Wednesday, February 15, 2023

இதுக்கும் ரெய்டுண்டா மோடி?

 


ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் அவர்களின் முகநூல் பக்கத்திலிருந்து சுட்டது.

 இது ஒரு ஓவியம் என்றால் நம்ப முடிகிறதா?

 ஆம். நிஜமாகவே ஓவியம்தான்.எவ்வளவு நுணுக்கமாக வரையப்பட்டுள்ளது பாருங்கள்.

 அந்த ஓவியக் கலைஞரின் பெயர்

 Tuan Nguen Anh, வியட்னாம் நாட்டைச் சேர்ந்த ஓவியர்.

பின் குறிப்பு: உங்களை அம்பலப்படுத்தும் ஊடகவியாளரின் பதிவை பகிர்ந்து கொண்டுள்ளேனே மோடி, இதற்கும் வருமான வரித்துறையை என் வீட்டுக்கு  ரெய்டு அனுப்புவீர்களா? ஏனென்றால் விவஸ்தை கெட்ட அரசல்லவா உங்களுடையது!

Tuesday, February 14, 2023

வடை போன வருத்தம் மோடி

 


பசு கட்டிப்பிடி தினம் தொடர்பான சுற்றறிக்கையை இந்திய விலங்குகள் வாரியம் இன்று திரும்பப் பெறாமல் இருந்திருந்தால் இன்றைய நாள் எப்படி இருந்திருக்கும்!

பசுவைக் கட்டி பிடித்த படி மோடி எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் முழுதும் நிரம்பி இருக்கும்.

மோடி வழியில் சங்கிகளும் அவர்கள் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை போட்டிருப்பார்கள்.

பசுவால் முட்டப்பட்டவர்கள், கடிக்கப்பட்டவர்கள் என்று மருத்துவமனைகள் கூட நிரம்பியிருக்கும்.

கடைசியில் இப்படி ஆயிடுச்சே!

நெஜமாகவே வருத்தமாயிருக்கு மோடி!

ஆமாம், வடை போச்சே மோடி . . .

இலவு காத்த எச்.ராசா

 



 

பாஜக மாநிலத் தலைவராக இருந்த

 

இல.கணேசன் கவர்னராகி விட்டார்.

தமிழிசை  க்வர்னராகி விட்டார்.

எல்.முருகன்  மத்திய மந்திரியாகி விட்டார்.

இதோ இப்போது

சி.பி.ராதாகிருஷ்ணன் கூட கவர்னராகி விட்டார்.

 நாளை ஆட்டுக்காரன் கூட ஆகலாம்.

 

ஆனால் பாவம் எச்.ராசா!

 

அவருக்கு  மாநிலத் தலைவர் பதவி கூட கிடைக்கவில்லை. ஏதோ கலைஞர் போட்ட பிச்சையால் ஒரே ஒரு முறை எம்.எல்.ஏ வாகும்  வாய்ப்பு கிடைத்தது.

 

அவ்வளவுதான்…

 

எத்தனை ஆண்டுகள் எலவு காத்த கிளியாய் காத்தாலும் எச்.ராசாவும் அந்த கிளி போல் ஏமாற்றமடைய வேண்டுதான்.

 

அவருக்கு அவ்வளவுதான் பாஜகவில் மரியாதை. . .

 

Monday, February 13, 2023

பிரபாகரன் வந்தால் சீமான்?

 


பிரபாகரன் நலமுடன் உள்ளார். மனைவி, மகளுடன் விரைவில் வெளி வர உள்ளார் என்று பழ.நெடுமாறன் அவர்கள் சொல்லியுள்ளார்.  



அவர் சொன்னது போல பிரபாகரன் உயிரோடு இருக்கிறாரா இல்லையா என்பதெல்லாம் அப்படி அவர் வெளியே வரும் நாள்தான் தெரிய வரும்.

 அப்படி அவர் உயிருடன் வந்தால்?

 ரஜினிமுருகன் படத்தில் இறந்து விட்டதாக சடங்குகள் செய்யப்பட்ட ராஜ்கிரண், சமுத்திரக்கனி பிரச்சினைக்கு வந்ததும் எழுந்து கொள்வாரே, அது போல பிரபாகரன் வந்தால்

  யாருக்கு பிரச்சினை?

 சந்தேகமே இல்லாமல்

 சீமானுக்குத்தான் . . .

 எத்தனை எத்தனை கதைகள் விட்டுள்ளார்!

 

இட்லியில் கறி வைத்த கதை

ஆமைக்கறி சாப்பிட்ட கதை

அரிசிக்கப்பலை சுட்ட கதை

இவர் சாப்பிட்டதை கணக்கெடுத்த கதை

சமீபத்தில் பார்த்த ஒரு காணொளியில் அவர் சுட்டு விட்டு சரியாக் சுட்டேனா என்று இவரை கேட்ட கதை.

 

அது மட்டுமா பிரபாகரன் பெயரைச் சொல்லி வசூல் வேட்டையாடியது

 இதற்கெல்லாம்  சீமானுக்கு தண்டனை கொடுத்தால் சீமான் தாங்குவாரா?

குறைந்த பட்சம் மரத்தில் கட்டி பச்சை மட்டையிலாவது அடிக்க வேண்டும்.

Sunday, February 12, 2023

தீர்ப்பல்ல, ஆளுனர் நுழைவுத் தேர்வு

 


சில வருடங்கள் முன்பாக படித்ததை ஆளுனர் நியமன அறிவிப்பு நினைவு படுத்தி விட்டது.

"இப்போதெல்லாம் சில நீதிபதிகள் தீர்ப்பெழுதுவதில்லை. ஆளுனர்,எம்.பி, தூதர் போன்ற அடுத்த பதவிக்கான நுழைவுத் தேர்வை எழுதுகிறார்கள்"

இதெல்லாம் 2014 முதல் வந்த கொடுமை.

ஃப்ரண்ட்லைன் முன்னாள் ஆசிரியர் தோழர் விஜயசங்கர் ராமச்சந்திரன் எழுதிய முகநூல் பதிவை படியுங்கள் .வலி புரியும்.

யாரென்று தெரிகிறதா?

உச்சநீதி மன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்ற அப்துல் நசீர் ஆந்திர மாநில ஆளுநராக நியமிக்கப் பட்டதில் ஆச்சரியமில்லை.

அவர் பாபர் மசூதி வழக்கிலும், செல்லாப் பண நடவடிக்கை வழக்கிலும் ‘அவர்களுக்கு’ சாதகமான தீர்ப்பு வழங்கிய நீதிபதிகளின் அமர்வில் (bench) அங்கம் வகித்தவர்.

மேலும் இந்துத்வத்திற்கு ஆதரவாகப் பேசி வருபவர். டிசம்பர் 26, 2021 அன்று ஆர் எஸ் எஸ்சின் துணை அமைப்பான அகில் பாரதீய அதிவக்ட பரிஷத் இந்திய நீதித் துறையை பாரதீய கலாச்சார்த்திற்கு உகந்த வகையில் மாற்றியமைக்க வேண்டும் என்று பிரச்சாரம் செய்து வரும் வழக்கறிஞர்களுக்கானது) தன் தேசிய கவுன்சில் கூட்டத்தை நடத்தியது. அதில் பேசிய நசீர், “இந்திய நீதித் துறை மனு, சாணக்கியர், காத்தாயனர், பிரஹஸ்பதி, நாரதர், யாக்யவாக்கியர். போன்றவர்கள் உருவாக்கிய சட்டப் மரபை புறக்கணித்து வருகிறது. காலனிய நீதி அமைப்பைப் பின்பற்றுகிறது. இது நமது அரசியலமைப்புச் சட்டத்திற்கும், தேச நலனுக்கும் எதிரானது.”

அவருடய உரை குறித்து ஃபிரண்ட்லைன் இதழில் கட்டுரை வெளியிட்டோம். Live.law என்கிற இணைய இதழிலும் விவரங்கள் வெளியாயின.

அந்த திரைப்படங்கள் போலவே . . .

 


ஹைதராபாத்திலிருந்து  70 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கிற வெங்கட்பூர் எனும் கிராமம். ஜனவரி 9 ம் தேதி காலை வழக்கம் போல பணிக்கு வருகிற துப்புறவுத் தொழிலாளர்கள் ஒரு கார் எரிந்து போயும் அதில் ஒரு ஆண் கால்கள் தவிர கருகிய நிலையில் இருப்பதையும் பார்க்கிறார்.

தகவல் பறக்கிறது. ஊரார் வருகின்றனர். போலீசும் வருகிறது. எரிந்த காருக்குப் பக்கத்தில் ஒரு பையில் ஒருவரின் ஆதார் கார்ட், ரேஷன் கார்ட், ஊழியர் அடையாள அட்டையின் ஜெராக்ஸ் நகல்கள்.

அவர் தெலுங்கானா தலைமைச்செயலகத்தில் அதிகாரியாக பணியாற்றியவர். ஆசிரியராக வேலை பார்த்தவருக்கு அரசு அதிகாரியாக வேலை கிடைக்கிறது.

அவருடைய கார்தான் என்று ஊரே சொல்கிது. இறந்த்து என் கணவர்தான் என்று மனைவி அடையாளம் காட்ட தகனமும் முடிந்தது.

ஆனாலும் போலீசுக்கு கொஞ்சம் நெருடல்.

 காரில் எரிந்த உடலின் கால்கள் மட்டும் கருப்பாக இருக்கிறது. ஆனால் இறந்து போனவரின் புகைப்படமோ, அவர் சிவப்பு நிறம் என்று சொன்னது. போதாக்குறைக்கு எரிந்த காருக்கு பக்கத்தில் இரண்டு லிட்டர் பெட்ரோல் பாட்டில் வேறு.

 போலீஸ் விசாரிக்கிறது. ஒரு விபத்தில் அடிபட்டதால் காலில் தழும்புகள் உருவானது. அதனால் அவை சிவப்பாக இல்லை என்று மனைவி சொல்கிறார். அவரை கொலை செய்ய் எந்த முகாந்திரமும் யாருக்கும் கிடையாது என்று ஊர் மக்கள் சொல்கிறது.

 இறந்தவரின் தொலைபேசியை ஆராய்கிறது. ஸ்ரீனிவாஸ், பாபு என்ற இருவருடன் நிறைய பேசியதாக தொலைபேசி ஆவணங்கள் சொன்னது. அவர்களை விசாரித்த போது சந்தேகப்படும் படி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

 தொலைபேசி எண்களை நன்கு ஆராயும் போது ஜனவரி மாதம் 7 ம் தேதி மட்டும் ஒரே ஒரு தொலைபேசி ஒரு புதிய எண்ணிலிருந்து வந்துள்ளது. அந்த எண்ணை கண்டுபிடித்தால் அது விபத்து நடந்த ஊரிலிருந்து 60 கிலோ மீட்டர் தொலைவில் இருந்த ஒரு ஊரில் உள்ள ஒரு டீக்கடை முதலாளியின் எண். போலீஸ் நேரில் விசாரித்த போது, ஒரு வாடிக்கையாளர், தன் போனில் பணம் இல்லாததால்  என் போனை வாங்கி பேசினார் என்றும். அந்த நபரை இன்னொரு முறை பார்த்தால் என்னால் அடையாளம் காட்ட முடியும் என்று சொல்ல, போலீஸ் அந்த அரசு ஊழியர் மற்றும் அவரது உறவினர்களின் புகைப்படங்களை காண்பிக்க தொலைபேசி செய்த அந்த நபர் ஸ்ரீனிவாஸ்.

 போலீஸ் மீண்டும் விசாரிக்க ஸ்ரீனிவாஸ் சொன்ன உண்மை அவர்களுக்கு அதிர்ச்சியளித்தது.

 தன் மாமாவான அரசு ஊழியரை தானும் கொல்லவில்லை என்பதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை, அவரே இறந்து போகவில்லை என்பதையும் சொல்ல போலீஸின் கவனிப்பில் மற்ற உண்மைகளும் வெளி வந்து விட்டது.

 ஆசிரியராக வேலை பார்த்து  அரசு அதிகாரியாக மாறிய பிறகு கடன் வாங்கி ஆடம்பரமாக வீடு கட்டுகிறார். வட்டி கட்ட முடியவில்லை. சிட்பண்டுகளில் கட்டியிருந்த சீட்டுப் பணத்தை எடுக்கிறார். சீட்டு தவணைகளை கட்ட முடியவில்லை. பங்குச்சந்தைக்குப் போகிறார். அங்கும் நல்ல அடி.  நிலைமையை சமாளிக்க கிரிமினல்தனமாக யோசிக்கிறார்.

 வெவ்வேறு மாதங்களில் எட்டு கோடி ரூபாய்க்கு இன்சூரன்ஸ் பாலிசிகள் எடுக்கிறார். ஒரு செகண்ட் ஹாண்ட் கார் வாங்குகிறார்.

 வீட்டு வேலைக்கு ஆள் வேண்டும் என்று தேடுகிறார். வலையில் இரை சிக்குகிறது. ஊருக்கு அழைத்து போவதாக சொல்கிறார். அந்த மனிதன் நிறைய மது அருந்தியிருந்ததால் திட்டத்தை கை விடுகிறார். இறந்து போகும் மனிதன் வயிற்றில்  ம்து இருப்பது போஸ்ட் மார்ட்டத்தில் தெரிய வந்து அதன் மூலம் டெத் க்ளெய்ம் நிராகரிக்கப்படுமா என்ற  அச்சமே காரணம்.

 மறு நாள் இன்னொரு இரை சிக்குகிறது. இவரும் இவர் உறவினர் ஸ்ரீனிவாசும் அந்த இரைக்கு கள் வாங்கிக் கொடுத்து (போஸ்ட்மார்ட்டம் பற்றிய கவலையை  மறந்து விட்டார்கள் போல) தலையில் தட்டி கொன்று விட்டனர். காரின் ட்ரைவர் சீட்டில் உட்கார வைத்து ஒரு பள்ளத்தில் தள்ளி விட்டார்கள். காரின் மீது பெட்ரோலை  ஊற்றி கொளுத்தி விட்டார்கள். விபத்து போல காட்சியளிக்க வேண்டுமென்பதுதான் திட்டம்.

 கடைசியில் எரியாத கால்களும் இரண்டு லிட்டர் பெட்ரோல் பாட்டிலும் பேலன்ஸ் தீர்ந்து போன போனும் காட்டிக் கொடுத்து விட்டது. அவரும் ஸ்ரீனிவாசும் மட்டுமல்ல, கொலைக்கு உடந்தையாக இருந்த காரணத்தால் மனைவியுமே இப்போது சிறையில் உள்ளனர்.

 நடிகர் திலகம் மூன்று வேடங்களில் நடித்த “பலே பாண்டியா”  நாகேஷ் இரட்டை வேடத்தில் நடித்த “கை நிறைய காசு” அகிய இரண்டு படங்களின் கதையும் ஒன்றுதான். தன்னைப் போலவே இருக்கும் நபரை கொலை செய்து தான் காப்பீடு செய்திருக்கிற தொகையை பெறுவது என்பதுதான்.

 உருவ ஒற்றுமை இல்லாத போதும் வேறு ஒருவரைக் கொன்று தான் இறந்து போனதாக நாடகமாடி இன்சூரன்ஸ் பணத்தை பெற மோசடி செய்தவர்கள் இப்போது சிறையில் தவிக்கிறார்கள்.

 முக்கியமான விஷயத்தை சொல்லவில்லையே!

 அந்த மோசடிப்    பேர்வழியின் பெயர்

 தர்மா

மோடி, வைத்துக் கொண்டா வஞ்சகம்????

 


அதானி நிறுவன முறைகேடுகள், அதானி அரசு கூட்டுக் களவாணித்தனம் குறித்து பதில் சொல்வதற்குப் பதிலாக "ராகுல் காந்தி ஏன் நேரு பெயரை தன் பெயரோடு இணைத்துக்கொள்ளவில்லை?" என்று கேணத்தனமான கேள்வியை கேட்டுள்ளார்.

இந்தியக் கலாச்சார காவலர்களாக சீன் போடும் சங்கிகளுக்கு தந்தையின் குடும்பப் பெயர்தான் தொடரும் என்பது தெரியாதா என்ன!

இல்லை காவிக்கயவர்களின் திட்டம் வேறு

இவர்களாகவே உருவாக்கிய கட்டுக்கதையான ஃபெரோஸ் காந்தியின் உண்மையான பெயர் ஃபெரோஸ் கான் என்பதை மீண்டும் பரப்பி பிரச்சினையை திசை திருப்பும் கேவலமான உத்தி. 

அது மட்டுமல்ல, அதானிக்கு சில மாநிலங்களில் கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் குறித்த சின்ன பட்டியலைப் போட்டு மோடி மட்டுமா உதவினார் என்று திசை திருப்பும் இன்னொரு கேவலமான பதிவும் உலா வருகிறது. இங்கே கூட ஒரு அனாமதேயம் அதை வாந்தி எடுத்தது.

ஏன் இப்படி திசை திருப்புகிறார்கள்?

எளிய காரணம்.

அதானி வளரவும் ஏமாற்றவும் மோடிதான் காரணம்.

வேறு காரணம் ஏதுமில்லை.

அப்படி இருந்திருந்தால் அதை வைத்துக் கொண்டா மோடி வஞ்சகம் செய்வார்!