இன்று காலை ஆறு மணிக்கு வீட்டு வாசல் கதவைத் திறந்தால்
வீட்டின் எதிரே ஜே.ஜே என கூட்டம். வீட்டின் எதிரே இருக்கும்
மாநகராட்சி துவக்கப் பள்ளி காம்பவுண்டின் வெளியே மக்கள்
வெள்ளம்.
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி ஆகியவற்றை
பெறுவதற்காக திரண்டிருந்த மக்கள் அவர்கள். ஐந்து மணிக்கெல்லாம்
வந்து விட்டதாக சொன்னார்கள். ஆறு மணிக்கு விழா என்று
அறிவிக்கப்பட்டிருந்ததால் வாங்கிக் கொண்டு போய் சமைக்கலாம்
என்று புறப்பட்டு வந்திருந்தார்கள்.
ஆனால் ஆறு மணிக்கு அதிகாரிகள் யாரும் வரவில்லை.
ஏழு மணிக்கு மேடை போடுவதற்கான பொருட்கள் வந்தது.
எட்டு மணிக்கு தடுப்பு கட்டுவதற்கான பொருட்கள், நாற்காலிகள்
வந்தது. மக்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
பத்து மணிக்கு மேல் வந்த அதிகாரிகள் எல்லோரும் அமைதியாக
இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை மட்டும் செய்து
கொண்டிருந்தார்கள். தமிழ்த்தாய் வாழ்த்து ஒழுங்காக
பாடுகிறதா என்பதை அவ்வப்போது சோதனை செய்து
கொண்டு மக்களை சோதித்துக் கொண்டிருந்தார்கள்.
ஒரு வழியாக பனிரெண்டு மணிக்கு வேலூர் மேயர்,
மாவட்ட ஆட்சியர், முன்னாள் அமைச்சர் விஜய் உள்ளிட்ட
பரிவாரங்களோடு அமைச்சர் முகமது ஜான் வந்து சேர்ந்தார்.
முதலாவது பேச்சாளராக மேயர் பேசும்போதே மக்கள்
பொறுமை இழந்து விட்டனர்.
கிட்டத்தட்ட பத்து நிமிடங்களுக்குள் விழாவை முடித்து
போட்டோவிற்கு போஸ் கொடுத்து விட்டு புறப்பட்டு விட்டார்கள்.
அதன் பின்புதான் தள்ளு முள்ளு. நான்கு மணி வரை
வினியோகம் நடந்தது. ஆனால் முக்கால்வாசிப் பேருக்கு
கிடைக்கவில்லை. நாளை வாருங்கள் என்று அனுப்பி விட்டார்கள்.
சரியான திட்டமிடுதல் இருந்திருந்தால் மக்கள் பட்ட அவஸ்தையை
அதிகாரிகள் தவிர்த்திருக்கலாம்.
பனிரெண்டு மணிக்குத்தான் அமைச்சரால் வரமுடியும் என்றால்
மக்களை ஆறு மணிக்கெல்லாம் வர வைத்திருக்க வேண்டிய
அவசியம் கிடையாது.
ஆனால் அப்படி செய்திருந்தால் அமைச்சர் வந்திருக்கும்போது
கூட்டம் இருந்திருக்காதே! இலவசமாக தருவதை காத்திருந்துதான்
பெற்றுக் கொள்ளட்டுமே என்ற அதிகார வர்க்க மனோபாவமும்
இதில் இணைந்தே இருக்கிறது.
பொருட்கள் கிடைக்காதவர்கள் தங்கள் ஏமாற்றத்தை
மறைத்துக் கொண்டு அமைதியாக சென்றது ஆச்சர்யமாக
இல்லை. கோபப்பட்டால் அவை பறி போய்விடுமோ என்ற
அச்சம் இன்னும் மக்களிடம் உள்ளது.
பத்து நிமிட விழாவில் நான் கவனித்த விஷயங்கள்.
அமைச்சர் முகமது ஜானை அண்ணன் என்று குறிப்பிட்ட
வேலூர் மேயர் முன்னாள் அமைச்சரை டாக்டர் விஜய் என்றே
குறிப்பிட்டார். மற்றவர்களுக்கெல்லாம் திரு, திருமதி
என அடைமொழி கொடுத்தவர் துணை மேயருக்கு மட்டும்
எதுவும் சொல்லவில்லை. உள்கட்சி மோதலை இதுவே
நன்றாகவே வெளிச்சம் போட்டு காட்டியது.
மக்கள் நல்வாழ்வு முன்னாள் அமைச்சர் என்று டாக்டர்
விஜயை அனைவரும் குறிப்பிடும் போது அவர் முகம்
ஒரு நொடி வாடிப் போனதை நன்றாகவே உணர முடிந்தது.
புரட்சித் தலைவி இதய தெய்வம் தமிழக முதல்வர் அம்மா
என்றுதான் ஒவ்வொருவரும் ஒவ்வொரு முறையும்
தவறாமல் குறிப்பிட்டார்கள்.
ராஜ குலோத்துங்க வை சொல்லாமல் விட்ட காவலாளிக்கு
இருபத்து மூன்றாம் புலிகேசி கொடுத்த தண்டனை போல
அம்மாவும் கொடுப்பார்களோ?
ஒரே ஒரு சந்தோஷம்.
நிறைய தர்பூசணி பழங்களோடு இரண்டு சிறு வியாபாரிகள்
வந்திருந்தனர். அத்தனையும் விற்றுப் போய் மகிழ்ச்சியோடு
திரும்பினார்கள்.
அரசாங்க பணத்தில் கொடுக்கிற இலவசத்துக்கெல்லாம் யாருயா விழா எடுக்கச்சொல்லறது? அது என்ன அமைச்சர்வீட்டு அலமாரியில் இருந்து எடுத்துவந்த பணமா?
ReplyDeleteஅம்மா தண்டனை அனைவருக்கும் தெரிந்ததே. அம்மா வரும்பொழுது அமைச்சர்களின் முதுகு வளைவை வைத்தே அவர் அமைச்சராக நீடிப்பாரா? இல்லையா? என்பதை யூகித்துவிடலாம்.
ReplyDelete