Tuesday, April 7, 2015

எனக்கு மட்டும் ஏன் பணம் தரமாட்டேங்குது இந்த மிஷின்?

 http://nce.ac.in/wpnce/wp-content/uploads/2013/04/ATM.jpg

இந்திய குடிமக்கள் ஏ.டி.எம் மிஷின்க்ளோடு  மல்லுக்கட்டுவதை பார்ப்பதே சுவாரஸ்யமான அனுபவம்.

முந்தைய ஒரு அனுபவத்தை இங்கே படியுங்கள்

இன்று ஐ.ஓ.பி ஏ.டி.எம் மில் பணம் எடுக்கப் போயிருந்தேன். எனக்கு முன்பாக ஒருவர், என்னை விட ஒரு பத்து வயதாவது மூத்தவராக இருப்பார். அவர் வங்கியில்  கார்டை மிஷினுள் போடுகிறார், எடுக்கிறார். மிஷினை ஒரு தட்டு தட்டுகிறார். அப்படியே ஒரு ஐந்தாறு தடவை போனது. 

பிறகு வெறுப்போடு வெளியே வரும் போது  அவர் டாஸ்மாக் மயக்கத்தில் இருந்தது தெரிந்தது. "உள்ள பணமே இல்லை சார்"  என்று சொன்னதை நான் பொருட்படுத்தவில்லை.

நான் பணத்தை எடுத்துக் கொண்டு வெளியே வரும் போது அதை கவனித்துக் கொண்டு இருந்த அவர் கேட்ட கேள்விதான் பதிவின் தலைப்பு.

எனக்கு என்ன நடக்குதுனு மட்டும் கொஞ்சம் பாருங்க சார் என்றார்.

கார்டை உள்ளே போட்டதும் என்ன மொழி என்று இயந்திரம் கேட்ட போது ஹிந்தியை அழுத்தினார். 

அதற்குப் பிறகு ஒன்றும் புரியாமல் முழித்து நிற்க நேரம் முடிந்து விட்டது. மீண்டும் கார்டை சொருகும் போது ஆங்கிலத்தை அழுத்தச் சொன்னேன்.

PIN எண்ணை கேட்கும் போது அழுத்தினார். 

தவறான எண் என்று வந்தது.

மீண்டும் இன்னொரு எண்ணை அழுத்தினார்.

அப்போதும் தவறான எண் என்றே வந்தது.

பாவம் டாஸ்மாக்கால் எண்ணை மறந்து விட்டார் போலும் என்று நினைத்த போது சொன்னார்.

"போன தடவை வீட்டிலதான் வந்து பணம் எடுத்தாங்க. எங்க நான் பணத்தை எடுத்து செலவழிச்சுடுவேன்னு நம்பரை மாத்திட்டாங்க போல".

அந்த புத்திசாலிப் பெண்மணியை மனதுக்குள்ளேயே பாராட்டினேன்.


3 comments: