விமானப் பயணங்களில் மாற்றுத் திறனாளிகள் அவமானப்படுத்தப் படுகின்றனர், உரிய சக்கர நாற்காலி கூட இல்லாமல் லக்கேஜ் ஏற்றும் நாற்காலிகளில் ஏற்றுகின்றார்கள், சில சமயம் குண்டுக் கட்டாக தூக்கிக் கொண்டே வந்து விடுகின்றனர் தொடர்ச்சியாக நாளிதழ்களில் செய்திகள் வந்து கொண்டே இருந்தது. தனியார் விமான நிறுவனங்கள்தான் இப்படி மனிதத்தன்மையற்று நடந்து கொள்கிறதோ என்று பார்த்தால், விமானப் போக்குவரத்துத்துறையே அப்படித்தான் உள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்காக சோதனையிலோ, அல்லது அவர்களின் சொந்த சக்கர நாற்காலிகளை பயன்படுத்துவதிலோ எந்த ஒரு முன்னுரிமையும் தர முடியாது என விமானப் போக்குவரத்து ஆணையம் தெளிவாக சொல்லி விட்டது. அதற்குச் சொல்லியுள்ள காரணம்தான் மிக மிக அராஜகமானது.
மாற்றுத் திறனாளிகள் மூலம் ஆயுதங்கள், வெடிப் பொருட்கள், போதைப் பொருட்கள் ஆகியவற்றை கடத்துவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளதாம். அவர்கள் பயன்படுத்தும் பொருட்களில் இவற்றையெல்லாம் ஒளித்து வைத்து விமானத்திற்கு உள்ளே கடத்திக் கொண்டு வர முடியுமாம்! அதனால் மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்வித சலுகையும் அளிக்க முடியாது என்று ஆணித்தரமாக சொல்லி விட்டது.
மாற்றுத் திறனாளிகள் எதிர்பார்ப்பது தங்களையோ அவர்கள் கொண்டு வரும் பொருட்களையோ சோதனை செய்யக் கூடாது என்பதல்ல. விமானத்தில் ஏறும் போதும் இறங்கும் போதும் உரிய வசதிகள் வேண்டும் என்பதுதான். மனிதர்களாக எங்களை மதியுங்கள், பொருட்களாக பார்க்காதீர்கள் என்பதுதான். ஆனால் விமானப் போக்குவரத்துத் துறையோ, அவர்களை குற்றவாளிகள் போல பார்க்கிறது.
இப்படி அபாண்டமாக பேசுகின்ற விமானப் போக்குவரத்துத் துறையால் எத்தனை மாற்றுத் திறனாளிகள் விமானத்திற்குள் ஆயுதங்களையோ, போதைப் பொருட்களையோ கடத்தி வந்துள்ளார்கள் என்பதை சொல்ல முடியுமா?
அடுத்த நாட்டு ஜனாதிபதிகளின் ஆடைகளைக் கூட அவிழ்த்து சோதனை செய்யும் அமெரிக்கா கூட மாற்றுத்திறனாளிகளிடம் பரிவாக நடந்து கொள்கிறதாம்.
அரசே இப்படி இருந்தால் தனியார் விமானக் கம்பெனிகள் மட்டும் எப்படி இருக்கும்?
தலை கோணலாக உள்ள போது வால் மட்டும் நேராகவா இருக்கும் ?
No comments:
Post a Comment