Wednesday, January 21, 2015

மாதொருபாகன் – ஈர்க்கவில்லை

நேற்றுதான் மாதொருபாகன் நாவலை படித்து முடித்தேன். இந்த நாவல் பற்றி இரண்டு அம்சங்களில் அணுகலாம் என்று நினைக்கிறேன். புத்தகக் கண்காட்சி தொடங்குவதற்கு முன்பே வி.பி,பி மூலம் வரவழைத்ததால் கண்களை பாடுபடுத்தி பி.டி.ஃஎப் வடிவத்தில் படிக்கும் இன்னலிலிருந்து தப்பித்தேன்.

ஒன்று : நாவல் மீதான சர்ச்சை பற்றி.

இரண்டு : நாவல் பற்றி

முதலில் சர்ச்சை பற்றி பார்ப்போம்.

“சாமி குழந்தைகள்” பற்றி பெருமாள் முருகன் முன்னுரையிலேயே சொல்லி விடுகிறார். ஆக எந்த முடிவு நோக்கி அவர் செல்லப் போகிறார் என்பது முதலிலேயே தெரிந்து விடுகிறது.

“எப்படியேனும் குழந்தை” என்ற நிலைக்கு பொன்னா என்ற பெயருடைய கதாநாயகியை தள்ளி விடுவது தொடர்ந்து அவள் சந்திக்கும் “வறடி” என்ற அவமானம். குழந்தைகள் இல்லாத பெண்கள் அவ்வாறு இழிவுபடுத்தப்படுவது  நாகரீகம் பெரிதாக வளர்ந்து விட்டதாக சொல்லப்படும் இந்த நவீனக் காலகட்டத்திலும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு தொழில் நுட்பம் வளர்ந்த நிலையில் மருத்துவ ரீதியான சிகிச்சைக்கு பணம் உள்ளவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொள்கின்றனர். கடவுளின் மீது நம்பிக்கை கொண்டு ஜோதிடர்களும் அருள் வாக்கு சொல்பவர்களும் பரிந்துரைக்கிற பிராயச்சித்தங்கள், வேண்டுதல்கள் மீது நம்பிக்கை வைக்கின்றனர். வேறு பலரோ தத்தெடுக்கின்றனர். எதற்கும் வழியில்லாதவர்கள் தாங்கள் கர்ப்பம் என்று நாடகமாடி குழந்தைகளை திருடும் அளவிற்குப் போயுள்ளார்கள் என்று பல சம்பவங்களும் நிகழ்ந்திருக்கிறது.  குழந்தைகள் இல்லாதவ்ர்களை இந்த சமூகம் இழிவுபடுத்துவதையும் அப்படி இழிவு படுத்துபவர்களின் மனநிலை எப்படி வேதனையில் தவிக்கும் என்பதை “மாதொருபாகன்” சிறப்பாகவே சித்தரிக்கிறது என்றே நான் சொல்வேன்.

“சாமி குழந்தை” என்ற அம்சம்தான் சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளது. அப்படிப்பட்ட ஒரு ஏற்பாடு இருந்தது என்பதற்கான ஆதாரங்கள் உள்ளதாக பெருமாள் முருகன் சொல்லும் போது அதை நிரூபிக்க வேண்டும் என்று மாதொருபாகன் எதிர்ப்பாளர்கள் வலியுறுத்தி இருக்கலாம். பெருமாள் முருகனைக் கண்டித்து எழுதியிருக்கலாம். ஜனநாயக முறையில் போராடவும் செய்திருக்கலாம்.  ஆனால் அதை விடுத்து புத்தகத்தை எரிப்பது, மாவட்டத்தை விட்டே வெளியேற்றுவது போன்றவையெல்லாம் ரொம்பவே ஓவர். எதிர்ப்பாளர்களின் உணர்வுக்கு மரியாதை கொடுத்து அடுத்த பதிப்பில் ஊரின் பெயரை எடுத்து விடுகிறேன் என்று ஒப்புக்கொண்ட பின்பும் அவர்கள் வன்மமாக செயல்பட்டது அபாயகரமானது. மத்தியில் பாஜக ஆட்சியின் பின்புலத்தில் வெறியர்களின் பிடி இறுகுகிறதோ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது.

பெருமாள் முருகன் செத்து விட்டான் என்று மரண சாசனம் கொடுத்ததற்குப் பதிலாக திருச்செங்கோடு தேர்த் திருவிழா, பதினான்காம் நாளன்று உலவிய சாமிகள், சாமிகளை நாடும் நிலையிலிருந்த பெண்கள்  பற்றியெல்லாம் அவர் தன்னிடம் உள்ளதாக சொல்லும் ஆதாரங்களை அழுத்தமாகக் கொடுத்திருந்தால் அவரது எதிர்ப்பாளர்களின் ஆயுதங்கள் முனை மழுங்கியிருக்கும்.

எப்போதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு பகுதியில், இன்றைக்கு உவப்பில்லாத ஒரு நடைமுறை இருந்தது என்பதற்காக இப்போது அங்கே வசிப்பவர்கள் யாரையும் சிலுவை சுமக்க சொல்லப் போவதில்லை. அப்படிப் பார்த்தால் பல ஊர்களுக்கு ஏதாவது கறையோ, களங்கமோ எப்போதோ ஏற்பட்டிருக்கலாம். அதற்காக அந்த ஊர்களை இன்ற யாராவது புறக்கணித்து விட்டனரா? இனி எந்த சமூகக் கொடுமையையும் மையமாக வைத்து கதை எழுத யாரும் பேனாவை  திறக்க முடியாத நிலையை உருவாக்கி விட்டனர் என்பது ஒரு பெருந்துயரம்.

கதவடைப்பு, மாவட்டத்திலிருந்து வெளியேற்றம், எழுத்தாளன் செத்து விட்டான் என்ற அளவிற்கு இப்பிரச்சினை சிக்கலாவதற்கு முன்பாக சிலர் இதை வெறும் பதிப்பாளரின் விளம்பர உத்தி என்று சுருக்கப்பார்த்தார்கள். அப்படி ஒரு நிலைப்பாட்டை எடுத்த காரணத்தாலேயே இன்று அவர்களால் பெருமாள் முருகனுக்கு ஆதரவாகவும் பேச முடியவில்லை என்பது மட்டுமல்லாமல் பேசுபவர்களையும் நக்கல் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். பதிப்பாளர்  இப்பிரச்சினையில் இடித்த புளியாக மௌனம் சாதித்தார் என்பது வேறு ஒரு கொடுமை.

பெண்களை இழிவுபடுத்துவதாக சொல்பவர்கள் தங்கள் எதிர்ப்பை தொடங்க வேண்டிய இடம் “மாதொருபாகன்” அல்ல. மகாபாரதம். “மாதொருபாகன்” நூலுக்கான துவக்கப் புள்ளியே மகாபாரதத்தில் திருதராஷ்டிரன், பாண்டு, விதுரர் தொடங்கி பஞ்ச பாண்டவர்கள் ஆகியோருடைய பிறப்புதான். அவர்களை வழிபடுபவர்கள், மகாபாரதம் எழுதிய வியாசரின் பிறந்த நாளை ஆசிரியர் தினம் என்று கொண்டாடுபவர்கள்தான் மாதொருபாகனை எரிக்கிறார்கள். பெருமாள் முருகனை துரத்துகிறார்கள். மாதொருபாகனைத் தாண்டியும் அவர்களுக்கு வேறு ஏதோ நோக்கம் இருக்கிறது.

மாதொருபாகனை எதிர்க்கிற அதே வேலையில் அந்த நூலின் தொடர்ச்சியாக இரு கண்ணோட்டங்களில் எழுதப்பட்டுள்ள “அர்த்தநாரி”  மற்றும் “ஆலவாயன்” என இரண்டு நூல்களுமே புத்தகக் கண்காட்சியில்  காலச்சுவடு ஸ்டாலில் விற்பனையாகிக் கொண்டுதான் இருக்கிறது. என்னுடைய எல்லா நூல்களையும் திரும்பப் பெறுகிறேன் என்று சொன்னாலும் கூட அவரது பல நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. நான் கூட “கூள மாதாரி” வாங்கியுள்ளேன். இனிதான் படிக்க வேண்டும். எதிர்ப்பின் பின்னணியில் “மாதொருபாகன்” மட்டுமல்ல, வேறு ஏதோ காரணம் கூட உள்ளது என்று சந்தேகம் தோன்ற இதுவும் ஒரு சான்று.

இந்த நச்சுப் போக்கை அனுமதிக்கக் கூடாது.

நாவலைப் பற்றி

உண்மையில் சொல்ல வேண்டுமானால் பெரிய அதிர்வு ஒன்றையும் படிக்கும் போது ஏற்படுத்தாத ஒரு நாவல் என்றுதான் சொல்ல வேண்டும். முன்பே சொன்னது போல குழந்தையில்லாதவர்களுக்கு நேருகிற இழிவு, வலி, சமூகத்தின் பார்வை போன்றவை சிறப்பாக சித்தரிக்கப்பட்டுள்ளது. மற்றபடி மிகவும் ஜவ்வு போல இழுத்துள்ளார் என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு குறு நாவலாகவோ அல்லது நெடுங்கதையாகவோ எழுதியிருந்தால் நன்றாக வந்திருக்கும். 190 பக்கங்களுக்கு எடுத்துக் கொண்டு போனதால் “சீக்கிரமா முடிப்பா” என்றுதான் சொல்லத் தோன்றியது. கதாநாயகி பொன்னாவை தேர்த் திருவிழாவிற்கு கணவன் காளிக்குத் தெரியாமல் பெற்றோர் அனுப்புகின்றனர். கணவன் அனுமதித்தான் என்று அவள் எண்ணும் அளவிற்கு காட்சிகளை சித்தரிப்பதற்காகவும் அந்த சமயத்தில் காளியை தென்னங்கள் குடிக்க பல மைல் தூரத்தில் உள்ள தோப்பிற்கு பொன்னாவின் சகோதரன் முத்து கூப்பிட்டுப் போகிறான். இதற்கு அடித்தளமாகவே ஏராளமான பக்கங்களை விரயம் செய்துள்ளார் பெருமாள் முருகன் என்பது என் கருத்து. அதே போல நாவல் முழுவதும் வருகிற கெட்ட வார்த்தைப் பிரயோகங்களும் கொஞ்சம் எரிச்சலூட்டுகிறது. 2010 ல் நூல் வெளியான போது எழுதிய முன்னுரையில் அறுபது எழுபது ஆண்டுகளுக்கு முன்பு எனச் சொல்கிறார். அதை நிறுவும் வகையில் 1945 ம் ஆண்டு வெளிவந்த ஸ்ரீவள்ளி திரைப்படத்தை கவனமாக பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழில் ஏராளமான புத்தகங்கள் வருடம்தோறும் வந்து கொண்டிருக்கின்றன. அவற்றில் ஒரு சிலவே நினைவில் நிற்கும் நூலாக அமையும். பெரும்பாலானவை கால வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும். இயல்பாகவே அப்படி காலத்தின் ஓட்டத்தில் மறைந்து போகக் கூடிய ஒரு நூலாகவே “மாதொருபாகன்” அமைந்திருக்கும். பெருமாள் முருகன் மீதுள்ள ஏதோ ஒரு காழ்ப்புணர்வு (நாமக்கல் மாவட்ட பிராய்லர்கள் பள்ளிகள் மீது அவர் வைத்த விமர்சனம், தலித் ஆதரவு நிலைப்பாடு, கடைசி நாவலை இளவரசனுக்கு சமர்ப்பணம் செய்தது உள்ளிட்ட ஏதோ ஒரு காரணம்) “மாதொருபாகன்” நாவலுக்கு சிறப்பு அந்தஸ்து கொடுத்து விட்டது என்பதுதான் யதார்த்தம்.3 comments:

 1. மகன்கள் தன் தாயையே கொச்சைப்படுத்தும் திதிமந்திரம்..

  தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, வாத்தியார் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.

  இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

  உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?


  இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 44. (2)

  இன்றும்... அம்மாவுக்கு சிரார்த்தம், திவசம், திதி செய்கிறேன் என ஆற்றங்கரைகளிலும், கடற்கரைகளிலும் பவ்யமாய் கடமைகளை நிறைவேற்றும் மகன்களை நாம் பார்ர்க்கிறோம்.

  ஒரு வாத்யாரை பணம் கொடுத்து அமர்த்தி... அவர் மூலமாக, தன்னை விட்டுப் பிரிந்த தன் தாய்க்கு வருஷாவருஷம் கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் அந்த மகன்கள் இதன் வாயிலாக அம்மாவின் அன்பையும் ஆசிர்வாதத்தையும் பரிபூரணமாக பெறுவதாக நம்பிக்கையோடு செய்கிறார்கள்.

  ஆனால்...? “என்மே மாதா ப்ரலுலோபசரதிஅனனவ் வ்ரதா தன்மேரேதஹாபிதா வ்ருந்த்தாம் ஆபுரண்யஹா அவபத்யதாம்...”

  நான் யாருக்குப் பிறந்தேன். என் அப்பா யாரென தெரியாது. மற்றவர்கள் சொல்வதால் நான் இன்னாருக்குத்தான் பிறந்தேன் என்பதை நம்பவேண்டியுள்ளது.


  ஆனால் என் அப்பா யார் என்பது இன்னும் தெரியவில்லை. அது அம்மாவுக்குத்தான் தெரியும். அப்படிப்பட்ட அம்மாவுக்கு என் அஞ்சலியை கொண்டுபோய் சேர்ப்பீர்.


  இப்படிப்பட்ட அர்த்தத்தை தன் அம்மாவையே சந்தேகப்படும் படியான மந்த்ரத்தை, வாத்தியர் சொல்லச் சொல்ல ‘மகன்’கள் திரும்பச் சொல்கிறார்கள் அர்த்தம் தெரியாமலேயே.


  இந்த அர்த்தத்தை விளங்கிக் கொண்டவர்கள் இனியொரு முறை திவசம் செய்யும்போது இந்த மந்த்ரத்தை உச்சரிப்பார்களா?

  உதடுபடக் கூட இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?


  http://thathachariyar.blogspot.com/2010/12/blog-post_6004.html  http://thathachariyar.blogspot.sg/2010/12/blog-post_6004.html

  ReplyDelete
 2. ****தலித் ஆதரவு நிலைப்பாடு, கடைசி நாவலை இளவரசனுக்கு சமர்ப்பணம் செய்தது***

  இதெல்லாம் நல்ல விடயங்கள்தான்.

  ஆனால் என்ன? ஒரு சுமூகத்தை "அசிங்கப் படுத்தி" இன்னொரு சமூகத்தை உயர்த்தணுமா என்ன?? என்னவோ போங்கப்பா!

  ReplyDelete
 3. I appreciate your unbiased view about the book.

  ReplyDelete