Friday, September 19, 2014

அவசியம் கேளுங்கள் அவசியம் பாருங்கள்

 http://amazoncdn.imusti.com/mnt/artists/front/artist_94.jpg

மதியம் உனவு இடைவேளையில் முகநூலைக் கொஞ்சம் தொலைபேசி
மூலமாக பார்த்துக் கொண்டிருந்தபோது மாண்டலின் ஸ்ரீனிவாஸ் மறைவுச் செய்தி அதிர்ச்சியளித்தது. 

கர்னாடக இசையை மாண்டலின் எனும் மேற்கத்திய வாத்தியத்தில் முதன் முதலாக வாசித்து பரபரப்பை உருவாக்கியவர் அவர். அது வெறும் பரபரப்போடு நின்று போகவில்லை. அவரது அபார ஞானம் அவரை இளம் வயதிலேயே உச்சத்திற்கு கொண்டு போனது.

கன்னியாகுமரி, சிக்கில் பாஸ்கரன் போன்ற வயலின் விற்பன்னர்கள், வலையப்பட்டி சுப்ரமணியம், ஹரித்வார மங்கலம் பழனிவேல் போன்ற தவில் மேதைகள், உமையால்புரம் சிவராமன், கே.வி.பிரசாத், திருவாரூர் பக்தவத்சலம் போன்ற சிறந்த மிருதங்கக் கலைஞர்கள்,  கடம்  வினாயக்ராம், கஞ்சிரா ஜெய்சங்கர் போன்ற சிறந்த கலைஞர்கள் எல்லாம் அச்சிறுவனுக்கு பக்க வாத்தியம் வாசித்தார்கள் என்றால் அது ஒன்று மட்டுமே போதும் ஸ்ரீனிவாசின் மேதமைக்கு. 

கர்னாடக சங்கீதத்தில் பாடப்படும் பொருள் மீது எனக்கு நாட்டம் கிடையாது என்றாலும் ராகங்களும் தாளங்களும் எப்போதுமே ஈர்க்கும். அந்த வகையில் என்னை கவர்ந்த கலைஞர்களில் மாண்டலின் ஸ்ரீனிவாஸ் ஒருவர். 

எத்தனை முறை இவர் கச்சேரியை நேரடியாக கேட்டுள்ளேன் என்று யோசித்துப் பார்த்தேன். நெய்வேலியில் இரண்டு முறை, திருவையாறு தியாகராஜர் விழாவில் ஐந்து முறை, சென்னை இசை விழா சமயத்தில்  மூன்று முறை என பத்து முறை அவரது இசை மழையில் நனைந்துள்ளேன். 

ராக ஆலாபனையாக இருந்தாலும் சரி, கீர்த்தனையை நிரவல் செய்யும் போதும் சரி, கற்பனாஸ்வரங்களில் மிதக்கும் போதும் சரி நிச்சயம் நாம் நம்மை மறந்து போவோம். வேகம், விவேகம் இரண்டுமே அவரிடம் உண்டு. எப்போதும் புன்னகைத்த முகத்தோடு  வாசிக்கும் போது நெற்றியின் மீது வந்து விழும் முடியை தள்ளி விடுவது  பார்ப்பதற்கும் மிக அழகு.

ஒரு இருபது காசெட்டாவது என்னிடம் இருந்திருக்கும்.  அவர் இசையில் பல முறை கேட்ட வாதாபி கணபதி, நகுமோ, சாமஜ வரகமனா என்ற தெலுங்கு கீர்த்தனைகளும் தாயே யசோதா, சின்னஞ்சிறு கிளியே, போன்ற தமிழ்ப்பாடல்களும் மதியம் முதல் மனதில் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. 

அவருக்கான அஞ்சலியாக இங்கே சில இணைப்புக்களை அளித்துள்ளேன். நீங்களும் கேட்டு மகிழுங்கள். அவற்றைக் கேட்கிற போது இப்படி ஒரு கலைஞன் இளம் வயதிலேயே மறைந்தான் என்ற சோகமும் உருவாகும்.


அற்புதக் கலைஞனின்    ரகுவம்ச சுதா என்ற  பாடலை   அவசியம் கேளுங்கள்    கதன குதூகலம் என்ற ராகத்தின்பெயருக்கு ஏற்ப துள்ளல் இசையை நிச்சயம்  ரசிப்பீர்கள்.

அதற்கு மாறாக நிதானமாக தெளிந்த நீரோடையாக  சங்கராபரணம் ராகத்தை  ஸ்வரராகசுதா பாடலில் கையாண்டிருப்பதை  இந்த காணொளியில்  நீ ங்கள்  காணலாம்.

அதே போல இந்த ஆண்டு திருவையாறு தியாகராஜர் விழாவில் அவர் 
நிகழ்த்திய இசை நிகழ்வும் மிகவும் சிறப்பானது. திருவையாற்றில் அவர்
நடத்திய இறுதி நிகழ்ச்சியும் இதுதான்  என்பது வருத்தமானது.

4 comments:

 1. Thanks for Sharing....


  Seshan/ Dubai

  ReplyDelete
 2. நெய்வேலியில் இரண்டு முறை, திருவையாறு தியாகராஜர் விழாவில் ஐந்து முறை, சென்னை இசை விழா சமயத்தில் மூன்று முறை என பத்து முறை அவரது இசை மழையில் நனைந்துள்ளேன்.

  ராக ஆலாபனையாக இருந்தாலும் சரி, கீர்த்தனையை நிரவல் செய்யும் போதும் சரி, கற்பனாஸ்வரங்களில் மிதக்கும் போதும் சரி நிச்சயம் நாம் நம்மை மறந்து போவோம். வேகம், விவேகம் இரண்டுமே அவரிடம் உண்டு. எப்போதும் புன்னகைத்த முகத்தோடு வாசிக்கும் போது நெற்றியின் மீது வந்து விழும் முடியை தள்ளி விடுவது பார்ப்பதற்கும் மிக அழகு.//

  பார்ப்பனீய மதீப்பீடுகளின் அச்சு பிறழாத வடிவம் ஆக இருக்கிறீர்கள். சி பி எம் பாணி இடதுசாரி என்பது இதுதான் அதாவது சொந்த சாதிய மதிப்பீடுகளில் இருந்து வெளியே வராத வர விரும்பாத புரட்சியாலர்தானே நீங்கள் ? கருநாடக இசை இப்படி அக்கிரகாரக் கும்பலிடம் சிக்கி இருப்பதால் தான் சமற்கிருதம் அழிந்தது போல அழிவை நெருங்கிக் கொண்டிருக்கிறது ஆனால் மறுபக்கத்தில் இந்துஸ்தானி இசையோ மக்கள் மையப் படுத்தப்பட்டு நன்கு வளர்ந்து வருகிறது
  மீண்டும் சொல்கிறேன் உங்களைப் போல முற்போக்கானவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்

  ReplyDelete
 3. //கர்னாடக சங்கீதத்தில் பாடப்படும் பொருள் மீது எனக்கு நாட்டம் கிடையாது // இந்த வரியை வசதியாக ஒதுக்கி வைத்து விட்டு உங்கள் விருப்பம் போல வசை பாடியுள்ளீர்கள். எல்லாவற்றையும் ஜாதியோடு இணைத்துப் பார்க்கும் நீங்கள்தான் உண்மையான புரட்சியாளர் என்பதை ஒப்புக் கொள்கிறேன். இசையின் அனைத்து வடிவங்களையும் ரசிப்பவன் நான். எல்லாவற்றையும் ஜாதி என்ற மஞ்சள் கண்ணாடி கொண்டு பார்ப்பவராகவே உங்கள் பின்னூட்டங்கள் உங்களை காண்பிக்கிறது எழில். ஜாதிய முறையை நீடிக்க வைக்கும் நீங்கள் மிக மிக மிக மிக ஆபத்தானவர்கள்.

  ReplyDelete
 4. ஒரு அஞ்சலி செய்தியில் கூட ஜாதியைப் புகுத்தி அற்ப சந்தோஷம் அடைகிற திரு எழில் அவர்கள் எனது வலைப்பக்கத்தில் 08.09.2014 அன்று நான் பகிர்ந்து கொண்டுள்ள எனது சிறுகதை "தாத்தா வந்தார்" ஐ படிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். ஆனால் படித்து விட்டு சொல்லப்பட்ட விஷயத்தை விட்டு விட்டு, அதிலே விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்ட சடங்குகள் என்பதை மறைத்து விட்டு "நீங்கள் பிராமணிய மொழியில் எழுதியுள்ளீர்கள், ஆகவே நீங்கள் ஆபத்தானவர்" அன்று மீண்டும் மீண்டும் பழைய மாவையே அரைத்தால் அவருக்கு பார்வைக் கோளாறு இருக்கிறது என்ற முடிவுக்கு வருவதை விட எனக்கு வேறு வழியில்லை

  ReplyDelete