Tuesday, September 2, 2014

ஓடிப் போன ஸ்டீவ் வா ரெகமண்டேஷன் - சொல்லாமல் விட்ட செய்தி
நேற்று முதல் இன்சூரன்ஸ் வார விழா இந்தியா முழுதும் உற்சாகமாக நடந்து கொண்டிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் இயங்குகிற எல்.ஐ.சி ஊழியர்களில் அனேகமாக எல்லோருமே தங்கள் அலுவலகங்களில் நடைபெறும் விழாக்கள் பற்றி பகிர்ந்து கொண்டுள்ளனர். ஒரு நிறுவனத்தின் ஆண்டு விழாவை அதில் பணிபுரிகிற ஊழியர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கொண்டாடுவது என்ற பாரம்பரியம் எங்களுக்கே உண்டு என்ற நியாயமான பெருமிதமும் ஏன் கர்வமுமே கூட எனக்கு உண்டு. இந்த உணர்வுதான் எல்.ஐ.சி யின் வெற்றிப் பயணத்திற்கு முக்கியமான காரணம்.

எல்.ஐ.சி நிறுவனத்தின் உரிமையாளராக மத்திய அரசு இருந்தாலும் கூட அதனை சீர்குலைக்கத்தான் அவர்கள் முயற்சிக்கிறார்கள். இந்திரா காந்தி காலம் தொடங்கி மொரார்ஜி தேசாய், நரசிம்மராவ், தேவே கௌடா, குஜ்ரால், மன்மோகன் சிங், மோடி என்   இத்தனை பிரதமர்களும் எல்.ஐ.சி யை அழிக்கத்தான் முயற்சித்துள்ளார்கள். அதனையெல்லாம் முறியடித்த பெருமை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்திற்கும் பின்புலத்தில் இருந்த இடதுசாரிக்கட்சிகள், அதிலும் குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியையுமே சாரும்.

தங்களது போராட்டங்களால் பாதுகாக்கப்பட்ட நிறுவனம் என்பதால் இயல்பாகவே ஒரு உட்மை உணர்வு ( Belongingness )  ஊழியர்களுக்கு உண்டு. அதனால்தான் மாறி வரும் தேவைகளுக்கு ஏற்ப காலத்திற்கு ஏற்றார்போல தங்களையும் மாற்றிக் கொண்டு சேவை செய்கின்றனர்.

இதனால் மட்டுமே எந்த ஒரு பன்னாட்டுக் கம்பெனியாலும் எல்.ஐ.சி யின் நிழலைக் கூட நெருங்க முடியவில்லை.   

நேற்று எங்கள் கோட்ட அலுவலகத்தில் நடைபெற்ற இன்சூரன்ஸ் வார விழாவில் எங்கள் சங்கத்தின் சார்பாக வாழ்த்துரை வழங்கும் போது நிறுவனத்தை பாதுகாப்பதும் மேலும் வளர்த்தெடுப்பதுமே நமது கடமையாக இருக்க வேண்டும்  என்பதை அழுத்தமாக வலியுறுத்தினேன்.


அப்போது சொல்ல நினைத்து  நேரமின்மையால்  சொல்லாமல் விட்ட ஒரு செய்தியை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

தனியார் கம்பெனிகள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்ட உடன் முதலில் வந்த கம்பெனி ஏ.எம்.பி சன்மார். ஆஸ்திரேலியாவின் ஏ.எம்.பி யும் இந்தியாவின் சன்மார் குழுமமும் இணைந்து துவக்கினார்கள். அதன் விளம்பரத்தில் வந்தது ஸ்டீவ் வா, அப்போதைய ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டன்.அந்த விளம்பரமே மிகுந்த தெனாவெட்டாக இருக்கும். சாலையில் நடந்து போகும் ஸ்டீவ் வா விடம் சில சாதாரண மக்கள் அவரது அணி எப்படி இருக்க வேண்டும், வியூகம் எப்படி இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்வார்கள். பிறகு அவர் எனக்கு தேவையே இல்லாத ஆலோசனைகளை பலரும் வழங்குகிறார்கள். ஆனால் அவர்களுக்கு என்ன தேவை என்று தெரியாதவர்கள் அவர்கள். நான் அத்தனை பேருக்கும் சொல்கிறேன். நீங்கள் ஏ.எம்.பி சன்மாரில் இன்சூரன்ஸ் செய்து கொண்டு கவலையில்லாமல் இருங்கள். அவரது தொனியே ரொம்பவும் அலட்சியமாக இருக்கும். 

இந்தியர்கள் எப்படி யாரிடம் சேமிக்க வேண்டும் என்று காசு வாங்கிக் கொண்டு ஸ்டீவ் வா  ஆலோசனை  சொன்னாரோ அந்த ஏ.எம்.பி சன்மார் கம்பெனிதான் முதலில் கடையை இழுத்து சாத்தி விட்டு இந்தியாவை விட்டே ஓடிப்போனது. 

ஏன்யா இதுதான் உன் ஆலோசனையா என்று சட்டையை பிடித்துக் கேட்கலாம் என்றால்  ஸ்டீவ் வா  ஆஸ்திரேலியாவில் அல்லவா பத்திரமாக இருக்கிறார்.


No comments:

Post a Comment