“எத்தனை அடி வாங்கினாலும் தாங்குகிறான், இவன் ரொம்ப நல்லவன் “ என்ற பிரபலமான திரைப்படக் காட்சியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. தாக்குதல்களை தொடர்ந்து சந்திக்கிற இந்திய மக்களையும் மத்தியரசு அப்படிப்பட்ட நல்லவர்களாகத்தான் பார்க்கிறது போலும்!
தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத மத்தியரசு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்த வழி வகுத்தது. கடுமையான கட்டண உயர்வை மத்திய ரயில்வே பட்ஜெட் அறிவித்துள்ளது. பேருந்துக் கட்டண உயர்வால் புகை வண்டியினை நாடி வந்த மக்களை நடைப் பயணம் செய்யத் தூண்டுகின்றது ரயில் கட்டண உயர்வு.
ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நாடகம் மேலோங்கியதால் கட்டண உயர்வை ஊடகங்கள் பின்னுக்குத் தள்ளி விட்டது. தாக்குதல்கள் தொடரும், ஆனால் அமைச்சர் மட்டும் இருக்க மாட்டார். “ ஆபரேஷன் சக்ஸஸ், டாக்டர் இறந்து விட்டார்” என்ற புதிய சொற்றொடரை உருவாக்கியுள்ளார்கள்.
இந்திய மக்கள் என்றும் நிமிர முடியாத கடுமையான தாக்குதலாக மத்திய பட்ஜெட் அமைந்து விட்டது. நாற்பத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு புதிய வரிகள், உரத்திற்கும் எரி பொருளுக்கும் மானிய வெட்டு என மிகக் கடுமையான சுமை நம் மேல் ஏற்றப்பட்டுள்ளது.
எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை இந்திய மக்கள் பல்லைக் கடித்துக் கொண்டாவது சகித்துக் கொள்வார்கள் என்று மத்தியரசு கருதுவதால்தான், தொடர்ந்து தாக்குதல்களை தொடுத்துக் கொண்டே இருக்கிறது.
எவ்வளவு அடித்தாலும் தாங்குகின்ற நல்லவர்களாக இருப்பதை விட மீண்டும் தாக்குகின்ற வல்லவர்களாக நாம் மாற வேண்டும். கடுமையான போராட்டங்கள் மூலம் அரசின் கொள்கைகளை பின்னுக்குத் தள்ளிட வேண்டும். அதுவே நம் முன் உள்ள முன்னுரிமைக் கடமை.
No comments:
Post a Comment