Friday, April 17, 2015

இனி நானும் களத்தில் - சிறுகதைகடந்த 12.04.2015 வண்ணக்கதிரில் பிரசுரமான எனது சிறுகதை. 
 

இனி நானும் களத்தில்
வேலூர் சுரா

தொலைக்காட்சி ஓடிக் கொண்டிருந்தது. அது ஒரு விவாத நிகழ்ச்சி. அதிலே ஒரு பிரபலமான பெண்மணி தன்னை ஏமாற்றி விட்டு இன்னொரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட அவரது பிரபலமான கணவரைக் கண்டித்துப் பேசி அவரது மானத்தை கப்பலேற்றிக் கொண்டிருந்தார். அந்த பெண்ணின் மகனை தொலைக்காட்சி மிகவும் அருகாமையில் காண்பித்த போது நான் என்னையும் அறியாமல் என் வயிற்றைத் தொட்டுப் பார்த்துக் கொண்டேன். வலி உடலில் மறைந்திருந்தாலும் இன்னும் உள்ளத்திலிருந்து மறையவில்லை,

அவனது வார்த்தைகளில் மயங்கிப் போய் அன்று கருக்கொலை செய்யாமல் இருந்திருந்தால் தனக்கு நேர்ந்த கொடுமைகளுக்கு சாட்சியமாகவும் தனிமரமாய் நிற்காமல் தன் வாழ்வின் பிடிமானமாகவும் அந்த குழந்தை இருந்திருக்குமோ என்ற சிந்தனை மனதில் ஓடியது. காலம்தான் எல்லாக் காயங்களையும் ஆற்றும் மருந்து என்ற ஆறுதல் வார்த்தை தனக்கு மட்டும் ஏன் பொருந்தவில்லை என்று  யோசித்தேன்.

ஐந்து ஆண்டுகள் கடந்து போனாலும் எனது துயரம் இன்னும் குறையவில்லை. தனிமையின் கொடுமை என்னை ஒவ்வொரு நாளும் வாட்டி வதைத்தது.

இப்படி தனிமையில் தவித்த நேரத்தில்தானே தென்றலாய் அவன் இவள் வாழ்வில் புகுந்தான்! எனது குடும்பத்தைப் பகைத்துக் கொண்டு காதல் திருமணம் செய்தவள் நான். என் கணவரும் கூட அப்படித்தான். ஆனால் எங்களின் மகிழ்ச்சியான வாழ்வு இரண்டாண்டுகள் கூட நீடிக்கவில்லை. விபத்தில் இறந்து போன மகனின் சடலத்தைப் பார்க்கக் கூட என் கணவனின் பெற்றோர் வரவில்லை. எங்களை மதிக்காமல் ஓடிப் போனவள் எக்கேடு கெட்டால் என்ன என்று என் குடும்பத்தினரும் புறக்கணித்தனர்.

அலுவலக வேலை என்பது மட்டுமே என் உயிர் மூச்சாகியிருந்தது. வீட்டிற்கு வந்த என்ன செய்யப்போகிறேன் என்று என்னுடைய வேலைகளை மட்டும் இல்லாமல் எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்து கொண்டிருப்பேன். அப்படி ஒரு நாள் கோப்புக்களில் என்னைப் புதைத்துக் கொண்டு வேலை செய்து கொண்டிருந்த போது ஒரு உற்சாகக் குரல் என்னை நிமிர வைத்தது.

“ரெஜினா மேரி மேடம், இப்படி எல்லா வேலைகளையும் நீங்களே செஞ்சிக்கிட்டு இருந்தா,  நீங்க ஒரு ஆளே இந்த ஆபிசுக்கு போதும்னு சொல்லி எங்களையெல்லாம் தூக்கிடப் போறாங்க”

என் முன்னே அவன், அன்றுதான் அந்த அலுவலகத்திற்கு மாற்றலில் வந்திருந்த முரளிதரன் நின்றிருந்தான். கையில் ஒரு ஆங்கில நாளிதழும் தமிழ் இலக்கியப் பத்திரிக்கையும் வைத்திருந்த அவன் நிறத்தில் சற்று கறுப்புக்கு அருகாமையில் இருந்தாலும் முகத்தில் தொற்றியிருந்த உற்சாகம் கொஞ்சம் களையாகவே காண்பித்தது.

என் முன்னே இருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டு

“மேடம், இங்க நான் உட்காரலாம் இல்லையா?”

என்று கேட்ட போது “உட்கார்வதற்கு முன் கேட்க வேண்டிய கேள்வியை உட்கார்ந்த பிறகு கேட்கிறானே” என்று எனக்கு எரிச்சல் வந்தது. “அதான் உட்கார்ந்துட்டீங்களே” என்று அந்த எரிச்சலை வார்த்தைகளிலும் காட்டினேன். சட்டென்று அவன் முகம் மாறி “சாரி மேடம், நான் பிறகு பேசுகிறேன்” என்று எழுந்து போனான்.

“தன்னுடைய வார்த்தைகள் என்றுமே யாரையுமே காயப்படுத்தாதே, இன்று மட்டும் ஏன்?” என்று ஒரு கணம் நினைத்து என் இருக்கையிலிருந்து எழுந்து அவன் பின்னால் போய்

“சாரி சார், ஏதோ ஒரு சிந்தனையில அப்படி சொல்லிட்டேன். தப்பா எடுத்துக்காதீங்க”

என்று சொல்ல

“ஹையோ, அப்படியெல்லாம் ஒன்னுமில்லை மேடம். ஆபிசுக்கு வந்த முதல் நாளே நான் அப்படியெல்லாம் பேசியிருக்கக் கூடாது. அப்புறம் நான் உங்களை விட ஒரு வயசு சின்னவன். அதனால என்னை சார்னு கூப்பிட்டு வயசானவனாக்கிடாதீங்க, முரளினு பேர் சொல்லியே கூப்பிடுங்க. நான் ரொம்ப பேசுவேன். இன்னிக்கு இது போதும். மத்ததெல்லாம் அப்புறமா பாத்துக்கலாம்”

என்று வளவளவென பேசிக்கொண்டே போனவனை புன்னகையோடு பார்த்தேன். அந்த புன்னகைதான் என் வாழ்வையே படுகுழிக்குள் தள்ளப் போகிற துவக்கப்புள்ளி என்பது அப்போது எனக்கு தெரியவில்லை.

மறு நாள், அதற்கடுத்த நாள் என்று ஒவ்வொரு நாளும் அலுவலக நேரம் முடிந்து முரளி என்னுடைய இருக்கைக்கு வந்து கதையளப்பது தொடங்கியது.

“எத்தனை நாளுங்க சும்மா பேசி பேசியே அனுப்பிச்சிக்கிட்டு இருப்பீங்க, ஒரு கப் காபியாவது வாங்கித் தரக்கூடாதா” என்று ஒரு நாள் முரளி கேட்க அன்று பக்கத்திலிருந்த ஹோட்டலுக்குப் போய் அங்கே உரையாடலைத் தொடர்ந்தோம். காபி ஷாப், நூலகம், மெரினா கடற்கரை என்று நாங்கள் உரையாடும் இடங்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.

அன்றொரு நாள் கடற்கரையில் முரளி தான் எழுதிய கவிதைகளை வாசிக்க, நானும் எப்போதோ நான் எழுதியிருந்த  கவிதை நோட்டைக் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். அதைப் படித்து விட்டு அவன் என் கைகளைப் பற்றி தன் கண்களில் ஒத்திக் கொண்டான்.

“ஹேய், ஓவரா சீன் போடாதே” என்று நான் செல்லமாக அதட்டினாலும் அந்த தொடுதல் பிடித்தமாகத்தான் இருந்தது.

“உங்க கவிதைகளில் இருந்த உற்சாகம், உங்க கிட்டேயிருந்து ஏன் காணாமப் போச்சு? கணவர் இறந்திட்டா அதோட உங்க வாழ்க்கையும் முடிஞ்சு போச்சா? சாகற வரைக்கும் இப்படியே சோகமாத்தான் முகத்தை வச்சுகிட்டு இருக்கப் போறீங்களா?”

என்ற கேள்வி ஆறுதலாய் இருந்தது. அவனை வெறுப்பேற்றுவதாக நினைத்துக் கொண்டு

“இவ்வளவு அட்வைஸ் கொடுக்கறியே, நீ என்னை கல்யாணம் செஞ்சுப்பியா?”  என்று கேட்க

நான் எதிர்பாராதது அப்போது நடந்தது.

“ரெஜி (மேடம் என்பது காணாமல் போய் விட்டது), இதைச் சொல்ல தைரியமில்லாம இத்தனை நாள் துடிச்சுக்கிட்டு இருந்தேன். இந்த நிமிஷமே நாம கல்யாணம் செஞ்சுக்கலாம்” என்று மீண்டும் கையைப் பற்றிக் கொண்டான். இப்படி அவன் சொல்ல வேண்டும் என்றுதான் என் உள்மனது அப்படி ஒரு கேள்வி கேட்டதோ என்னமோ. அப்படியே அவன் தோள் மீது சாய்ந்து கொண்டேன். கடற்கரை குளிர்காற்று அன்று மிகவும் இனிமையாக இருந்தது. ஆனாலும் உடனடியாக சுதாரித்துக் கொண்டு விலகி அமர்ந்தேன்.

“இங்க பாரு, உணர்ச்சி வேகத்துல அவசரப்பட்டு ஏதாவது சொல்லாதே. நான் உன்னை விட ரெண்டு வயசு பெரியவ. விதவை. நாம ரெண்டு பேரும் வேற வேற மதம். ஏற்கனவே எனக்கு ரெண்டு குடும்பத்து பகை இருக்கு. இன்னொரு குடும்பமும் என்னை வெறுக்கக் கூடாது. சின்னப் பையனை மயக்கி ஏமாத்திட்டேன்னு சொன்னா என்னால தாங்க முடியாது”  

“ரெஜி, நான் ரொம்ப நாளா இது பத்தி யோசிச்சிக்கிட்டே இருந்ததுதான். என்ன எங்க அப்பா, அம்மா சம்மதிக்கனும். அவ்வளவுதானே. அது என் பொறுப்பு. அவங்க முழு மனசோட ஒத்துக்கிட்ட பிறகே கல்யாணம் பண்ணிக்கலாம்” என்று நம்பிக்கையோடு அடித்துப் பேசினான்.

தனிமையின் துயரத்திலேயே என் வாழ்க்கை முடிந்து போகப் போகிறது என்றுதான் நினைத்துக் கொண்டிருந்தேன். சோக ராகம் இனியும் இசைக்க வேண்டியதில்லை. இனி என் கவிதைகளில் உற்சாகம் ததும்பும். வானவில் வண்ணங்களில் என் வாழ்க்கை ஓவியம் தீட்டப்படும் என்றெல்லாம் தோன்றியது.

அலுவலக நேரம் தவிர்த்து மற்ற நேரங்களில் ஊர் சுற்றல், தொலைபேசி, குறுஞ்செய்தி, வாட்ஸப் என்று ஏதோ ஒரு வடிவத்தில் அவனோடே பொழுது கழிந்தது, ஒரு நாள் நள்ளிரவில் அவன் அனுப்பிய குறுஞ்செய்தி விரசத்தின் எல்லையைக் கடந்திருந்த போது மட்டும் இது போல வேண்டாம் என்று மென்மையாகக் கண்டித்து கல்யாணத்துக்கான வழியைப் பாரு என்றேன்.

எங்க அப்பா, அம்மா கிட்ட பேசிட்டேன், அப்பா ஒத்துக்கிட்டார்.
அம்மாவை கன்வின்ஸ் செய்யற பொறுப்பை அப்பாவே ஏத்துக்கிட்டார்.
அம்மா கொஞ்சம் கொஞ்சமா இறங்கி வராங்க

என்று முன்னேற்றங்களை சொல்லிக் கொண்டு இருந்தவன், ஒரு சனிக்கிழமை காலையில் தொலைபேசியில் அழைத்து

“ரெஜி, ஒரு நல்ல செய்தி, அம்மாவும் ஒத்துக்கிட்டாங்க, உன்னை பாக்கனுமாம். நான் இன்னும் ரெண்டு மணி நேரத்தில உன் வீட்டுக்கு வரேன். ரெடியா இரு, நாம ரெண்டு பேரும் பைக்கிலேயே பாண்டிச்சேரி போயிடலாம்.

மகிழ்ச்சியோடு காத்திருந்தேன். அவன் என் வீட்டிற்கு வர பதினோரு மணி ஆகி விட்டது. அவனது அம்மாவோடு எப்படி பேச வேண்டும் என்று தயாரிப்பெல்லாம் செய்து விட்டு ஒரு மணி அளவில் புறப்பட்டோம். கிழக்குக் கடற்கரைச்சாலையில் ஒரு இனிமையான பயணம் அது. என் பேச்சைக் கேட்டு மிதமான வேகத்திலேயே வண்டியை ஓட்டினான். சில முறை அவனுடைய பைக்கின் பின்னே அமர்ந்து சென்றுள்ளேன் என்றாலும் இந்த முறை ஒரு நீண்ட பயணம் என்பதால் எங்களுக்குள் நெருக்கம் கொஞ்சம் அதிகரித்தது என்பது உண்மை. அதற்காகத்தான் அவன் பைக் பயணத்தை தேர்ந்தெடுத்தான் போல.

பாண்டிச்சேரி நெருங்க நெரூங்க எனது இதயத் துடிப்பு அதிகரித்துக் கொண்டே இருந்தது. முரளியின் வீட்டை வந்தடைந்ததும் கதவில் தொங்கிய பூட்டுதான் எங்களை வரவேற்றது.

“என்ன முரளி, நாம வரது உங்க அம்மாவுக்கு பிடிக்கலயா? ஏன் இப்படி பூட்டிட்டு போயிட்டாங்க” என்றேன்.

“இரு இரு அவசரப்படாதே, அப்பாவிற்கு போன் செய்யறேன்” என்று அலைபேசியை கையில் எடுத்து அவரை அழைத்தான்.

“இங்க சிக்னல் சரியா இல்லை” என்று சொல்லி வீதியோரத்திற்குச் சென்று பேசி விட்டு மறுபடி வந்தான்.

“எங்க பெரியப்பா ஒருத்தரு நாகப்பட்டினத்தில இறந்து போயிட்டாராம். பக்கத்து வீட்டுல சாவியைக் கொடுத்திருக்காங்க. இன்னிக்கு தங்கிட்டு நாளைக்கு காலைல உன்னை சென்னைக்கு பஸ் ஏத்தி விட்டு என்னை புறப்பட்டு வரச் சொல்றாரு. ஒரு நல்ல நாள் பார்த்து உன்னை பார்க்கலாம்னு சொல்றாங்க” என்று போன் பேசி விட்டு சொன்னான்.

“சே, அப்ப பாண்டிச்சேரி வந்தது வேஸ்ட்டா?”

“வா, உனக்கு ஊர் சுற்றிக் காண்பிக்கிறேன்”

“நேரு வீதியில் காலாற நடந்தோம். அப்படியே கடற்கரை சென்று காற்று வாங்கி விட்டு எதிர்காலத்தைப் பற்றி கற்பனை கண்டு கொண்டிருந்தோம். அப்படியே இருந்திருக்கலாம். இரவு உணவை உணவகத்தில் முடித்து விட்டு வீட்டிற்கு வந்தோம்.

அந்த இரவு என் வாழ்வின் மோசமான இரவு. என் உறுதியை எப்படி பறி கொடுத்தேன் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை. தனிமையா இல்லை காலை முதல் உருவான நெருக்கமா இல்லை இவன்தானே இனி என் வாழ்க்கை என்ற நம்பிக்கையா, ஏதோ ஒன்று நான் என்னை அவனிடம் முழுமையாக ஒப்படைத்தேன். பிரியவே மனமில்லாமல் காலை சென்னை புறப்பட்டேன்.

பத்து நாட்கள் கழித்துத்தான் வந்தான் அவன். இடைப்பட்ட நாட்களில் போனில் அழைத்தாலும் நேரில் பேசிக் கொள்வோம் என்று தட்டிக் கழித்தான்.

பத்து நாள் வளர்ந்த தாடியோடும் கலைந்த தலைமுடியோடும் கசங்கின சட்டையோடும் அலுவலகம் வந்த அவனைப் பார்த்து

“என்னப்பா, ஏன் இவ்வளவு டல்லா இருக்க?”

“வீட்டிலே ஒரே சண்டை, அம்மா மனசை சொந்தக்காரங்க கலைச்சுட்டாங்க, சொந்தத்துல ஒரு பொண்ணை கல்யாணம் செய்யச் சொல்லி கட்டாயப் படுத்தினாங்க. கடைசியில கோபிச்சுக்கிட்டு வந்துட்டேன். நம்ம ஏதாவது கோயிலில் உடனே கல்யாணம் செஞ்சுக்கலாம்”

என்றவனை

“அவசரப்படாதே, இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருப்போம்” என்று சமாதானம் செய்து இயல்பாக்கினேன். ஆனால் நீண்ட நாள் காத்திருக்க முடியாது என்ற நிலை உருவாகும் என்பது நான் எதிர்பாராதது. ஆம் அன்று நாங்கள் எல்லை மீறியது கருவாக உருவாகியிருந்தது.

அந்த செய்தி கேட்டதும் அலறினான், அழுதான், புலம்பினான். இந்த செய்தி தெரிந்தால் என் அம்மா என்னை கொன்றே விடுவார்கள், நிச்சயம் நம் கல்யாணம் நடக்காது, ஒரு வேளை இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகு நம் கல்யாணம் நடக்கும்போது நீ மணமேடையில் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் அசிங்கமாக பேச மாட்டார்களா என்று குழப்பினான்.   வேண்டாம் கலைத்து விடலாம் என்று யோசனை சொன்னான். கல்யாணத்திற்கு பிறகு இன்னொரு குழந்தை பிறக்காதா என்று நம்பிக்கை ஊட்டினான்.

எனக்கு அவனைத் தவிர வேறு யார் இருக்கிறார்கள்? அவன் யோசனைக்கு ஒப்புக் கொண்டேன். கரு கருகியது. என் வாழ்க்கை கருகப் போவதற்கான துவக்கப் புள்ளி அதுதான்.

பதினைந்து நாள் விடுப்பெடுத்து விட்டு அலுவகம் வந்த போது நிலைமையே மாறிப் போயிருந்தது. நான் அலுவகத்திற்கு வந்ததையே கண்டு கொள்ளாமல் இருந்தான் முரளிதரன். மதியம் வரை பொறுத்திருந்து விட்டு நானே அவன் சீட்டிற்குப் போன போது யாரோடோ போனில் சிரித்து சிரித்து பேசிக் கொண்டிருந்தான். என்னைப் பார்த்து முகம் மாறி

“மேடம், என்ன லீவில இருந்தீங்களா? என்ன விஷயம்?” என்று எதுவுமே தெரியாதவன் போல கேட்டான்.

“என்ன மறுபடியும் மேடம்னு கூப்பிட ஆரம்பிச்சுட்ட”

“என்னை விட நீங்க சீனியர், வயசுலயும் பெரியவங்க”

“என்னாச்சு உனக்கு? நம்ம கல்யாணத்துக்கு உங்கம்மா மறுபடியும் ஏதாவது தடை சொல்றாங்களா?”

“என்ன மேடம் பேசறீங்க, நம்ம கல்யாணமா? லீவில இருந்த போது ஏதாவது கனவு கண்டீங்களா”

கோபம் தாளாது அலுவலகம் என்றும் பாராது அவன் சட்டையை பிடித்தேன். 

“பாவி, கொஞ்சம் கொஞ்சமா ஆசை காண்பிச்சு கர்ப்பத்தை கலைக்கற வைக்கும் போயிட்டு கனவு கண்டியானு கேட்கறியே?”

சத்தம் கேட்டு பலரும் வந்து விட்டார்கள். சங்கத் தலைவரும் வந்து விட்டார். அவர் அழைத்து மகளிர் அமைப்பும் வந்து விட்டார்கள். அவன் எங்களுக்குள் இருந்த பழக்கத்தை உறுதியாக மறுத்து விட்டான். அவன் அனுப்பிய குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள் என எதுவுமே இல்லை. எனக்கு கருக்கலைப்பு நடந்த போது என் தொலைபேசி அவனிடம்தாம் இருந்தது. அந்த சமயத்தில் எல்லாவற்றையும் அழித்து விட்டான் போல. ஆதாரம் எதுவும் இல்லாமல் எனக்கு யாராலும் உதவ முடியவில்லை.

அழகாக திட்டம் போட்டு என்னை ஏமாற்றி விட்டான். என்னை ஏமாற்றியவனோடு அதே அலுவலகத்தில் பணியாற்றும் துர்பாக்கிய நிலை எனக்கு. வேலையை உதறினால் நடுத்தெருவில்தான் நிற்க வேண்டும். அனுதாபத்தோடு சிலர் பார்த்தார்கள் என்றால் ஏளனத்தோடு என்னை துளைத்த கண்கள்தான் ஏராளம். இதற்கிடையில் மாதங்கள் உருண்டது. அவன் திருமணம் செய்து கொண்டான். திடீரென்று பெரிய முற்போக்காளன் மாதிரி காண்பித்துக் கொண்டு கூட்டங்களில் தத்துவம் பேசினான். அவனுக்கென்று ஒரு கூட்டத்தை உருவாக்கிக் கொண்டான். ஏதோ காய் நகர்த்துகிறான் என்பது மட்டும் புரிந்தது.

நேற்றைக்குத்தான் அந்த காரணம் தெரிந்தது.

சங்கத்திற்கு தேர்தல் வருகிறது. எனக்கு ஆதரவாக தலையிட்டு நியாயம் கேட்ட தலைவரை தோற்கடிக்க தலைவர் பதவிக்கு போட்டியிடப் போகிறானாம்.

“அநீதி என்று தெரிந்த பின்னும் அதற்கு எதிராக மௌனமாக இருப்பது அதற்கு துணை போவதற்குச் சமம்.  இந்த பேட்டியால் என்னைப் பற்றி ஒரு மோசமான பிரச்சாரம் நடக்கும் என்றும் எனக்குத் தெரியும். என்னைப் போல வேறு யாரும் அந்த மோசமான நபரிடம் ஏமாறக் கூடாது. அதை நான் அனுமதிக்க மாட்டேன்”

அந்தப் பெண்மணி உறுதியான குரலில் சொல்லிக் கொண்டிருந்தார்.

“ஒரு மோசமான மனிதன் தகுதியற்ற பொறுப்பிற்கு வருவதை நான் மட்டும் அனுமதிக்கலாமா?  பிறகு அந்த அமைப்புக்கள் எல்லாம் என்ன ஆகும்” நான் எனக்குள்ளே கேட்டுக் கொண்டேன்.

நல்லவர்களை தீயவர்கள் வெல்ல என்னுடைய மௌனம் காரணமாக இருக்கக் கூடாது என்று தீர்மானம் செய்து கொண்டேன். இனி நானும் களத்தில் இறங்கப் போகிறேன். உண்மையை நிலை நாட்டுவோம் என்ற எண்ணம் வந்த அடுத்த கணமே என் மனதின் தனிமையும் நீங்கிய உணர்வும் துளிர்த்தது.


2 comments: