகள், எது ஒரிஜினல், எது காப்பி என்ற கேள்வியை எழுப்புகிறது.

அனுஷ்கா நன்றாக நடித்துள்ளார். அது போலவே பிரகாஷ் ராஜூம் கூட. ஆமாம், விஜயகுமாரை துணை நடிகராக மாற்றி விட்டார்கள். 

பாடல்களைப் பொறுத்தவரை தெலுங்கு நெடி அதிகம். பின்னணி இசை அருமை. அதிலும் ருத்ர தேவனாக நடிக்கும் அனுஷ்காவிற்கு திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். அந்தப் பெண், நீங்கள் ஒரு பெண் என்பதை நான் அறிவேன் என்று சொல்லுகிற இடத்தில் பின்னணி இசையில் என்றும் முன்னணியில் இருப்பது நான்தான் என்று ராஜா நிரூபிக்கிறார்.

சில இடங்களில் கொஞ்சம் அலுப்பு தட்டினாலும், பெண்களுக்கு ஆண்களுக்கு உள்ள எல்லா திறமைகளும் உண்டு. அவர்களால் ஆண்களையும் விட சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும், வீரத்திலும் விவேகத்திலும் அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உரக்கச் சொல்வதால் "ருத்ரமாதேவி" எனக்கு பிடித்தமான படமாக மாறியது. 

பின் குறிப்பு : படம் முடிந்து வெளியே வருகிற போது அடுத்த படத்திற்கு போஸ்டர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். ஆக அன்றோடு "ருத்ரமாதேவி" யின் வேலூர் விஜயம் முடிந்து போனது.

 


7 comments:

 1. இனிய தீபஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

   Delete
 2. மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி சார். உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

   Delete
 3. சிறப்பான விமர்சனம்! இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கும் உங்களது குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்

   Delete
 4. arumaiyaana vimarsanam sir.


  பெண்களுக்கு ஆண்களுக்கு உள்ள எல்லா திறமைகளும் உண்டு. அவர்களால் ஆண்களையும் விட சிறப்பாக நிர்வாகம் செய்ய முடியும், வீரத்திலும் விவேகத்திலும் அவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்பதை உரக்கச் சொல்வதால் "ருத்ரமாதேவி" எனக்கு பிடித்தமான படமாக மாறியது.////
  piditha varikal:)

  ReplyDelete