Thursday, January 15, 2015

படிச்சுட்டு கருத்து சொல்லுங்க11.01.2015 வண்ணக்கதிரில் பிரசுரமான எனது சிறுகதையைப் படித்து விட்டு கொஞ்சம் கருத்து சொல்லுங்கள். அழகான ஓவியத்தைத் தீட்டிய தோழர் ஸ்ரீரசா அவர்களுக்கு நன்றி. 
 விழியோரம் கசிந்த துளிகள்
வேலூர் சுரா


நடுநிசியில் யார் தொலைபேசியில் அழைப்பது என்ற கேள்வியோடு அலைபேசியில் ஒளிர்ந்த பெயரைப் பார்த்தாள் லலிதா. வெங்கட் என்ற பெயரைப் பார்த்ததும் இவர் எதற்கு இந்த நேரத்தில் கூப்பிடுகிறார் என்ற எண்ணம் மனதில் ஓடிக் கொண்டிருந்த போது பக்கத்தில் படுத்துக் கொண்டிருந்த அம்மாவும் தூக்கம் கலைந்து

“யாரும்மா இந்த நேரத்தில் பேசறாங்க? என்று லலிதாவின் அம்மா சரோஜா வினவினார்.

“உங்க வருங்கால மாப்பிள்ளைதான். எதுக்குனு தெரியலை”

“சரி, எடுத்துப் பேசு. இனிமே கல்யாணத்துக்கு முன்னாடி இப்படியெல்லாம் நேரங்கெட்ட நேரத்தில பேசிக்கிட்டு  இருக்காதீங்க”

ஹலோ என்று மென்மையாக அழைத்த லலிதா மறுமுனையில் சொல்லப்பட்ட தகவல் அறிந்து ஒரு கணம் உறைந்து போனாள். என்ன பதில் சொல்வதென்றே புரியாமல் தவித்து வார்த்தைகளுக்காக தடுமாறினாள். வருங்கால மாமனார் திடீரென நெஞ்சு வலி வந்து இறந்து போனார் என்ற செய்தியைக் கேட்டால் வேறு என்ன சிந்திக்க முடியும்?

“ஒரு நிமிஷம் இருங்க, அம்மா கிட்ட தரேன்” என்று சொல்லி லலிதா தன் அம்மாவிடம் அலைபேசியைக் கொடுத்தாள்.

“கடவுளே, இது என்ன சோதனை? போன வாரம்  அவ்வளவு சந்தோஷமா நிச்சயதார்த்த விழாவில் வளைய வந்த மனுஷர் இப்ப இல்லையா? இரண்டு நாள் முன்னாடி கல்யாண மண்டபம் முடிவு செஞ்சு அட்வான்ஸ் கொடுக்கும் போது கூட நல்லாதானே இருந்தார்? என்னப்பா ஆச்சு” என்று  அழுகையின் ஊடே தட்டுத் தடுமாறி கேட்டார் சரோஜா.

“பத்தரை மணிக்கு தூங்கப் போகும் போது நல்லாத்தான் இருந்தார். முக்கால் மணி நேரம் முன்னாடித்தான் நெஞ்சு வலிக்குதுனு சொல்லி எழுந்துக்கிட்டார். ஆம்புலன்ஸை கூப்பிட்டு அது வரதுக்குள்ளேயே சாய்ஞ்சிட்டார்” என்று கண்ணீரின் ஊடே வந்தது வெங்கட்டின் வார்த்தைகள். “கொஞ்சம் வெளிச்சம் வந்ததும் வந்துடறோம். அம்மாவுக்கு தைரியம் சொல்லுங்க தம்பி” என்று சொல்லி போனை வைத்தார் சரோஜா.

கடந்து போன ஒரு மணி நேரத்திற்கு முன்பு வரை கலகலப்பாகவும் கல்யாண கொண்டாட்டத்திலும் இருந்த வீடு அடியோடு மாறி விட்டது. விடிந்தும் விடியாமலும் இருந்த அதிகாலைப் பொழுதில் சரோஜா பின்னே அமர  லலிதா ஸ்கூட்டியை இயக்கினாள்.

வெங்கட்டின் வீட்டின் வாசல் முன்னே அந்த நேரத்திலும் ஒரு முப்பது பேர் முழுமி இருந்தார்கள். வீட்டின் வாசலில் ஷாமியானா போடப்பட்டு பிளாஸ்டிக் நாற்காலிகள் வாசல் கதவிற்கு இரண்டு பக்கமும் போடப்பட்டு அதில் சிலர் உட்கார்ந்திருந்தனர். மூன்று நான்கு பேராக நின்று சிலர் பேசிக் கொண்டிருக்க, வெங்கட்டின் பெரியப்பா ஒருவர் சிலரை சில பணிகளுக்கு ஏவி விட்டுக் கொண்டிருந்தார்.

லலிதாவும் சரோஜாவும் வண்டியை நிறுத்தி உள்ளே நுழையும் போதே அனைவரது பார்வையும் அவர்கள் மீதே குவிந்ததை லலிதா கவனிக்கத் தவறவில்லை. வெளியே நின்று கொண்டிருந்த வெங்கட்டின் அக்கா சௌம்யா இவர்களை பார்த்தும் பார்க்காதது போல அலைபேசியில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தது ஒரு சின்ன நெருடலையும் உருவாக்கியது. வீட்டிற்குள் போனார்கள்.

அங்கே வெங்கட்டின் அப்பா ராமநாதனை கண்ணாடிப் பெட்டிக்குள் கிடத்தி இருந்தார்கள். இவர்களை பார்த்ததும் “இப்படி என்னை அனாதையா விட்டுட்டு போயிட்டாரா!” என்று வெங்கட்டின் தாய் சுலோச்சனா பெருங்குரலில் அழ அவர்களின் கரங்களைப் பற்றிக் கொண்ட சரோஜாவின் கண்களிலும் கண்ணீர் வடிந்து கொண்டிருந்தது. முகம் முழுதும் துயரம் தோய்ந்திருக்க  கண்களைத் துடைத்த படி துக்கம் விசாரிக்க வந்தவர்களிடம் என்னாயிற்று என்று விளக்கிக் கொண்டிருந்தான்.

நேரம் ஓடிக்கொண்டிருந்தது. உறவினர்கள், நண்பர்கள் என வந்து கொண்டிருந்தார்கள், சென்று கொண்டிருந்தார்கள். இறந்து போனவருக்கு மரியாதை செலுத்த போடப்படும் மாலைகளை ஒருவர் அவ்வப்போது எடுத்து வராந்தாவில் குவித்துக் கொண்டிருந்தார். மௌனமான விசும்பல்களோடு இருந்த சூழலை ஒரு பெரிய ஓலம் குலைத்தது.

“பையனுக்கு கல்யாணம் நிச்சயம் செஞ்சிட்டு பாக்காமலேயே போயிட்டியே, ஒழுங்கா ஜாதகமெல்லாம் பாத்திருந்தா இப்படி ஒரு நிலைமை உனக்கு வந்திருக்குமா? பொறந்தவுடனேயே அப்பாவை முழுங்கின ராசி அவளுக்கு, வேணாம்னு சொன்னே, கேட்டியா” என்று மாரில் அடித்தபடி வெங்கட்டின் அத்தை உள்ளே நுழைந்தாள். தான் வீட்டிற்குள் நுழைந்த போது தன் மீது தன்னை ஏன் ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள் என்பது அப்போதுதான் லலிதாவிற்குப் புரியத் தொடங்கியது.

“போனவர் போய்ட்டார், ஏன் சம்பந்தமில்லாம எதையெதையோ பேசற” என்று அந்த வருத்தமான சூழலிலும் சுலோச்சனா தலையிட “அவங்க என்ன தப்பா சொல்லிட்டாங்கனு அவங்களை அடக்கிற” என்று சௌம்யா சீற்றத்துடன் சொல்ல அந்த துக்க வீடு பரபரப்பாகியது. லலிதா வெங்கட்டின் முகத்தை பார்க்க அவனோ  அமைதியாக இருந்தது ஆச்சர்யத்தையும் அதிர்ச்சியையும் கொடுத்தது. அதற்குள்ளாக வெங்கட்டின் பெரியப்பா சத்தம் போட்டார்.

“எதுவா இருந்தாலும் காரியத்துக்கு அப்புறமா பேசிக்கலாம். இப்ப ராமநாதனை கௌரமாக அனுப்பி வைக்கனு. வெங்கட் ஆம்புலன்ஸ் வந்துடுச்சா பாரு” என்று சொல்ல அதன் பின்பே அந்த இடம் அமைதியானது. சடலத்தை ஆம்புலன்ஸில் எடுத்துச் சென்ற பிறகு கனத்த மௌனமே நிலவியது. மெஸ்ஸிலிருந்து வந்த இரவு உணவை லலிதாவும் சரோஜாவும்தான் வேறு பாத்திரங்களில் மாற்றி வைத்தார்கள். லலிதா வற்புறுத்தி சுலோச்சனாவை சாப்பிட வைத்தாள். மின் மயானத்திற்குப் போனவர்கள் திரும்பி வந்து அவர்களுக்கும் உணவு பறிமாறி விட்டு லலிதாவும் சரோஜாவும் வீடு திரும்பினார்கள்.  

கதவைத் திறந்து சோபாவில் அமர்ந்ததும் அது வரை கட்டுப்படுத்தியிருந்த உணர்ச்சிகள் வெடிக்க சரோஜா “அந்த படுபாவி லாரி டிரைவர் அன்னிக்கு நிதானமா வண்டியோட்டிருந்தானா, இன்னிக்கு உனக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்குமா? ஸ்கூட்டரில போய்க்கிட்டிருந்த உங்கப்பா மேல மோதி என் தாலியைப் பறிச்சான். இன்னிக்கு உனக்கு கல்யாணம் நடக்குமான்னே தெரியாம போச்சேடி. நிச்சயமான கல்யாணம் நின்னு போனா அப்புறம் எந்த ஆம்பிளை தைரியமா வருவான்?” என்று லலிதாவைக் கட்டிக் கொண்டு அழுதார்.

“நீயே ஏம்மா கற்பனை பண்ணிக்கிற, எல்லாத்தையும் வெங்கட் பார்த்துக் கொள்வார்” என்று ஆறுதல் சொல்லி தூங்க வைத்தாள் லலிதா. ஆனால் அவள் என்னமோ ஒரு நிமிடம் கூட உறங்கவில்லை. அப்படி இப்படி என்று பதிமூன்று நாட்கள் ஓடிப் போய் விட்டது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இருந்தனர்.

அத்தை பேச்சை துவக்கினார். “இங்க பாரு சுலோச்சனா, எந்த நேரத்துல வெங்கட்டுக்கு கல்யாணம் நிச்சயம் செஞ்சீங்களோ, இப்ப ராமநாதனே இல்லாம போயிட்டான். பொறந்து அஞ்சு வயசிலயே அப்பனை முழுங்கினவ, நிச்சயம் செஞ்சவுடனே என் தம்பியையும் போக வச்சுட்டா. அவ ராசி அப்படி. அதனால கல்யாணத்தை நிறுத்திடு. அவங்க செலுவு செஞ்ச ரூபாயை வேணா திருப்பிக் கொடுத்துடலாம்”

“அம்மா, நீங்க சொல்றது சரியா? என் பெண்ணோட நிலையை” என்று சரோஜா பேசத் தொடங்கும் போதே அவரைக் ஜாடை காட்டி நிறுத்தச் சொன்னார் சுலோச்சனா.

“லலிதாவோட அப்பா விபத்தில இறந்து போனார். நான் பிறக்கிற போது என் அம்மா பிரசவத்திலேயே இறந்து போய்ட்டாங்க. துக்கிரினு என்னை எல்லாரும் திட்டின போது அதையெல்லாம் காதிலேயே வாங்கிக்காம உங்க தம்பி என்னை கல்யாணம் செஞ்சிக்கிட்டார். நாங்களும் முப்பத்தி அஞ்சு வருஷம் சந்தோஷமாத்தான் குடும்பம் நடத்தினோம்.

லலிதாதான் மருமகள்னு முடிவு செஞ்சது என்னோட புருஷன். அது அவரோட ஆசை. அவர் இல்லைனாலும் அதை நிறைவேத்த வேண்டியது என் கடமை. உங்களைப் போலவே அவரும் ராசி. சகுனம் எல்லாம் பாத்திருந்தா எங்க கல்யாணமே நடந்திருக்காது. இப்ப அவர் இறந்துட்டாருனு அவர் விரும்பின கல்யாணத்தை நிறுத்தினா, எங்க கல்யாணத்துக்கே அர்த்தமில்லாம போய்டும்.

அதனால முடிவு செஞ்ச தேதியில வெங்கட் லலிதா கல்யாணம் நடக்கும். இது பத்தி பேசறதுக்கே எதுவுமில்லை”

என்று தீர்மானகரமாக சுலோச்சனா பேச, விழிகளின் ஓரத்தில் கசிந்திருந்த கண்ணீர் துளிகளை துடைத்த படி அவர்களது கரங்களைப் பற்றிக் கொண்டார் சரோஜா.

4 comments:

  1. Similar situation happens with my close relative. Groom team went to bride house for betrothal during 1996 - near chengalpattu - met horrible (Omani van) road accident out of 8 persons - 5 died in the spot died. grooms father and groom and his sister 3 yr son only survived . but they (groom and his father) insisted the same girl later with the great difficulty from their side family, marriage was held now they are happily living in US.

    Seshan, Dubai

    ReplyDelete
  2. கதை படிக்கும் பாடத்தில் நான் ரொம்ப வீக்,இருந்தாலும் உங்க கதை என்றபடியா படித்தேன். பைத்தியகாரதனமான நம்பிக்கைகளுக்கு எதிரான சிறந்த கதை.

    ReplyDelete