Wednesday, March 6, 2013

மோசடிதான் வாடிக்கை, அதுதான் இவர்களுக்கு வாழ்க்கை

பெட்ரோல்: அரசின் மோசடி வேலை

 

 
மாற்றுப்பாதைக்கான போர் முழக்க பிரச்சாரப் பயணத்தில் விலைவாசி உயர்வைக்கட்டுப்படுத்த வேண்டும் என்னும் முழக்கம் முக்கிய இடம் பெற்றுள்ளது. கடந்த பத்தாண்டுகளாக மக்களை வாட்டி வதைக்கும் வரலாறு காணாத விலையேற்றத்துக்கு மத்திய ஆட்சியாளர்களின் வரி விதிப்புக்கொள்கைகள், முன்பேரவர்த்தகம், ஏற்றுமதி இறக்குமதிக்கொள்கைகள் போன்றவற்றுடன் பெட்ரோலியப் பொருட்களின் விலையேற்றமும் முக்கிய காரணமாக இருந்து வருகின்றன. சர்வதேச விலையேற்றத்தைக்காரணமாகக் குறிப்பிட்டு திடீர் திடீரென பெட்ரோல், டீசல் போன்றவைகளின் விலைகள் ஏற்றப்படுகின்றன. இந்த விலையேற்றம் ஏற்படுத்தக்கூடிய அலை வீச்சு போன்ற மாற்றத்தால் அனைத்துப்பொருட்களின் விலைகளும் ஏறுவது தவிர்க்கமுடியாததாகிவிடுகிறது. அண்மையில் பெட்ரோலின்விலையை லிட்டருக்கு ரூ.1.50 என்ற அளவிலும் டீசல் விலையை லிட்டருக்கு ஐம்பது பைசாவும் உயர்த்தியுள்ள எண்ணெய் நிறுவனங்கள், ஒரு இரட்டை விலைக் கொள்கையையும் அறிவித்துள்ளன. இதன்படி டீசலை மொத்தமாக வாங்குவோர் ஒரு லிட்டர் டீசலுக்கு ரூ.11 கூடுதலாக அளிக்கவேண்டும். இதனால் மொத்தமாக டீசலை வாங்கவேண்டிய நிலையிலுள்ள போக்குவரத்துக்கழகங்கள் ரயில்வே, சிமெண்ட் மற்றும் மின் உற்பத்தி நிறுவனங்களின் செலவு அதிகமாகும். 


அவை இச்சுமைகளை மக்கள் தலைக்கு மாற்று வதற்கு அதிகக்காலம் பிடிக்காது.பெற வேண்டிய விலையை முழுமையாக எண்ணெய் நிறுவனங்கள் பெறாததினால் அவை பாதிப்புக்குள்ளாகின்றன. எனவே விலைகளை சர்வதேசச் சந்தையின் நிலைக்கு உயர்த்த வேண்டியுள்ளது என்று அரசு விளக்கம் அளிக்கிறது. இந்தியா தனது பெட்ரோலியப்பொருட்களின் தேவையில் முக்கால் பங்கினை அயல் நாடுகளிலிருந்து இறக்குமதி செய்கிறது என்பது உண்மையே. ஆனால் சர்வதேசச் சந்தையின் விலையைக் காரணம் காட்டி குறைவான விலையைப்பெறுவதாகக் கூறுவது பெரும் ஏமாற்று வேலையே. சரியான விலை எதுவாக இருக்கும் என்று அவர்கள் குறிப்பிடுவதற்கும் அவற்றின் உற்பத்திச் செலவுக்கும் சிறிதும் தொடர்பில்லை. ஏனெனில் பெட்ரோல், டீசல் போன்றவற்றை இந்தியா நேரடியாக இறக்குமதி செய்வதில்லை. அவற்றின் உற்பத்திக்கான மூலப்பொருளாக உள்ள கச்சா எண்ணெய்யைத்தான் இறக்குமதி செய்து அவற்றை நமது நாட்டிலுள்ள சுத்திகரிப்பு நிலையங்களில் சுத்திகரிக்கிறது. ஆனால் பெட்ரோல் அல்லது டீசலை நேரடியாக இறக்குமதி செய்தால் அவற்றின் அடக்கவிலை என்னவாக இருக்குமோ அத்துடன் வரிகள் போக்குவரத்துச் செலவு, காப்பீட்டுக் கட்டணம் உள்ளிட்ட அனைத்தையும் சேர்த்து அதன் அடிப்படையில் ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசலுக்கான விலை எண்ணெய் நிறுவனங்களுக்கு கிடைக்கவேண்டும் என்று கணக்கிடுகிறது. மத்திய, மாநில அரசுகள் விதித்துள்ள வரிகளும் இதில் சேர்க்கப்படுகின்றன. நிர்ணயிக்கப்படுகிற விலையின் மதிப்பில் சரிபாதிக்குச் சற்றுக்குறைவாக இந்த வரிகளே உள்ளன என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். 


உள்நாட்டில் உற்பத்தியாகும் 25 சதவீதம் கச்சா எண்ணெயை சுத்திகரித்து கிடைக்கும் பெட்ரோல் அல்லது டீசலுக்கும் இதே விலையைத்தான் கிடைக்கவேண்டிய விலையாக அரசு குறிப்பிடுகிறது. இது எத்தகையமோசடி என்பதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம், சில மாதங்களுக்கு முன்னர் செய்யப்பட்ட ஒரு கணக்கீட்டின்படி இந்தியாவில் கிடைக்கும் கச்சா எண்ணெயின் அடக்கவிலை பீப்பாய் சுமார் 55 டாலர் என்று கணக்கிடப்பட்டது. அப்போது சர்வதேச விலை பீப்பாய் 150 டாலராக இருந்தது. நமது கச்சா எண்ணெய் தேவையில் இந்திய உற்பத்தி மற்றும் இறக்குமதியின் மொத்த அடக்கவிலையைக் கணக்கிட்டால் ஒரு பீப்பாயின் சராசரி விலை 122 டாலராக இருக்கும். இது லிட்டர் கணக்கில் ரூ.31 என்று வரும். இதனுடன் சுத்திகரிப்பு, செலவு, விற்பனை செலவு, லாபம் எல்லாவற்றையும் சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோலை ரூ.35க்கு விற்கமுடியும் என்று கணக்கிடப்பட்டது.

 இன்றையதினம் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் சர்வதேச விலை 113.16 டாலர் தான் என்பதிலிருந்து ரூ. 35 ஐவிடவும் குறைவான விலைக்கு விற்கமுடியும் என்பதை புரிந்து கொள்ளலாம். ஆனால் விலையை இவ்வாறு நிர்ணயம் செய்யாமல் நமது நாட்டுக்குத்தேவைப்படும் பெட்ரோல், டீசல் ஆகியவை முழுமையாக இறக்குமதி செய்யப்படுவதாக அனுமானித்து கச்சா எண்ணெயின் அடக்க விலையை எடுத்துக்கொள்ளாமல் உள்நாட்டு உற்பத்தியின் அடக்கவிலையையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் நிர்ணயிக்கப்படும் செயற்கையான விலையைக்காட்டி ஏற்கெனவே நிர்ணயிக்கப்பட்ட விலைகளால் எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாகக் கூறி சர்வதேச சந்தையில் ஏற்படும் ஒவ்வொரு மாற்றத்துக்கும் ஏற்ப விலைகளை அரசு அடிக்கடி உயர்த்தி வருகிறது. இது எத்தனை பெரிய மோசடி?

கி.இலக்குவன்

நன்றி - தீக்திர் நாளிதழ் 05.03.2013

No comments:

Post a Comment