Thursday, March 22, 2012

இன்னும் எத்தனை நாட்கள் நாம் நல்லவர்களாகவே நடிக்க வேண்டும் ?




“எத்தனை அடி வாங்கினாலும் தாங்குகிறான், இவன் ரொம்ப நல்லவன் “ என்ற பிரபலமான திரைப்படக் காட்சியை யாரும் மறந்திருக்க வாய்ப்பில்லை. தாக்குதல்களை தொடர்ந்து சந்திக்கிற இந்திய மக்களையும் மத்தியரசு அப்படிப்பட்ட நல்லவர்களாகத்தான்  பார்க்கிறது போலும்!

தொடர்ச்சியாக உயர்ந்து கொண்டிருக்கும் விலைவாசியை கட்டுப்படுத்த முடியாத மத்தியரசு பெட்ரோலியப் பொருட்களின் விலைகளை உயர்த்த வழி வகுத்தது. கடுமையான கட்டண உயர்வை மத்திய ரயில்வே பட்ஜெட் அறிவித்துள்ளது. பேருந்துக் கட்டண உயர்வால் புகை வண்டியினை நாடி வந்த மக்களை நடைப் பயணம் செய்யத் தூண்டுகின்றது ரயில் கட்டண உயர்வு.

ரயில்வே அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என்ற நாடகம் மேலோங்கியதால்  கட்டண உயர்வை ஊடகங்கள் பின்னுக்குத் தள்ளி விட்டது. தாக்குதல்கள் தொடரும், ஆனால் அமைச்சர் மட்டும் இருக்க மாட்டார். “ ஆபரேஷன் சக்ஸஸ், டாக்டர் இறந்து விட்டார்” என்ற புதிய சொற்றொடரை உருவாக்கியுள்ளார்கள்.

இந்திய மக்கள் என்றும் நிமிர முடியாத கடுமையான தாக்குதலாக மத்திய பட்ஜெட் அமைந்து விட்டது. நாற்பத்தி ஐந்தாயிரம் கோடி ரூபாய்க்கு புதிய வரிகள், உரத்திற்கும் எரி பொருளுக்கும் மானிய வெட்டு என மிகக் கடுமையான சுமை நம் மேல் ஏற்றப்பட்டுள்ளது.

எத்தனை பிரச்சினைகள் வந்தாலும் அவற்றை இந்திய மக்கள் பல்லைக் கடித்துக் கொண்டாவது  சகித்துக் கொள்வார்கள் என்று மத்தியரசு கருதுவதால்தான், தொடர்ந்து தாக்குதல்களை தொடுத்துக் கொண்டே இருக்கிறது.

எவ்வளவு அடித்தாலும் தாங்குகின்ற நல்லவர்களாக  இருப்பதை விட மீண்டும் தாக்குகின்ற  வல்லவர்களாக நாம் மாற வேண்டும். கடுமையான போராட்டங்கள் மூலம் அரசின் கொள்கைகளை பின்னுக்குத் தள்ளிட வேண்டும். அதுவே நம் முன் உள்ள முன்னுரிமைக் கடமை.

Wednesday, March 21, 2012

அசிங்கமாக மாட்டிக் கொள்ள பா.ஜ.க வுக்கு போட்டி யாரேனும் உண்டா?




கலாச்சாரக் காவலர்கள், இந்தியப் பண்பாட்டைப் 
போற்றுபவர்கள்,  பிறன் மனை நோக்காமை  
பேராண்மை  என்று வாழ்ந்த ராம பிரானுக்கு
கோயில் கட்டுவதையே கொள்கையாகக் 
கொண்டவர்கள், மாறுபட்ட  அரசியல் கட்சி,
 உயரிய, உன்னதக் கட்சி  என்றெல்லாம் 
பாரதீய ஜனதா  கட்சி, தன்னைப் பற்றி ரீல் ரீலாக   
கதை விட்டுக் கொள்ளும்.

ஆனால் பாவம், அந்தக் கட்சிக் காரர்கள்தான் 
அடிக்கடி அசிங்கமாக மாட்டிக் கொள்கின்றனர்.

கர்னாடக சட்டசபையில் மூன்று அமைச்சர்கள்
ஆபாசப்படம்  பார்த்து மாட்டிக் கொண்டனர்.
அந்தக் களங்கம் மறையும் முன்னர் இப்போது
குஜராத் மாநிலத்தில்  இரண்டு சட்டப்பேரவை
உறுப்பினர்கள், ஆபாசப் படம் பார்த்துள்ளனர்.
வழக்கம் போல  பத்திரிக்கையாளர்கள் 
கையும் களவுமாக பிடித்து விட்டனர்.

பாஜக உறுப்பினர்கள்  சட்டசபைக்கு  எதற்குப்
போகின்றனர் ? மக்கள் பிரச்சினைகளை 
விவாதிக்கவா? இல்லை ஆபாசப் படம்
பார்க்கவா? 

இந்த எழவையெல்லாம் வீட்டிலே பார்த்துத்
தொலைக்கக் கூடாதா? சட்டசபையில்தான்
பார்க்கனுமா என்று நிதின் கட்காரி தனது
கட்சிக்காரர்களுக்கு  சுற்றறிக்கை அனுப்பப்
போவதாக தகவல்,

எனக்கு இன்னொரு யோசனை.

பாஜக ஆளும் மாநிலங்களில் சட்ட சபை
நடக்கும் போது, கேள்வி நேரம், பூஜ்ஜிய 
நேரம் என்பது போல ஆபாசப் பட நேரம்
என்று வைத்து தினமும் ஒரு மணி நேரம்
பிரம்மாண்டத் திரையில் பிட் படம் போட்டுக்
காட்டி விட்டால் அது சட்டபூர்வமாகி விடும்.
பத்திரிக்கையாளர்களின் புலனாய்வுக்கு
எல்லாம் வேலையே இருக்காது.

கட்காரி ஜீ, யோசனை பகுத் அச்சாவா?
 
 
 

Tuesday, March 20, 2012

ஆபரேஷன் சக்ஸஸ், டாக்டர் டெட்

ரயில்வே மந்திரி ராஜினாமா  செய்து விட்டார். மம்தா பானர்ஜியின்
பிளாக் மெயில் அரசியலுக்கு  அவர் கட்சிக்காரரே பலியாகி விட்டார்.
புதிதாக பொறுப்பேற்க உள்ள முகுல் ராயின் பதவிக்காலம் எத்தனை
நாளோ?

இதிலே கவனிக்க வேண்டிய செய்தி என்னவென்றால் 

உயர்த்தப்பட்ட ரயில் கட்டணம் குறைக்கப்படுமா என்பது பற்றி 
இப்போது  பிரதமரும்  வாய் திறக்கவில்லை, மம்தாவும் வாய்
மூடி விட்டார். முகுல் ராயா, ஜனார்த்தன் திரிவேதியா, யார் 
பதில் சொல்லப் போகின்றார் என்பதும் இன்னும் தெளிவாகவில்லை.

இன்றுள்ள அரசியல் நிலை, மத்தியரசின் பொருளாதரக் கொள்கை
இவற்றையெல்லாம் பார்க்கிற போது உயர்த்தப் பட்ட கட்டணம்
குறைக்கப்படுவதற்கான வாய்ப்பு குறைவாகவே உள்ளது. 

வீதியில் இறங்கிப் போராட மக்கள் வருவது குறைவு என்பது
மட்டுமல்ல, அப்படி போராடுகின்ற இடதுசாரிக் கட்சிகளைப்
பார்த்து " இவர்களுக்கு வேறு வேலை கிடையாது " என்று சொல்லி
வேடிக்கை பார்த்து விட்டுப் போவதுமாகவே உள்ளனர்.

எனவே மத்தியரசு உயர்த்தப் பட்ட கட்டணங்கள் நீடிக்கவே 
முயற்சிக்கும். கட்டண உயர்வு என்ற ஆபரேஷன் சக்ஸஸ்,
உயர்த்திய டாக்டர் திரிவேதி டெட் என்ற  புதிய சூழலை
இந்திய அரசியலில்  மம்தா உருவாக்கியுள்ளார்.

கட்டண உயர்வு இருக்கும், ஆனால் அதற்கு மம்தாவோ
அவர் கட்சியோ காரணமில்லை என்று விளக்கங்கள்
பின்னர் கொடுக்கப்படும். 

இப்படிப்பட்ட கீழ்த்தர அரசியல்  கண்டிப்பாக நல்லதல்ல.
 

Sunday, March 18, 2012

Friday, March 16, 2012

நம்பினார்கள், ஏமாந்தார்கள்



இன்று மதியம் அலுவலகத்தில் பேசிய பலரும் சோகத்தோடும் ஏமாற்றத்தோடும் இருந்தார்கள்.  அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை எல்லோரும் ஒரே நிலையில்தான் இருந்தார்கள். வருமான வரி விலக்கில் வெறும் இருபதாயிரம் ரூபாய் மட்டுமே பட்ஜெட்டில் உயர்த்தப்பட்டதே சோகத்திற்கான காரணம்.

ஐந்து லட்சம் ரூபாய் வரை வருமான வரி இருக்காது, இல்லையில்லை மூன்று லட்சம் ரூபாய் வரை வருமான வரி கிடையாது என்றெல்லாம் ஊடகங்கள் கிளப்பிய பரபரப்பை நம்பி ஏமாந்தவர்கள் இவர்கள்.

“இந்த அரசின் குணாம்சம் நமக்குத் தெரியாதா? சாமானிய மக்களைப் பற்றி எப்போது கவலைப்பட்டுள்ளார்கள். இருப்பதை பறிக்க முயற்சி செய்வார்களே தவிர, புதிதாக எதையும் கொடுக்க மாட்டார்கள். இப்போது கூட அதிக சம்பளம் வாங்குபவர்களுக்கு மட்டும்தான் சலுகை அளித்துள்ளார்கள். சாமானியர்களுக்கு அல்ல” என்று விளக்கம் அளித்தேன்.

பட்ஜெட்டை இன்னும் முழுமையாக படிக்கவில்லை. முழுமையாக ஆய்வு செய்தால்தான் அதிலே ஒளிந்திருக்கும் அபாயங்கள் தெரிய வரும். மத்தியரசின் பொருளாதாரக் கொள்கை பற்றி எவ்வளவோ கூட்டங்களில் பேசியிருக்கிறோம், எழுதியுள்ளோம். அப்படி இருந்தும் நல்ல செய்தி கிடைக்கும் என்று நம்பி ஏமாந்தவர்களைப் பார்த்து வருத்தம் வரவில்லை. கோபம்தான் வந்தது.

இந்த வருத்தம் எல்லாம் சச்சின் டெண்டுல்கர் நூறாவது நூறை அடிக்கும்வரைதான். அதன் பின்பு நிலைமையே மாறி விட்டது. மீண்டும் ஒரு உற்சாகம்.

நடுத்தர மக்களின் இந்த மனநிலை தான்  ஆட்சியாளர்களின் அராஜகங்களுக்கு அடித்தளம்.

ஐந்து ரூபாய் முதல் போட்டா ஆயிரத்து நூற்று முப்பத்தேழு ரூபாய் லாபம்.




கனவல்ல, கதையல்ல, நிஜம் நிஜம் நிஜம்

1956 ம் ஆண்டு எல்.ஐ.சி நிறுவனத்தில் அரசு ஐந்து கோடி ரூபாய் முதலீடு செய்தது. அதற்கு எல்.ஐ.சி ஒவ்வொரு வருடமும் தனது லாபத்தில் ஐந்து சதவிகிதம் அரசுக்கு அளிக்கும். மீதமுள்ள தொகை பாலிசிதாரர்களுடைய பாலிசி கணக்கில் சேர்க்கப்படும்.

கடந்த நிதியாண்டில் எல்.ஐ.சி யின் லாபத்தில் அரசுக்கு சேர வேண்டிய தொகையான ஐந்து சதவிகிதப் பங்கு 1137,99,41,904 ரூபாய் மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியிடம் அதிகாரிகளால்
அளிக்கப்பட்டது.

இந்த ஆயிரத்து நூற்று முப்பத்தேழு கோடியே, தொன்னூற்றி ஒன்பதே லட்சத்து நாற்பத்தி ஓராயிரத்து தொள்ளாயிரத்து நான்கு ரூபாய் என்பது 2010 – 2011 ஆண்டிற்கு மட்டுமான தொகையே.

இது போல ஒவ்வொரு ஆண்டும் எல்.ஐ.சி அரசுக்கு லாபத்தொகையாக, வரியாக, அரசு பத்திரங்களில் முதலீடாக வாரி வாரி வழங்கிக்கொண்டிருக்கிறது.

இந்த நிறுவனத்தைத்தான் மத்தியரசு தனியாருக்கு தாரை வார்க்கப் பார்க்கிறது. ஐ.ஆர்.டி.ஏ அன்றாடம் முட்டுக்கட்டைகள் போடுகின்றது. ஏன் பல மாதங்களாக சேர்மனைக் கூட நியமிக்காமல் மத்தியரசு தாமதம் செய்து வருகின்றது.

பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காக சிறப்பாக செயல்படும் இந்திய நிறுவனத்தை அழிக்கப்பார்க்கும் தேச பக்த அரசல்லவா, காங்கிரஸ் அரசு!!!


Thursday, March 15, 2012

மம்தாவின் மாயாஜால நடிப்பிற்கு ஆஸ்கார் விருது



மாற்றம் என்ற முழக்கம் வைத்த மம்தா தீதி ரயில்வே அமைச்சரை
,மாற்றி விட்டார். ரயில்வே கட்டணங்கள் உயர்த்தப் பட்டது மிகப்
பெரிய கொடுமை, அராஜகம். அதனைக் கண்டிக்க வேண்டும். குறைக்க
வேண்டும் என போராட வேண்டும்.

ஆனால் அதற்கும் எனக்கும் சம்பந்தம்  இல்லை என மம்தா அக்கா
போடும் நாடகம் இருக்கிறதே, அதற்கு எத்தனை ஆஸ்கார் விருது
கொடுத்தாலும்  தகும்! திரிணாமுல் கட்சியில் அத்தனை பேரும் அவரது
அடிமைகள்தான். 


இவருக்கு தெரியாமல் மந்திரி கட்டணத்தை உயர்த்தி விட்டார் என
சொல்வது நடிப்பு, நடிப்பு, நடிப்பைத் தவிர வேறு எதுவும் இல்லை.
இவருக்கு தெரியாமல் இவர் கட்சி மந்திரி பட்ஜெட்டை போடுவாராம்.
அதை இவர் கண்டிப்பாராம், மந்திரியை மாற்றுவாராம். 


இவரை நம்பி வோட்டு போட்ட மேற்கு வங்க மக்கள் கேணையர்கள்
என்று நினைப்பு. என்னமா வேஷம் கட்றாங்க,


பதவி சுகத்தை அனுபவித்துக் கொண்டு பிளாக்மெயில் நாடகம்
நடத்தும் இந்த உத்தம புத்திரியின் மிரட்டலுக்கு மன்மோகன்சிங்கம்
என்ன பதில் சொல்லப்போகின்றது.


இடதுசாரிகள் மக்களுக்கான கோரிக்கைகளை முன்வைத்ததை
நான் அடிமைச்சங்கிலியில் பிணைக்கப்பட்டதாக சொன்ன அந்த
தன் மானச்சிங்கம் இப்போது என்ன சொல்லப்போகின்றது?