Friday, March 16, 2012

நம்பினார்கள், ஏமாந்தார்கள்



இன்று மதியம் அலுவலகத்தில் பேசிய பலரும் சோகத்தோடும் ஏமாற்றத்தோடும் இருந்தார்கள்.  அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை எல்லோரும் ஒரே நிலையில்தான் இருந்தார்கள். வருமான வரி விலக்கில் வெறும் இருபதாயிரம் ரூபாய் மட்டுமே பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டதே சோகத்திற்கான காரணம்.

ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி இருக்காது, இல்லையில்லை மூன்று லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்றெல்லாம் ஊடகங்கள் கிளப்பிய பரபரப்பை நம்பி ஏமாந்தவர்கள் இவர்கள்.

“இந்த அரசின் குணாம்சம் நமக்குத் தெரியாதா? சாமானிய மக்களைப் பற்றி எப்போது கவலைப்பட்டுள்ளார்கள். இருப்பதை பறிக்க முயற்சி செய்வார்களே தவிர, புதிதாக எதையும் கொடுக்க மாட்டார்கள். இப்போது கூட அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும்தான் சலுகை அளித்துள்ளார்கள். சாமானியர்களுக்கு அல்ல” என்று விளக்கம் அளித்தேன்.

பட்ஜெட்டை இன்னும் முழுமையாக படிக்கவில்லை. முழுமையாக ஆய்வு செய்தால்தான் அதிலே ஒளிந்திருக்கும் அபாயங்கள் தெரிய வரும். மத்தியரசின் பொருளாதாரக் கொள்கை பற்றி எவ்வளவோ கூட்டங்களில் பேசியிருக்கிறோம், எழுதியுள்ளோம். அப்படி இருந்தும் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர்களைப் பார்த்து வருத்தம் வரவில்லை. கோபம்தான் வந்தது.

இந்த வருத்தம் எல்லாம் சச்சின் டெண்டுல்கர் நூறாவது நூறை அடிக்கும்வரைதான். அதன் பின்பு நிலைமையே மாறி விட்டது. மீண்டும் ஒரு உற்சாகம்.

நடுத்தர மக்களின் இந்த மனநிலை தான்  ஆட்சியாளர்களின் அராஜகங்களுக்கு அடித்தளம்.

1 comment:

  1. சச்சினுக்கு பாரத ரத்னா கொடுக்க வேண்டும் என்றுஊடகங்கள் கிளப்பத்தயாராக உள்ளன. பட்ஜட்டாவது மண்ணாவது!----காஸ்யபன்

    ReplyDelete