குறைந்தபட்ச ஊதியச்சட்டத்தில் உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் அடிப்படையில் மாற்றங்களைக் கொண்டு வருவது,
ஒரு நிறுவனம் வருங்கால வைப்பு நிதியில் இணைக்கப்பட குறைந்த பட்சம் இருபது ஊழியர்கள் இருக்க வேண்டும் என்ற விதியை பத்து ஊழியர்கள் என மாற்றுவது,
குறைந்தபட்ச பென்ஷன் தொகையை ஆயிரம் ரூபாய் என அதிகரிப்பது,
பணிக்கொடை பெறுவதற்கான பணித் தகுதிக் காலத்தை ஐந்தாண்டுகள் என்பதிலிருந்து குறைப்பது, ஒரு நிறுவனத்திலிருந்து வேறு நிறுவனத்திற்கு பணி மாறினாலும் முந்தைய பணிக்காலத்தையும் கணக்கிலெடுத்துக் கொள்வது.
மகப்பேறு கால விடுப்பை பன்னிரெண்டு வாரங்களிலிருந்து இருபத்தி நான்கு வாரங்களாக உயர்த்துவது.
அங்கன்வாடி, சத்துணவு, ஊட்டச்சத்து ஊழியர்கள் ஆகியோருக்கு சமூகப் பாதுகாப்பு வழங்குவது,
மத்திய, மாநில அரசுகள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்குவது,
மாநில அரசுகள் சமூக நல வாரியங்களை அமைப்பது,
தேசிய அளவில் வேலைவாய்ப்புக்களை உருவாக்குவதில் கவனம் செலுத்துவது.
வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் தொழிற்சாலைகளுக்கு முன்னுரிமை அளிப்பது.
தொழிலாளர்களுக்கு ஒரு கௌரவமான பணிச்சூழலை உருவாக்குவது,
மத்திய வேலைவாய்ப்புக் கொள்கை ஒன்றை உருவாக்குவது.
இவையெல்லாம் கோரிக்கைகள் அல்ல, மத்தியரசின் தொழிலாளர் நலத்துறை ஒவ்வொரு ஆண்டும் நடத்தும் இந்தியத் தொழிலாளர் மாநாட்டில் எடுக்கப்பட்ட முடிவுகள்.
மத்திய, மாநில அரசுகள், தொழிற்சங்கங்கள், முதலாளிகள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு மாநாடு இது. நாற்பத்தி ஐந்தாவது முத்தரப்பு தொழிலாளர் மாநாடு இந்த ஆண்டு பிப்ரவரி 14,15 ஆகிய நாட்களில் புதுடெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங் துவக்கி வைக்க நடைபெற்றது.
ஆனால் இம்முடிவுகள் அமுலாக்கப்படுமா?
இக்கேள்வியை எழுப்ப வேண்டிய அவசியம் என்ன?
ஏனென்றால் இம்மாநாட்டை துவக்கி வைத்த பிரதமர் மன்மோகன்சிங், தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாப்பது பற்றி கவலைப்படுவதை விட தொழிலாளர் நலச்சட்டங்களால் சில சமயம் இடையூறுகள் ஏற்படுவதாக கற்பனை செய்து புலம்பியிருக்கின்றார்.
எந்த ஒரு தனியார் முதலாளியும் இந்திய சட்டங்களை மதிப்பதில்லை என்பதையும் அப்படிப்பட்டவர்களுக்கு ஆதரவாகவே தனது அரசு செயல்படுகின்றது என்ற உண்மையையும் மறைத்து அவர் பேசியுள்ளார். அது மட்டுமல்ல, தொழிற்சங்கங்களின் கருத்துக்கள் என்னவென்று தெரிந்து கொள்ளக் கூட அவர் தயாராக இல்லை. வந்தோம், புலம்பினோம், புறப்பட்டோம் என்ற ரீதியில்தான் அவரது மன நிலை இருந்துள்ளது.
இந்த முடிவுகளை ஏட்டளவிலேயே வைத்துக் கொள்ளத்தான் மத்தியரசு விரும்பும் என்பதற்கு நிதி நிலை அறிக்கையே ஒரு ஆதாரம். எடுக்கப்பட்ட முடிவுகளை அமுலாக்குவதற்கான கொள்கை அறிவிப்புக்கள் எதுவுமே பட்ஜெட்டில் வரவில்லை. அதற்கான நிதி ஒதுக்கீடும் செய்யப்படவில்லை.
ஆனால் அப்படியே காலத்தை ஓட்டி விடலாம் என மத்தியரசு கனவு காண முடியாது. ஏனென்றால் உழைக்கும் மக்களின் கோரிக்கைகளை வென்றெடுப்பது என்ற உறுதியான முடிவில் தொழிற்சங்க இயக்கங்கள் உள்ளன. 28.02.2012 அன்று பத்து கோடி தொழிலாளர்கள் பங்கேற்ற ஒரு நாள் வேலை நிறுத்ததின் மகத்தான வெற்றிதான் அதற்குச்சான்று.
உறுதியான போராட்டங்கள், உழைக்கும் மக்களின் கனவுகளை நனவாக்கும். விரைவாகவே . . . .
அருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.