Thursday, January 1, 2015

சென்று வா 2014 , வருகவே 2015 மாற்றம் தருகவே

2014 ம் வருடம் ஒன்பது மணி நேரத்திற்கு முன்பாக முடிந்து புத்தாண்டு பிறந்துள்ளது.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். உங்கள் வாழ்வில் அனைத்து வளங்களும் ஆரோக்கியமும் மகிழ்ச்சியும் இனிமையும் எப்போதும் ததும்ப அன்பு நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

கடந்து போன ஆண்டு எப்படி?

பதினாறாவது மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக எங்களது அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் மிகவும் தெளிவாக வெளியிட்ட சுற்றறிக்கையின் சில பகுதிகளை கீழே பாருங்கள்


2014 தேர்தல்கள் பொதுத்துறை இன்சூரன்ஸ்துறையின் எதிர்காலத்தை நிச்சயம் வரையறுக்கப் போகிறது. 2014 ல் ஆட்சிக்கு வந்தால் நிதித்துறையில் மேலும் பல தாராளமயமாக்கல் சீர்த்திருத்தங்களைச் செய்வதுதான் எங்கள் முன்னுரிமை என்று இரு முக்கியமான கட்சிகளும் காங்கிரஸும் பாஜகவும் ஏற்கனவே அறிவித்துள்ளன.

எனவே இத்தேர்தல் பொதுத்துறை இன்சூரன்ஸ்துறையில் பணியாற்றும் ஒவ்வொரு ஊழியருக்கும் மிகவும் முக்கியமானது. நம்முடைய துறையை பாதுகாக்க வேண்டுமானால் நாம் இந்த அதி முக்கியமான தேர்தலில் திட்டவட்டமாக செயல்பட வேண்டும். நாம் யார் பக்கம் நிற்கிறோம் என்று சிந்தித்து முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்து விட்டது.

பொதுத்துறைக்கும் பொதுத்துறை இன்சூரன்ஸ்துறைக்கும் எதிராக இருக்கிற அரசியல் அணிகளையா நம்மால் தேர்ந்தெடுக்க முடியும்? ஏழைகளுக்கு எதிரான, தொழிலாளர்களுக்கு எதிரான, மக்களுக்கு எதிரான பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்டவர்களையா இந்திய மக்கள் தேர்ந்தெடுக்க முடியும்? பெரும்பான்மை மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் பொறுப்பை தட்டிக் கழித்த அரசியல் அணிகளையா நம்மால் ஆட்சியில் அமர்த்த முடியும்?

இக்கேள்விகளுக்கெல்லாம் விடையளித்த அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் இருபத்தி மூன்றாவது  மாநாடு “தலைவர்களில் அல்ல கொள்கைகளில்தான் மாற்றம் தேவை” என்று இத்தேசத்து மக்களுக்கு அறைகூவல் விடுத்துள்ளது. அடுத்த பிரதமர் மோடியா, ராகுலா என்று ஊடகங்களில் நடக்கும் விவாதத்தால்  மக்களுக்கு எவ்வித பயனுமில்லை ஏனென்றால் அவர்கள் இருவருமே சுதந்திர சந்தைப் பொருளாதாரத்தின் கொள்கைகளை பிரதிநிதிப்படுத்துபவர்கள்.

இதுதான் யதார்த்தமான உண்மையாக இருப்பதால் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் மாநாடு காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணியை நிராகரிப்பீர், பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியை தோற்கடிப்பீர் என்று இத்தேசத்து மக்களுக்கு தெளிவான வேண்டுகோள் விடுத்தது.

இப்பின்னணியில் அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் இடதுசாரி, மதச்சார்பற்ற, முற்போக்கு ஜனநாயக அரசியல் கட்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு அனைத்து இன்சூரன்ஸ் ஊழியர்களுக்கும் அறைகூவல் விடுக்கிறது. எந்த தொய்வும் இன்றி நாம் அனைவரும் இப்பணியை முழுமையாக செய்து முடிப்போம். ஒரு சிறப்பான இந்தியாவையை உருவாக்கிய பெருமையில் நாமும் பங்கு பெறுவோம்.

ஆனால் அப்படி நடக்கவில்லை என்பதில் 2014 ஒரு ஏமாற்றமே.  ஆனால் எங்கள் சங்கம் எச்சரித்தபடியே நிகழ்வுகள் நடந்து கொண்டிருக்கிறது, பொய்ப்பிரச்சாரத்தை நம்பி வாக்களித்தவர்களே நொந்து போகும் படி மோடி அரசின் நடவடிக்கைகள் மோசமாக அமைந்து வருகிறது. பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு இந்தியாவின் செல்வாதாரங்களை ஒப்படைப்பதில் காண்பிக்கிற அதே வேகத்தோடு தனது “ஒற்றை மதம், ஒற்றை மொழி, ஒற்றைக் கலாச்சாரம்” என்ற கோட்பாட்டை நிறுவ சகல சதிகளையும் அன்றாடம் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. மக்கள் ஒற்றுமை என்பதை கேள்விக்குறியாக மாற்றியுள்ளது மோடி அரசு.

இந்த நிலைமை வரும் 2015 ம் ஆண்டிலாவது மாற வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். எதிர்பார்ப்பு. நடக்கும் என்று நம்புவோம்.

தனிப்பட்ட முறையில் பார்த்தால் 2014 ஒரு கலவையான ஆண்டு.

பயணங்களின் ஆண்டாகவே 2014 அமைந்திருந்த்து. 2013 ம் ஆண்டின் கடைசி நாளில்தான் நெல்லை மாவட்டம் பாபநாசத்திலிருந்து திரும்பி மூன்றே நாட்களில் தூத்துக்குடி நோக்கி பயணித்தேன் பொங்கலுக்கு பின்பு நாக்பூர் என்று தொடங்கிய பயணம் இதோ நேற்றுன் கூட திருவள்ளூர் சென்று திரும்பி வந்தேன்.

பல்வேறு இயக்கங்கள் திருப்திகரமாக நடந்த நிறைவு உள்ளது. பல மனிதர்களை புரிந்து கொண்ட அனுபவமும் கிடைத்த்து. உண்மையாகவே நம்மை நேசிப்பவர்கள் யார், போலியாக பழகியவர்கள் யார் என்பதை புரிந்து கொள்ளும் வாய்ப்பும் கிடைத்தது. முகநூலிலும் வலைப்பக்கத்திலும் தீவிரமாக செயல்பட முடிந்த்து. பல முகநூல் நண்பர்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்த்து. கடந்தாண்டு வாங்கிய நூல்களில் பெரும்பாலானவற்றை படித்து முடித்ததால் ஒரு வெற்றிகரமான ஆண்டு என்றும் சொல்லலாம். பல சமையலறை பரிசோதனைகள் வெற்றிகரமாக நடந்த்தில் ஒரு சந்தோஷம். சிறுகதை எழுத்தாளன் என்று சொல்லிக் கொள்ளும் வண்ணம் எட்டு சிறுகதைகள் பிரசுரமானது மிகவும் பெருமையளிக்கிறது. அந்தா முயற்சியை தொடங்கியது என்ற முறையில் 2014 முக்கியமான ஆண்டு.

எங்கள் தலைவர்கள் தோழர் சரோஜ் சவுத்ரி, தோழர் சுனில் மைத்ரா ஆகியோரது முக்கியமான பல கட்டுரைகளை தமிழாக்கம் செய்ய வேண்டும் என்ற கனவு ஒன்றுள்ளது. அது 2015 ம் ஆண்டிலாவது கைகூட வேண்டும்.

மக்களுடைய வாழ்க்கைத் தரம் உயருகிறவகையில் வரும் ஆண்டு அமையட்டும் என்பது முக்கியமான விருப்பம். அதற்காக பாடுபடும் வித்த்தில் 2015 ல் பணி செய்ய வேண்டும் என்ற உறுதியோடு அனைவருக்கும் மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்களை உரித்தாக்குகிறேன்.

2 comments:

 1. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

  அன்புடன் DD...

  ReplyDelete
  Replies
  1. நன்றி நண்பரே, உங்களுக்கும் உங்கள குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்

   Delete