Thursday, January 22, 2015

சென்னை புத்தகக் கண்காட்சியில் நான் இழந்ததுஇந்த ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. கடந்த ஞாயிறன்று சென்றிருந்தேன். மதியம் மூன்று மணிக்கு உள்ளே சென்றேன். அப்போது அவ்வளவாக கூட்டமில்லை. அதனால் நிதானமாக பல ஸ்டால்களுக்கும் சென்று பல புத்தகங்களை வாங்க முடிந்தது. கடந்தாண்டு வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் படித்து விட்டதால் இந்த முறை தைரியமாகவே கொஞ்சம் கூடுதல் புத்தகங்களை வாங்கினேன்.  நான் வாங்கிய புத்தகங்கள் கீழே.இதிலே இரண்டு புத்தகங்கள் சிறுவனாக இருக்கும் போது வாங்கிய காமிக்ஸ் புத்தகங்கள். இரும்புக்கை மாயாவி, ஜானி ,லாரன்ஸ், முகமுடி என்று காமிக்ஸ் புத்தகங்கள் மூலம்தானே வாசிப்பு என்பதே தொடங்கியது! ஆகவே வாசிப்பிற்கு மூல காரணமான காமிக்ஸ் புத்தகங்களை மலரும் நினைவாக வாங்கினேன். என்ன அப்போது ஐம்பது பைசாவில் வாங்கியது இப்போது ஐம்பது ரூபாய்..ஆயிரம் பக்கங்கள் கொண்ட ஆனந்த விகடன் இயர் புக்கில் எங்கள் தென் மண்டலப் பொதுச்செயலாளர் தோழர் கே.சுவாமிநாதன் அவர்களின் கட்டுரை வெளிவந்துள்ளது என்பது எங்களுக்கு ஒரு பெருமை. அற்புதமான அந்த கட்டுரையை விரைவில் இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

எங்கள் மதுரைக் கோட்டத் தோழரும் எழுத்தாளருமான தோழர் ச.சுப்பாராவ், தான் ஒவ்வொரு நாளும் எத்தனை பக்கங்களை வாசித்தோம் என்று ஆவணப்படுத்தி வருகிறார். அது போல ஒவ்வொரு நாளும் வாசித்ததை ஆவணப்படுத்தாவிட்டாலும் (என்னால் அது போல முடியாது என்பது சர்வ நிச்சயமாக தெரிந்ததால்) இந்த ஆண்டு முதல் வாசித்த நூல்களை ஆவணப் படுத்த வேண்டும் என்று முடிவெடுத்திருக்கிறேன். பார்ப்போம் இது எவ்வளவு தூரம் சாத்தியமாகிறது என்று.

புத்தகக் கண்காட்சியின் ஒரு பகுதியான சிற்றரங்கம் சென்றேன். அப்போதுதான் சாரு நிவேதிதா  வாசகர் கேள்விக்கு பதில் சொல்ல தொடங்கியிருந்தார். முதல் கேள்வி சுமுகமாக முடிந்தது. அடுத்தது “மாதொரு பாகன்” பற்றிய கேள்வி. தான் தமிழில் எழுதுபவர்களை எப்படியெல்லாம் நேசிக்கிறேன், நான்கு வரி தமிழில் எழுதினாலே அவர்களை எழுத்தாளராக எப்படியெல்லாம் மதித்து அங்கீகரிக்கிறேன் என்றெல்லாம் அவர் ஓவராக அடுக்க ஆரம்பித்ததும் “இது தாங்காதுடா ராமா” என்று வெளியே வந்து காலச்சுவடு பதிப்பக ஸ்டாலுக்கு வந்து விட்டேன்.

அங்கே இருக்கும் போது சிற்றரங்கிலிருந்து பயங்கர சத்தம் கேட்டது. அப்போது புத்தகங்களைக் கொடுத்து பில் போட்டுக் கொண்டிருந்த காரணத்தால்  உடனடியாக உள்ளே செல்ல முடியவில்லை. நான் சென்ற போது பிரச்சினைகளும் முடிந்திருந்தது. த.மு.எ.க.ச தோழர்கள் நடந்தது என்ன என்ற விளக்கத்தை தராததால் ஒரு பக்க செய்திகள் மட்டுமே சமூக வலைத்தளங்களில் உலவிக் கொண்டிருக்கிறது. ஆனால் சாரு நிவேதிதா மீது தாக்குதல், கொலை முயற்சி என்றெல்லாம் கதையளப்பது ரொம்ப ஓவர். அருகில் இருந்தும் நான் தவற விட்டது இது ஒன்று.

எனக்கு நானே நிர்ணயித்துக் கொண்டிருந்த பட்ஜெட்டில் பாக்கி பணம் இருந்தது. பாரதி புத்தகாலயத்தின் குடும்ப நூலகம் திட்டப்படி வழங்கப் படும் கூப்பனிலும் மீதம் இருந்தது. ஆனால் நீண்ட நேரம் நடந்ததால் கால் வலி தாங்க முடியவில்லை. ஜோல்னா பை தவிர இரு கைகளிலும் புத்தக மூட்டைகளின் கனமும் அதிகமாகி விட்டது. இதற்கு மேல் நிற்பதோ இல்லை சுமப்பதோ சாத்தியமில்லை என்று உடல் கட்டளையிட்ட பின்பு வெளியே வந்து விட்டேன். இதனால் இழந்த நல்ல நூல்கள் எத்தனையோ?
2 comments:

  1. so sad. If you asked me to carry your books, I would have accompanied you thozhar.(at least to carry your books)The logic behind is nothing but I could help one ARIVUJEEVI, thozhar.

    ReplyDelete
  2. உங்கள் வலைத்தளத்தை இன்று வலைச்சரத்தில்
    அறிமுகம் செய்திருக்கிறேன் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
    பார்க்கவும்: http://blogintamil.blogspot.in/

    ReplyDelete